இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஆழ்கடலில் வெடித்த பாறைநெய்க் கிணறு

April 20th, 2012 · 8 Comments

முன்குறிப்பு: 2010 ஏப்ரல்-இல் பிரிட்டிசு பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்சிக்கோ வளைகுடா விபத்தும் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டு இன்றோடு சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.  அச்சமயத்தில், இது பற்றிய விரிவான ஒரு கட்டுரையைப் புதிய இணைய இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதன் காரணமாக  எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால், அவ்விதழ் வெளிவரவே இல்லை என்பதால் இவ்விடுகை இத்தனை மாதங்களாய் வெளியுலகம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது. அதனைச் சற்று இற்றைப் படுத்தி இங்கே இடுகிறேன்.

* * * *

அமெரிக்க மெக்சிக்கோ வளைகுடாவின் ஆழ்கடலில் 2010ல் ஏப்ரல் மாதம் பிரிட்டிசுப் பெட்ரோலியம் (பீ.பி) நிறுவனத்தின் பாறைநெய்க் கிணறு ஒன்று வெடித்துத் தொடர்ந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குக் கச்சா எண்ணெய்யைக் (கரட்டு நெய்யைக்)  கடலில் கலக்க விட்டுக் கொண்டிருந்தது. கசிந்த கரிய பாறைநெய்யின் அணுமானித்த அளவு நாளுக்கு நாள் மாறி, உயர்ந்து ஆரம்பத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் பீப்பாய் அளவு (1000 BPD) என்று சொல்லப்பட்டதில் இருந்து அதிகபட்சம் அறுபத்தைந்து ஆயிரம் பீப்பாய் (65000 BPD) அளவுக்கு இருக்கலாமெனச் சொல்லப்பட்டது.  (ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர்). அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாக இது கருதப் படுகிறது.

image

பாறைநெய்க் கசிவு கடல்பரப்பில் இருந்து கீழே ஒரு மைல் ஆழத்தில் இருந்தாலும், அதன் தாக்கம் அமெரிக்கக் கரைகளையும் கூட வந்தடைந்தது.   வெண்மணல் கடற்கரைகளில் தார் உருண்டைகள் காணப்பட்டன.  கடல்வாழ் உயிரினங்கள், கடற்பறவைகள் மீது எண்ணெய்ப் பூச்சுக்கள்; தாவரம் மற்றும் புதல்களின் அழிவு; எனப் பாதிப்புகள் ஏராளம்.  எண்ணெய்யில் முங்கி்ய பறவைகள் பறக்க முடியாமலும், தமது உடல்வெப்பத்தைச் சூழலோடு இயைத்திருக்க முடியாமலும் இறந்து பட்டன. பாட்டில்மூக்கு டால்பின்கள், திமிங்கலம், கடலாமைகள் போன்ற உலகில் அருகிவரும் சில கடல்வாழ் பாலூட்டி இனங்களும் தாக்கத்திற்கு ஆளாயின.

பாறைநெய்யின் சில கூறுகள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாய் இருக்குமென்பதால் அவற்றோடு நேரடித் தொடர்பில் வரும் உயிர்கள் பலவும் பாதிப்புக்குள்ளாகும்.

படம்: எண்ணெய்ப் பூச்சுக் கொண்ட பெலிக்கன் பறவைகள் (c) BP plc.

இவற்றோடு மீன்பிடி தொழிலையும் அது சார்ந்த வாழ்க்கையையும் கொண்டிருக்கும் இக்கடலோரப் பகுதி மக்களின் வாழ்வு முறைகளும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் கடலோரச் சிற்றூர்களும் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. லூசியானா மாநிலம் இறால் மற்றும் பிற கடல் உணவுகளுக்குப் பெயர் பெற்ற ஒன்று.  வெடித்த கிணறு லூசியானாக் கரைகளில் இருந்து நாற்பது மைல் தொலைவில் இருந்த ஒன்று என்பதால் முதலில் பாதிப்படைந்தது இந்த மாநிலம் தான். அதோடு, அருகே இருக்கிற மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா மாநிலங்களிலும் கசிவின் தாக்கம் இருந்தது.

