பூப்பூவாப் பறந்துபோகும்…
Apr 9th, 2004 by இரா. செல்வராசு
நான் ஒரு பெரிய பாடகன் இல்லை. குளியலறையில் கூட எனது இசை ஞானம் அதிகமாய் வெளிவந்ததில்லை. பார்க்கின்ற கேட்கின்றபாடல்கள் என்னையும் அறியாமல் எனக்குள் புகுந்து கொண்டால் தான் உண்டு. ஆனால், தற்செயலாகச்சில பாட்டு வரிகள் மட்டும் என்றாவதுஎன்னுள் எட்டிப் பார்ப்பது உண்டு. அதிலும் பாடல்களின் முதல் நான்கு வரிகளோ, இரண்டு வரிகளோ (பல்லவி?) மட்டும் தான்தப்பும் தவறும் நிறைந்துவெளிவந்து விழுவது வழக்கம். ஆக, நான் ஒரு சிறிய பாடகன் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
“பாட்டெல்லாம் பாடத் தெரியாது” என்றிருப்பவனைக் கூட இந்தப் பாடல்கள் முழுவதுமாய்விட்டு வைப்பதில்லை. நான்கு வரிகள் தான் என்றாலும் சில சமயம் அவை திடீரென்று காலையில் மனதிற்குள் புகுந்து கொண்டு நாள் முழுதும் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கும். மூளை நரம்புமுடிச்சுக்களில் எங்காவது சேர்ந்து ஒளிந்து கொண்டிருக்குமோ? இருக்கலாம். ஏதாவது ஒன்று தூண்டிவிட பட்டென்று ஒரு பொறி பறந்துஒரு முடிச்சவிழ்ந்து அந்தப் பாட்டு அன்று முழுதும் கச்சேரி நடத்தும்.
மனதிற்குள்ளே எழும் இந்த அலைகள் சக்தி வாய்ந்தவை என்று எண்ணியிருக்கிறேன். சிலசமயம் ஆச்சரியத்தக்க வகையில் மனம் அந்தப் பாட்டை முணுமுணுக்கும் அதே வேளையில் உடன் இருப்போர் – நண்பரோ, மனைவியோ – அந்தப் பாட்டின் அதே வரிகளைப் பாடுவதைப் பலமுறை கவனித்திருக்கிறேன். எப்படி நிகழ்கின்றன இந்தத் தன்னிச்சைச் சேர்ந்திசை(வு)கள் ? விந்தை தான்.
பாட்டு பாட்டு என்று பலரும் சிலாகித்துப் பேசிக் கொள்கிறார்களே, உருகி உருகிக் கேட்கிறார்களே என்று நானும் சிலசமயம் பாட்டுக் கேட்க முயற்சி செய்தது உண்டு. சின்ன வயதில் ஒலிநாடாவில் பாட்டு கேட்க முயன்றிருக்கிறேன். ஒரே நாடாவைப் பலமுறை கேட்டுப் பழகி ஒரு பாட்டு முடிந்து அடுத்தது ஆரம்பிக்கும் அந்த இரு விநாடி இடைவெளியில் அடுத்தது என்ன பாட்டு என்று சட்டென்று தெரிந்து விடும். ஆனால், ஒரு பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது இதற்கு முன் என்ன பாட்டு வந்தது என்று யோசித்தால் தெரியாது; நினைவிற்கு வராது! பாட்டுக்களை விட இடையில் இருக்கும் மௌனத்தைத் தான் என் மனம் மிகவும் விரும்பி இருந்தது போலும்.
எப்படித்தான் மக்கள் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்கிறார்களோ தெரியவில்லை. நானும் பத்தாம் வகுப்புத் தாவரவியல் ஆய்வுக்கூட ஏட்டில் படம் வரையும் (ஒரு படத்திற்கு ஒரு மணி நேரமாவது ஆகுமே) போதில் இருந்து முயற்சி செய்திருக்கிறேன். வேறொரு வேலை செய்யும் போது பாட்டுக் கேட்க ஆரம்பித்தால், அந்த வேலையில் மூழ்கிப் போவேனே தவிர, பாட்டென்று ஒன்று அங்கு ஓடிக் கொண்டிருப்பதே மறந்து போகும் எனக்கு. ஒருவேளை அந்த நிகழ்வுகளின் போது தான் மனது இவற்றை முடிச்சுப் போட்டுச் சேகரித்து வைத்துக் கொள்கிறதோ ?
