இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

தாலாட்ட வந்த பாரதி

February 28th, 2004 · 5 Comments

“சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…”

பாரத நாட்டு ஒருமைப்பாட்டிற்காக ஒரு பாட்டைப் பாடி வைத்தான் பாரதி ! ஆனால் சில நிமிடங்களுக்கு முன் இந்தப் பாட்டைத் தான் என் பெண்களுக்குத் தாலாட்டாய்ப் பாடி (!) உறங்கத் தயார் செய்து விட்டு வந்தேன். பாட்டும்தாலாட்டும்தெரியாதஎனக்குஅவ்வப்போதுகைகொடுப்பதுபாரதிதான். இது ஒரு தாலாட்டுப் பாட்டின் இலக்கணங்களுக்கு உகந்ததாய் இல்லாதிருக்கலாம். ஆனால் எனக்கும் என் பெண்களுக்கும் இடையேயான அந்தச் சிறு உலகத்தில் அந்தச் சில நிமிடங்களுக்கு இதுவே எங்கள் தாலாட்டு.


முன்னொரு காலத்தில் பெரியவளுக்கு முதலில் நான் பாடிய தாலாட்டு “காக்கைச் சிறகினிலே” தான். அவள் கைகளில் தவழும் சிறியவளாய் இருந்த போது உறங்க மறுக்கும் அந்த இரவு வேளைகளில் கைகளில் சுமந்தபடி சுழன்று சுழன்று நடந்தபடி நான் பாட, அந்தக் கிறக்கத்தில் மெல்லக் கண்கள் சொருக அவள் நித்திரையுலகிற்குச் செல்லுகின்ற அந்தக் காட்சி… பார்த்துக் கொண்டிருந்த அன்றும் பேரின்பம். எண்ணிப் பார்க்கும் எந்த நாளும் ஆனந்தம்.

இரண்டு வருடங்களுக்கு இப்படி ஓட்டிக் கொண்டிருக்க, பிறகு வந்த சிறியவளுக்கோ “காக்கை” செல்லுபடியாகவில்லை. ஹும்… அடுத்தடுத்து நான் முயற்சி செய்த எனக்குத் தெரிந்த மிகச் சில பாரதி பாட்டுக்களும் வேலை செய்யவில்லை. கடைசியில் அகப்பட்டது என்னவோ தமிழ்த்தாய் தான்.

“நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்…”

பள்ளியில் படிக்கும் போது காலை வணக்க நேரத்தில் பாடிப் பழகியது வீண்போகவில்லை! தினமும் தமிழ்த் தாய் வாழ்த்தைக் கேட்டுக் கொண்டு தூங்கப் போனவள் இன்று “ஐ டோண்ட் நோ தமுள். ஐ கேன்ட் சே தட்” என்கிறாள். பரவாயில்லை… மூன்றரை வயதான பின் இப்போது அவளிடம் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் வந்து விளையாடுகிறது. (தமிழில் கேட்டால் தான் “ஸ்னேக்” கிடைக்கும், புத்தகம் படிப்பேன் என்று நானும் அவ்வப்போது அடம் பிடிப்பதும் காரணமாய் இருக்கலாம்).

இந்தப் பொடிசுகள் விவகாரம் அவ்வளவு லேசுப்பட்டதாயில்லை. சில நாட்களுக்கு அவர்கள் அறிந்த பழகிய விஷயங்கள் தான் வேண்டும். திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் புதிது புதிதாய் வேண்டும் என்னும் நிலைக்கு மாறிப் போயிருப்பார்கள். காக்கைச் சிறகையும் தமிழ்த் தாய் வாழ்த்தையும் விட்டு வளர்ந்தவர்களுக்குப் பாட மீண்டும் பாரதி தான் வந்து கை கொடுத்தார். ஒவ்வொன்றாய் முயன்று இரண்டு பாடல்கள் தேறின.

“அப்பா, சிவசக்தி for me, ஆத்திச்சூடி for நந்து” – பெரியவளின் சிபாரிசு வேறு.

சிவசக்தி வேரொன்றுமில்லை, நமது “நல்லதோர் வீணை செய்து” பாட்டுத் தான். அதில் “எறிவதுண்டோஓஓஓஓஓ” என்று நீட்டி முழக்கியதால் கூட அது அவளுக்குப் பிடித்திருக்கலாம்.

