கிறிஸ்துமஸ் கால நினைவுகள்
Jan 3rd, 2005 by இரா. செல்வராசு
ஒரு கிறித்துவப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற போது விவிலியம் கற்றிருக்கிறேன். பெரிதாய் ஒன்றும் நினைவில் இல்லை என்றாலும், “ஆதியிலே கடவுள் சொர்க்கத்தையும் பூமியையும் படைத்தார்” என்னும் ஜெனிஸிஸ் (1:1) வாசகம் மட்டும் மறவாதிருக்கிறேன். அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிகளும், இன்ன பிறவும் கடவுளின் இருப்பையே இப்போது கேள்வி கேட்க வைத்தாலும், அந்த நாட்களில் கடவுளின் குழந்தை கிறிஸ்து கட்டுத்தறியில் பிறந்தார் என்று நட்சத்திரங்கள் வழிகாட்டிய நாடகங்களில் மண்டிபோட்டுக் கொண்டு நடித்திருக்கிறேன்.
காணாமல் போன ஆட்டுக் குட்டியின் மீது அன்பு வைத்த ஆட்டு இடையன் கதையைக் கேட்டுக் கொண்டு, “கும்பாயா, ஓ மை லார்ட் கும்பாயா”, என்று கூட்டத்தோடு சேர்ந்து ஒருங்கிசைப் பாட்டுப் பாடியிருக்கிறேன். வெள்ளைப் பஞ்சைத் தாடியாக ஒட்டிய ஒரு சாந்தா கிளாஸ் தாத்தா கிறிஸ்துமஸ் சமயத்தில் கொடுத்த பரிசுக்கு நானே வகுப்பில் முன்னரே காசு கொடுத்திருந்தேன் என்று தெரிந்தாலும் பூரித்து நன்றி சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன்.
தினமும் முதல் வகுப்பாய் விவிலியமும் அதன் கதைகளும் போதனைகளும் போதாதென்று ஞாயிறன்று சிறப்பு வகுப்பாய் வைத்துப் பிரார்த்தனைக்கு அழைக்கப் பட, மதச் சாயங்கள் மூச்சுத் திணறடிப்பதை உணர்ந்து என் வீட்டு இந்து மதத்தார் ஞாயிறு அன்றெல்லாம் அனுப்ப முடியாது என்று எதிர்ப்புக் குரல் கொடுத்ததும் உண்டு. இதற்குள் குழுவாய்க் கூட்டமாய்ப் பாடிய “ஜீஸஸ்… ஜீஸஸ்… ஜீஸஸ் இன் த மார்னிங்…” பாடல்கள் மனதுள் பதிந்து போயிருந்தன. சேதம் ஒன்றுமில்லை. கார்த்திகைச் சனிக்கிழமை விரதங்களும், சுண்ணாம்படித்துச் சுத்தம் செய்த சரசுவதி பூஜைகளும், தெருமுக்கு விநாயகனும், காளி, மாரி, இத்யாதி அம்மன்களும், பஞ்சாமிருதம் தந்த பழனி மொட்டையாண்டியும், சரியான போட்டியைத் தந்து என்னை இழந்து விடாதிருந்தார்கள்.
“அத்தரும் சவ்வாதும் எங்கே மணக்குது?
ஆறுமுகன் சந்நிதியில் தானே மணக்குது!”
* * * *
கல்லூரியில் படிக்கும் காலத்தில் விடுதி நாட்களில் வார இறுதிகளில் நடக்கும் விவிலியக் கூட்டங்களுக்கு (Bible Study) ஒரு ஆர்வக் கோளாறில் சென்று பார்த்து வரலாம் என்றும் போனதுண்டு. உடன் படித்த நண்பன் கிட்டாரும் கையுமாகச் சென்றதும் கவர்ச்சிக்கு ஒரு காரணம். திறந்த மனதுடன் சென்றாலும், அவர்களும் திறந்த மனதுடன் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மறக்காமல் நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு சென்றேன். உருவ வழிபாடு பாவம் என்ற போதனைக்கு அது ஒரு ஒவ்வாமையைத் தந்திருக்க வேண்டும். மதமாற்றப் பிரச்சார நெடி சற்று தூக்கலாக அடிக்கவே ஒரு சில முறைகளுக்குப் பிறகு அந்தப் பங்கேற்பையும் நிறுத்திக் கொண்டேன். கிட்டாரும் கையுமாகவும் இருந்த நண்பன் மட்டும் தனது நம்பிக்கைகளைத் திணிக்க முற்படாததால் இன்று வரையும் நல்ல நண்பனாகவே தொடர்கிறான்.
கல்லூரி இறுதியாண்டில் புத்தாண்டு தின நள்ளிரவில் ‘சாந்தோம் சர்ச்’சிற்குச் சென்றது நிச்சயமாய்க் கர்த்தர் கவர்ந்திழுத்ததால் அல்ல. மார்கழி மாதத்துக் குளிரில், நண்பர்களோடு இரவில், கூட்டமாய்ச் சென்று வந்த ஒரு கிளர்ச்சி. அவ்வளவே. அதே கிறிஸ்துமஸ்-புத்தாண்டு இரவு ஒன்றில் அமெரிக்கா வந்த புதிதில் இங்கு இருந்த நண்பரின் நண்பர் ஒருவருக்காக இன்னொரு முறை தேவாலயம் சென்றிருக்கிறேன். ஏசுவின் ரத்தம் என்று எதோ பழச்சாறும், உடம்பின் பகுதி என்று ரொட்டித் துண்டும் பிரசாதம் போல் கொடுத்தது சற்றுப் புதிதாக வித்தியாசமாக, ஏன் விசித்திரமாகக் கூட இருந்தது. பணம் வசூலிக்கக் கைமாறி வரிசையாக வந்து கொண்டிருந்த தட்டில் ஒரு டாலரேனும் போட்டேனா என்றும் கூட நினைவில் இல்லை. கோயில்களிலும் ‘கடவுளுக்கே காணிக்கையா?’ என்று எனக்கு எப்போதும் தயக்கமாகத் தான் இருந்திருக்கிறது.
* * * *
இன்றோ பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிற மகள்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறேன்.
“ரூடால்ஃப், த ரெட் நோஸ் ரெயின் டீயர்…”
“ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் ஆல் த வே”
அவர்களின் விருப்பத்திற்கேற்ப, ‘மத அடையாளம் இல்லை; இதெல்லாம் இப்போது ஒரு கலாச்சார அடையாளம்’ என்று சமாதானம் சொல்லிக் கொண்டு வீட்டினுள்ளேயே ஒரு கிறிஸ்துமஸ் மரம் வைத்துக் கொண்டிருக்கிறோம். நிஜ மரத்துக்குக் காசு கொடுத்துக் கட்டுப் படியாகாது என்று வால்-மார்ட்டில் வாங்கிய சீனத்துப் பிளாஸ்டிக் மரம் மூன்றாவது ஆண்டாய்ப் பெட்டியில் இருந்து வெளி வந்தாலும் கொஞ்சம் தடவி நீவிக் கொடுத்தால் இன்னும் புதிதாய்த் தான் தெரிகிறது. கொஞ்சம் இழுத்து மூச்சு விட்டால் நிஜ மர வாசம் கூட அடிக்கும் போலிருக்கிறது!
குழந்தை ஏசுவையும், நட்சத்திரங்களையும், பனித்துகள்களையும் மகள் வரைந்து வெட்டிக் கொண்டு வந்து அலங்காரம் செய்திருந்தாள். மனைவி செய்து கொடுத்திருந்த சப்பாத்தி மாவுப் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டியும் மாட்டி விட்டிருந்தனர். மேலும் வண்ணக் காகித மாலையோடும், வாங்கி மாட்டிய அணிகளோடும், அலங்காரம் பூண்டிருந்த பிளாஸ்டிக் மரத்தைச் சுற்றி நூறு சரப் பல வண்ண விளக்குச் சுருளை என் பங்குக்கு நானும் மாட்டி வைத்தேன்.
இதைப்போன்றே இன்னும் பெரிதாய் அலுவலகத்தில் வைத்திருக்கிற மரத்தில் அனாதை மற்றும் ஏழைக் குழந்தைகளின் விருப்பப் பட்டியல்கள் தொங்கிக் கொண்டிருக்கும். பொதுவாய் ஒரு குழந்தையின் பட்டியலை எடுத்து வந்து வாங்கிக் கொடுப்பதுண்டு. இந்த ஆண்டின் கடல் பேரலைக் கொந்தளிப்புக்களில் எத்தனை குழந்தைகள் அனாதைகளானார்களோ!
