• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« நல்லவனா கெட்டவனா?
பூச்சிகள் »

அமேரிக்காத் தேரு பாருடா

Oct 20th, 2008 by இரா. செல்வராசு

“நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நான் அமெரிக்க மக்கள்கிட்ட நேராவே பேசிக்கிறேன்”ன்னு துணைத்தலைவர் போட்டியாளர் சேரா பேலின் விவாதத்துல சொன்ன மாதிரி, பாஸ்டன் பாலாகிட்ட அவர் கேட்ட கேள்விக்குப் பதில் ஒண்ணும் சொல்லாம இருந்தேன். அப்படியே இருந்திருந்தா சத்தமில்லாம இருந்திருக்கும். ஆனாலும், அமெரிக்க அதிபர் தேர்தலப் பத்தி (கூட்டுப் பதிவுன்னாலும்) பா.பாலா தனியாளா நல்லா பதிவிட்டுக்கிட்டு இருக்கிறார். (அதுக்கு ஒரு பாராட்டச் சொல்லிக்கிறேன்). அப்படியான சுவாரசியமான இடுகைகள விடாமப் படிச்சுக்கிட்டு, ஒரு பின்னூட்டத்தையும் ஒரு நாள் நான் போட, “கேள்விக்கு விடையெங்கேப்பா?”ன்னு இன்னொரு மடல் அனுப்பிச்சுட்டாரு. அந்தக் கேள்விகளுக்கு விடையச் சொல்லாம, வலைப்பதிவுச் சமூகத்துக்கிட்ட நேராவே பேசிக்கிறேன் (பேலின் தாக்கம் 🙂 ).

இன்னிக்கு மூஸ்_ஹண்டர்னு ஒருத்தர் பதில் சொல்லி இருக்காரு. யாருன்னு தெரியல்ல. ஆனா, அச்சு அசலா எனக்குப் பொருந்துர மாதிரியே இருக்கு. பதினேழு வருசம். சமீபத்தில் குடியுரிமை. முதல் தேர்தல், ஓட்டு. இருவரையும் பிடிக்கவில்லை. இருவரில் ஒபாமா பரவாயில்லை. இருந்தாலும் நேடர் இருந்தா அவருக்கு ஓட்டு. (ஆரம்பத்தில் ஹில்லரி பக்கம் கொஞ்சம் சாய்வு). எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. இந்தப் பேர டிவிட்டரிலோ எங்கியோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். கொஞ்சம் நேரம் தேடுனேன். தெரியல. (யாரப்பா அது? எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!).

கொஞ்ச நாள் முன்னால தான் ட்விட்டர் வழியா, மெக்கெயின் ஒபாமா தவிர இன்னும் நாலு பேரு போட்டியிடுராங்கன்னு தெரிஞ்சுது. ரான் பால் நடத்துன கூட்டத்துல எல்லோரும் பேசுனதப் பாத்தேன். ஜெயிக்கிற கட்சிக்குப் போடாம மூணாவது ஆளுக்கு ஓட்டுப் போட்டா உங்க ஓட்டு வீண் அப்படின்னு சொன்னா நம்பாதீங்க; ஜெயிப்பாங்கங்கறதுக்காக உங்களுக்கு வேண்டாத ஆளுக்கு ஓட்டுப் போட்டாத் தான் அது வீண் அப்படின்னு அந்தக் கூட்டத்துல பேச்சக் கேட்டது சட்டுனு எனக்குப் பிடிச்சுக்கிச்சு. மொத மொதல்ல போடற ஓட்ட வீணாப் போடாம ஒரு மாற்றத்துக்கான ஓட்டா போடலாம்னு அன்னிக்கு நெனச்சுக்கிட்டேன். இருந்தாலும் பெருசா முடிவு பண்ணாம மெக்கெயின் ஒபாமான்னே யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.

மெக்கெயின் பக்கம் சாய்விருந்தப்போ நண்பர்கள் கிட்ட அரசியல் பேசுனா கொஞ்சம் கமுக்கமா இருந்துக்குவேன். ஏன்னா, என்னச் சுத்தி நெறயப் பேரு சனநாயகக் கட்சி ஆதரவு இருக்குறவங்க. ஒபாமாவுக்கு ஓட்டுக் கேக்க, வேலை செய்ய, நன்கொடைன்னு இருக்குறவங்க. ஆனா, ஒரு உண்மையான கட்சி சார்பில்லாதவனா, நான் ரெண்டு பக்கமும் ஊசலாடிக்கிட்டுத் தான் இருந்தேன். இன்னும் அப்படித் தான் இருக்கேன்னும் நினைக்கிறேன்.

