Jan 18th, 2012 by இரா. செல்வராசு

உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளும் நோக்கில் சவரக் கத்தியைத் தீட்டுவதை நான் தொடர்ந்து கொண்டிருந்தேன். என் பெருவிரல் சதையில் வைத்து அதனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கணத்தில் அவன் தனது துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்த குண்டுகள் நிறைந்த கச்சையைக் கழட்டினான். சுவற்றில் இருந்த கொக்கியில் அதனை மாட்டிவிட்டு, அதன் மேலே தனது இராணுவத் தொப்பியையும் வைத்தான். பிறகு தன் கழுத்துப் பட்டியின் முடிச்சினைத் தளர்த்திக் கொண்டே என்னை நோக்கித் திரும்பி, "வெய்யல் நரகமாக் கொளுத்துது; எனக்குச் சவரம் செஞ்சு விடு" என்று நாற்காலியில் அமர்ந்தான்.
அவனுக்கு நாலு நாள்த் தாடி இருக்கும் என்று அனுமானித்தேன். எங்களது படைகளைத் தேடிச் சென்ற அவனது பயணத்தின் நான்கு நாட்கள்! வெய்யல் காய்ச்சிய அவனது முகம் சிவந்து போய்க் கிடந்தது. கவனமாக, சோப்பினைத் தயார் செய்ய ஆரம்பித்தேன். சில வில்லைகளை வெட்டி எடுத்துக் கோப்பைக்குள் போட்டு, சிறிது வெந்நீர் கலந்து, பூச்சுமட்டையால் கலக்க ஆரம்பித்தேன். உடனடியாக நுரை மேலெழ ஆரம்பித்தது.
"குழுவில் மத்த பசங்களுக்கும் இவ்வளவு தாடி இருக்கும்" என்றான். நான் நுரையைக் கலக்குவதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
"ஆனா, நாங்க ஓரளவுக்குச் சரியாச் செஞ்சுட்டோம், தெரியுமா. முக்கியமானவங்களப் பிடிச்சுட்டோம். கொஞ்ச பேரப் பொணமாக் கொண்டாந்தோம். இன்னும் கொஞ்சம் பேர உசுரோட பிடிச்சிருக்கோம். ஆனா, கூடிய சீக்கரம் அவங்களும் செத்துப் போயிருவாங்க".
"எத்தன பேரப் பிடிச்சீங்க?"
"பதினாலு பேர். அவங்களக் கண்டுபிடிக்கக் காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போக வேண்டியிருந்துச்சு. ஆனா, பழி வாங்கீருவோம். ஒருத்தன் கூட இதிலிருந்து உசுரோட வெளிவர மாட்டான். ஒருத்தன் கூட".
Continue Reading »
Tags: Hernando_Tellez, Translation, மொழிபெயர்ப்பு
Posted in இலக்கியம், சிறுகதை | 16 Comments »
Jan 17th, 2012 by இரா. செல்வராசு
"பழச விட்டுடு; புதுசா புடிச்சுக்கோ" என்று போகித்தருமர் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார்; அவர் நினைவாகத் தான் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் என்று போகிற போக்கில் கதை விடலாமா என நினைத்தேன். ஆனால், அதுதான் அன்றே தமிழன் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே" என்று நன்னூலில் எழுதி வைத்திருக்கிறானே! மிகவும் பரவலாய் அறியப்பட்ட நன்னூல் வாசகம் இதுவாகத் தான் இருக்கும். இணையத் தேடலில் இதற்குப் பற்பல ஆயிரம் தேடல் முடிவுகள்! அதனால் எனது கதை இங்கு செல்லவும் செல்லாது. தேவையும் இல்லை.

நன்னூல்க்காரர் இதை எனக்கென்றே எழுதி வைத்திருக்கவும் ஒரு சாத்தியம் இருக்கிறது. எதையும் எளிதில் விட்டுவிட முடியாமல் சேர்த்து வைக்க முயலும் நான், அண்மையில் இந்தப் பழையன விட்டுவிடுதலில் கொஞ்சம் நுழைந்து பார்த்தேன். ஆகா! என்ன ஒரு சுதந்திர உணர்வு. பழந்தமிழன் சொல்லி வைத்துப் போன ஒன்றை இப்படியாகச் செய்ய வைத்த பழி பாவத்தை எனது அலுவத்தார் மீது தான் போட வேண்டும்.
Continue Reading »
Tags: தமிழ்மணம், நட்சத்திரம், பழையன
Posted in பொது, வாழ்க்கை | 22 Comments »
Jan 16th, 2012 by இரா. செல்வராசு
தமிழ் இணைய நண்பர்களுக்கு வணக்கம். இது ஏதடா, எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். இவனிங்கு நட்சத்திரமாகவா என்று தோன்றினாலும் அதுவும் மிகவும் நியாயமான ஒன்றே. வாருங்கள்… வருடத்திற்கு ஒன்று இரண்டு என்னும் கணக்கில் இடுகை(கள்) எழுதிக் கொண்டிருந்தவனைத் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக்கி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்கும் கேட்க வேண்டும்.
இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு வழியை மனதில் வைத்து என்னை நட்சத்திரமாக்கி அழைத்துவிட்ட தமிழ்மணத்தை மன்னித்து விட்டுவிடுவோம். புதிய தை மாதத்தில், பொங்கல் நல்வாரத்தில் மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தின் வழியாகவும் எனது பதிவின் வழியாகவும் சந்திப்பதில் மகிழ்வு எய்துகிறேன். எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Continue Reading »
Tags: சுயம், தமிழ்மணம், நட்சத்திரம், பொங்கல்
Posted in பொது | 36 Comments »
Sep 29th, 2011 by இரா. செல்வராசு
ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்
(தமிழில்: இரா. செல்வராசு)

தன்சுற்றம் தான்தெரிவாள் ஆன்மா,
பின்னர்க் கதவுதனை மூடிடுவாள்;
அவளின் தெய்வீகத் தெரிவதனில்
இனியென் றும் ஊடுருவாதீர்.
தேரொன்று நிற்கும்தன் கீழ்வாயிற் கதவை
அசைவேதும் இன்றிக் காண்பாள்;
அசைவதில்லை ஒரு மாமன்னன் தன்முன்னே
மண்டி யிடினும்
நானறிவேன்… பலரிருக்கும் நாட்டில் அவள்
தெரிவென்பது ஒன்றே.
தன்னெஞ்சத்தின் தடுக்கிதழ்கள் மூடிடுவாள்
கல் லெனவே.
Source: Emily Dickensen The Soul Selects…
பி.கு.: சளி, உடல்வெப்பம் ஏற்பட்ட ஒரு நாளில் அணுவியல் அறிஞர் செயபாரதன் (ஜெயபாரதன்) (தமிழ்மன்றம் கூகுள் குழுமத்தில்) மொழிபெயர்த்திருந்த ஒரு கவிதையைப் பார்த்து எனக்கும் அதே எமிலி டிக்கின்சனின் கவிதையை எழுதிப் பார்க்கத் தோன்றியது… தலைக்கிறுக்கு விரைவில் இறங்கி விடும் என எதிர்பார்க்கலாம்.
Tags: #தமிழ், Emily Dickinson, Translation
Posted in இலக்கியம் | No Comments »
Aug 19th, 2010 by இரா. செல்வராசு
இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி
இடம்: சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.
வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி
பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.

இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் - முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி
Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்
Futures & Options - Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன், துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.
Tags: Book Release, புத்தக வெளியீட்டு விழா
Posted in இணையம், இலக்கியம், வாழ்க்கை | 29 Comments »