சிறுவயதில் எப்போது கேட்டேன் என்று தெரியவில்லை. திரைப்பாடலா, குழந்தைப் பாடலா, திறமையான கவிஞர் யாரேனும் எழுதியதா, எதுவென்று தெரியாமல் எனக்குள் புகுந்து கொண்ட பாட்டு ஒன்று உண்டு. அது என் பெண்களுக்கு நான் பாடிக் காட்ட உதவியிருக்கிறது. வழக்கம் போல நான்கு வரிகள் மட்டுமே நினைவில் இருக்கும் இந்தப் பாட்டை மூன்று வயதிருக்கும் போதே நிவேதிதா நினைவில் இருத்திக் கொண்டாள்.
“பூப்பூவாப் பறந்து போகும்
பட்டுப் பூச்சி யக்கா – நீ
பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா”
“யாரு கொடுத்த…” என்று நான் சொல்லி நிறுத்தும் போது, “சொக்கா…” என்று உற்சாகமாகக் கூவி மகிழ்வாள் மகள்.
இதைப் போன்றே இன்னொரு பாடல். அநேகமாய் வானொலி நிலையம் ஒன்றில் (திருச்சியோ கோவையோ) கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.
“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட சாலைக்குப்
போவென்று சொன்னாளோ அன்னை?”
இரண்டு வரிகள் மட்டுமே தான் நினைவில் இருப்பதால் இந்தப் பாடலை நான் அவர்களுக்குப் பாடுவதில்லை. இவ்விரண்டும் யாருக்காவது முழுதும் தெரியுமா?
நந்திதாவிற்கு மூன்று வயதான பிறகு, எதற்கெடுத்தாலும் அக்காவுடன் போட்டியும், நகலெடுத்த நடவடிக்கைகளும் இந்தப் பாட்டின் போதும் வெளிப்பட்டு இன்னும் கொஞ்சம் நினைவுகளுக்கு இனிமை சேர்த்தது. பட்டுப் பூச்சியைத் தான் அக்கா என்று கவிஞர் விளிக்கிறார் என்பது தெரிய வேண்டியதில்லை அவளுக்கு; அப்பா எப்படி அக்காவை மட்டும் வைத்துப் பாட்டுப் பாடலாயிற்று என்று முகத்தில் சோகத்தைத் தேக்கி என்னைப் பார்த்துச் சிணுங்குவாள். சமாதானமாய் நான்
“பூப்பூவாப் பறந்து போகும்
பட்டுப் பூச்சி நந்து ”
என்று அவள் பெயர் வருமாறு பாடவேண்டும். சிணுங்கல்கள் மறைந்து அந்தச் சிறு முகத்தில் ஒரு நிறைவும் குதூகலமும் தெரியும் பாருங்கள் – அடடா அடடா அடடாவே !
பல மாதங்களாய் மறைந்து போயிருந்த பட்டுப் பூச்சிப் பாட்டும் சமீபத்தில் ஒரு நாள் வெளி வந்து பறந்தது. இப்போதும் அக்காவையும் நந்துவையும் வைத்து இரண்டு முறை பாடவேண்டியிருந்தது.
உன்னிப்பாய்க் கேட்ட பெரியவள், “அப்பா, அப்படி என்றால் என்ன (What does that mean?)” என்று அர்த்தம் கேட்டாள். வெறும் ஒலியாய் இன்றிப் பாடல்களுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலைக்கு வளர்ந்திருக்கிறாள் மகள் என்று என்னுள் மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்த விளக்கங்களை, இடையே உருவகம், உவமை என்பவற்றோடு கலந்து சொல்ல முற்பட்டேன். முழுப்பாட்டும் எனக்கு தெரியாமல் போச்சே என்று ஒரு ஏக்கம். என் விளக்கங்கள் முழுதும் அவள் கவனிக்காதிருக்கலாம். ஆனால், அந்தப் பாதையில் அவளது பயணம் தொடங்கி விட்டது என்று ஒரு நிறைவு.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஒருநாள் என் மகள் தமிழில் கவிதை செய்வாள்.
செல்வா,
கலக்குங்க. ஒரு ஒலித்துண்டை அப்படியே போடுங்க கேப்போம்:)
முதல்பாட்டு பாரதிதாசன் பாட்டு. இரண்டாம் பாட்டு (பட்டாம்பூச்சி) முதல்வர் அம்மா நடிச்ச ‘திக்குத்தெரியாத காட்டில்’ என்று ஞாபகம்.
குத்தடி குத்தடி சைலக்கா!
குனிந்து குத்தடி சைலக்கா!
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி டோலாக்கு
மாமரத்தை வெட்டி
மச்சுவீடு கட்டி
பணியாரம் சுட்டு
எலியாரும் கண்டு
எடுத்துக்கிட்டே ஓடிச்சாம்….
1.47 தந்தை பெண்ணுக்கு
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் — பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? — நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? — கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? — நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!
செல்வராஜ்
இவ்விடயத்தில் உங்களுக்கு நேரெதிர் நான்.
பின்னணியில் பாடல் கேட்காமல் நான் படித்ததில்லை.
மனஅலை பற்றிய உங்கள் அனுபவம் எனக்குப் பலமுறை நடந்ததுண்டு.-
என் மனதுக்குள் திடீரென்று உதிக்கும் பாட்டை முன்னர் எனது சகோதரர்களும்
தற்போது எனது கணவனும் பாடுவதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.
மற்றும் அம்மாவின் கருப்பையில் மூன்று மாதக் கருவாக நீங்கள் இருக்கும் போதே
வெளியில் கேட்கும் பாடல்களை மனப் பாடம் செய்து விடுவீர்களாம்.
நிற்க நீங்கள் கேட்ட பாட்டு பாரதிதாசன் கவிதைகள் பக்கத்திலிருந்து எடுத்தேன்.
படியாத பெண்ணா யிருந்தால் — கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! — என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது — கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு — பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!
ம்…….. பாடல் துண்டுதுண்டாக வந்து விட்டது.
மீண்டும் ஒரு முறை
1.47 தந்தை பெண்ணுக்கு
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் — பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? — நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? — கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? — நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!
படியாத பெண்ணா யிருந்தால் — கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! — என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது — கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு — பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!
//அதே வேளையில் உடன் இருப்போர் – நண்பரோ, மனைவியோ – அந்தப் பாட்டின் அதே வரிகளைப் பாடுவதைப் பலமுறை கவனித்திருக்கிறேன்//
நானும்!
நன்றி காசி, பிரபு, சந்திரவதனா, சுந்தரவடிவேல். இரண்டுமே பாரதிதாசன் பாட்டுக்கள் தானா ? கனக சுப்புரத்தினத்தாரைச் சரியாகப் படிக்காமல் விட்டுவிட்டேன் என்று முன்பு எண்ணியிருக்கிறேன். இப்போது அது ஆழமாகிறது. பின்னொரு நாள் வாய்ப்புக் கிட்டும் போது நினைவில் கொள்வேன்.
காசி, ஒலித்துண்டெல்லாம் சும்மா ஒரு நிமிடத்திற்கே பல MB அளவு வரும் போலிருக்கே. உங்கள் கட்டுரையைப் போய் மீண்டும் படிக்க வேண்டும் – அளவு குறைக்க எதேனும் வழியிருக்கிறதா என்று.
¦ºøÅáˆ! ±ÉìÌõ ±ó¾ À¡ðÎõ º¢É¢Á¡ À¡¼ø¸û ¯ðÀ¼ þÃñÎ Åâ¸ÙìÌ §Áø ¦¾Ã¢Â¡Ð.«§¾§À¡ø À¡ðÎ §¸ðÎì ¦¸¡ñÎ ±ó¾ §Å¨ÄÔõ
¦ºö ÓÊ¡Ð. À¡ðÎ Á¡ò¾¢Ãõ §¸ðÎì ¦¸¡ñÎ ÍõÁ¡ ¯ð¸¡Ã
Å½í¸¡Ð.
º¢ýÉïº¢Ú ¸¢Ç¢§Â ÁðÎõ ¿¡¨ÄóÐ Åâ¸û ܼ
¦¾Ã¢Ôõ. «¨¾ ¾¡Ä¡ðÎ ±ýÚ À¢û¨Ç¸ÙìÌ À¡Îõ¦À¡ØÐ, «¾¢ø ÅÕõ
¸¢Ç¢ ¿¡ó¾¡§É ±ýÚ ±ý Á¸û ´ù¦Å¡Õ Ó¨ÈÔõ §¸ðÀ¡û.
உண்மை தான் உஷா. பாட்டுக்கள் பெரிதாய்த் தெரியவில்லை என்றாலும் தெரிந்ததைத் தாலாட்டாகவோ விளையாட்டாகவோ குழந்தைகளுக்குப் பாடுவதும் அது அவர்கள் மனதுள் ஏற்படுத்தும் எதிர்வினைகளைக் கவனிப்பதும் சுவாரசியமானது தான். இந்த வகையிலும் பாரதியும் பாரதிதாசனும் நமக்குப் பெரும் உதவிகள் செய்திருக்கிறார்கள்.