படம்: கடல் நீரில் கலந்த எண்ணெய்

* * * *

பீ.பி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெயரை பியாண்ட் பெட்ரோலியும் (Beyond Petroleum) என்று, பெட்ரோலியத்துக்கு அப்பால் என்னும் பொருள்படத் தனது பெயரை வெறும் (BP) பீ.பி என்று சுருக்கிக் கொண்டது.  பாறைநெய் தவிர, சோளத்தில் இருந்து எடுக்கும் எத்தனால், சூரிய ஒளி ஆற்றல் என்று மாற்று எரிபொருள்களை நோக்கிச் செல்கிறது என்று காட்டவும் இப்பெயர் மாற்றம்.  பெயர் மாறினாலும், இன்னும் பிரிட்டிசுப் பெட்ரோலியம் என்றே பலராலும் நினைக்கப் படும் பீ.பி உலகின் மிகப் பெரிய தனியார் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்று.  எக்சான் மோபில் (அமெரிக்கா), ஷெல் (டச்சு), டொட்டால் (பிரெஞ்சு), கனாக்கோ (அமெரிக்கா), செவ்ரான் (அமெரிக்கா) ஆகியவற்றோடு சேர்ந்து மாபெரும் (தனியார்) எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.  மத்தியக் கிழக்கில் முதலில் பாறைநெய்யைக் கண்டுபிடித்த நிகழ்வோடு நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட நிறுவனம் இது.

image

பொதுவாகவே உலகின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மக்கள் மத்தியில் ஒரு நொசிவான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும், அவை இன்றைய ஆற்றல் தேவைகளை ஈடு செய்யப் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன.  உலக ஆற்றல் தேவை தற்போது நாளொன்றுக்கு ஏறத்தாழ 85 மில்லியன் பீப்பாய் அளவாக இருக்கிறது. அதில் 25 விழுக்காடு ஆற்றலை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேவையும் அது இன்னும் அதிகரித்தவண்ணமே இருப்பதையும் ஈடுகட்டத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் நிலத்தடி மற்றும் கடலடியில் கிணறு துளைத்துப் பாறைநெய்யை உற்பத்தி செய்து வருகின்றன.

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கிணறுகளின் வளம் குறைய ஆரம்பிப்பதாலும், இன்னும் தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், புதிய எண்ணெய் வளங்களைக் கண்டுபிடிக்கவும், துளைத்து எடுக்கவும், பாறைநெய் நிறுவனங்கள் தமது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே இருக்கின்றன.  சுலபமான வழிகளிலே எண்ணெய் கிடைத்த காலம் போய், இன்று வெகு தொலைவு சென்றும், புதிய நுட்பங்கள் மூலமும் உற்பத்தியைப் பெருக்க வேண்டியிருக்கிறது.  ஆழ்கடலில் கிணறு துளைத்து அங்கிருந்தும் இந்தக் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் முயற்சியும் இதனோடு சேர்ந்ததே.

அமெரிக்காவின் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியிலும் பல கிணறுகள் ஏற்கனவே துளைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் பாறைநெய் அமெரிக்க உற்பத்தியில் 25 விழுக்காடு அளவிற்கு இருக்கும்.  உலகம் முழுதும் உள்ள ஆழ்கடல் கிணறுகளின் உற்பத்தியைச் சேர்த்தால், அவை சவுதி அரேபியாவின் மொத்த உற்பத்தி அளவை எட்டிவிடும். கரையருகே கிணறு துளைத்தல் பல காலமாக நடந்து வந்தாலும், ஆழ்கடலில் எண்ணெய் தேடிச் சென்றது அண்மைய நிகழ்வு தான். கடல் பரப்பில் இருந்து 500 அடி ஆழத்திற்கும் மேல் செல்ல வேண்டியிருப்பின் அதனை ஆழ்கடல் கிணறு என்று சொல்வர்.

