இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/03 –

June 28th, 1993 · No Comments

இனிய தோழி சுனந்தா,


நீ நேரில் இல்லாத குறையை உனது கடிதங்கள் தான் தீர்த்து வைக்கின்றன. நாள் பூராவும் செய்கின்ற (அல்லது செய்யாத :-))வேலையில் களைத்துப் போய் வீடு திரும்புகிற நேரத்தில் உனது கடிதம் மட்டும் கண்டுவிட்டால், உள்ளம் எப்படி எல்லாம் துள்ளுகிறது தெரியுமா? வாடிப் போன மலர் போல் இருப்பவன், ஒரு நொடியில், புத்தம் புதிதாய்ப் பூத்தது போல் ஆகி விடுகிறேன். இதைக் கவனித்து விட்ட நண்பர்கள்,”ஹே… யாரிவளோ… உந்தன் காதலியோ…”என்றெல்லாம் சற்றுக் கேலி செய்வர்.



சுனந்தா, ஆண்-பெண் உறவில், காதலும் ஒரு வகை நட்புத்தானே. ஏன், நட்புத் தானே எந்தக் காதலுக்கும் அடிப்படையாய் அமைய வேண்டும்; அமைய முடியும். காதலையும் நட்பையும் பிரித்து வைக்கின்ற உறுதியான கோடு ஒன்றும் இல்லை என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். நெருங்கிய நட்பு, காதல் போல் தோன்றுவதும், மெலிதான காதல், வெறும் நட்பாய் மட்டுமே தோன்றுவதும் இயல்பு தானென்று நாம் நிறைய நாட்கள் இது பற்றிப் பேசி இருக்கிறோம்.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நமக்குள் இருப்பது நட்பா, காதலா என்று அந்தக் கல்லூரி இறுதி ஆண்டின் இறுதி நாட்களில், நான் சற்றே குழம்பியதும், பிறகு தெளிந்ததும்… அதன் பின் இங்கு வந்துவிட்ட பிறகும், எனது மனதில் ஏற்பட்டிருந்த அந்தக் குழப்பமான நாட்களைப் பற்றி உன்னிடம் தெரிவிக்காதது சற்றே என்னை உறுத்தியவண்ணம் இருந்தது. ஒரு நல்ல நட்பில் ஒளிவு மறைவுகளுக்கு இடமில்லை என்று நான் கருதுவதால், கருதியதால், என் மனதில் தோன்றிய அனைத்தையும் உனக்கு ஒரு முறை எழுதி இருந்தேன்.

எங்கே நீ தவறாய் எண்ணிவிடுவாயோ, அதனால் நமது நட்பு பாதிக்கப் படுமோ என்ற ஐயமும் அச்சமும் இருந்தாலும், உன்னை நன்கு அறிந்தவன் என்ற முறையில், நீ நன்கு புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. நீ என்னை மிகவும் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறாய் என்று மீண்டும் எனக்குத் தெளிவானது. நட்பும், காதலும் பற்றி நாம் முன்பே பேசியது போல, அந்த வயதில் ஏற்பட்ட குழப்பங்கள் இயல்பே என்றும், அது பற்றியும் நம்மால் வெளிப்படையாகப் பேசிக் கொள்ள முடிகிறதே; அதுவே நமது சிறந்த நட்பிற்கு அடையாளம் என்றும் கூறினாய் நீ !

“அது சரி. என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், எதற்காக நமது நட்பு இதனால் பாதிக்கப் படும் என்று அஞ்சினாய்?”, என்று நீ என்னைக் கேட்கவில்லை. எனக்குத் தெரியும். நீ கேட்க மாட்டாய் என்று. ஏதாவது ஒன்று நமக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டால், அதன் மேல் உள்ள அபரிதமான பற்றால், எங்கே அதனை இழந்துவிடுவோமோ என்று அவ்வப்போது மனதுள் கலக்கம் ஏற்படுவது இயல்பு.

சிறு வயதில், நம் ஊர் மாரியம்மன் நோன்பின் போது வாங்கிய கரடி பொம்மையைக் கட்டிப் பிடித்தவாறே உறங்கியதும், சற்று நினைவு தெரிந்த நாட்களில், கவிதையோ இல்லையோ-“எனது எண்ணக் கிறுக்கல்கள்” என்று நான் தொகுத்து வைத்திருந்த ஏடுகள் ஒரு நாள் காணாமல் போய் விட்டால் என்ன செய்வது என்றும், ஏன், திடீரென்று ஒரு நாள் மனதுக்குப் பிடித்த ஒருவர் செத்துப் போய்விட்டால்… என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இது எல்லாம் அவற்றின் மீது உள்ள பற்றினால் தானே அன்றி வேறு ஒன்றும் இல்லை. (இது போன்ற சமயங்களில் “பொய் பொய்” என்று சொல்லவேண்டும் என்று எனது அன்னை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார். எதற்காக என்று அறியேன். ஆனால் இன்றும் அப்படி ஏதாவது தோன்றினால் – உடனே மனதுக்குள் நான் “பொய் பொய் பொய்” என்று உரைப்பது வழக்கம். 🙂 )

எதனாலும் பாதிக்கப் படாத அரிய நட்பு நமதென்று எனக்குத் தெரியும் சுனந்தா…

இன்னும் தொடர்வேன்,

அன்புடன்
செல்வராஜ்.

Tags: கடிதங்கள்