கர்னாடக சங்கீத அறிமுகங்கள்
Apr 11th, 2004 by இரா. செல்வராசு
சாதாரணப் பாட்டுக்கே வழி தெரியாத எனக்குக் கர்னாடக சங்கீதம் என்பது பலகாத தூரம். ஆனால் இந்த வாரம்க்ளீவ்லாண்டிலேயே தியாகராஜர் ஆராதனை விழா நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து இருபத்தேழாவது வருடமாக இங்கிருக்கிற ஆர்வலர்கள் இந்தியாவிலும் இங்கும் உள்ள இசைக்கலைஞர்களை வைத்துச் சிறப்பாக நடத்தி வருகிறஒரு விழா.
சுற்று வட்டாரத்தில் இருந்து சுமார் நாலாயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களாம். நாற்பதே நிமிடங்கள் காரோட்டிச் சென்றால் நிகழ்ச்சிக்குச் சென்று விடலாம். ஆனாலும் ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவிற்கு நான் போய் வருவது என்பது கேள்விக்குறி தான். குறைந்த பட்சம் ஒரு முறையாவது போய் வரவேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன்.
ராகம், தாளம், சுதி, துக்கடா, என்று அங்கங்கு நீர் தெளித்தாற் போல சில சொற்களைத் தவிர(சொற்கள் மட்டும் தான், அர்த்தங்கள் கூட இல்லை) இந்த இசையைப் பற்றி ஏதுமறியாத பாமரன் நான் இந்த விழாவைப் பற்றி எழுதுவது என்பது இயலாத காரியம். அதனால், இவ்விழாவை விவரிக்கும் சென்னை-ஆன்லைன் பக்கங்களில் சென்று ஆர்வம் இருப்பவர்கள் படித்துக் கொள்ளுங்கள்.
கர்னாடக இசை/சங்கீதம் என்றாலே நாட்டில் பெரிய தலைகள் யாராவது மறையும்போது வானொலியில் ஒலிபரப்பாகும் இரங்கல் அஞ்சலியும், புரியாத மொழியில் யாராவது திருப்பித் திருப்பி ஒன்றையே இழுத்துக் கொண்டு இருப்பதும் தான் என்ற அளவில் புரிந்து வைத்திருந்த அறிவிலி என்னை முதன் முதலில் சென்னையில் நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஒரு இசைச் கச்சேரிக்குக் கூட்டிச் சென்றார். மெய் சிலிர்க்க வைத்த அனுபவம். இத்தனைக்கும் டிசம்பர் மாத இசை விழா என்பதெல்லாம் இல்லை.
ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25ஆவது இருக்கும் (1990?). தேநீர்க்கடையில் ரொட்டி வாங்குவதற்கே நீ நான் என்று நாங்கள் அடித்துக் கொண்டிருந்த காலத்தில், எப்படி என்னையும் இன்னும் சில நண்பர்களையும் தானே செலவு செய்து அழைத்துச் சென்றார் கிருஷ்ணமூர்த்தி என்பது இன்னும் வியப்பாய் இருக்கிறது.
வாழ்வில் சில நிகழ்வுகள் எப்படி நிகழ்கின்றன, ஏன் நிகழ்கின்றன என்பது பல சமயம் ஒரு சுவாரசியம் நிறைந்த புதிராக அமைந்து போகின்றது. படிக வளர்ச்சித் (Crystal Growth) துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவரும் வேதிப்பொறியியல் படித்துக் கொண்டிருந்த நானும் அதே ஏசிடெக் கட்டிடத்தின் வேறு மூலைகளில் இருந்தோம் என்பதைத் தவிர எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
எங்கள் நட்புக்கு வித்திட்டுக் கொடுத்தது தமிழ் தான். ஏசிடெக்-கில் ஒரு தமிழ் மன்றம் அமைக்க வேண்டும் என்று முயற்சிகள் தொடங்கப் பட்டபோது, எழுத்தாளர் பாலகுமாரனை திறப்பு விழாவுக்கு அழைக்கலாம் என்று திட்டமிடப்பட்டு அது தொடர்பாகப் பேசத்தான் முதலில் என்னைச் சந்திக்க விடுதி அறைக்கு மிதிவண்டியோட்டி வந்தார். என்னை விடச் சில வருடங்கள் மூத்தவர், வேறு விடுதியில் இருப்பவர், வேறு துறையில் இருப்பவர், என்பதெல்லாம் தாண்டி எங்களிடையே நட்பு விரிந்து வளர்ந்தது.
