இறந்த தவளை – இரண்டொரு கேள்விகள்
Apr 8th, 2004 by இரா. செல்வராசு
தங்கமணியின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி. ஒரு வகையில் அவரின்இந்த விளக்கத்தை எழுதத் தூண்டியதற்காக நான் மகிழ்ந்து கொள்கிறேன். காரணம், மழைநாள் குறிப்பைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் முதலில் நான்பாதி கூட வெற்றி பெறவில்லை என்பதை தெளிவாகச் சொல்லி விட்டது அவரது விளக்கம். இதைப்படித்தவுடன், “வாவ்” என்று ஒரு வியப்பு வந்து என்மீது உட்கார்ந்து கொண்டது. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன். விரிவாய் எழுத வேண்டும் என்று எண்ணினேன். (தாமதமாகி விட்டது- வரி அறிக்கை தயார் செய்ய வேண்டியிருந்தது).
இப்போது ஒரு குழப்பம் எனக்கு. அவர்அருமையாகஎழுதி இருந்தாலும் இப்படி விளக்காமல் இருந்திருந்தால் புரியாமல் போயிருக்கும். நிச்சயம் இழப்புத் தான். ஆனால்இது எழுதியவனின் இழப்பா, படிப்பவனின் இழப்பா? எழுத்தை இப்படி விரிவாய் விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று எண்ணுகிறேன். அது ஒரு இயல்பை, அதன் தனித்துவத்தை, ஓட்டத்தை, வடிவத்தை இதனால்இழந்து விடுகிறதோ என்று சிறு அச்சம். ஆனாலும் இந்த விளக்கங்கள் என்னுடைய புரிதலை அதிகரித்திருக்கிறதே. தான் சொல்ல வந்தது சரியாக வாசகனுக்குப் போய்ச்சேரவில்லை என்பது எழுதியவனுக்கும் ஒரு இழப்புத் தானே.
காலங்களில் ஊசலாடும் மனதை எவ்வளவு அழகாகக் காட்டி இருக்கிறார். ஆனாலும் அந்த முதல் பத்தியில் மனதைப் பற்றிப் பேசுகிறார் என்று முதலில் எனக்குப் புரியவே இல்லை. சம்பந்தம் இல்லாமல் எதற்கு இங்கே இந்த வரிகள் என்று எண்ணினேன். (அதனால் தான் சில வரிகளை நான் வெட்டி இருந்தேன்). “‘என்னை நினைவிற் கொள்ளுங்கள்’ அந்தக் குரல் தொண்டைக்குள்ளேயே சிக்கித் துடித்து …”. மழைக்காட்சிகளில் இருந்து மனதிற்குத் தாவும் இங்கே பாலமாய் ஒரு வரியோ சில வார்த்தைகளோ இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. “…புகை சுழன்று கொண்டிருந்தது. அதனோடு கலந்து என் மனமும் பின் நோக்கிச் சுழன்றது”.
இங்கே எனது கேள்வி, இப்படி ஒரு பாலம் போட்டுச் சம்பந்தப் படுத்தி இருப்பது எளிமையாய் இருக்கிறதா ? அல்லது எழுத்தின் சிறப்பைக் குறைக்கிறதா ? அந்தத் தாவலை இப்படி வரிகளுக்கிடையே சொல்லாமல் சொல்லி இருப்பது சிறப்பான ஒரு எழுத்து உத்தியா ? ஆம் எனில் என்னைப் போல் அது தெரியாதவர்கள் இருக்கிறார்களா ? இல்லை எல்லோருக்கும் அது புரிந்ததா ?
படிப்பவன் சார்பில் கொஞ்சம் ஆழ்ந்து படித்து யோசித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன். வாசிப்பனுபவத்தை ஒரு மேல் நிலைக்கு எடுத்துச் செல்ல இந்த வகை எழுத்துக்கள் உதவும். எழுதுபவனும் சற்று எளிய நடையில் எழுத முயற்சி செய்வதாய்க் கூறி இருக்கிறார். அதுவும் உதவும். அதற்கும் என் நன்றி.
இறந்து போன தவளையை இனிப் புதைத்து விடலாம் ! 🙂
நன்றி செல்வராஜ். உங்களது விரிவான கவனத்திற்கும், பாராட்டுக்கும், அன்புக்கும்.
ஏனெனில் நேரடியாகச் சொல்லப்படுவது செய்தியாகிறது. செய்தி ஒரு தட்டையான வடிவம். வாழ்க்கை சில வெளிப்படையான பரிமாணங்களையும், சில நுட்பமான பரிமானங்களையும் கொண்டிருக்கிறது. அல்லது இப்படிச்சொல்லலாம், வாழ்க்கை மிக எளிமையாக இருக்கிறது, மனம் அந்த எளிமையை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு இயல்பானதாய் இல்லை. அப்போது வாழ்க்கை புதிர் நிரம்பியதாய் தோன்றுகிறது, வாழ்க்கை எப்போதும் நேரடியாக இல்லை; நேரடியாக இருப்பது என்பது மிகுந்த ஆண் தன்மை வாய்ந்தது; அது மனதின் செயல்பாடாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கை சற்று மறைமுகமாக, சற்று புதிர் சூழ்ந்து, சற்று பெண்மைத்தன்மை கொண்டுள்ளது. எனவே மொழி (மனதால் படைக்கப் பட்ட) சில குறுக்கு வழிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இலக்கியத்தில் மெல்ல மெல்ல மொழி கசிந்து கொடுக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.
ஆனாலும் நேர்மையும், ஆர்வமும் உடைய வாசகனுக்கு புரியும்படி எழுதுவதே சிறந்தது என்பதே உண்மை. உங்கள் கருத்து இன்னும் எளிமையாக எழுதும் படி இனி என்னை எப்போதும் ஒருமுறை சொல்லவே செய்யும். நன்றி.
நன்றி தங்கமணி. நீங்கள் சொல்வதும் புரிகிறது. அல்லது புரிகிற மாதிரி தான் இருக்கிறது 🙂 நான் கூறியதையும் சரியான முறையில் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. அதனால் இன்னும் ஒரு சதவீதம் எளிமை சேர்ந்தால் கூட உங்கள் சிறப்பான எழுத்துக்களும் நடையும் அவற்றில் தெறிக்கும் உண்மைகளும் உணர்ச்சிகளும் பலரையும் சென்றடையும் சாத்தியங்கள் அதிகமாகும்.
உங்கள் பின்னூட்டத்தின் பல பிரதிகளைச் சரி செய்து விட்டேன். சில சமயம் அப்படி நேர்ந்துவிடுகிறது. (போய்ச்சேரவில்லை என்று மீண்டும் POST அழுத்தினால் இரண்டு முறை சேர்த்துவிடுகிறது).