உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
Nov 24th, 2003 by இரா. செல்வராசு
“எல்லாம் கடவுளின் சித்தம்” என்றாராம் ஜெயலலிதா, தீர்ப்பைக் கேட்டவுடன். “எங்கம்மா தப்பே பண்ணலை, சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு” என்று கழகத்தவர்கள் குதூகலிக்க ஆரம்பித்துவிட்டனராம். இந்தச் சத்தங்களில், தீர்ப்பின் முக்கியப் புள்ளிகள் மறைந்து தான் போகும். இரைச்சல்களுக்கு நடுவே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
தீர்ப்பு பலர் எதிர்பார்த்தபடி அல்லது ஆசைப்பட்டபடி வராமல் இருந்திருக்கலாம். ஆனாலும் உச்ச நீதி மன்றத்தை நான் மதிக்கிறேன். சுதந்திரமாய்ச் செயல்பட்டு மக்களாட்சிக்கு நமது நாட்டு நீதி மன்றங்கள் உறுதுணையாய் நிற்கின்றன. அது இன்று வந்த டான்சி தீர்ப்பைத் தாண்டியும் நிலைத்து நிற்கும்.
உச்ச நீதி மன்றம் இன்று என்ன கூறியது ? “ஜெ. நிரபராதி என்பதில் சந்தேகமே இல்லை” என்று அது கூறவில்லை. “அவர் மீது சாற்றப் பட்ட குற்றம் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப் படவில்லை. அதனால், அவரை விடுதலை செய்து உயர்நீதி மன்றம் வைத்த தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்றது. அவ்வளவே. மேலும், “அவர் குற்றம் செய்திருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழ இடம் இருக்கிறது (அந்தச் சந்தேகம் மட்டுமே குற்றத்தை உறுதி செய்யப் பற்றாது என்றாலும்), அப்படி ஒரு காரியத்தைப் பொது வாழ்வில் இருக்கிற ஒருவர் செய்திருக்கக் கூடாது” என்று கண்டனம் தெரிவிக்கிறது. அவருடைய மனசாட்சிக்கு அவரே பதில் சொல்லிக் கொள்ள வேண்டும், இது பற்றி யோசித்துப் பார்க்கவேண்டும். பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று எல்லாம் கூறி இருக்கிறது.
நான் ஒரு தவறு செய்கிறேன் என்றால், அது யாரும் பார்க்காததால், யாரும் நிரூபிக்க முடியாது என்பதால் தவறு இல்லை என்று ஆகிவிடாது. இது தான் முக்கியத் தீர்ப்பு. குற்றவாளி அல்ல என்பதல்ல. குற்றம் முழுமையாக நிரூபிக்கப் படவில்லை என்பது தான். தனி ஒரு மனிதனாக இந்த வழக்கைக் கவனிக்கும் போது, எனக்கு இந்த வழக்கைப் பற்றிய விவரங்களோடு கூடவே பிற செய்திகள், நடவடிக்கைகள், நாட்டு நடப்புக்கள், போன்ற பிறவற்றையும் (circumstantial evidence) கவனிக்கும் சுதந்திரம் இருக்கிறது. அவற்றின் அடிப்படையில் என் மன நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்மாணிக்கிறது. ஆனால், நமது நாட்டு நீதி மன்றங்களுக்கு அந்தச் சுதந்திரம் கிடையாது. இருக்கவும் கூடாது. தனக்கு முன் வைக்கப் பட்ட ஆதாரங்களையும் வாதங்களையும் வைத்துத் தான், அதன் அடிப்படையில் அது முடிவு செய்ய வேண்டும். அதை விட அதிக சுதந்திரம் இருப்பின் அது தவறுதலாகப் பயன்படுத்தப் படும் அபாயம் இருக்கிறது. (இல்லை என்று சொல்லாதீர்கள் – பொடாவைப் பாருங்கள்!). குற்றம் சாட்டப்பட்டவரின் கீழேயே அரசு வழக்கறிஞராக இருந்து ஒருவரால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? அதோடு வழக்கு சம்பந்தமாக சில மாற்றங்கள், சாட்சி மிரட்டல்கள் இவற்றைச் செய்யும் அளவிற்கு ஒருவருக்கு சக்தியைத் தரக்கூடிய பதவி நாற்காலியை ஓட்டுப் போட்டும், ஓட்டுப் போடாமலும் அவருக்குத் தாரை வார்த்ததும் நாம் தானே !
