இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மாறும் பருவங்கள்

April 24th, 2005 · 1 Comment

பொதுவாய்க் குளிர்காலத்தின் உச்சம் என டிசம்பர், சனவரி மாதங்களில் பனிமழைப் பொழிவுகளைப் பார்ப்பது வழக்கம். அதற்கு முன்னும் பின்னும் இரண்டு மாதங்கள் என்று கொண்டு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை க்ளீவ்லாண்டில் பனி என்பதும் கூடப் பழகிய ஒன்றே.

மார்ச் மாதத்தில் இருந்து இம்மி இம்மியாய் மேலேறும் வெப்ப நிலையில் கனத்த குளிராடைகளை விடுத்து சுமை குறைந்திருந்தன தோள்கள். வந்து கொண்டிருக்கும் வசந்தத்தின் அறிகுறியாய்ப் புள்ளினங்கள் அதிகாலையில் ட்வீட் ட்வீட்டிக் கொண்டிருந்தன. புல்வெளிகள் உறக்கம் கலைந்து எழுந்து மீண்டும் பசுமையைப் பூசிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. குளிர்காலச் சோம்பல்களை விடுத்து உயிருக்கே கொஞ்சம் ஊக்கம் வருவதாய்த் தான் இருந்தது.

April 24, 2005 - Snow1

இருந்தும் கிளீவ்லாண்டுப் பருவநிலையை அப்படியே நம்பிவிட முடியாது. இவ்வாரம் பனி வரும் என்று சொன்னபோது ஆச்சரியம் தரவில்லை. ஆனாலும் அரையடிக்குக் குவியும் வண்ணம் இவ்வளவு பனி வந்ததில் ஒரு வியப்புணர்ச்சி மேலிடுகிறது. நாள் பூராவும் இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிற பனியில் ஒரு ஞாயிற்றுச் சோம்பலாய் வீட்டினுள்ளேயே அடைக்கலம். வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்திருந்த அணிலொன்று பனியைப் பார்த்துப் புரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது.

“காலைக் கீழே வைக்க முடியாமல் தீ மாதிரி சுடுகிறது வெய்யல்”, தொலைபேசியில் அம்மா.

வெய்யலின் அருமை பனியில் தெரிகிறது.

புதிய இலைகளில் பனியைத் தாங்கி வளைந்து கிடந்தன கிளைகள். இது பிறந்தவுடன் சோதனைகளுக்கு ஆளான ஒரு வசந்தம். காற்று நண்பனின் உதவிகொண்டு வெண்பனியை உதறிவிட்டு இலைகளும் பூக்களும் சிரிக்க முற்படுகின்றன. இடுக்கண் வருங்கால் நகுதல் இயற்கைக்கும் தெரியும். வளர்கையில் சோதனைகளைத் தாங்கத் தெரிந்த இந்த வசந்தம் இனிமையாய் இருக்கப் போவது உறுதி.

மாறும் பருவங்கள் ஏப்ரல் மாதத்து புல்வெளிப் பசுமையும் பனிமழை வெண்மையுமாய்க் கலந்து என்னைப் பார்த்துக் கலகலவென்று நகைக்கின்றன. வாழ்க்கைக்கும் ஒரு பாடத்தைச் சொல்ல முற்படுகின்றன.

April 24, 2005 - Snow2

Tags: வாழ்க்கை

1 response so far ↓

  • 1 பாலாஜி-பாரி // Apr 24, 2005 at 3:00 pm

    செல்வா, நல்ல பதிவு. இந்த சமயத்துல பனி விழுந்தா ஆச்சரியம்தான். 🙂 . நல்ல வசந்ததிற்கு வாழ்த்துக்கள்.