ஐப்பீ
Apr 20th, 2007 by இரா. செல்வராசு
இணையத்தில் ஓரளவிற்குக் குப்பை கொட்டியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இந்த ‘ஐப்பீ’ என்பது பற்றிக் கேட்டிருக்கக் கூடும். இது உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் வலையாகிய இணையத்தின் செயலாற்றலுக்கு முக்கியமான ஒரு நுட்பம் என்றாலும், ஆழத்தில் இருக்கிற அது பற்றி அறியாதிருப்பது சாதாரணமானது தான். ஆனாலும், அந்த அறியாமையைத் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி, ஏதாவது சில அரசியற்சிக்கல்களாலோ அரைவேக்காட்டுத்தனத்தாலோ, (இல்லை அறியாமையாலோ கூட இருக்கலாம்) பயமுறுத்தும் சில(ர்) எழுத்துக்களையும் கூட நீங்கள் ஆங்காங்கே கண்ணுற்றிருக்கலாம்.
கணினி வல்லுனர்கள் பலருக்கும் கூட இந்த ஐப்பி பற்றிய விவரங்கள் முழுமையாகத் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பதிவு ஆழ்ந்த நுட்ப விவரிப்புக்களுக்குள் போகாமல், பொதுவாக எளிமையாகச் சொல்ல முடியுமா என்று பார்க்கும் ஒரு முயற்சி. குறைந்தபட்சம், தெரியாத ஒரு விஷயம் பற்றி யாரேனும் பீதி கிளப்பினால் அதனை எதிர்கொள்ள உதவும் சிறு அடிப்படை அறிவு.
ஐப்பி என்பது Internet Protocol என்பதன் சுருக்கமான IP என்பதே. TCP/IP என்பதன் ஒரு அங்கம். இது இணையத்தில் உள்ள கணினிகளுக்குள்ளான தரவுப் பரிமாற்றத்திற்கான (data transfer) பொதுவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தரம் (standard). தரவுகளை எங்கு அனுப்புவது, எப்படி அனுப்புவது, என்பது போன்றவற்றிற்கான ஒரு வகை ஒப்பந்தம். இன்றைய இணையச் செயல்பாட்டிற்கு அடிப்படையான ஒரு நுட்பம்.
உதாரணத்திற்கு நம்முடைய அன்றாடப் பாவனையில் இருக்கும் இணைய உலாவியோ, மின்னஞ்சலோ, அரட்டையரங்குகளோ, இப்படி எந்த ஒரு சேவையாக இருந்தாலும், அவையனைத்திலும் ஆழத்தில் இருப்பது தரவுப் பரிமாற்றம். நீங்கள் அனுப்புகிற செய்தி, அஞ்சல், பதிவு, படம், பாட்டு, ஒலிக்கோப்பு, ஒளிக்கோப்பு, எதுவாக இருந்தாலும் உங்கள் கணினிக்கும் பிறிதோர் கணினிக்கும் இடையே அந்தத் தரவுகள் செல்ல வேண்டும். அப்படிச் செல்ல வேண்டுமாயின் ஒவ்வொரு கணினிக்கும் தனித்து இனங்காட்டும் ஒரு அடையாளம் வேண்டும். அந்த முகவரியை நிர்ணயிப்பதும், தரவுகளை எப்படிச் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து வரிசைப்படுத்தி அனுப்புவது, கிடைத்த தரவுப் பொட்டலங்களை மீண்டும் சேர்த்து மூல ஆவணத்தை எப்படி மீட்டெடுப்பது போன்ற நடைமுறைகளை விவரிப்பது இந்த வரையறை. இதனை ஒரு நடைவரை (Protocol) என்றும் கூறுவர். (நன்றி: டொமெசுடிக்கேட்டட் ஆனியன் வெங்கட் – இவரை வெங்காய வெங்கட் என்றும் கூறலாம் 🙂 ).