இன்னிக்குக் கூடச் சாயந்தரம் வீட்டுப் பக்கமா ஒருத்தர் வந்து ஒபாமாவுக்கு ஓட்டுக் கேட்டுட்டுப் போனார். இல்லீங்க, அவரு பேரு சிவா இல்லை :-). ஒரு வெள்ளைக்காரர். நான் இன்னும் முடிவு செய்யலைன்னும் கொஞ்சூண்டு ஒபாமா பக்கந்தான் சாஞ்சுக்கிட்டு இருக்கேன்னும் சொன்னேன். ஒபாமா மேல என்ன தயக்கம்னாரு. ரொம்ப அறிவாளியா இருக்காரு. நல்லா பேசுறாரு. எல்லாம் சரிதான். ஆனா, இது எனக்கு வெறும் வெத்துப்பேச்சா தான் படுது. அதுக்கும் கீழ ஒண்ணும் இல்லன்னு எனக்கு நல்லாத் தெரியுது. தன்னுடைய சிறந்த பேச்சால தானே உருவாக்கிக்கிட்ட ஒரு உயர்ந்த இலக்க அவரால எட்ட முடியல. தேர்தலு, போட்டினு வந்தா எல்லாம் சகஜம்னு சொன்னா, அதையே தான் இவரும் பண்ணினா, அப்புறம் இவரு என்ன பெரிய மாற்றத்தக் கொண்டுவரப் போறாரு? இவரும் சாதாரணமான இன்னொரு அரசியல்வாதிதானே? அப்புறம் என்ன மாற்றம் மாற்றம்னு பேசிக் கிழிக்கிறாரு?அதோடு அந்தப் பேச்சுத் தோரணத்துக்குக் கீழ என்ன இருக்குன்னு தெரியாதப்போ எத வச்சுக்கிட்டு இவருக்கு ஓட்டுப் போடறது?

பல வருசங்களுக்கு முன்னால எனக்கு மெக்கெயினப் புடிச்சிருந்துது. ஆனா, அவரு அப்போ அதிபர் தேர்தல்ல எல்லாம் நிக்கல. அதுக்கப்புறம் கால ஓட்டத்துல அவருடைய நடவடிக்கைகள் சில அவ்வளவாப் புடிக்காமயும் போயிருக்கு. கடசில புஷ்ஷு கூடவும் சேந்துக்கிட்டது ரொம்பவே உறுத்தல். இருந்தாலும் அவர் இன்னொரு புஷ்ஷுன்னு ஒபாமா சொல்றதும் கொஞ்சம் அதிகம் தான். இன்னிக்கு வந்தவர், மெக்கெயின் வந்தா இன்னொரு போர் வந்தாலும் வரலாம்னு சொன்னார். அப்படி நான் நினைக்கலைன்னாலும், யார் கண்டது, எந்தப் புத்துல எந்தப் பாம்போ? நடந்தாலும் நடக்கும். மெக்கெயின் ஒரு போர்ப்பிரியர்னு இன்னும் வேற யாரோ கூடச் சொன்னாங்க. ஈராக் விசயத்துல உடனே திரும்பி வர ஏற்பாடு செய்வேன்னு ஒபாமா சொல்றத நான் நம்பல. சுத்தி இருக்கறவங்க அவர சுலபமா அப்படிச் செய்ய முடியாதுங்கன்னு சொல்லி மாத்த வச்சுருவாங்க. அரசியல் அல்லது சுய காரணங்களுக்காக பல விசயங்கள்ளயும் மாறக் கூடியவரு தான் ஒபாமான்னு நான் நெனைக்கிறேன். அல்லது, சுலபமா மாத்தப் படக் கூடியவர் ஒபாமா. இவரே இப்படிங்கறப்போ, மெக்கெயின எப்படி நம்பறது?

அதுலயும், மெக்கெயினும் இல்ல, ஒபாமாவும் இல்ல, பொதுவா அமெரிக்கா பத்தின இந்தச் சலனப் படத்தக் கொஞ்சம் பாருங்களேன்:

God Save Us from American Peace and Liberty!

அப்புறம், மெக்கெயின் ஒபாமா ரெண்டு பேருக்கும், ஏன் சனநாயக் கட்சி, குடியரசுக் கட்சி ரெண்டுக்குமே பெருசா வித்தியாசம் இல்லீங்க. ஒரு நாலஞ்சு கொள்கைங்கள வித்தியாசமா சொல்லுவாங்க. எல்லாம் பேச்சுக்குத் தான். ஊருக்குத் தான் உபதேசம் உனக்கு இல்லடான்னு அவங்க ஊட்டுல நடந்துக்குவாங்க. சில சின்னச் சின்ன வித்தியாசங்க இருக்கலாம். ஆனா அதுல ரெண்டுபக்கமும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அப்புறம் எதுன்னு மேல வைக்கிறது?

அதோடு, வரிக்கொள்கை, நலநிதி, ஆற்றல் கொள்கை, வெளியுறவுன்னு இப்போ நிறையச் சொல்றாங்க. அதையெல்லாம் அப்படியே கடைப்பிடிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? இப்படித் தேர்தலுக்குன்னு அவசர அவசரமாத் திட்டம் போட்டு அதை அப்படியே நடத்துனா அது தான் நல்லதா முடியுமா? அதனால இப்போ என்ன சொன்னாலும் அத முழு உண்மைன்னு நம்பவும் முடியாது. யாரு என்ன திட்டம் கொண்டாருவாங்கன்னும் சொல்ல முடியாது. ஆற்றல் கொள்கை பத்தி நான் கொஞ்சம் சொல்லலாம். ஆனா, எனக்கும் ஒரு சாய்வு இருக்கு பாத்துக்கங்க.

ஒவ்வொன்னா விரிவா நேரமிருந்தா அப்புறம் பாக்கலாம். இப்போதைக்கு மூஸ் ஹண்டர் சொன்ன மாதிரி எங்க ஊர்ல ரால்ஃப் நேடர் இருக்காரான்னு பாத்தேன். இருக்கார். அவருக்கு ஓட்டுப் போடலாமான்னு யோசிக்கணும். மெக்கெயினுக்குப் போட்டிருந்தா என்னை விரோதியா நெனைக்கரவங்க இதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். இது வீணாப் போனதுன்னு என்னை விட்டிருவாங்க. ஆனா, மொத ஓட்டு வீணாப் போகாத ஓட்டா இருக்கணும்னு தான் நான் நெனைக்கிறேன். ஒரு உண்மையான மாற்றத்துக்கான ஓட்டா இருக்குமான்னு யோசிக்கிறேன்.

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Tags: அமெரிக்கத்தேர்தல், ஒபாமா, ஓட்டு, நேடர், மெக்கெயின்

Posted in சமூகம்

4 Responses to “அமேரிக்காத் தேரு பாருடா”

  1. on 20 Oct 2008 at 11:56 pm1Pari

    Looks like you expect the ideal candidate. That will never ever happen 🙂
    Primaries – Run to the Left most(Democrats), run to the Right most(Republicans); Secure the nomination; Get to the center. It may be a cliche, but the president serves left, right and center, so it is only logical.
    Nader is history in this election. Last time at least there was some mention of him. I don’t think he has the sincerity (aged and all).
    The libertarians on the other hand could grow a little next time.

    As much as people would like a third (or more) party, the system has been designed for two parties. Ask Nader about his struggle to get onto each state’s ballot; it’s not easy!
    Without a “Obama like” bottom up movement there will be no third party. Period.
    So, close your eyes and -as always- choose the lesser evil 🙂

  2. on 22 Oct 2008 at 7:57 am2செல்வராஜ்

    பரி, நீங்க சொல்ற மாதிரி தான் செய்யணும்னு நினைக்கிறேன். ஒபாமாவும் சாதாரணமான அரசியல்வாதி என்று ஏற்றுக் கொண்டால் பிரச்சினையில்லை. எல்லோருக்கும் மேலே என்று காட்டிக் கொள்வது (அப்படி இல்லாததால்) முரணாய் இருக்கிறது. அதற்குப் பெரும் காரணம் ஊடகங்கள் தான் என்று நினைக்கிறேன். அதை ஒதுக்கிவிட்டு, நீங்கள் சொல்வது போல் இருவரில் ஒருவர் என்று யோசிக்கலாம்.

