• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« I Support Tamil Eelam
சோதனை »

தீபாவளி 2008

Oct 27th, 2008 by இரா. செல்வராசு

deepaavali “தீபாவளியா? அது எப்பவோ வந்துட்டுப் போயிருச்சே”, என்று வீரப்பன் சத்திரத்துப் பேருந்து நிறுத்தத்தில் மூன்றாம் எண் நகரப் பேருந்து குறித்துப் பேசுவது போல, சலனமின்றிச் சென்றுவிட்ட புலம்பெயர் தீபாவளிகளும் பண்டிகைகளும் சில உண்டு. இந்திய, தமிழக மக்கள் நிறைய வசிக்கும் பெருநகர்க்குப் பெயர்ந்ததும், அதிகரித்த தொலைத்தொடர்பு, இணைய வசதிகளும் இப்போதெல்லாம் அப்படி முழுவதுமாய் மழுங்கடித்து விடுவதில்லை. ஏதோ ஒரு வழியில் ‘இந்த வாரம் தீபாவளி’ என்று முன்னதாகவே தகவல் வந்துவிடுகிறது. இருப்பினும் சக்கரத்துச் சுழற்சி போன்ற வாழ்வு முறையில் ஒரு உணர்வோடு முன்னதாகவே தீபாவளியைக் கொண்டாடுதல் பற்றி யோசனைகள் விடுபட்டுப் போய்விடுகின்றன.

எப்போதும் போல் அலுவம் செல்லும் முன் அவசரப் பார்வையிட்ட இணையத்தில் வெங்கட்டின் தீபாவளி நினைவுகள் சற்றே நிறுத்தி யோசிக்க வைத்தது. இது போன்ற பண்டிகைகள் நமது கலாச்சாரம், பழக்க வழக்கம் முதலியனவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் என்பதால், அவர்களுக்காகவேனும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எண்ணினாலும், அது குறித்த தீவிரமான சிந்தனை, திட்டங்கள் இன்றிப் போவதும், போனதை நினைத்துப் பேசுவதும், பேசுவதை விட்டுத் தள்ளுவதுமாய்ப் போகிறது காலம். கலாச்சாரம் என்பதும் கூடப் பெரிதாக ஒன்றுமில்லை; ஆனால் அதனூடான அடிப்படை இயல்பாக ஒரு இயந்திர வாழ்க்கையின் இடையில் உண்டாக்கிக் கொள்ளும் கொண்டாட்ட உணர்வும், ஆழ்மன உற்சாகப் புதுப்பித்தல் வாய்ப்பும் (நன்றி: வெங்கட்) பற்றிய அனுபவத்தை ஏற்படுத்தித் தரவேண்டும்.

மாலையில் மனைவியிடம் கேட்டேன், “நாம ஏன் தீபாவளிக்கு ஒண்ணும் பண்ணல?”

“ஆமா. நான் கூட நெனச்சுக்கிட்டுருந்தேன்” என்று ஆரம்பித்த அவர் பேச்சு, ஆயாசமாகத் தொடர்ந்தது, “இப்படித் தான் நாம எப்பவும் பேசுவோம். அப்புறம் அது பத்தி ஒண்ணும் பண்ணாம விட்டுருவோம்”. தீபாவளி பற்றிய கொண்டாட்டங்கள் குறித்து முன்வருடங்களில் அவர் தெரிவித்த யோசனைகளைப் பெரிதும் ஊக்குவிக்காமல் விட்டிருந்தேன்.

மழை பெய்த காரணத்தால் போன வருடம் வெடிக்காது வைத்த ஜூலை நான்கின் மிச்சப் பட்டாசுகளை இவ்வருடமும் வெடிக்க முடியாது மழையும் குளிரும் தாக்கியது. அப்படியே நல்ல வெதணமாய் இருந்திருந்தாலும் வீட்டுக் குப்பைகளுள் புதையுண்டு போனவற்றைக் கண்டுபிடிப்பதற்குள் அடுத்த வருடம் பிறந்திருக்கும்.

“போன வாரமே எடுத்துக் காயப் போட்டு வைக்கலாம்னு எப்பவோ நெனச்சேன்”, என்று எப்போதோ பேசிக் கொண்ட ஞாபகம் மட்டும் இருக்கிறது.