எனக்குச் சில விஷயங்கள் புரியவில்லை. ஒன்று, மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளட்டும் என்று கருத்துக் கூறியிருக்கிறார்களே… உண்மையிலேயே அது பயன் தரும் என்று நீதிபதிகள் நம்புகிறார்களா ? ஒருவேளை குற்றத்தை உறுதி செய்யப் போதுமான ஆதாரம் இல்லை, ஆனாலும் ஒரு சந்தேகம் இருக்கிறது என்பதன் மூலம் அவர் முழுமையான நிரபராதி இல்லை என்று மறைமுகமாக மக்களுக்குக் காட்டி நீதிமன்றங்களின் மீதான் நம்பிக்கை குறையாமல் இருக்க ஒரு முயற்சியாக இருக்குமோ ?
இரண்டு, வழக்கு முடிந்து ஓராண்டிற்கும் மேல் ஆன பிறகே இந்தத் தீர்ப்பு வரக் காரணம் என்ன ? ஒரு வருடமாக நீதிபதிகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லையா ? காலம் கடந்த நீதி என்பது அநீதிக்கு ஒப்பாகும் தானே. இப்படி முடிந்த வழக்குகளின் தீர்ப்புப் பல மாதங்கள் கழித்து வருவது வாடிக்கையானது தானா ? என்ன காரணம் ? விவரம் அறிந்தவர்கள் தெரியப் படுத்துங்கள். அரசியல் நிர்ப்பந்தங்களும் காரணங்களும் இப்படி ஒரு தாமதத்திற்குக் காரணம் என்று என்னால் நம்பப் பிடிக்கவில்லை. நீதி மன்றங்கள் இன்னும் சுதந்திரமாய் இருக்கின்றன என்று நம்புவதில் ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கிறது. அதை நான் இழக்க விரும்பவில்லை.
இன்னும் மிச்சம் எட்டு வழக்குகள் இருக்கின்றன என்று பத்ரி பட்டியல் இட்டிருக்கிறார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். சுப்ரீம் கோர்ட் இன்னும் சிறிது நாட்கள் கழித்தாவது (சரியான வழக்கில் சரியான காரணங்களுக்காகக்) கொல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
மிகுந்த முதிர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே நல்ல தலையங்கத்துக்கு தகுதியான பதிவு! (கடைசிப் பாராவில் கொஞ்சம் யாரோ எட்டிப் பார்க்கிறார்களே
அண்ணே, நன்றி. கடைசிப் பத்தி பத்தி (!) என்ன சொல்ல வர்றீங்க ? புரியலையே…
அப்புறம், டான்சி பற்றி நீங்க எழுதி இருந்தத மறுபடி போய் படிச்சு பாத்தேன். மிகச் சரியாக் கணிச்சிருந்தீங்களே எப்படி ?
Comments ல் உங்க பேரு குழறுபடியா இருக்கே… மற்றபடி அகேகே-ல் feedback services பற்றி நிறைய எழுதும் அளவிற்கு நீங்க சோதனை பண்ணியிருக்கீங்க போலிருக்கு.
கடைசிப்பத்தியில் , நீங்கள் டான்சி வழக்கில் வேறு மாதிரி ஆகும் என்று எதிர்பார்த்து ஏமாந்தமாதிரி ஒரு தொனி தெரிகிறது. அதை
பத்திரிக்கைகள் இடப்பற்றாக்குறையாலோ அல்லது அனுபமின்மையாலோ முழு தகவல்களை தருவதில்லை. இந்த மனச்சாட்சி விவகாரமும் அப்படித்தான். சமீபத்தில் அந்த தீர்ப்பினை படித்தேன். இரு நாட்களில் எழுத விரும்புகிறேன். பார்க்கலாம்…
—