பனிமழைப் பொழிவுகள்
Jan 27th, 2005 by இரா. செல்வராசு
அமெரிக்க வடபகுதியின் குளிரும் பனியும் இவ்வளவு ஆண்டுகளில் பழகிப் போனவையாகவே இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இயற்கையின் பிரம்மாண்டத்தை உணர வைப்பதாகவே இருக்கின்றன. மக்களின் அன்றாட இயக்கங்களுக்குச் சில இடையூறுகளை விளைவித்தாலும் பனிக்காலம் ஒரு வகையில் பார்த்தால் மிகவும் அழகானது. புதிதாய்க் கொட்டிக் கிடக்கிற பனியின் யாரும் கால்பதியாத வெண்மைப் பின்னணியில், அவற்றைத் தம்மில் தாங்கி இலையில்லா மரங்கள் சிறப்பொளி பொருந்தி நிற்பது கண்கொள்ளாக் காட்சி.
கனடிய நகரங்கள் மற்றும் கடற்கரையோரங்கள் போலில்லை என்றாலும் க்ளீவ்லாண்டும் பனிக் குவியலுக்குப் பெயர் பெற்றது தான். குளிர்காலப் பனிப் புயலின் காரணமாக மட்டுமின்றி, பேரேரிகள் ஐந்தின் கரையோரம் அமைந்திருக்கிற நகரங்களுக்கு ஏரி விளைவுப் பனியின் (Lake Effect Snow) தனிச்சிறப்புக் கவனிப்புக் கிட்டும். வடமேற்குப் பகுதியில் இருந்து வரும் ஆர்க்டிக் பிரதேசக் குளிர்காற்று, ஏரிகளின் மீதேறி அங்குள்ள வெப்பத்தினால் ஈரப்பசையை உள்வாங்கிக் கொண்டு அப்படியே கரைக்கு வந்து அவற்றைப் பனியாகக் கொட்டுவதே ஏரி விளைவுப் பனி. இந்த விளைவால் சில மணி நேரத்திலேயே ஒரு அடிக்குக் குறையாமல் பனி விழும் சாத்தியங்கள் இருக்கின்றன. இதனைக் குறிப்பாகப் பேரேரிகளின் கரையோரம் அமைந்திருக்கிற சிகாகோ, க்ளீவ்லாண்டு, பஃப்ஃபலோ, சிரக்யூஸ், ரோச்செஸ்டர், நியூயார்க் நகரங்களில் அதிகம் காணலாம்.
கடுங்குளிரின் காரணமாய் ஏரிகளே உறைந்து போவதுமுண்டு. ஒரு வகையில் அது நன்மைக்கே. உறைந்த ஏரியில் இருந்து ஈரத்தைக் காற்று அள்ள முடியாது என்பதால் அதன்பிறகு ஏரி விளைவுப் பனிப் பொழிவு குறைந்து விடும். உறைந்த ஏரியின் மீது சென்று சறுக்கு விளையாட்டு, மீன்பிடித்தல், முதலான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் உண்டு. நிச்சயமாய் அந்தப் பக்கத்திலெல்லாம் எங்களை நீங்கள் காண முடியாது !
சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனியில் வண்டிகள் சறுக்கு விளையாட்டில்(!) இறங்கி ஒன்றையொன்று இடித்துக் கொண்டு நின்றுவிடக் கூடாதே என்று அந்நாட்களில் பெருவண்டிகளில் உப்பைக் கொட்டிக் கொண்டே இருப்பார்கள். உப்புக் கலந்தால் உறை தட்பநிலை இன்னும் கீழிறங்கி விடும் என்று வேதியியல் பாடங்களில் படித்திருப்போமே. அதனால் பனியை முழுதும் உறைந்து இறுக விடாமல் இருக்க இந்த உப்புக் கொட்டல் உதவும். அதோடு அந்த வண்டிகளில் பெரிய வழிக்கும் தகடுகளை முன்புறத்தில் பொருத்தி இருப்பார்கள். பனியை உறைய விடாமல் தடுத்து அவற்றை வழித்து ஓரத்தில் கொட்டிச் சென்றுவிடுவதால் மக்களின் போக்குவரத்துக்குச் சற்று உதவியாய் இருக்கும். அப்படிக் கொட்டிய பனிக்குவியல் வீட்டினுள் வரும் வழித்தடத்தை அடைத்துக் கொண்டு எங்கள் வண்டி உள் நுழையப் பெரும் பிரச்சினையை உண்டாக்குவதும் உண்டு.
