வலைப்பதிவா வலைக்குறிப்பா ?
Dec 29th, 2004 by இரா. செல்வராசு
Blog என்ற சொல்லிற்குச் சரியான தமிழாக்கம் என்னவென்று வெங்கட் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
வலைப்பூ கவித்துவமாய் இருக்கிறதே என்றாலும் நுட்பத்தைச் சரியாகக் குறிக்காமல் இருக்கிற காரணத்தால் அது வேண்டாம் என்னும் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். மற்ற இரு சொற்களான வலைப்பதிவு, வலைக்குறிப்பு இரண்டும் சரியே. நானும் இது நாள் வரை மாற்றி மாற்றி இரண்டையும் பாவித்து வந்திருக்கிறேன். என்னுடைய முதல் பதிவிலும் இது பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால், இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டுமெனில், வலைப்பதிவே சரியாக இருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.
Blog/Weblog என்பதை ஒரு online diary என்று மட்டும் கொண்டால் நாட்குறிப்பு என்பதையொட்டி வலைக்குறிப்பு என்று கொள்ளலாம். ஆனால் blog-இன் அர்த்தம் அந்தச் சிறு வட்டத்தைத் தாண்டிப் பெருகி விட்டது. தோன்றியதை உடனே போடுவதற்கான ஒரு வசதி என்பது மட்டுமல்லாமல், நன்கு ஆராய்ந்து பொறுமையாக எழுதப் படும் கட்டுரைகளும் பதிவு செய்யப் படும் இடமாக blog உருவாகி வருகிறது. ஆங்கிலத்தில் நுட்பச் செய்திகளுக்காகப் பல blogகளைப் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் குறிப்புக்கள் என்றில்லாமல் பதிவுகள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. தமிழிலேயே மார்க்கட்டிங், பங்குச்சந்தை போன்ற துறை சார்ந்த பதிவுகளைச் சிறு குறிப்புக்கள் என்று எப்படிச் சொல்வது? இன்னும் சிலர் கவிதைகளுக்காக ஒரு பதிவு, சிறுகதைகளுக்காக ஒரு பதிவு என்றும் பயன்படுத்தி வருகிறார்களே.
தனியொருவர் தனக்காக மட்டும் எழுதி வைத்துக் கொள்வது குறிப்பு.
“என்ன என்ன செய்யணும்னு குறிச்சு வச்சுக்கோ. அப்புறம் மறந்துராதே”.
பொதுவில் பிறர் பார்வைக்காகவும் என்று அமைத்துப் பின்னூட்டங்களும் உரையாடல்களும், பின் தொடர்புகளுமாக இருப்பது பதிவு. நாமே நடத்தும் ஒரு சிறு பத்திரிக்கை, செய்தித்தாள் போன்றது தான் இது. சுடச்சுடச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவென்றும் சிலர் எழுதுகிறார்கள். அவ்வப்போது வந்து கட்டுரை, எண்ணம் இவற்றை எழுதி, எழுதியதைத் தனக்கு என்று குறித்து மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறரும் பார்க்கவென்று பதிவு செய்கிறோம். இது எல்லாம் பொதுவில் பிறர் பார்வைக்காகவும் எழுதப் படுபவை என்னும் அளவில் பதிப்பிக்கப்படும் இதழ்களைப் போன்றது தானே.
“Publish thoughts” என்பது தான் Blogஇன் பயன் என்று Blogger கூடச் சொல்கிறது.
Many people use a blog just to organize their own thoughts, while others command influential, worldwide audiences of thousands. Professional and amateur journalists use blogs to publish breaking news, while personal journalers reveal inner thoughts.
publisher => பதிப்பாளர்; publish=> பதிப்பு => பதிவு. (பதிப்பு, பதிவு, இரண்டிற்கும் பதித்தல் –பதி– தான் வேராக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. இராம.கி போன்றவர்கள் இன்னும் ஆணித்தரமாகக் கூறலாம்).
தவிர, blog சம்பந்தப்படும் பிற சொற்களையும் சேர்த்துப் பார்த்தால் பதிவு தான் சரியாக வரும் என்று தோன்றுகிறது. post என்ற சொல்லுக்கு மிக அருகில் வருவது பதிவு தான், குறிப்பு அல்ல. இன்னும் Blogosphere = பதிவுலகம், Blogger = பதிவர் என்று பதிவு என்ற சொல்லே பொருத்தமாய் இருப்பதாகப் படுகிறது.
Blog என்பதன் சாத்தியங்கள் வெறும் குறிப்புக்களில் இருந்து விலகி வளர்ந்து பல நாட்கள் ஆகின்றன என்று எல்லோரும் ஒப்புக்கொள்வர். அதனால் அதற்குரிய மரியாதையை அளித்துப் பதிவுகள் என்று அழைப்பதே உத்தமம்.
அதனால் எனது ஓட்டு வலைப்பதிவிற்கே !