அமெரிக்க அரசு இந்தக் கடல் பகுதியைப் பல பகுதிகளாகப் பிரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு தொகைக்குக் குத்தகைக்கு விடும். அதன் பிறகு துளைத்தல் வெற்றி பெற்று எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டால், அதன் வருவாயில் ஒரு பங்கைக் கசராகவும் அரசு பெற்றுக் கொள்ளும். இந்தப் பணியினைச் செய்வதும், மேற்பார்வை பார்ப்பதும் மெட்டீரியல்சு மேனேஜ்மெண்ட் சர்வீசு (MMS) என்னும் அரசுத்துறை. இத்துறையில் இருந்த ஊழலும், அதிகாரத்தில் இருப்போர் இந்நிறுவனங்கள் அளிக்கும் ‘அன்பளிப்பிலும்’, கவனிப்பிலும், தாம் செய்யவேண்டிய பணியைச் செய்யாமலும், பாரபட்சம் காட்டி ஒப்புதல் அளிக்கத் தகுதியில்லாதவற்றிற்குக் கூட ஒப்புதல் அளித்ததும், பாதுகாப்பான செயல்பாட்டிற்கு உலை வைத்து விட்டது என்னும் குற்றச்சாட்டும் உண்டு. இந்த விபத்தின் பிறகு இத்துறையின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார்.

லூசியானா கரையை ஒட்டி 40 மைல் தொலைவில் மிசிசிப்பிக் கேன்யன் பிளாக் 252 என்னும் பகுதியில் பீ.பிக்காக ஒரு சோதனைக் கிணறு துளைக்க, டீப்வாட்டர் ஒரைசான் (Deepwater Horizon) என்னும் துளைகப்பல் ஈடுபட்டது.   இந்தக் கப்பல் டிரான்சோசன் (Transocean) என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஒப்பந்த முறையில் பிற நிறுவனங்களுக்காகக் கிணறு துளைத்தலில் ஈடுபட்டிருப்பது இவர்களின் முக்கியப் பணி. அதனோடு, ஏலிபர்ட்டன்(Halliburton) என்னும் நிறுவனமும் சில பணிகளைச் செய்யச் சேர்ந்து கொண்டிருந்தது.  வெடிப்பின் பின் இம்மூன்று நிறுவனங்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டன. இருப்பினும் பெரும்பாலான பொறுப்பு பீ.பி நிறுவனத்தையே சேரும்.  பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர செய்யாமல் பீ.பியில் 2005இல் டெக்சசு சிட்டி தூய்விப்பாலையில் (Refinery) நடந்த விபத்தில் 15 பேர் மாண்டதும், 2006ல் அலாசுக்கா புழம்புவரிசையில் (Pipeline) கசிவு ஏற்பட்டதும் அவர்களின் மீது இன்னும் இருக்கும் கரும்புள்ளிகள்.

கிணறு துளைக்க வேண்டிய இடத்தில் கடல் ஐந்தாயிரமடி ஆழம் கொண்டது. சாதாரணமாக, நூறு அடிக்குக் கீழே மனிதர்கள் செல்வதில்லை. 350 அடிக்குக் கீழே சூரிய ஒளி கூட எட்டுவதில்லை. தொலை இயக்கி வண்டிகளையும் இயந்திரன்களையும் கொண்டு இங்கே 5000 அடிக்குக் கீழே உள்ள கடல் படுகையில் கிணறு துளைக்க ஆரம்பித்து, அதன் கீழே இன்னும் 18000 அடி வரை எண்ணெய் வளம் தேடித் துளைக்கின்றனர். கடலின் பரப்பில் இருந்து கீழே செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாகும். கடல் படுகையை ஒட்டிய அழுத்தம் பரப்பிலே இருக்கும் சூழ் அழுத்தத்தை விட 150~200 மடங்கு அதிகம் இருக்கும். அதோடு, துளைக்கிணற்றில் கீழே செல்லச் செல்லக் கடும்பாறைகளின் கீழே அழுத்தம் இன்னும் அதிகம் ஆகும். காட்டாக, சூழிய அழுத்தம் சுமார் 15 பவுண்டு (14.7 பவுண்டு/சதுர அங்குலம்) என்றால், கடல் படுகையில் 2200 பவுண்டு அழுத்தமும், கிணற்றினுள் 12000 பவுண்டு அழுத்தம் வரையிலும் இருக்கும். கிணற்றினுள் இதை விடவும் அதிகரித்த அழுத்தம் இருந்திருக்கலாம் என்றும் சில கருத்துக்கள் உண்டு.