“ஆத்திச்சூடி இளம்பிறையணிந்து மோனத்திருக்கும் முழு வெண் மேனியோன்…”

இவளுக்குப் பாட எடுத்த போது தான் இதன் வரிகளையும் அர்த்தங்களையும் கூர்ந்து கவனிக்க நேர்ந்தது. ஆகா… என்ன அருமையான பாடல் ! “பரம்பொருள் ஒன்றே – பின்னெல்லாம் உருவகம்” என்னும் தத்துவம் ! அருமையடா பாரதி !

இந்தப் பாட்டையும் தினமும் பாடிப் பாடி இராகமெல்லாம் கண்டபடி மாறி… சிலசமயம் எனக்கே வந்த ஒரு தூக்கக் கலக்கத்தில் வரிகளை மாற்றிப் பாடிவிட்டால், “அப்பா, தப்பாப் பாடறீங்க”, என்று என்னையே திருத்தும் அளவுக்கு அந்தப் பாட்டுக்கள் அவர்கள் உள்ளத்தில் ஊறிப் போய் விட்டன. அந்த உருவகத்தில் இந்தக் குழந்தையும் ஒன்று தானே.

பின்னொரு நாள் பாட்டுக்களின் காலம் போய்க் கதை கேட்கும் காலம் வந்தது. நானும் சிறு வயதில் கதைகள் நிறையக் கேட்டிருந்தாலும், கதைகளைக் கோர்வையாய்ச் சொல்வது என்பது எனக்குச் சுலபமான காரியம் இல்லை. ஒரு சினிமா பார்த்து வந்தால் கூடச் சிலரெல்லாம் அருமையாய்க் கதை சொல்வார்கள். நமக்கோ பார்த்து இரசிக்கத் தெரிந்ததோடு சரி. திரும்பச் சொல்வதென்பது சரிப்படாத காரியம். கதை சொல்லத் தெரியாதே தவிர, கதை விடுவதற்கு என்றும் நான் தயங்கியதே இல்லை.

தினமும் புதிது புதிதாய் முன்னர் கேட்டிராத கதை வேண்டும் என்கிற வேண்டுகோள் இருக்கிற இப்போதைய நிலை பரவாயில்லை. ஆனால், சில காலம் முன்னர் தினமும் முன் தினம் கூறிய அதே கதை தான் வேண்டும் என்கிற நிலையில் பெரிய பிரச்சினையாய்ப் போய் விட்டது. முன் நாள் இரவு அந்தக் கணத்து அரைத் தூக்கத்தில் யோசித்தும் யோசிக்காமலும் விட்ட கதையை அடுத்த நாள் மீண்டும் நினைவு கூர்வதென்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா ? இதில் இன்னும் பிரச்சினை என்னவென்றால், நமக்குத் தான் நினைவிருக்காதே தவிர, பெண் படு கூர்மையாய் நினைவு வைத்திருந்து நான் சொல்லச் சொல்லச் சரிபார்த்து வருவாள். இன்றைய கதை சற்றே தடம் மாறும் போது “நோ அப்பா” என்று திருத்தங்கள் வேறு வந்து சேரும் ! ஏன் இப்படி இவர் தப்புத் தப்பாய்ச் சொல்கிறார் என்று மனதிற்குள் எண்ணியிருப்பாள் ! “ஓ! அப்படியா, சரி சரி சரி” என்று நான் சமாதானமாகிப் போன நாட்களும் உண்டு. “ஏய்! நான் தானே கதை சொல்கிறேன். நீ அமைதியாயிரு. நான் சொல்வது தான் கதை” என்று எதிர்வாதம் புரிந்த நாட்களும் உண்டு. “இல்லாவிட்டால் நீயே கதை சொல்லு” என்று நான் தப்பித்துக் கொள்ளப் பார்த்த நாட்களும் உண்டு. ஒரு நிலையில் நான் முதலில் கதை சொல்லப், பிறகு அதே கதையை அவளும் கூறி ஆனால் இடையில் போக்கை மாற்றித் தன் கதையாய் அவள் என்னிடத்தில் விட்ட கதையும் நடந்திருக்கிறது !