நிகழ் உலகில் நாம் இருக்கிற வீடு அலுவம் இவற்றிற்கெல்லாம் அடையாளப்படுத்தும் முகவரி இருப்பது போல, இணையத்தில் ஒரு வலைப்பின்னலாய்க் கிடக்கிற கணினிகளுக்கும் ஒரு முகவரி அவசியமாகிறது. அப்படிப் பட்ட முகவரியைத் தான் இந்த இணைய நடைவரை (Internet protocol) விவரிக்கிறது. கணினிகளுக்கு எண்களே புரியும் என்பதால், இந்த முகவரியானது “காளியம்மன் கோயில் அருகே, எட்டாவது குறுக்குத் தெரு, ரொட்டிக்கடை எதிரில்” 🙂 என்றெல்லாம் இல்லாமல் வெறும் எண்களால் மட்டுமே ஆனது.
ஐ.பி, இந்தக் கணினியின் வலை முகவரியை (புள்ளிகளால் பிரிக்கப்பட்ட) நான்கு எண்களால் குறிக்கிறது. உதாரணத்திற்கு 216.24.72.101. இதில் இருக்கிற ஒவ்வொரு எண்ணும் கணிப்பேச்சில் சொன்னால் ‘எட்டும எண்’ (எட்டு பிட் அளவு) எனலாம். எளிமையாகச் சொன்னால், இந்த எண்கள் ஒவ்வொன்றிற்கும் உயரெல்லை மதிப்பு = 255. உலகெங்கும் இருக்கிற (இணையத்தில் இணைந்த) கணினிகளில் ஒரே எண் தொகுப்பை இரண்டு கணினிகள் கொண்டிரா. அப்படி இருந்தால், பிறகு எந்த வீட்டிற்குப் போவது என்று குழம்பி விடுமே? இவ்வாறு இம்முகவரிகள் தனித்துவமாய் இருப்பதைச் சில சர்வதேச அமைப்புக்கள் பார்த்துக் கொள்கின்றன.
இந்த எண்களின் வீச்சை வைத்து மூன்று வகுப்புக்களாக Class A, Class B, Class C வலையமைப்பை வைத்திருக்கிறார்கள்; இணையத்தில் சேராத தனிவலைகளுக்கென்று ஒரு எண் சாரை இருக்கிறது; என்னும் நுண் செய்திகளைத் தாண்டி மேலே செல்வோம்.
எந்த ஒரு தரவுப் பரிமாற்றத்தின் போதும், இந்த நடைவரை முகவரி எண் கலந்தே செல்லும். உதாரணத்திற்கு உங்கள் உலாவி வழியாய் எந்த ஒரு வலைமுகவரிக்குச் சென்றாலும், அங்கே உங்கள் ஐ.பி எண் உடன் செல்லும். வெளிப்படையாய்த் தெரியாவிட்டாலும், அதற்கேற்ற நிரல்கள் இருந்தால், எந்த முகவரியில் இருந்து ஒரு பக்கத்தை, பதிவைப் பார்க்க விண்ணப்பம் வருகிறது என்று கண்டுகொள்ள முடியும். காட்டாக, என் ஐ.பி. என்ன என்னும் இத்தளத்திற்குச் செல்வீர்களானால் உங்கள் கணினியின் ஐ.பி எண் என்னவென்று உடனடியாகச் சொல்லிவிடும்.
இதையே எந்த ஒரு வலைப்பதிவிலும் சிறு நிரல்துண்டுகளை வைத்து எளிதில் கண்டு கொள்ளலாம். சில பதிவுகளுக்குச் செல்லும்போது, ‘அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் இருந்து வந்திருப்பவரே வருக, வாழ்க’ என்பது போன்ற செய்தி வருவதைக் கண்டு வாய் பிளந்திருந்தீர்களானால், அதுவும் இப்படிப்பட்ட நிரல் துண்டுகளாலும், ஐ.பியின் அடிப்படை அம்சத்தினாலும் தான் சாத்தியமாகிறது. வோர்ட்பிரஸ் என்னும் வலைப்பதிவு நிரலி பாவிப்பவராய் இருந்தால், ஒவ்வொரு பின்னூட்டத்தினையும் அது இட்டவரின் ஐ.பி முகவரியையும் சேர்த்தே காட்டும் என்பதை அறிவீர்கள்.
இதிலும் சில குறிப்புக்களைக் கவனிக்க வேண்டும். ஐ.பி முகவரி இணையத்தில் இணைந்த கணினியையே சுட்டும். அது இருக்கும் இடத்தையே காட்டும். சில நிறுவனங்களில் இருக்கும் கணினிகள் எல்லாம் ஒரு வலையாக இருந்தாலும், அவை யாவும் நேரடியாக இணையத்தில் இணைந்திரா. சில வழிப்படுத்திகள் (routers) மூலம் மட்டுமே அவை இணையத்தை அடையும். அப்படி இருக்கும் போது நீங்கள் கலிஃபோர்னியாவில் இருந்து இணையத்தில் உலாவினாலும், அது இணையத்தில் நேரடியாய் இணைந்த வழிப்படுத்தி எங்கிருக்கிறதோ அந்த ஊரையே இனங்காட்டும். அது டெக்ஸாஸாக இருந்தால் மேற்படி ‘டெக்ஸாஸில் இருந்து வருபவரே…’ என்று சாத்தியப்படும்.
மற்றபடி இந்த ஐ.பிக்கள் எந்தவொரு அந்தரங்கச் செய்தியையும் தாங்கி வருவதில்லை. உங்கள் சொந்த விஷயங்கள், சம்பளம், அண்ணன் தம்பி சண்டை, உடல்/மனக் கோளாறு, பதின்ம வயதில் செய்த குறும்பு, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கொடுத்த காதல் கடிதம், வங்கிக் கணக்கு எண், வாங்கிக் கட்டிக் கொண்ட அடியுதை, என்று எதையுமே இந்த ஐ.பி. முகவரி காட்டுவதில்லை. மடியிலே கனமில்லை என்றால் இணையத்தில் பயப்பட ஒன்றுமில்லை.
“ஓ… என் ஐ.பி முகவரியை நீ ஏன் சொன்னாய்”, என்று பொங்குவதில் அவ்வளவு விஷயம் இல்லை. அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லை. நீங்கள் செல்லுகிற ஒவ்வொரு இடத்திலும் ஐ.பி முகவரியைச் சொல்கிறீர்கள். நீங்கள் பின்னூட்டம் இடும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் முத்திரையையும் அடையாளத்தையும் விட்டு வருகிறீர்கள். வருகைக் கணக்கைச் சேர்க்கும் சிறு துண்டு நிரல்களை அநேகரின் பதிவுகளில் நீங்கள் பார்க்கலாம். என்னுடைய இந்தப் பதிவில் கூட SiteMeter என்னும் ஒரு நிரல்துண்டு உண்டு. கடைசியாய் வந்து போனவர்களின் உத்தேசமான ஐ.பி. எண்களை இதுவும் காட்டும்.
சரி, இப்போது உதாரணத்திற்குக் கற்பனையாய் ஒன்றைப் பார்ப்போம். கோணல் மனசு துறுதுறுக்க, அதனைக் கட்டத்தெரியாமல் நீங்கள் ஆடுகிறீர்கள். வேண்டுமென்றே ஒரு பெண் பதிவர் (அல்லது ஆண்பதிவர்) பதிவில் சென்று ஆபாச ஆபாசமாக ஒரு பின்னூட்டம் இடுகிறீர்கள். குரூரமாகத் தனியே சிரித்துக் கொண்டு, பிறகு சற்று நேரம் கழித்து மீண்டும் அங்கே சென்று நல்ல பிள்ளை போல நடந்து கொண்டு, “தெய்வமே, உங்களைப் போல வருமா? தமிழ் இலக்கியத் தொண்டு செய்ய உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதித் தள்ள வேண்டும். வாழ்க உமது சேவை”, என்று சொந்தப் பெயரில் கும்பிடு போட்டு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த இரண்டு பின்னூட்டங்களையும் பார்க்கிற பதிவருக்கு, வெளியே தெரியும் பெயர்கள் வேறு வேறாய் இருந்தாலும் (முதலில் அனானி, பிறகு சொந்தப் பேர்), இரண்டு பின்னூட்டங்களும் வரும் ஐ.பி. முகவரி ஒன்றாகவே தெரிந்தால்… அப்புறம் கதை முடிந்தது. கந்தல் தான். புகை மண்டலம் கிளப்ப நண்பர்களுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும்.
மாட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்து அனானிமைசர் உதவிகளை நாடாமல் உத்தமமாய் ஒரு வழியைக் கடைப்பிடிக்கலாம். மாட்டிக் கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழி, தவறேதும் செய்யாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு வாளாவிருப்பது ஒன்றே!
* * * *
நல்ல பதிவு.
டிஸ்கியாக இந்தப் பதிவுக்கும் சல்மா அயூப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி இருக்கலாம்!
தெய்வமே, உங்களைப் போல வருமா? தமிழ் இலக்கியத் தொண்டு செய்ய உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதித் தள்ள வேண்டும். வாழ்க உமது சேவை
கெட்ட வார்த்தை.. கெட்ட வார்த்தை.. கெட்ட வார்த்தை..
நல்ல பதிவு. சில புது தமிழ்ச்சொற்களை எழுதும் போது
அடைப்புக்குறிக்குள் அதன் ஆங்கிலச் சொல்லையும் இணைத்தால் இலகுவில் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, “எட்டும எண்” போன்ற சொற்களுக்கு.
//மாட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்து அனானிமைசர் உதவிகளை நாடாமல் உத்தமமாய் ஒரு வழியைக் கடைப்பிடிக்கலாம். மாட்டிக் கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழி, தவறேதும் செய்யாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு வாளாவிருப்பது ஒன்றே!//
அமுக ஆசியாபசிபிக் கிளை, தமது கண்டனங்களை பதிவு செய்கிறது…
அடுத்தது சொந்த பேர்ல கமெண்ட் போட்டாலும் போடுவேன்…:))))))))))))
அத்தியாவசியமான பதிவு…
அய் டி கார்டை தெரிந்தே தவறவிட்டால் பொதுவில் போடாமல் ரகசியமாய் வைத்தால் இன்னார் தானென்று எப்படி தெரிந்து கொள்வது.
அதே சமயம் போன கமெண்டை நான் தான் போட்டேன் என்று பொதுவில் சொல்லாதீர்கள்.
சரியான சமயத்தில் வந்த உருப்படியான பதிவு. பாராட்டுக்கள் செல்வராஜ். இன்னும்கூடக் கொஞ்சம் விரிவாய் சொல்லியிருக்கலாமோ? பாகம்-2 என்று ஆக்கிவிட்டாலும் சரியே.
உங்களுக்காக நேயர்விருப்பத்திலே இப்பாட்டினை வழங்குகின்றவர்கள் அநாநியாயமுன்னணி
😉
இன்னும் கொஞ்சம் விரித்தே அறிவியலித்திருக்கலாம்.
//மாட்டிக் கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழி, தவறேதும் செய்யாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு வாளாவிருப்பது ஒன்றே!
//
:):) அருமை.
காசி சொல்லுவது போல பாகம் 2ம் போடலாம்.
நல்லபதிவு தல!
நன்றி
//அதே சமயம் போன கமெண்டை நான் தான் போட்டேன் என்று பொதுவில் சொல்லாதீர்கள்.//
ஏலேய் மாப்பு அடங்க மாட்டியா நீய்யு?
உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதித் தள்ள வேண்டும். வாழ்க உமது சேவை.
நல்ல.. சிறந்த கட்டுரை.. சில நாட்களுக்கு முன்னால் வந்திருந்தால் உங்களையும் கும்மியிருப்பார்கள். தப்பித்தீர்கள். பாகம்-2 எழுதலாம். எதிர்பார்க்கிறேன் ஆவலுடன்..