மிச்சமிருக்கிற தீபாவளியின் பொழுதில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பதால், “சரி, எதாவது பண்ணுவோம். பட்டேல்ல போய் எதாச்சும் இனிப்பு வாங்கிட்டு வரட்டுமா” என்று கேட்டேன். மறுநிமிடம், “ஓ இன்னிக்குத் திங்கக்கிழமை. பட்டேல் லீவு உட்டுருப்பான்; வேணும்னா சரவணால போய் ராத்திரி சாப்புட்டு வரலாம்”, என்றேன்.

“ஆமாம் அப்பா, நான் கூட அப்படி எதாவது பண்ணனும்னு நினைச்சேன்” என்றால் நிவேதிதா மலர்ச்சியுடன். (Yes appaa. I was thinking we should do something like that).

நோன்பு நாளில் கூட்டம் இருக்கும் என்று பார்த்த சரவணா பேலஸில் அப்படி ஒன்றும் இல்லை. வசதி தான் என்றாலும் இன்னொரு புறம் அது ஏமாற்றத்தைத் தந்தது. நாமும் கொண்டாடுகிறோம் என்று சிறிதாக எண்ணிக் கொண்டாலும், ஒரு குமுகாயக் கொண்டாட்ட உணர்வு இதனில் இல்லை. வரும் இரு வார இறுதிகளில் வட்டாரச் சங்கத்திலும், சங்கத்து வட்டாரத்திலும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வோம் என்று நினைத்துக் கொண்டேன். ஒட்டிய வார இறுதிகளுக்குக் கொண்டாட்டங்களைத் தள்ளி வைத்துக் கொள்வதும் ஒரு புதிய கலாச்சாரம் தானே.

ஈரோட்டில் கள்ளுக்கடை மேட்டில் லைன் வீடு என்னும் வரிசைக் குடியிருப்பில் இருந்த எனது சிறுவயது தீபாவளிகளின் கலாச்சாரம் வேறானது. காய்ச்சிய நல்லெண்னையைப் பரபரவென்று தேய்த்து விடும் தாத்தாவின் முயற்சியால் வருடத்திற்கு ஒருமுறை எண்ணெய்க் குளியல். பக்கத்து வீடுகளின் அண்ணன் அக்காக்களுடனும் சேர்ந்து கொண்டு காலையில் நேரமே குளித்துப் பின் வெடித்த பட்டாசுகள் நினைவில் இருக்கின்றன. வெடிக்காது வீணாய்ப் போன பட்டாசுகளின் மருந்தைப் பிரித்துச் சேர்த்துக் கடைசியில் பற்ற வைத்தால் புஸ்ஸென்று எழும் ஒளியைக் காணச் செய்த முயற்சியில் கைமுழுக்கப் பழுத்து மரப்பாலத்து நந்தகோபால் மருத்துவமனையில் மருந்து போட்டுக் கொண்டதும் கூட நினைவில் இருக்கிறது.

“பாதி பிரிச்சுக்கிட்டு இருக்கும் போதே குமாரு பத்த வச்சுட்டான்”, என்று அழுகையினூடாக அடுத்தவனைக் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தேன்.

நாய் குலைக்கும் வாழைத் தோட்டத்துக் குறுக்கு வழியாகச் சென்றடையும் அதே மரப்பாலத்தில் தான் பொட்டிக்கடை டெய்லர் ஒருவர் தீபாவளிக்கு முன் தினம் வரை, இதோ, அதோ, என்று இழுத்தடித்துத் தீபாவளித் துணியைத் தைத்துத் தருவார். இன்னும் காஜா மட்டும் கட்ட வேண்டிய துணிக்காகக் காத்திருந்த போது என் கால் முட்டி பட்டு அவருடைய கண்ணாடி அலமாரி உடைந்த போது என்னைத் திட்டிவிட்டாலும், அவர் குடும்பத்தின் நண்பர். அப்பா, மாமாவின் பழைய பற்றாத துணிகளைப் பிரித்துக் கொடுத்தால், அளவு குறைத்து எனக்காகும்படி தைத்துக் கொடுப்பவர். ஆனால், தீபாவளிச் சமயத்திலோ பழையதைத் தைக்க மறுத்துவிடுவார். கடைவீதித் துணிக்கடைகளில் பீஸில் கிழித்த துணியில் தைத்த புதுச் சட்டை துணிமணிகளின் வாசமே தனி. இப்போதைய பெரிய கடைகளில் ஏ.சி. குளிரில் தொங்கும் ரெடிமேடுத் துணிகள் எதனிலும் அவ்வாசனை என்றும் கிடைக்காது.

ஊரில் இருக்கிற அம்மா அப்பாவோடு தொலைபேசியில் பேசினேன். “நேத்துக் கூப்பிடக் காணோம்?”

“நேத்தே கூப்பிடலாம்னு இருந்தேன். கருங்கல்பாளையத்துச் சம்பத்து வந்துருந்தான். நேரமாயிருச்சு. சரி இன்னிக்கு தீபாவளிக்குக் கூப்பிட்டுக்கலாம்னு விட்டுட்டேன்” என்றேன். “நல்லா இருக்கீங்களா?”

“கொஞ்சம் சளி, காச்சல். ஊருக்கெல்லாம் போயி அலஞ்சுட்டு வந்தது ஒத்துக்கலையாட்ட இருக்குது”, என்றார் அப்பா. “மாத்திர சாப்பிட்டேன். இப்போ பரவால்ல”.

“ஒரே மழையா சதசதன்னு கெடக்குது. இந்த ரெண்டு நாளா கொஞ்சம் பரவால்ல” என்றார் அம்மா. முன்பெல்லாம், தீபாவளிக்கு அம்மா வெள்ளை வடை சுடுவார்கள். வழக்கம் போல, நாங்கள் எல்லாம் அருகில் இல்லாத தீபாவளியைப் பற்றி சலித்துக் கொண்ட அம்மாவை நேற்று நண்பன் சென்று பார்த்து வந்ததில் கொஞ்சம் நிறைவு பெற்றிருந்தார். அல்லது, அப்படியாக நான் நினைத்துக் கொண்டேன்.

“செந்திலு வந்திருந்தான். சொல்லச் சொல்லக் கேக்காம எங்களுக்குப் போயித் துணி வாங்கிக் குடுத்துட்டுப் போனான்”, என்றார்கள்.

சட்டெனப் பட்டது. புலம்பெயர் வாழ்வில் தொலைத்தது எங்களின் தீபாவளியை மட்டுமல்ல.

* * * *

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Tags: தீபாவளி, பண்டிகை, புதுத்துணி

Posted in வாழ்க்கை

9 Responses to “தீபாவளி 2008”

  1. on 28 Oct 2008 at 12:16 am1R.SEENIVASAN

    அட்டாலியிலிருந்து எடுத்து பிரித்துப்போடப்பட்ட பழைய புத்தகமூட்டையைப்போல்
    நினைவுகளை விவரித்து இருக்கிறீர்கள்.வார இறுதி தீபாவளி வாழ்த்துக்கள்.

  2. on 28 Oct 2008 at 3:48 am2முத்துலெட்சுமி

    ஹ்ம் .. இதெல்லாம் அப்பப்ப பேசிட்டு மறந்துடத்தானே போகிறோம்.. 12 மணி வரை என் சின்னவயசு தீபாவளியை மகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்.. அவளுக்கு அவள் தோழியோடு கொண்டாடுவது மகிழ்ச்சி .. இவளிடம் இருக்கும் பட்டாசுகளை பகிர்ந்து கொண்டாடுவாள். ஹிந்திக்காரங்களுக்கு அடுத்த நாள்.தீபாவளி அடுத்த நாள் அவள் இவளுக்கு பகிர்ந்துகொள்வாள்.

  3. on 28 Oct 2008 at 8:46 am3செல்வராஜ்

    சீனிவாசன், முத்துலெட்சுமி, உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சில இந்திக்காரர்கள் ஐந்து நாள் கொண்டாடுவோம் என்று தெரிவித்தார்கள். லட்சுமி பூஜை முதலியன. எங்கிருந்தாலும், பழைய நினைவுகளில் மூழ்குவது கொஞ்சம் சுகம் தான். நமது சிறுசுகளுக்கும் அவரவர் அளவில் நினைவுகள் (வேறாக இருந்தாலும்) சேர்ந்துகொண்டு தானே இருக்கும்.

    செல்வா என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருந்தவருக்கு: உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதில் இருந்த தரக்குறைவான வார்த்தைகளும் உணர்ச்சிகளும் காரணமாக அந்தப் பின்னூட்டத்தை நீக்குகிறேன். இருக்கும் இடத்தில் நீங்கள் நிறைவாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லை, குறைகளை வேறு விதமாகக் கையாளத் தெரிந்தாலும் சரியே. என் முறைகளை விமர்சிக்கும் முன் முதலில் மரியாதை தரத் தெரிந்து கொள்ளுங்கள்.

  4. on 28 Oct 2008 at 2:02 pm4குறும்பன்

    தீபாவளின்னா புது சட்டை, பட்டாசு, பலகாரம் அப்புறம் சினிமான்னு கொண்டாடியது ஒரு காலம். அமெரிக்கா வந்ததுக்கப்புறம் இதுல ஒன்னுகூட இல்ல. தீபாவளி, பொங்கல்ன்னா கூட்டாஞ்சோறு தான் இப்ப கொண்டாட்டம். ஆன்னா ஊன்னா இங்க கூட்டாஞ்சோறு தான், குறைந்தபச்சம் அதுவாவது இருக்கேன்னு சந்தோஷப்பட வேண்டியது தான். பழைய நினைவுகளை நினைவுக்கு கொண்டாந்துட்டீங்க. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

  5. on 28 Oct 2008 at 5:04 pm5கெக்கெபிக்குணி

    என் தீவாளி (பல ஊர்களிலும்) அனுபவங்களையும் நினைவுபடுத்தி விட்டீர்கள்.

    //புலம்பெயர் வாழ்வில் தொலைத்தது எங்களின் தீபாவளியை மட்டுமல்ல.//உங்கள் குழந்தைகளுக்காகவேனும் பட்டாசுடன் கொண்டாட வேண்டுகிறேன்! (உங்களூரில் பட்டாசு வெடிக்க அனுமதி உண்டல்லவா?) நாங்கள் இதற்காகவே நண்பர்கள் / இந்திய குழுக்கள் (ஃபெஸ்டிவல் ஒஃப் இந்தியா, தமிழ் சங்கம்) தீவாளி திருவிழாக்களில் கண்டிப்பாக பங்கேற்கிறோம்.

  6. on 28 Oct 2008 at 5:58 pm6Vimala

    Well written..especially the last paragraph.
    Diwali wishes. Glad that you get to use crackers.
    Here as usual we had get togethers and exchanged sweets and karam:-)

  7. on 28 Oct 2008 at 11:15 pm7செல்வராஜ்

    குறும்பன், கெக்கெபிக்குணி, விமலா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இங்கு பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு. அதனைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம்.

  8. on 30 Oct 2008 at 2:25 pm8Prabhu Rajadurai

    எனது வெடி இங்கே!
    http://marchoflaw.blogspot.com/2006/12/blog-post_25.html

  9. on 06 Mar 2009 at 4:01 pm9Saravana

    Sel,
    Your writings are really nice fluent and attracts attention.

    Your last paragraph was striking. It pricked me . I feel the same many a times when i come across such situations.

    You are at america and feeling so. Myself being in India and shunting betwen Chennai & XXX feel the same when my son makes some fervant and innocent comments ( Ethukkuppa XXX poganum ? Innaikku schoolla parents teachers meeting. Varuveengala ?” which drives me to think ” What for this running ” “Why not give up all and look at giving your children what you have enjoyed in life”.
    Anyway i understand and beleive destiny is beyond everybody and one has to accept it happily ( If not possible atleast try to !!! )

    Hopw everybody is fine at home
    Regards
    SSK

  • About

    Profile
    இரா. செல்வராசு
    விரிவெளித் தடங்கள்
    There are 292 Posts and 2,400 Comments so far.

  • Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • இலக்குமணன் on குந்தவை
    • ராஜகோபால் அ on குந்தவை
    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2023 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook