பள்ளிக்குச் செல்லும் மகள்…
Feb 22nd, 2004 by இரா. செல்வராசு
கடந்த வாரத்தில் எனது பெரிய பெண்ணை இவ்வருடம் பள்ளியில் சேர்க்கப் பதிவு செய்யும் நாள் என்று போயிருந்தேன். நல்லதொரு அமைப்பு முறையும் அனுபவமுமாய் இருந்தது. ஒருவாரம் முன்னரே அறிமுகநாள் என்று ஒரு கூட்டம் போட்டு அதிலேயே விவரங்கள், படிவங்கள் எல்லாம் கொடுத்துப் பெயர் வரிசைப்படி இரண்டு நாட்களாய்ப் பிரித்து அதன்படி எல்லோரையும் வரச்சொல்லி இருந்தார்கள். ஒரு பெரிய அறையில் நான்கைந்து நிலையங்கள் அமைத்து வரிசையாய் ஒவ்வொரு இடத்திலும் ஒரு விஷயம் சரிபார்த்து வாங்கி வைத்துக்கொண்டு, கேள்விகளுக்குப் பதில் சொல்லி, மொத்தம் சுமார் பத்து நிமிடத்தில் வேலை முடிந்தது. இந்த நாட்டின் இது போன்ற அமைப்பு முறையும் செயல்திறனும் ஒவ்வொரு முறையும் வியப்பைத் தருகிறது. நாளோட்டத்தில் இது சற்றுப் பழகியும் போய், அவ்வாறு இல்லாமல் சில இடங்களில் சிறு குறை கண்டாலும் பொறுமை இழக்கச் செய்வதையும் உணரமுடிகிறது.
சென்ற வருடமே கூட இவளைப் பள்ளியில் சேர்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட செப்டம்பர் தேதியில் ஐந்து வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். அக்டோபரில் பிறந்த இவளுக்கோ முன்று வாரங்கள் பற்றவில்லை.
“நாமெல்லாம் மூணரை வயதில் LKG சேர்ந்து விட்டோமே. அட, நம்ம ஊரில் தான் இப்போதெல்லாம் இரண்டரை வயதில் பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்களே. சரி, இங்கு KG என்பது ஒரு வருடம் தான் என்றாலும் மூன்றரை வயதில் சேரலாமே, இவளுக்குத் தான் நாலும் பதினொன்றின் கீழ் பன்னிரண்டும் ( ! ) வயது ஆகி விட்டதே, சேர்த்துக் கொள்வார்களா என்று கேட்டுப் பார்க்கலாம்”
நானும் மனைவியும் யோசனையில் இருந்தோம். விசாரித்த போது, அப்படி ஒரு சில வாரங்களே பற்றாத குழந்தைகளைச் சில சோதனைகளுக்குப் பின் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும், அவர்கள் அதைப் பெரிதும் ஊக்குவிப்பதில்லை என்றார்கள். இவர்கள் என்ன ஊக்குவிப்பது ? அந்தச் சோதனைகளுக்குப் போகலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது மனைவியிடம் இருந்து “இல்ல…” என்றொரு குரல்.
இல்லை என்று இவள் இழுத்தாலே என்னவோ இருக்கிறது என்று இந்த ஏழு வருடப் பாடத்தில் புரிந்து வைத்திருந்தேன்.
தன்னுடைய அனுபவத் தாக்கங்களினாலும், பல இடங்களில், புத்தகங்களில், இணையப் பக்கங்களில் ஆராய்ச்சி செய்திருந்ததாலும் வீட்டுத் தலைவிக்குச் சற்றுத் தயக்கம்.
“அது வந்து… இப்போல்லாம், கொஞ்சம் தாமதமாகத் தான் பள்ளிக்கு அனுப்புகிறார்களாம். அது தான் அவர்களுக்கும் நல்லது என்கிறார்கள்”.
நான்காவது படித்து முடித்த பின் அமராவதி நகர் “சைனிக் பள்ளி”யில் ஆறாவதில் என்னைச் சேர்த்துவிட நடந்த முயற்சி நினைவிற்கு வந்தது. அப்போது தான் ஆவணங்களில் எனது பிறந்த தேதி இரண்டு மாதம் பின்சென்றிருக்க வேண்டும் ! எனக்குத் தெரிந்த பலருடைய அதிகாரபூர்வமான பிறந்த தேதியும் உண்மையான பிறந்த தேதியும் வேறு வேறாகத் தான் இருந்திருக்கின்றன. எனது மனைவி உட்பட! பிறந்த தேதியைப் பற்றிப் பொய் சொல்லியாவது மக்களை முன்கூட்டியே பள்ளிக்கு அனுப்ப முயன்ற சூழலில் இருந்து வந்தவனுக்கு இது கொஞ்சம் புதிதாய் இருந்தது.
