பூச்சிகள்
Oct 23rd, 2008 by இரா. செல்வராசு
பூச்சிகள் பற்றிய பாடம் அக்குவேறு ஆணிவேறாக இரண்டாம் வகுப்பில் எதற்குச் சொல்லித் தரப்படவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதும், வகுப்பறையில் வளர்க்கும் பூச்சிகளும், அவை பற்றி எழுதப்படும் புனைகதைகளும், பூச்சிகளுக்கும் அரக்னாய்டு எனப்படும் சிலந்தி, பூரான் வகையறாவிற்குமான வித்தியாசங்களும் நிச்சயமாய் எனக்குத் தேவையில்லை. ஆனால், இரண்டாம் வகுப்பில் படிப்பது நானல்ல. மகள். எதையேனும் கற்றுக் கொள்ளத் திரியும் வயது போல. சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்கிறார்கள். இவற்றைத் தெரிந்து என்ன செய்யப்போகிறார்கள்?
பூச்சிகளுக்கு என் வீட்டிலோ இடமில்லை. நினைவு தெரிந்த முதல் பயக்கனவு எனக்குப் பூச்சிகளோடு தான். இத்தனைக்கும் அவை என்ன அழகு என்று வியத்தகு பட்டாம்பூச்சிகள் தாம். அழகென்றாலும் இருட்டரையில் நூற்றுக்கணக்கில் உங்கள் முகத்தில் வந்து மொச்சினால், தூக்கத்திலென்றாலும் கத்தத்தானே செய்வீர்கள். சின்னதாய் இருந்தாலும் பறக்கத் தெரிந்த பூச்சிகள் என்னைவிடச் சக்திவாய்ந்தவை என்பது என் எண்ணம். அதனால், அவை ஏமாந்த சமயம் பார்த்து பழைய செய்தித்தாளோ, பிய்ந்த செறுப்போ அந்நேரம் எது கையில் கிடைக்கிறதோ அதனைக் கொண்டு ஒரு கொலை அங்கு நிகழும். ஆனால், கருணை இல்லாதவன் நான் என்று நினைத்துவிடாதீர்கள். அவற்றை ஒருபோதும் துடிதுடிக்க விடமாட்டேன். முடிந்தவரை உடனடி மரணமே. வீணாக ஒரு உயிரைக் கொள்ளும் குணம் என்னிடம் இல்லை. சொல்லப் போனால், மரணதண்டனையையே நான் எதிர்க்கத் தான் செய்கிறேன். ஆனாலும், எனக்கென்று வட்டம்போட்டு நான் அமைத்துக் கொண்ட இடத்தில் பூச்சிகளை வரவேண்டாம் என்று யாராவது சொல்லிவிடுங்கள். எல்லோரும் நிம்மதியாய் இருக்கலாம்.
பூச்சிகளைப் பற்றிய அறியாமை கூட அவற்றின் மீதான என் வெறுப்பிற்கும் பயத்திற்கும் காரணமாய் இருக்கலாம். என் பயத்தையோ வெறுப்பையோ பெண்களிடம் காட்டாதிருக்க முயல்கிறேன். தான் வரைந்த ஓவியங்களைக் கண் முன் கொண்டு வந்து காட்டி இடிக்கிறாள் மகள்.
“அப்பா, இது கிரிக்கெட் பூச்சி, இது தேனீ, இது லேடி-பக்…”
பார்த்து முடித்து மற்ற தாள்களோடு குப்பையில் தான் போகின்றன இவையும், அவசரமாக. “டே, நல்லா இருக்குடா…”.
ஆரம்பப் பள்ளியிலே எனக்குப் ‘பூச்சி’ என்று இன்னொரு பெயரும் இருந்தது.
* * * *
இது ஏதோ நவீனத்துவ கதையா?
“ஆனாலும், எனக்கென்று வட்டம்போட்டு நான் அமைத்துக் கொண்ட இடத்தில் பூச்சிகளை வரவேண்டாம் என்று யாராவது சொல்லிவிடுங்கள். எல்லோரும் நிம்மதியாய் இருக்கலாம்”
இது நல்லா இருக்கு…
பிரபு, வாங்க. நன்றி. ஒரு கதை முயற்சின்னு வேணும்னா வெச்சுக்கலாம் :-). நவீன கதை கூட முயலலாம் போலிருக்கே…
செல்வராஜ்
கோபி கிருஷ்ணன் என்றொரு தமிழ் எழுத்தாளர். அமரர். அவர் எழுதிய மானிட வாழ்வு தரும் ஆனந்தம் எனும் சிறுகதை தொகுப்பில் “பரஸ்பரம்” என்றொரு சிறுகதை .
நகரத்திலிருந்து செழிப்பானவொரு சிற்றூருக்கு பணி நிமித்தமாக நகர்ந்தவர், பூச்சி வகையறாக்களுடன் மன்றாடி பின் அமைதி
அடைவது குறித்தான கதை; கட்டுரையோ! தெரியவில்லை. கதையில் வரும் பாத்திரங்கள், மனிதனொருவனைத் தவிர்த்து தேரைகள், குளவி, தேனீக்கள், பல்லி, குட்டி பல்லி, பிள்ளைப்பூச்சி, ஆந்துப்பூச்சி (moth), வெட்டுக்கிளி, இலைப் பூச்சி, குச்சிப் பூச்சி, கருவண்டு, கம்பளிப் பூச்சி, பாச்சை, மற்றும் ஒரு பெரிய ஈ.
புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள், பரஸ்பரம் போலவே படிக்க வேண்டிய பல நல்ல கதைகளின் தொகுப்பு.
நன்றி வாசன். நீங்கள் குறிப்பிட்டவரை நான் கேள்விப்பட்டதில்லை. படிக்க வேண்டியவர்கள், வேண்டியவைகள் என்னும் நீஈஈண்ட 🙂 பட்டியலில் வைத்துக் கொள்கிறேன். மீண்டும் படிப்புப் பழக்கத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறேன்…