உரிமையாய் ஒரு நாள் “வாடா” என்று என்னையும் இன்னும் சில நண்பர்களையும் யேசுதாஸ் அவர்களின் அந்தக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றார். யோகி ராம்சுரத் குமார் என்று திருவண்ணாமலையில் பீடி குடித்துக் கொண்டிருந்த விசிறி சாமியார் சம்பந்தப்பட்ட இயக்கம் ஒன்றிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி அது. இந்த விசிறி சாமியார் பற்றி எழுதி எழுத்தாளர் பாலகுமாரன் கூட அவர் விசிறியாய் இருந்த நினைவு. திருவண்ணாமலைக் கோயிலுக்கு ஒரு முறை நண்பர்களுடன் சென்றிருந்த போது நான் கூட ஒரு ஐந்து நிமிடம் அவரைப் பார்த்திருக்கிறேன். பீடிக்காரருக்கும் எனக்கும் சம்பந்தம் அவ்வளவு தான்.
யேசுதாஸும் ஒருவேளை அவருடைய விசிறியாய் இருந்திருக்கலாம். அது ஒரு இதமான மாலை நேரம். நாரத கான சபாவில் கூட்டம் நிறைந்து வழிந்தது. அரங்கம் நல்ல களை கட்டி இருந்தது. நடுநாயகராய் சம்மணமிட்டு வீற்றிருந்த யேசுதாஸ், தூய வெள்ளை ஆடையில் ஒரு காந்தமாய்ச் சபையினரின் கவனத்தைத் தன்பால் ஈர்த்திருந்தார். அவரைச் சுற்றிலும் பிற இசைக் கருவிகளுடன் துணைக் கலைஞர்கள். விளக்குகள் எல்லாம் வெளிச்சத்தை அவரை நோக்கிக் குவித்திருக்க, கணீர்க்குரலில் காற்றில் இசையை மெல்லத் தவழ விட்டார்.
நடுவிலே காந்தமாய்த் தனிச் சக்தியோடு பாடகர் இருக்கும் சிறப்பை அதன் பின் இன்னும் இரு கச்சேரிகளிலும் கவனித்திருக்கிறேன். அவை இரண்டும் மகாராஜபுரம் சந்தானம் அவர்களது இசை நிகழ்ச்சி. அதில் ஒன்று அனைத்து இந்திய வானொலிக்காகத் தயாரிக்கப் பட்ட முற்றிலும் தமிழ்ப் பாடல்கள் கொண்ட ஒரு பொங்கல் (அ) தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சி. கனத்த உருவம், கம்பீரக் குரல், சிரித்த முகம், இவற்றோடு பல நிலைகளைத் தொட்ட குரலுக்கு இணையாகப் பாவனை செய்த முகமும் கைகளும் கொண்டிருந்த அந்தச் சிறப்பானவர் ஒரு நாள் சாலை விபத்தில் மாண்டு போனார் என்று படித்தபோது ஒரு நிமிடம் சோகமாய் இருந்தது. எப்படி ஒரு இழப்பு! ஒரு குறுவட்டில் மட்டுமே அவரை இனிக் கேட்க முடியும்.
யேசுதாஸும் அன்று இசையில் பல சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது இனிய குரலில் சங்கீதம் கசிந்து பல நிலைகளைத் தொட்டுக் கொண்டிருந்தது. என்னவோ ராகத்தில் என்னென்னவோ பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். அவற்றைத் தெளிவாக இனம் கண்டுகொள்ளும் திறமை இல்லை என்றாலும் அந்த இசை மனதை என்னவோ பண்ணிக் கொண்டிருந்தது.
இவையெல்லாம் என்னவென்று நானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சில சமயம் நான் எண்ணியது உண்டு. பல ஆண்டுகளுக்குப் பிறகு, வேடிக்கையாக இணையத்தில் எழுதுவதற்கு அந்தக் காலத்திலேயே பெயர் பெற்றிருந்த ரமேஷ் மகாதேவன் கர்னாடக இசை பற்றி எளிமையாய் எழுதி இருந்த உரையைக் கூடப் படிக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என் சிற்றறிவுக்கு அந்த எளிய உரையே பெரியதாய் இருந்தது என்று அந்த முயற்சியையும் விட்டுவிட்டேன். மீண்டும் ஒருநாள் படிக்க வேண்டிய பட்டியலில் அதுவும் ஒன்று.
அன்றைய என் முதல் அனுபவத்தில் கற்றுக் கொண்ட இன்னொன்று – இடையில் வருகிற சிறு பாடல்களைத் தான் துக்கடா என்பார்கள் என்பது. அதில் முருகன் பற்றிய ஒரு பாடலை யேசுதாஸ் தமிழில் பாடியது தான் எனக்கு மிகவும் புரிந்த ஒன்று. சிறப்பான இசை மனதை மிகவும் கவர்ந்தாலும், அது புரிகிற மொழியில் இருக்கிற போது தான் தாக்கங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. புரிந்தும் புரியாமலும் இருந்த மொழிகளில் சுமார் மூன்று மணி நேரம் எல்லோரையும் தன் குரலில் கட்டி வைத்திருந்தார் யேசுதாஸ். அதற்குச் சரியான உதவியைப் பக்க வாத்தியக்காரர்கள் (கடம்-விநாயக்ராம்?) செய்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்து பல்லவனில் இரவு விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதும் பல மணி நேரத்திற்கு அந்த இசை வெள்ளம் காதுகளுக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு பிரமித்த நிலையில், ஏதோ ஒரு சக்தியால் உணர்ச்சி அதிகரித்த எலக்ட்ரான்கள் ஒரு மேல்நிலைச் சுற்றிற்குச் சென்று சுற்றிக் கொண்டிருப்பதைப் போல மனம் உற்சாகமாய்க் குதித்துக் கிடந்தது. உடம்பெங்கும் ஒரு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது போல் ஒரு பரவச உணர்வு.
கர்னாடக சங்கீதத்தைப் பற்றி நினைக்கிற போதெல்லாம், இன்று தன் மனைவி மகனுடன் ஜப்பானில் இருக்கிற கிருஷ்ணமூர்த்தியும், அவர் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய அந்த முதல் நிகழ்ச்சியும் தான் மனதிற்குள் தாளமிடும். அன்று அறிந்த காரணத்தால் தான் இப்போது கர்னாடக சங்கீதம் இருக்கிற குறுவட்டுக்களாய் இரண்டு மூன்றாவது வாங்கி வைத்திருக்கிறேன். எப்போதாவது மட்டும் கேட்பது உண்டு.
குறைந்த பட்சம் ஒரு முறையாவது போய் வரவேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன் – இங்கேயே நடைபெறுகிற தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு!
நான் ஒருமுறை க்ளீவ்லாண்ட் இசை விழாவிற்குப் போயிருக்கிறேன் (1995இல்). பல இந்திய இசைக்கலைஞர்களை ஒருசேர அங்குதான் பார்த்தேன்.
பின்னர் இப்பொழுது வசிப்பதெல்லாம் மியூசிக் அகாதெமிக்கு மூன்று நிமிடம் தள்ளி.
நான் வரவில்லை இந்த இடத்துக்கு…:-))
உங்கள் பதிவு மிகவும் இயல்பாகவும், அழகாகவும் இருக்கிறது. எனக்கும் சங்கீத ஞானம் இவ்வளவுதான். ஆனால் நல்ல தமிழிசையோ, கருவியிசையோ என்னை வசமாக்காமல் போகாது. இதைப் படிக்கும்போது தோன்றிய பாரதியின் வரிகள் இவை: ‘தமிழ் சபைகளிலே எப்போதும், அர்த்தம் தெரியாத பிறபாஷைகளில் பழம் பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்’. ஆனால் நமது சங்கீத ஞானத்தை பறிகொடுத்தமைக்காக நான் வருந்தத்தான் செய்கிறேன்.
நன்றி பத்ரி, பிரபு, தங்கமணி. இந்த ஞானம் இல்லாததற்குச் சிலசமயம் எனக்கு வருத்தம் தான். பிறகு, அதற்கு என்ன செய்ய முடியும் – அப்படி அமைந்துவிட்டது என்று விட்டு விடுகிறேன். தெரிந்தவரை தலையாட்டி ரசித்துக் கொள்ளவேண்டியது தான்.
Sel
Surprised that how both of us feel the same way, even after so many years. Surprise is not over the longivity of the years but because of the paucity of contacts. Any way, i should call u soon and talk with your cute kutties.
By the by, to mention your daughters, I feel magalkal will be more apt than Pengal. All are pengal, only your daughters are your magalgal!!!
Warm regards, pira Neril (tholai pesi vazhiyagaththan
anbudan
Krishnamurthy
எத்தனையோ முறை ஏங்கியிருக்கிறேன் சின்னதிலிருந்து சங்கீதம் கத்துக் கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று
இந்த சங்கீத ஆசையில் என்(பிராமின்)சினேகிதியிடம் கூட அடிக்கடி சொல்வேன் நானும் உங்கள் சமூகத்தில் பிறந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பேன் என்று
மீனா, நன்றி. நிச்சயமாக வளர்பருவத்தில் முறையான பயிற்சி இருந்திருந்தால் நன்றாகச் செய்திருக்க முடியும். இப்போது எனது மகளுக்கேனும் ஆர்வமிருந்தால் செய்யலாம் என்று பரதம் பழக அனுப்ப ஆரம்பித்திருக்கிறோம். பார்க்கலாம்.
செல்வராஜ் நேற்று இங்கு என் எண்ணங்களை
வைக்கும் போது ஏனோ அது பதிவாகவேயில்லை
அதனால் திரும்ப திரும்ப முயற்சித்தேன்
இன்று பார்த்தால் மூன்றுமே இருக்கிறது
முடிந்தால் இரண்டை எடுத்துவிடுங்களேன்
(ஒன்னத்தின்னுட்டு ரெண்டை கொண்டுவா ன்னு
கண்ணாமூச்சி விளையாட்டு நினைவுக்கு வருது)