    நேடர் சற்று சக்தி குறைந்தது போலத் தான் தோன்றுகிறது. தவிர, அவரது கொள்கைகளையும் இன்னும் விரிவாக நான் பார்க்கவில்லை. அணுசக்திக்கு எதிரானவர் என்று எங்கோ பார்த்தேன். அணுசக்தி குறித்து எனக்குப் பெரிதாய் எதிர்ப்பு இல்லை. இன்னும் அவரது மற்ற கொள்கைகள் என்ன என்று விரிவாகப் பார்க்கவேண்டும். இருப்பினும் அவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறச் சிரமப்பட்டதை நானும் பார்த்தேன். அந்த நிலையேனும் இங்கு மாறவேண்டும். அவ்வகையில் இந்தியா மேல். எங்க ஊர்ப்பக்கம் ஒருமுறை நூறுக்கும் மேற்பட்டவர்கள் சுயேச்சைகளாய் இருந்து டெபாசிட்டைப் பறிகொடுத்தார்கள் 🙂

  3. on 28 Oct 2008 at 7:30 am3Nagu

    இந்தத் தேர்தலில் ஒபாமா பேச்சு, செயல் குறித்து எனக்கும் யோசனையாகத்தான் இருக்கிறது. ஆனால் எதிர்ப்பக்கம் ஒன்றும் பெரிதாக இல்லை. பேலின் போன்றவர்கள் வருவது நிச்சயம் ஆபத்தானது. மதப்பற்றுள்ள வலதுசாரிகளுக்கும் தாலிபானுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை. புஷ் என்னதான் ஆனாலும் ஈராக் யுத்தத்தை சரியான முடிவு என்று சொல்வது போன்ற மூர்க்கத்தனம்தான் அலாஸ்கா வாழ்க்கையை வெளியுறவுத்துறை அனுபவமாக மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கிறது. மெக்கெயின் மேல் இருந்த நல்ல அபிப்பிராயம் எல்லாம் அவர் தேர்தலில் நடந்துகொண்ட விதத்திலும், அவர்களின் பிரச்சாரம் சென்ற திசையிலும் அடி பட்டு விட்டது. சுஜாதா சொல்வார் – தேர்தலில் யார் நல்லவர் என்று தீர்மானிக்க முடியாவிட்டால், வயதில் குறைந்தவருக்கு ஓட்டு போடுங்கள் – கொஞ்சமாவது மாற்றம் வரும். அந்த விதத்திலும், அறிவியலுக்கு எதிரியான மதவாதிகளுக்கும் எதிரான ஓட்டு என்னுடையது. The lesser but unknown evil! I am not comfortable with the known devil still 🙂

    ஆனால் ரிபப்ளிகன்களால் இந்தியாவுக்கு நிறைய நல்லது நடந்திருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் முதல், அவுட்ஸோர்ஸிங் பூம் வரை… இதில் பலருக்கு மாற்று அபிப்பிராயம் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் இந்த ஆட்சியில் இந்தியாவுடன் உறவு மேம்பட்டு இருக்கிறது. ஆனால் என்ன செய்வது? Many negatives outweigh the positves.

  4. on 28 Oct 2008 at 8:37 am4செல்வராஜ்

    உண்மை தான் நாகு. நீங்கள் சொல்லும் கருத்துக்களில் முழுக்க உடன்படுகிறேன். அதிலும், “மெக்கெயின் மேல் இருந்த நல்ல அபிப்பிராயம் எல்லாம் அவர் தேர்தலில் நடந்துகொண்ட விதத்திலும், அவர்களின் பிரச்சாரம் சென்ற திசையிலும் அடி பட்டு விட்டது.” என்று நீங்கள் சொன்னது போலவே தான் அண்மையில் யோசித்துக் கொண்டிருந்தேன். ‘வெற்றியைப் பற்றி முக்கியமில்லை. இது தான் நான்’ என்று உறுதியாக இருந்திருப்பாரானால் இன்னும் பலமான போட்டியைத் தந்திருக்க முடியும். ஒபாமாவைப் பற்றித் தயக்கம் இருந்தாலும், அவ்வளவு மோசமாகச் சென்றுவிடவில்லை என்றே நினைக்கிறேன். ஊடகங்கள் மிகையாகச் சித்தரிப்பது ஒரு பிரச்சினை. இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் எனது ஓட்டு ஒபாமாவுக்கென முடிவு செய்திருக்கிறேன்.

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook