எங்கே நேரம்?
Nov 24th, 2003 by இரா. செல்வராசு
எல்லோருக்கும் இருப்பது ஒரே அளவு நேரம் தான். இருப்பினும் சிலரால் மட்டும் எப்படி நேரத்தை வெகு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது? எடுத்த காரியத்தை எண்ணியபடி செவ்வனே செய்ய முடிகிறது? அந்தக் குழுவில் சேர எனக்கும் விருப்பம் தான் என்றாலும் அதற்கு வேண்டிய தகுதியை நான் இன்னும் பெறவில்லை என்பது தான் உண்மை. இப்போதெல்லாம் “நேரமே இல்லை” என்கிற சாக்கை நான் பயன்படுத்துவது இல்லை. “நேரத்தை என்னால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை” என்று வேண்டுமானால் கூறுவது உண்டு. நேரத்தோடான எனது போட்டியில் நான் எப்போதும் பின் தங்கியே இருப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தாலும், துவண்டுவிடாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க நான் முயல்கிறேன். முயற்சிகளில் மட்டும் நான் எப்போதும் தோற்பதில்லை.
தனது நூறாவது வலைப்பதிவை வெங்கட் இந்த வாரம் தொட்டுவிட்டதாகக் கொடியேற்றியிருக்கிறார். பெரும் சாதனை தான். ஒரு வலைக் குறிப்பு எழுத எத்தனை நேரம் ஆகிறது என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்தபடியால் அந்தச் சாதனையின் சிறப்பு இன்னும் தெளிவாய்த் தெரிகிறது. பல தமிழ் வலைக் குறிப்புக்கள் ஆரம்பிக்கும் போது இருக்கும் சுறுசுறுப்பைச் சிறிது நாட்களிலேயே இழந்து விடுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். அப்படி ஒரு குழியுள் விழுந்து விடாமல் நான் தொடர்ந்து எழுத முயற்சி செய்யப் போகிறேன்.
எழுதுவதற்கு உந்துதலாய் இருப்பது இரண்டு அம்சங்கள். ஒன்று, தமிழ். இரண்டாவது, தொழில்நுட்பம். முதலாவது தமிழில் நன்றாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை. நல்ல எழுத்தாளராக வர விரும்புவர்கள் நிறைய எழுத வேண்டும், தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். சுஜாதா அப்படிக் கூறியதை எங்கோ படித்ததாய் ஞாபகம். ஜெயமோகன் கூறியதாய் வெங்கட் மேற்சுட்டிய குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார். ஜெயமோகன் பெரும் இலக்கியவாதியும் எழுத்தாளரும் என்று பல இடங்களில் சமீபத்தில் பார்த்தேன் (கூடவே அதற்கு எதிர்வாதங்களும்). சமீபத்திய கருணாநிதி சர்ச்சைக்கு முன் ஜெயமோகன் என்று ஒருவர் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது !
இரண்டாவது உந்துதல் – இந்த முயற்சியில் ஈடுபடும் போது இது தொடர்பான பலவகையான தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புக்கள். வளர்ந்து வருகிற தொழில்நுட்பங்களோடு ஓரளவு பரிச்சயம் செய்து கொள்ளும் ஆர்வம். இந்த வலைக் குறிப்புக்கள் ஆரம்பித்த பின் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். “…கல்லாதது உலகளவு” என்பதைப் போல இன்னும் எத்தனை எத்தனை நுட்பங்கள். விளிம்பில் நின்று விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
கணிணி முன் அமர்ந்திருக்கும் நேரம் அதிகமாகி விட்டது என்று இது ஒரு போதை போல் ஆகிவிட்டது என்று குற்றம் சாட்டும் மனைவியின் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ம்ம்ம்… இது ஆரம்ப கால அமைப்பு முறைக்குக் கொடுக்கும் சிறு விலை என்று எனக்கு நானே காரணம் கூறிக் கொண்டேன். ஒரு செயல் (process) புதிய நிலைக்குச் (setpoint/operting region) செல்லும்போது ஆரம்பத்தில் மேலும் கீழுமாக (oscillations) இருப்பது இயற்கை தான். காலப் போக்கில் தனது இலக்கை, ஒரு சீர் நிலையை அது அடைந்து விடும். அதுவரை சமநிலையில் இருந்து விலகீடுகள் அதிகமாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது எல்லாருக்கும் இருக்கும் பிரச்சினைதான். எனக்கு கொஞ்சம் வித்தியாசமானது. பேனா பிடித்து எழுதுவதானால் எழுதித் தள்ளிவிடுவேன்.
தட்டச்சு செய்யும்போது, அடித்தல் திருத்தல் அடிக்கடி செய்ய வேண்டி இருப்பதால் எழுதும் வேகம் தடைபடுகிறது. எண்ணங்களும் சில சமயம் சிதறி விடுகின்றன. பழக நாள் பிடிக்கும் போலிருக்கிறது
COMMENT:
எங்கே நேரம் என்று ஆராய்ச்சி பண்ணி இருக்கிற நேரத்தையும் வேஸ்ட் பண்ணறீங்களே செல்வா.. ம்ம் அடுத்து எதாவது கதை சொல்லுங்க..
Hello selvaraj, I wonder of tamil blogs,as i dont know any tamil typewriting,so i cant continue my comments in tamil here.Anyway good work,i love to read tamil blogs…If you would like to write….more things,please contact me in my email.
Thanks & Regards,
I.S.Ram