பிறர் மீது நம் அன்பைக் காட்ட ஒரு பரிசோ, வாழ்த்தட்டையோ வாங்கித் தரவும் உகந்த காலம் என்று கிறிஸ்துமஸ் இங்கெல்லாம் கொஞ்சம் வணிகச் சாயமும் பூசிக் கொண்டிருக்கிறது. கடை வீதிகளில் கூட்டமும், மக்களின் அழுத்த அளவு கூடியும் தான் கிடக்கும். “இது ஒரு பெரிய தலைவலி” என்று நொந்து கொண்டே மகிழ்ச்சியாய் இருக்கும் படி வாழ்த்து அனுப்புபவர்களையும் பார்த்து இருக்கிறேன்.
ரோமாபுரியில் கொஞ்சம் ரோமாபுரிக்காரனாய் இருக்க வேண்டியது தான். தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கவில்லையென்றாலும், பொங்கலுக்குக் கரும்பு கடிக்கவில்லையென்றாலும் தான் என்ன? கிறிஸ்துமஸ் ஜோதியில் ஒரு ஓரமாகக் கலந்து கொள்ள வேண்டியது தான். குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு மட்டுமாவது ஏதேனும் பரிசுப் பொருட்கள் வாங்கித் தர வேண்டும். ‘சாந்தா கிளாஸ்’ என்றால், “இல்லையப்பா… அது சேன்ட்டா” என்று திருத்துகிறாள் மகள். ‘சேன்ட்டா’ பற்றிய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் மனைவியிடம் அனுப்பி விடலாம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன சொல்வது என்று அவர் தான் யோசித்து வைத்திருப்பார்.
பனி விழும் இரவினில், பலவித ஒளியினில், பச்சைப் பிளாஸ்டிக் மரம் எதிரில், அமைதியாய் அமர்ந்து நீள்மூச்சு வாங்கி வெளியிட்டு நிதானமாய் அமர்ந்திருக்கவும் பிடித்தே இருக்கிறது. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுப்பெல்லாம் இன்றோடு முடிந்து போக, அடுத்த வருடம் மீண்டு எழ பிளாஸ்டிக் மரமும் இனிப் பத்திரமாய்ப் பெட்டிக்குள் போகும்.
புதிதாய்ப் பிறந்த இந்த ஆண்டு எல்லோருக்கும் நம்பிக்கைகளையும் நிறைவையும் தருவதாய் அமையட்டும்.
nalla pathivu. When we were at Pollachi,Benthegoste use to organise the
christmas functions. We will go there and watch the skits, dances and we will
sing some songs. At American college also, we were enthused and we will sing
christmas carols at the hostels (esp. Ladies hostel ;)). In our physics dept
we use to organize christmas function. Thoongu moonchi maram-theriyumma?
We use that as the christmas tree 🙂
That day we use to have dinner at the department.
Thanks selva…
பாலாஜி, அநாவசியமா LH பத்தியெல்லாம் சொல்லி, பாருங்க காசி என்னச் சந்தேகப் படுற மாதிரி வச்சுட்டீங்க.
கர்த்தர் (!) மேல ஆணையாக அது நண்பன் தான் என்று சொல்லிக் கொள்கிறேன் 🙂
//உடன் படித்த நண்பன் கிட்டாரும் கையுமாகச் சென்றதும் கவர்ச்சிக்கு ஒரு காரணம். //
உண்மையா நண்பனா, நண்பியா, பொய் சொன்னா மாரிக்கும்,மேரிக்கும் ஆகாது:-))
hello brother,
can u do one favour for me..? i was created my account in blogspot as ” nilavunanban” ..but idont know how to post my articles in tamil. i have more articles in SARUKESI or BAMINI font. but there was no option in that posting format..how can i load my articles in my account. pls if u r free, can u explain me..thankyou bye
dear friend. I am too having problems having known only bamini and other typewriter fonts. try this url. may be it will be of some help http://www.suratha.com/reader.htm