வெளியே நிறுத்தி இருக்கும் காலங்களில் வண்டிகளின் (கார்களின்) மீதும் பனி மூடிக் கிடக்கும் என்பதால் காலையில் அதனைக் கீழே தள்ளிவிட்டுக் கிளம்புவதே பெரும் பாடு தான். வண்டிச்சாலை உள்ள வீடாக இருந்துவிட்டால் வசதியாக உள்ளே நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், அப்போதோ வண்டித் தடத்தின் மீது குவிந்து கிடப்பவற்றை ஓரளவிற்கேனும் விலக்கி விட்டால் தான் தடத்தில் போய்வர முடியும். அதற்காகவென்று சில பனித்தள்ளிகள் (பனிவெட்டிகள்?) வைத்து முதுகுடையக் கொஞ்சம் வளைய வேண்டும்.
இரண்டு வருடம் அப்படித் தான் தள்ளிக் கொண்டு கிடந்தேன். இந்த வருடம் கிருஸ்துமஸ் வாரம் கொட்டிய முதல் பனியே கடுமையாக இருக்க, மூன்றே நாட்களில் ஐபூபுரோஃபேன் (முதுகு வலிக்கு மாத்திரை) சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இது வேலைக்காகாது என்று பனியெறியுங்கருவிகளில் ஏதேனும் ஒன்றை வாங்கி விடலாம் என்று கடைகளில் தேடினால் அறுநூறு டாலருக்குக் குறையாமல் சொல்கிறார்கள். அதற்குள் அந்தப் பனி வாரம் முடிந்து போகவே, அட வருடத்தில் ஓரிரு வாரங்கள் மட்டும் பயன்பட்டுப் பிறகு சும்மாவே மூலையில் கிடக்கிற ஒரு சாதனத்துக்கு அவ்வளவு விலை தேவைதானா என்று விவேகம் முதுகுவலியைச் முழுங்கிவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.
வண்டித்தடம் மட்டுமின்றி முன்கதவுக்கு வரும் வழியையும் சரிசெய்து வைக்காவிட்டால் அங்கு வரவேண்டிய காரணம் இருக்கிற எவரேனும் வந்து விழுந்து வைத்தால் அதற்கும் நாம் தான் பொறுப்பாளி என்று வழக்குத் தொடுத்து விடும் அபாயம் இருக்கிறது என்று வேறு யாரோ சொல்லக் கேட்டுச் சிறிது நாட்களுக்குப் பயம் இருந்தது.
எதற்கும் கவலைப்படாத அடுத்த பனிப் புயல் வீறு கொண்டு வந்து சேர்ந்தது. நல்ல வேளை. எனக்குக் கிட்டாத பதில் எனது பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிட்டியிருக்க வேண்டும். பத்துப் பன்னிரெண்டு வருடமாய்க் கையில் பனித் தள்ளிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ஃபிராங்க் இனியும் தாங்க முடியாது என்று இவ்வருடம் தானொரு பனியெறியுங்கருவி வாங்கிவிட்டார். அவர் புண்ணியத்தில் நானும் என் முதுகும் சிறிது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். அவரே வந்து பல முறை எங்கள் வீட்டு வாசலையும் சற்றுச் சுத்தம் செய்து விட்டுப் போய்விடுகிறார்.
ஃபிராங்க்கைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கருவி இல்லாத போதும் சென்ற ஆண்டுகளில் எங்கள் வீட்டு வாசலைச் சுத்தம் செய்யவில்லை என்றாலும், முன்புறம் உள்ள நடைபாதையைச் சுத்தம் செய்ய வந்துவிடுவார். ஒவ்வொருவர் வீட்டு முன்புறமும் நடைபாதையைச் சுத்தம் செய்வது அந்தந்த வீட்டுக்காரர் பொறுப்பு என்றாலும், பல பேர் அப்படிச் செய்யாமல் தான் விட்டு வைத்திருப்பர். பிராங்க் மட்டும் தன் வீட்டு நடைபாதை தவிர பக்கத்தில் இரு வீட்டு நடைபாதை எல்லாம் சுத்தம் செய்து விடுவார். அதன் வழியே நடந்து சென்று பேருந்தில் ஏறிப் பள்ளி செல்லும் குழந்தைகள் நலனுக்காக என்று. இவர் சரியான நேரத்திற்கு வந்து விடுவாரே என்று அதற்குப் பயந்து கொண்டே எப்போதும் இல்லாமல் குளிர்காலங்களில் கடிகார எச்சரிக்கை மணி வைத்து நான் எழுந்து கொண்டு நடைபாதைச் சுத்தம் செய்யச் சென்ற நாட்கள் சில உண்டு. இந்த வருடம் இயந்திரம் ஒன்றை வைத்துச் சுருக்க அவர் செய்து விடுவதால் எப்போது வருகிறார் எப்போது செய்கிறார் என்றே தெரியாமல் போகிறது. வெளியே அவரைப் பார்க்கிற போதெல்லாம் இரண்டிரண்டு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒன்று – அன்றும் முன்னரும் செய்த உதவிக்கு. இரண்டு – இனிமேலும் பனிக்காலம் முடியும் வரை செய்யப் போகிற உதவிக்கு !! 🙂
“இந்த அமெரிக்கர்களே வெறும் மேலோட்டமாகப் பழகுபவர்கள். நம்மைப் போல் நன்றாகப் பழக மாட்டார்கள் இல்லையா?” என்று இந்தியாவில் பலர் எழுப்பும் கேள்வி எவ்வளவு தவறானது! பொதுவாய் அவர்கள் தனிமை விரும்பிகள். அடுத்தவர் சங்கதியில் அநாவசியமாய் மூக்கை நுழைக்க விரும்பாதவர்கள். ஆனால் உதவி என்று வருகையில் தயங்காது செய்பவர்கள். அமெரிக்கர்களோ இந்தியர்களோ வேற்றினத்தவரோ, பொதுவாகவே எந்தப் பாகுபாடும் இல்லாமல் பல சமயங்களில் மனிதர்களின் நேயத்தையும் நல்ல குணங்களையும் வெளிக் கொணர இயற்கையும் வழிவகுக்கிறது. இந்தப் பனிக் காலமும் அதில் ஒன்று.
வார இறுதிப் பனியில் கட்டின்றிச் சறுக்காட்டம் ஆடி எனது மனைவியின் உந்து (கார்)நெடுஞ்சாலையோரப் பனிக் குவியலில் ஒரு சுற்றடித்து மாட்டிக் கொள்ள, அந்தப் பக்கமாய்ப் போனவர்கள் காவலரை அழைத்துச் சொன்னதும், சிறு இழுவை வண்டி (truck) வைத்திருந்த ஒருவர் தானாக முன்வந்து கயிறு கட்டி வெளியே இழுத்து விட்டதையும் இந்த வகையிலே தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகவரி தெரியாத அந்த நண்பருக்கு நன்றி.
இனியும் வர இருக்கிற அடுத்த பனிப் புயலுக்காகக் காத்திருக்கிறேன். பனிக்காலத் தேவதைகள் வெள்ளையுடையில் பறந்து கொண்டிருக்கின்றன.
* * *
இவ்வருடம் பனி பெய்யும் எல்லா ஊர்களிலும் அதன் அளவும், குளிரும் அதிகமாகவே இருக்கிறது. சுவிஸில் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அதிக அளவு குளிர் சில இடங்களில் பதிவாகியுள்ளது. மயோர்க்காவில்(ஸ்பெயின்) இருபது வருடங்களுக்குப்பிறகு பனி பெய்துள்ளதாம்.
Selvaraj
We bought a snow thrower made by Toro, electrical, for 199$ at Amazon.com. It does a great job. If you need one you can try. Gasoline operated ones are more expensive than electrical ones.
இராதாகிருஷ்ணன், இங்கும் தெற்கே டெக்ஸாஸ் மாநிலத்தில் கூட இவ்வருடம் 12 அங்குலம் பனி பெய்தது சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது! அங்கெல்லாம் பனி பெய்யும் என்பது சிறிது எதிர்பாராதது.
பத்மா, நீங்கள் சொன்ன அதே டோரோ’வைப் பற்றி யோசித்தோம். இந்த ஊர்ப் பனிக்கு அதெல்லாம் பற்றாது என்று பக்கத்து வீட்டுக்காரர் சொல்லிவிட்டார். அதோடு, மின்சாரம் மூலம் இயங்குவதற்கு நீண்ட மின்கம்பியைக் கையாண்டு கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் வேறு வழியில்லை என்றால் அதை வாங்கி விட வேண்டியது தான். நன்றி.
நல்ல பதிவு செல்வராஜ். குளிர்காலத்தை அலுப்புடன் பார்க்கும் என்னைப்போன்றவர்களையே கொஞ்சம் இரசிக்கச்செய்துவிட்டீர்கள். தொடர்ந்து உற்சாகத்துடன் எழுத என் வாழ்த்துக்கள்.
நன்றி டீஜே. பாருங்கள், ஒரு மாதத்திற்கு மேல் சுமாராய் இருந்துவிட்டு, இன்று அடுத்த பனிப்புயல் வந்தே விட்டது. வீட்டு முன்புறத்துப் பனித்தள்ளக் கிளம்பிவிட்டேன்.
[…] உச்சம் என டிசம்பர், சனவரி மாதங்களில் பனிமழைப் பொழிவுகளைப் பார்ப்பது வழக்கம். அதற்கு முன்னும் […]