தானாகப் படுத்துறங்கப் பழக்க வேண்டும் என்று முயல்கிற இந்தக் காலத்திலும் முதலில் புத்தகம் படித்துக் கதை சொல்லிப் பாட்டுப் பாடி என்று முடிந்தவரை நேரத்தை நீட்டிக்கச் செய்கிற அவர்களது முயற்சி சுவாரசியமானது தான். இவையெல்லாம் முடிந்து கண்களை மூடிப் படுக்க வேண்டிய நேரமாகி விட்டால், அப்போது தான் தண்ணீர்த் தாகம் ஏற்படும் ! முடிந்தவரை என்னை அந்த அறையிலேயே இருக்க வைக்க எத்தனை பிரயத்தனங்கள் ! அதனால் இப்போதெல்லாம் இந்தச் சலுகைகளை நேரத்தோடு முடிச்சுப் போட்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எட்டு மணிக்குள் போனால் கதை பாட்டு எல்லாம் உண்டு. எட்டரை ஆகி விட்டால் கதை கிடையாது, போனால் போகிறது பாட்டு மட்டும் உண்டு. ஒன்பது ஆகி விட்டால் ஒன்றும் கிடையாது… இப்படி.

காலைப் பள்ளிக்கு இன்னும் சில நாட்களில் ஏழரைக்குப் பேருந்து வந்து விடும் என்பதால், இரவு எட்டு மணிக்குப் படுத்துறங்கப் பழக்கச் சொல்கிறார்கள். நடுக்கும் குளிரும் விரைந்து வந்துவிடும் இருட்டும் இருக்க இப்போது பரவாயில்லை. ஒன்பது மணி வரை வெய்யவன் வந்து வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் வேனிற்காலத்தில் இது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கப் போகிறது.

எப்படி இருந்தாலும் பெண்களை உறங்க வைக்கச் செல்கின்ற இந்த நேரங்கள் ஒரு இனிமையான அனுபவம் தான்.

Tags: வாழ்க்கை

5 responses so far ↓

  • 1 prabhu // Mar 1, 2004 at 3:03 am

    என்ன ஒற்றுமை….எங்க வீட்டிலும் அதே பாட்டுதான். அந்தப் பாட்டு மட்டும்தான் தெரியும் என்பதால்…ஆகிவிட்டது 7 வருடம். இரண்டாவது மகளுக்கும் அதே பாட்டுதான். ஆனால் பாட ஆரம்பிக்கவில்லை. மூன்று மாதத்திலேயே கஷ்டப்படுத்துவானேன் என்றுதான்:-))

  • 2 Kasi // Mar 1, 2004 at 2:03 pm

    இங்கேயும் ஒரு சில பாட்டுக்களாலேய்யே தமிழ் வாழுகிறது. என் மகளுக்கு, ஓடி விளையாடி பாப்பா மிகவும் பிடித்தது. அதிலும், ‘மோதி மித்தித்துவிடு பாப்பா..’ என்னும்ப்போது, எழுந்து தரையில் ஒரு உதை உதைத்து, சந்தோழப்படுவாள். என்ன முயன்றும் இன்னும் எதிர்பார்த்த அலவுக்கு தமிழ் வரவில்லை. 🙁

  • 3 Kasi // Mar 1, 2004 at 2:03 pm

    என்னவோ, இந்தக்கட்டத்தில் தமிழ் உடைந்தே தெரிகிறது, அத்னாலே, ஏகப்பட்ட எழுத்துப்பிழை. பொறுத்தருள்க!

  • 4 செல்வராஜ் // Mar 1, 2004 at 8:03 pm

    பிரபு, வாழ்த்துக்கள். மூன்று மாதக் குழந்தையையும் வைத்துக் கொண்டு வலைப்பதிவதும் சிரமம் தான். அதனால்(+உம்) தான் உங்கள் பதிவுக்குத் திரையிட்டு விட்டீர்களா?
    காசி, இரண்டாவதற்குத் நமது மொழியைக் கொண்டு வருவது இன்னும் அதிகச் சிரமமாய்த் தான் இருக்கிறது. நான் அறிந்த வட இந்திய நண்பர் ஒருவரும் இதே கருத்தைச் சொன்னார் – இந்தி கற்றுக் கொடுப்பது பற்றி!

  • 5 Balaji // Mar 2, 2004 at 4:03 pm

    பரவாயில்லையே! எட்டு எட்டரைக்குள் தூக்கம் செய்து விடுகிறீரே… பொறாமையா இருக்கு சாமீ… (குழந்தைக்காக ஒரு டிவி (அமெரிக்க) சீரியலும் பார்க்க முடிவதில்லை :>