படம்: எண்ணெய்க் கிணறும் கசிவும் மாற்றுத் துளைகளும்

சூரிய ஒளி பரவாத மையிருட்டில் கடலடியில் உள்ள நிலையும் காட்சியும் பற்றி மனிதனுக்கு இன்னும் அதிகம் தெரியாதவை. வானவெளியின் நிலவைப் பற்றித் தெரிந்த அளவிற்குக் கூடக் கடல் ஆழங்கள் பற்றித் தெரியாது. இருப்பினும் இவ்வாழங்களில் சென்று இத்தகைய கிணறு துளைத்தல், பொறியியல் விந்தை தான். அபாயங்களும் தீவாய்ப்பும் நிறைந்த செயல் என்பதால் இங்கே கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம் பெறுகின்றன.  இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர மேற்கொள்ளவில்லை என்பது தான் இந்நிறுவனங்களின் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டு.

எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுத்துக் கொண்டாலும், பீ.பி.யின் சோதனைக் கிணறு துளைத்தல் வெற்றியே பெற்றது. 13000 அடி தொலைவில் எண்ணெய் மற்றும் எரிவளி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இக்கிணற்றுப் பரப்பில் 50 முதல் 100 மில்லியன் பீப்பாய் அளவிற்குப் பாறைநெய் இருக்கும் என்று கணிக்கப் பட்டது. அதன் பிறகு இத்துளைகப்பலின் வேலை, கவனமாகக் கிணற்றை மூடிவிட்டுச் செல்வதே.  பிறகு வேறொரு சமயம் உற்பத்தியைத் தொடங்க வேறு கிணறுகள் துளைக்கப் படும்.

 

படம்:  வெடிப்பின் பிறகு பற்றி எரியும் துளைக்கப்பல் டீப்வாட்டர் ஒரைசான்.

இது போன்ற கடினச் சூழலில் செய்யும் வேலைக்கு ஒவ்வொரு நாளுக்கும் செலவு அதிகரித்தபடியே இருக்கும். நாளொன்றுக்குப் பல நூறாயிரம் (இலட்சம்) டாலர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் விரைவில் பணியை முடிக்க அழுத்தம் இருக்கும். ஏற்கனவே எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதால் விரைவில் கிணற்றை மூடிவிட்டுச் செல்ல பீ.பியின் மீதும் அதிகம் அழுத்தம் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.

கிணற்றை மூடச் சிமெண்ட் ஊற்றிக் காய வைக்க வேண்டும். அதற்குத் தேவையான நேரத்திற்குப் பிறகு, அழுத்தச் சோதனைகள் செய்து கிணறு சரியாக மூடப்பட்டதா என்று சோதனை செய்யவேண்டும். செலவைக் குறைக்கும் நோக்கத்திலும், என்ன நடந்து விடப் போகிறது என்னும் அலட்சியத்திலும், இச்செயல்களைச் சரியாகச் செய்யாமல் விட்டுவிட்டனர். அதோடு, இதன் செயல்பாட்டிலும், பீ.பியும், டிரான்சோசனும் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் கொண்டிருந்தனர் எனவும் சொல்லப் படுகிறது. சிமெண்ட் வேலை செய்யும் ஏலிபர்ட்டன் மீதும் சிமெண்ட் சரியாக அமையவில்லை என்னும் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது. முன்னர் இந்நிறுவனம் முன்னாள் துணையதிபர் டிக் சேனியின் தலைமையிலும் இருந்த ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு துளைக்கிணற்றிலும் படுகை மீது வெடிப்புத் தடுப்பி (Blow Out Preventer) என்னும் சாதனம் இருக்கும். அதிக அழுத்தத்தில் இருக்கும் துளைக்கிணறுகளில் விபத்துக்கள் மற்றும் வெடிப்புக்கள் ஏற்படுவது புதிதல்ல. அது போன்ற சமயங்களில் இந்த வெடிப்புத் தடுப்பியில் இருக்கும் தடுக்குகள் (Valves) உடனே மூடிக் கிணற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும். துளைசேறு (Drilling Mud) என்னும் ஒரு கலவையும் துளையினுள் கிணற்று அழுத்தத்திற்கும் மேல் அதிகமாக இருந்து ஒரு தடுப்பைக் கொடுக்கும். சிமெண்ட் ஊற்றிக் காய்ந்த பிறகு இந்தத் துளைசேற்றை எடுத்துவிட்டுக் கடல் நீரை விட்டுத் துளையை நிரப்பி விடுவர்.