“யார் அப்படிச் சொல்கிறார்கள் ? எவனாவது எதாவது சொல்லிக்கிட்டுத் தான் இருப்பான். அதையெல்லாம் ஏன் நாம் கேட்க வேண்டும்?”
இப்படி நான் கூறும்போதே இந்த விஷயத்தைத் திறந்த மனத்தோடு நான் அணுகவில்லை என்று மனதோரம் ஒரு குரல்.
இன்னும் ஒரு வருடம் இளம்பள்ளிக்குப் பணம் கட்ட வேண்டுமானால், அதையே இரண்டாமவளுக்கும் (அவளும் அக்டோபரில் பிறந்தவள்) செய்ய வேண்டியிருக்கும். அதனால், சுமார் எட்டாயிரம் டாலர் அதிக செலவு என்று மனதுள் ஒரு பக்கம் கணக்கும் ஓடிக் கொண்டிருந்தது. இருந்தாலும் politically correctஆன வேறு என்ன காரணங்கள் கண்டு பிடிக்கலாம் என்று மூளை சுழன்று கொண்டிருந்தது.
“யோசிச்சுப் பார். பாவம் இவளுக்கு இன்னும் இரண்டு வருடத்திற்கு வெறும் ABCD படித்துக் கொண்டிருந்தால் போரடிச்சுப் போயிடாதா?”.
என் பங்குக்கு நான் குட்டையைக் குழப்ப ஆரம்பித்தேன். உண்மையில் ஒன்றரை வருடமாய்ச் சென்ற இளம் பள்ளியிலும் (pre-schoolக்கு இளம்பள்ளி என்று எழுதுவதில் யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் சொல்லுங்கள்) அடிக்கடி சென்ற நூலகத்திலும் தொலைக்காட்சியில் கண்ட sesame street போன்ற நிகழ்ச்சிகளினாலும் மகள் ஏற்கனவே தானே எழுத்துக் கூட்டிப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“ஆமாம், நான் கூடச் சின்ன வயசில இப்படித் தான் சீக்கிரம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன்”, என்று நான் பெருமை அடித்துக் கொண்டதை மனைவி நம்புவதாய்த் தெரியவில்லை. எனக்கும் சரியாய் நினைவில்லை. இருந்தாலும் மனைவியிடம் தானே இந்தத் தம்பட்டம் என்று கதைவிடுவதற்குப் பெரிதாய் நான் தயங்கவில்லை.
என்னைப் போலன்றி மனைவியோ திறந்த மனதோடு தான் இந்த விஷயத்தை அணுகிக் கொண்டிருந்தாள்.
“ஆமாங்க, நானும் அதைப் பற்றித் தான் யோசிக்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களுக்கு (KG-யிலும் இங்கு எழுத்துக்கள் எண்கள் இவற்றைத் தவிர அதிகம் போதிப்பதில்லை) இதையே படித்துக் கொண்டிருந்தால் போரடிக்க வாய்ப்பிருக்கிறது.”
“இருந்தாலும், படிப்பது எழுதுவது இது பற்றியெல்லாம் கவலை இல்லை. இவள் அதையெல்லாம் இப்போதே செய்வது நல்லது தான். இருந்தாலும் மன வளர்ச்சியும், உணர்ச்சியறிவு வளர்ச்சியும், சமூக உறவுத் திறமைகளும் நன்றாக வளர்வதற்கு இன்னும் ஒரு வருடம் கழித்தே அனுப்புவது நல்லது என்று நினைக்கிறேன்.”
“எதுக்கும் இவங்க டீச்சர் கிட்டயும் மற்றவங்க கிட்டயும் பேசிப் பார்க்கிறேன்.”
என் அறிவுக்குச் சற்று எட்டாத பரிமாணங்களில் யோசிக்கிறாள் இவள். சில காலம் கழித்து மனக்கதவு கொஞ்சம் திறக்க ஆரம்பித்தது. மனக் கணக்குப்புள்ளையைக் கொஞ்சம் அடக்கி வைத்துவிட்டு, “இல்லை, செலவு பற்றி இல்லை. எது சிறந்ததோ அதைச் செய்வோம். முக்கியமானவைகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்”, என்றேன்.
அதன் பிறகு கொஞ்ச காலம் பார்ப்பவர்களிடம், தெரிந்தவர்களிடம், பேசுபவர்களிடம் (மற்றும் ரோட்டில் போகிற வருகிறவர்களிடம் எல்லாம் !! ) எங்களுக்கு இதே கேள்வி தான். “இப்போதேவா ? இன்னும் ஒரு வருடம் கழித்தா ?”
உடன் வேலை செய்யும் அமெரிக்க நண்பர் ஒருவர் தனது அக்டோபர் பெண்ணைக் காத்திருக்க வைக்காமல் அனுப்பி விட்டார் என்றாலும், பல அமெரிக்கர்கள் தங்களது பெண்களை அக்டோபருக்கு ஓரிரு மாதங்கள் முன்னர் பிறந்திருந்தால் கூட அனுப்புவதில்லை என்பதும் தெரிந்தது. கலிபோர்னியாவில் இருக்கும் எனது பள்ளிக் கால நண்பன் ஒருவன், தான் இது பற்றி நிறைய விசாரித்தபின் ஒரு வருடம் தாமதமாக அனுப்புவது தான் சிறந்தது என்று தனது மகனை நிறுத்தி வைக்கப் போவதாய்க் கூறினான். (முகுந்தா, இதைப் படிக்கிறாயா ?). மனோத்தத்துவ ரீதியில் அது தான் சிறந்தது என்று அவனும் என் மனைவியின் கருத்தோடு ஒத்துப் போனான்.
பள்ளிப் படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கும் ஒரு இந்தியப் பெண்ணின் தாயாரை ஒருநாள் பார்த்தோம். ஒரு வருடம் பொறுத்தே அனுப்புங்கள், நான் அப்படிச் செய்யாத எனது முடிவைத் தவறு என்று நினைக்கிறேன் என்று கூறினார். சிறு சிறு விஷயங்களும் (உ-ம்: காரோட்டும் அனுமதியட்டை பெறுவது) உடன் படிப்பவர்கள் செய்ய முடிவதை வயது பற்றாத காரணத்தால் தான் செய்ய முடியவில்லை என்பது தன் மகளைப் பாதித்ததைத் தான் அறிவேன் என்று கூறினார்.
அவரவர் அனுபவத்தையும் முடிவுகளையும் வைத்து ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் சார்ந்திருந்தனர். இறுதியில் இது எங்களது சிந்தனையையும் அனுபவத்தையும் பொருத்த முடிவாகத் தான் இருக்க முடியும் என்று புரிந்தது. ஒரு முறை நூலகத்தில் இருந்த ஒரு கணிணி விளையாட்டுக்கு என் மகளோடு சற்றே வயது அதிகமான ஒரு பையன் மல்லுக்கு நிற்க, அவளுடைய எதிர்வினையில் ஆறு மாதங்களுக்கு முன் இருந்த நிலையை விட இப்போது சற்றுத் திடம் அதிகம் இருந்ததை உணர முடிந்தது. இது போன்று சமுதாயத்தில் தங்களது சொந்தத் திடத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள அந்த ஒரு வருடம் நிச்சயம் உதவும் என்று புரிந்தது. தவிர கல்வியைப் பொருத்தவரை ஒரு வருடம் முன்னே பின்னே பெரிதும் வித்தியாசம் இருக்கப் போவதில்லை.
இப்படி மற்ற குரல்களின் சத்தங்களில் அமுங்கிப் போய் கணக்குப் புள்ளை காணாமல் போய்விட்டார். காலம் தரும் பாடத்தில் இன்னும் ஒரு வருடம் அதிகமாய் ஏறும் உரத்தோடும் மனத் திடத்தோடும், மஞ்சள் நிறப் பேருந்தில் தனது முதல் பயணத்திற்காகக் கண்மணியாள் நிவேதிதா காத்திருக்கிறாள்.
சரியான முடிவுதான். இளம் வயதில் பள்ளிக்குப் போனதால் ஒவ்வொரு வகுப்பிலும், நான் குழந்தையைப்போல் மதிக்கப்பட்டேன். பின் அதுவே ஒரு ஆளுமைக்குறைவுக்கும் வழிவகுத்ததாயும் எனக்கு ஒரு எண்ணம். இன்றைய போட்டிக்கார உலகைக் குழந்தைகள் வீரியத்துடன் எதிர்கொள்ளவேண்டியிருப்பதால், பொறுத்திருப்பது மிகச்சரி.
நாளோட்டத்தில் இது சற்றுப் பழகியும் போய், அவ்வாறு இல்லாமல் சில இடங்களில் சிறு குறை கண்டாலும் பொறுமை இழக்கச் செய்வதையும் உணர முடிகிறது.
>>>>>>
:-)))
—
மத்தபடி, பெரியவங்க சொல்லுங்க கேட்டுக்கிறோம். பின்னாளைக்கு உதவியா இருக்கும் 🙂