இங்கே, சிமெண்ட் சரியாகக் காயாமல், கிணற்றை உறுதியாக மூடவிடாமலே அடுத்த நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர் என்றும், அதிக அழுத்தம் கொண்ட துளைசேறை முன்னதாகவே வெளியே எடுத்துவிட்டதால், பாறைநெய் அழுத்தம் காரணமாகக் கிணறு வெடித்துக் கொண்டு கிளம்பிவிட்டது என்றும் ஒரு தேற்றம் உண்டு. அதோடு, அசாதாரணச் சூழல்களில் தன் வேலையைச் செய்து காக்க வேண்டிய

வெடிப்புத் தடுப்பியும் சரியாக வேலை செய்யாததால், கிணறு மூட முடியாமல் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.  இது சரியாக வேலை செய்யவில்லை என்றும் முன்னதாகவே சோதனைகளில் தெரியவந்தும் அலட்சியமாகக் கவனிக்காமல் விட்டுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

பாறைநெய்யோடு எரிவளியும் (மெத்தேன்) அதிக அழுத்தத்தில் இருக்கும் என்பதால், கிணறு கட்டுப்பாடின்றிப் போன போது, இவ்வெரிவளி பீறிட்டுக் கொண்டு வெளிவந்து, அவ்வாறு வரும்போது ஏற்படும் அழுத்தக் குறைவால் வேகம் பெற்றுக் கப்பல் வரைக்கும் வந்து சீறியது. அங்கே இருந்த இயந்திரங்களின் பொறி பட்டுத் தீப்பிடித்துக் கப்பலையே வெடிக்க வைத்து விட்டது. இரண்டு நாட்கள் எரிந்த தீ கப்பல் முழுவதையும் எரிந்து மூழ்கச் செய்தது. பணி புரிந்தோரில் 11 பேர் இருந்த இடம் தெரியாமல் இறந்தனர். மேலும் 17 பேர் காயமுற்றனர்.  நூற்றுக்கணக்கில் பிறர் தப்பிப் பிழைத்தனர்.

மூழ்கும் கப்பலில் இருந்து ஒரு நீண்ட குழாய் கிணற்றை இணைத்திருக்கும் என்பதால், கப்பல் மூழ்கிய போது அக்குழாயும் மூழ்கியது. ஒரு மைல் நீண்ட குழாய் மூழ்கும்போது மடங்கியதில் இரண்டு இடங்களில் உடையவும் செய்தது. இவ்வுடைப்புக்களில் இருந்தும், குழாயின் எல்லையிலும் எண்ணெய் கசிய ஆரம்பித்திருப்பது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

எல்லா விசயங்களையும் போலவே இப்பிரச்சினையிலும் அரசியல் தலையீடும் தாக்கமும் அமெரிக்காவிலும் உண்டு. பொதுவாகக் குடியரசுக் கட்சியினர் (Republicans) எண்ணெய் நிறுவனங்களின் சார்பானவர்கள் என்ற கருத்து நிலவினாலும், குடியரசு, மக்களாட்சி (Democrats) இரண்டு கட்சியினருமே தங்கள் தேர்தல் நிதிக்காக இவ்வெண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவது வழக்கமே. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இந்தக் கசிவுப் பிரச்சினையால் உண்டான அழுத்தம் அதிகம். ஒரு நுட்பப் பிரச்சினைக்கு அரசியல் என்ன தீர்வைச் சொல்லிவிட முடியும் என்றாலும், அவர் மீது வைக்கப் பட்ட விமர்சனங்கள் அதிகம்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே பகுதியைத் தாக்கிய அரிக்கேன் கட்ரீனாவின் போது சரியான நிவாரணப் பணிகளைச் செய்ய இயலாத புஷ் உடன் இதனை இணைத்து இது ஒபாமாவின் கட்ரீனா என்று விமர்சனங்கள் எழுந்தன.

கட்ரீனாவிற்குப் பிறகு புஷ் தனது செல்வாக்கை இழந்தது போன்றே ஒபாமாவிற்கும் இந்த எண்ணெய்க் கசிவு அமையும் என்று கருதப்பட்டது. இந்த அழுத்தங்களினாலும், ஏற்கனவே சரிந்து வரும் தனது செல்வாக்கு மேலும் சரியாமல் தக்க வைத்துக் கொள்ளவும், இது குறித்துத் தான் மிகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியும் இது தனது கட்டுக்குள் தான் இருக்கிறது என்று அறுதியிட்டுக் கூறவேண்டியும் ஒபாமா பாதிப்படைந்த பகுதிகளுக்குச் சில முறைகள் பயணம் சென்று நேரடியாகப் பார்வையிட்டது மட்டுமின்றி, இதனால் பாதிப்படைந்த மக்களுக்கு பீ.பி நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், எத்தனை காலம் ஆனாலும் இப்பிரச்சினையை எதிர்த்துப் போராடுவோம் என்றும் கூறுகிறார்.

பீ.பி நிறுவனத்தைக் குறை கூறுவதா, அவர்கள் மீதே முழுப் பழியும் சுமத்துவதா, அல்லது அவர்களோடு இணைந்து இச்சிக்கலைச் சரி செய்ய முயல்வதா என்னும் ஆரம்பக் குழப்பங்களைத் தாண்டி, அவர்களிடம் இருபது பில்லியன் டாலர்களுக்கான ஒரு வைப்பு நிதியை ஒதுக்கும்படி செய்திருக்கிறார். இதனால் பாதிப்படைந்த மக்கள் சிறிது மகிழ்ச்சியுற்றாலும், தொழில் நிறுவனங்கள் இத்தகைய சூழ்நிலையில் தங்கள் முதலீட்டைப் பணயம் வைக்கத் தயங்குவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது. ஏற்கனவே வீழ்ச்சியுற்றிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இது நல்லதில்லை எனவும் சிலர் எண்ணுகின்றனர்.

கிழக்குக் கரையோரம் மேலும் பல எண்ணெய்க் கிணறுகளுக்கு ஒப்புதல் அளிக்கலாமா என்று இருந்த விவாதங்கள் இப்போது கிடப்பில் போடப் பட்டுள்ளன. ஆழ்கடல் கிணறுகள் துளைத்தலுக்கு சில காலம் இடைக்காலத் தடை விதிக்கப் பட்டிருந்து இப்போது அண்மையில் தான் அது நீக்கப்ப்பட்டது. கலிபோர்னியா, புளோரிடா மாநில ஆளுனர்களும் தத்தம் மாநிலங்களின் கரைகளை ஒட்டி ஆழ்கடல் துளைத்தக்குத் தாம் தெரிவித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகு இக்கும் தீவாய்ப்பும் (risk) கொண்ட ஒரு செயலில் ஏன் இறங்கவேண்டும் என்று தமது முடிவை மாற்றிக் கொண்டதாகக் கலிபோர்னிய ஆளுனரான ஆர்னால்டு சுவாசநகர் கூறுகிறார். (இவர் பல ஆங்கிலப் படங்களில் நடித்துப் பெயர் பெற்ற அதே ஆர்னால்டு தான்).

படம்: பீ.பி நிறுவனத்தாருடன் பேச்சு வார்த்தையில் ஒபாமாவும் பிற அரசு அதிகாரிகளும்.

கசிந்து கொண்டிருக்கும் எண்ணெய்யை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதையும், ஏற்கனவே கசிந்து கடலில் கலந்துவிட்டதை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றியும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்கு முன்னர் இது போன்ற சூழல்களில் இது போன்ற நடவடிக்கைகளில் அனுபவம் இல்லாத மனித இனத்திற்கு இது பெரும் சவாலான ஒன்றாகவே அமைந்தது. தற்காலிக முறைகள் எதிலும் முழுமையாகக் கசிவை நிறுத்த முடியாததால், மாற்றுத் துளைகள் இரண்டும் துளைக்கப்பட்டன. அவை வெற்றிகரமாக முதல் துளையினை அடைந்தால், அவற்றுள் சிமெண்ட் ஊற்றிக் கிணற்றை அடைத்து விடலாம் என்பது எண்ணம்.

இதற்கிடையிலே மேற்பரப்பில் ஏற்கனவே கசிந்த எண்ணெய்யைச் சுத்தம் செய்வதிலும், பாதிக்கப்பட்ட உயிரினங்களைக் காக்க முயல்வதுமாகச் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட இக்கால கட்டத்தில் இக்கசிவினால் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன என்று பார்த்து வருகின்றனர். பீ.பியும், டிரான்சோசனும், ஏலிபர்ட்டனும் தங்களுக்குள் வழக்கு பழி என்று மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடலுக்குள் கசிந்த எண்ணெய் பயந்தபடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் மாயமாகிப் போனதற்கு எண்ணெய் உண்ணும் நுண்ணுயிரிகள் காரணமா என்றும் ஆய்ந்து வருகின்றனர்.

காரியம் கெட்ட பிறகு சரிசெய்வதை விடச் சரியான செய்கைகளின் மூலம் இவ்விபத்தைத் தவிர்த்திருப்பதே சிறப்பானதாக இருக்கும். ஒட்டுமொத்தமாகத் துளைத்தலையே தடைசெய்வது ஒருவகையில் தீர்வாக இருந்தாலும், அதை உடனடியாகச் செய்வது வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தரும். இயலாத ஒன்று என்றே கூறலாம். பாறைநெய்யும் இயற்கை எரிவளியும் இன்னும் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான மூலங்கள்.  வேறு மாற்று எரிபொருட்கள் குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் வரை இவை இன்னும் தேவையாகவே இருக்கும். இங்கு ஒரு கிணற்றில் விபத்து என்றாலும், உலகம் முழுதும் 14000 ஆழ்கடல் கிணறுகள் இருப்பதும், செயலாற்றுவதும் மனிதப் பொறியியல் திறமைகளுக்கு ஒரு சான்று என்பதை மறுக்க முடியாது.

எப்படி இருந்தாலும், உலகமும், மக்களும் தங்கள் ஆற்றல் தேவைகளைக் குறைத்துக் கொள்வது இன்றியமையாத ஒன்று. அதிக தேவை இருப்பதாலேயே இது போன்ற தீவாய்ப்புக்கள் நிறைந்த செயலில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட வேண்டியிருக்கின்றன என்பதால், தேவையைக் குறைப்பது முக்கியமானது. இந்த நிறுவனங்களும் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து குறைந்த கால ஆதாயத்திற்காகப் பெரும் சேதாரத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பீ.பி போன்ற நிறுவனங்கள் பொறுப்பான செயல்கள் மூலம் இத்தகைய விபத்துக்கள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரசும், அதன் துறைகளும் கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது போல் இல்லாமல், இந்நிறுவனங்கள் போதுமான பாதுகாப்புச் செய்கைகளை வைத்திருக்கின்றனவா, என்பதைக் கண்காணித்து வர வேண்டும்.  தமது செயல்பாட்டையும் சட்ட திட்டங்களையும் நீண்ட கால நன்மை கருதி வகுக்க வேண்டும்.

* * * *

உசாத்துணை:

1. http://www.economist.com/node/16160853?story_id=16160853

2. http://www.slate.com/id/2256920?wpisrc=xs_wp_0001

3. Ultra-deep…Shell http://www.shell.com/home/content/media/news_and_library/press_releases/2009/parque_das_conchas_09122009.html

4. Deepwater conditions  http://www.shell.com/home/content/innovation/news/shell_world_stories/2007/deepwater/

5. http://www.nytimes.com/2010/12/26/us/26spill.html?_r=1&nl=todaysheadlines&emc=a2

 

Tags: வேதிப்பொறியியல்

8 responses so far ↓

 • 1 இராம.கி. // Apr 21, 2012 at 12:18 am

  நல்ல நடையில் விளக்கியிருக்கிறீர்கள். என் பாராட்டுக்கள்.

  வலைப்பதிவர்கள் பலரும் தாம் பணிபுரியும் புலத்தில் இப்படிக் கட்டுரைகளை அவ்வபொழுது படைத்தால் நன்றாக இருக்கும். வெறுமே ”துணுக்குகள், கவிதைகள், கதைகள், திரைப்படச் செய்திகள்” என்று மட்டுமே தமிழ் வலைப்பதிவுகள் அமைவது மொழிக்கு நல்லதல்ல. அவற்றின் விழுக்காடு எதிர்காலத்திற் குறையவேண்டும். தவிர “தமிழ் இவை போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு மட்டுமே வாய்ப்பானது” என்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.

  தமிழில் இதுவரை இல்லாத புதிய, கனமான, புலனங்கள் வர வேண்டும். எதையும் தமிழில் எழுத முடியும், அதற்கான வளம் இங்குண்டு என்ற நிலை எழ வேண்டும். இதைப் பற்றிப் பலவிடத்தும் சொல்லிவருகிறேன்.

  அன்புடன்,
  இராம.கி.

 • 2 jothi // Apr 21, 2012 at 5:46 am

  Nice article,..

 • 3 nagugarajan g // Apr 21, 2012 at 9:51 am

  Very very informative and interesting article. thank you very much.
  nagrajan.

 • 4 இரா. செல்வராசு // Apr 22, 2012 at 4:24 pm

  நன்றி இராம.கி ஐயா. இது போன்ற துறைசார் பதிவுகளை எழுத இன்னும் ஆர்வமும் எண்ணமும் இருக்கிறது. அதற்கான நேரத் தேவையும் அதிகமாக இருப்பதால் தள்ளிப் போகிறது. டுவிட்டர் 140 எழுத்துக் காலத்தில் இது போல் நீண்ட கட்டுரைகளைப் படிப்போரும் அதிகம் இரார் என்று எண்ணினாலும், அதனால் நான் ஆர்வம் குன்றாமல் சுய விருப்பின் பேரில் எழுத நினைக்கிறேன். இவற்றிற்கான தேவையும் பயனும் நிச்சயம் இருக்கும், இருக்கிறது என்று நினைக்கிறேன். ஊக்கமூட்டும் உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி.

  ஜோதி, நாகராஜன் உங்களுக்கும் எனது நன்றி. தகவலுக்கு: ஒன்றிரண்டு சொற்களில் ஆங்கிலத்தில் கருத்துகள் சொன்னால் எரிதத் தடுப்பி பிடித்து வைத்துக் கொள்கிறது. அதனால் கவனிக்காமல் போகும் சாத்தியங்கள் உண்டு.

 • 5 இரமணிதரன், க. // Apr 22, 2012 at 6:50 pm

  /இந்நிறுவனங்கள் போதுமான பாதுகாப்புச் செய்கைகளை வைத்திருக்கின்றனவா, என்பதைக் கண்காணித்து வர வேண்டும். /
  உங்கள் வேலைக்கே உலையா? 😉
  நல்ல கட்டுரை செல்வா

 • 6 இரா. செல்வராசு // Apr 22, 2012 at 8:39 pm

  நன்றி இரமணி. வேலைக்கு உலை என்பதை விட, உறுதிப்படுத்திக் கொள்ளலும் எனக் கொள்ளலாமே 🙂 ஒட்டுமொத்தமாக இழுத்து மூடிவிட்டாலும் பிரச்சினை தானே!

 • 7 இந்தியன் // May 11, 2012 at 11:14 pm

  பல தகவல்கள். செறிவான இடுகை.

 • 8 இரா. செல்வராசு // May 12, 2012 at 7:46 pm

  இந்தியன், மிக்க நன்றி.

  இராம.கி அய்யாவின் பதிவு வழியேயான சொற்தொகுதியைச் சேர்த்து வைத்திருக்கும் உங்கள் பணி சிறப்பானது. ஒரு காலத்தில் இது போலச் செய்ய வேண்டும் என நானும் எண்ணியதுண்டு. ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்கள். நன்று.