//தவறேதும் செய்யாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு வாளாவிருப்பது ஒன்றே!//
ரிப்பீட்டேய்!
நல்ல கட்டுரை.
இணைய நடைவரை பற்றியே தெரியாமல், அதே பொழுது, மற்றவரை மருட்டுமாப் போல, சூளுரைத்துக் கொண்டு, “விட்டேனா பார்!” என்று ஏதேதோ எழுதுகிறவர்களை எல்லாம் என்ன சொல்வது, போங்கள்? மொத்தத்தில் அறியாமை பெருகி, வழிந்து ஓடுகிறது. அவ்வளவு தான். கூடவே, ஒவ்வொருவருக்கும் ஒரு நிகழ்ப்பு (agenda) இருக்கும் அல்லவா? “மற்றவர் எல்லாம் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பவர்; தம்மைப் போன்றவர் மட்டுமே நாட்டுப் பற்றாளர்” என்ற தோற்றம் கொடுப்பது. இது போன்ற ஒற்றைப் பரிமானப் பார்வை தான், பொதுக்கைத் தனம் உண்டாவதற்குத் தொடக்கம்.
ஏதும் விவரித்துச் சொன்னால், உடனே எங்கேயோ ஒரு திருவாளர் புறப்பட்டு வந்து “பேரறிஞர் புடுங்கினாரோ?” என்று விடலைத்தனமாய்ப் பெயரில்லாமல் சுவரில் எழுதி வைப்பார். நம் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர வேண்டியது தான்.
“அது சரி, நேற்றைய நீர் பாலத்திற்கு அடியில் ஓடிவிட்டது. இன்று வருவது புதுநீர்” என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
இராம.கி.
selvaraj
A nice post. Agreed that we leave IP address everywhere, whether it is static or dynamic. In offices like govt org, many departments go through a main server and the numbers traced do not directly linked to the individual as we can use any computer from any place. ATT got into trouble for collecting information as per govt instruction o national security but consumers were protesting against it for proecting their privacy. Google collects information on the search words, sites visited. Every one collects information and some with permission sell it to marketing people. The discount card that we use in a grocery store not only gives our information but also says the items we regularly buy. I am not sure whether consumers (not bloggers I am referring to) in general knowingly give information with good faith to protect that information. if an organization gives out that information thats breahc of privacy. Thats why in USA there was such an uproar recntly on collecting information to protect individual right to privacy. Do organziations follow that is a big question? Thats why we come up with new regulations, privacy acts, HIPAA etc
At one time when I received some threats, I had requested a govt org to act upon that and they requested some information from gmail and surprisingly gmail refused details, but google could produce search pages upon a summon. funny though!! similarly a feloow woman bloggers received obscene emails, gmail refused reveal details.Market communications and marketing agency sell data at 5cents a name, without personal information. We can collect medical information from MIB(medical information bureau), what medicines we purchase on a court order or with client’s permission. When a person apply for life insurance, MIB is checked without one’s approval. There is a general conscent form that one signs gives permission to access the MIB, driving record. There are many fine lines in all these information gathering one can neither agree or disagree. I am posting this comment in no particular reference to tamil blog world or any particular refernces. organizations in general do nto reveal any information as they/it is bound by legal system. Consumers need to trust that,without which we will not be able to freely use any system.
//ஏதும் விவரித்துச் சொன்னால், உடனே எங்கேயோ ஒரு திருவாளர் புறப்பட்டு வந்து “பேரறிஞர் புடுங்கினாரோ?” என்று விடலைத்தனமாய்ப் பெயரில்லாமல் சுவரில் எழுதி வைப்பார். நம் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர வேண்டியது தான்.
“அது சரி, நேற்றைய நீர் பாலத்திற்கு அடியில் ஓடிவிட்டது. இன்று வருவது புதுநீர்” என்று எண்ணிக் கொள்ளுங்கள்.//
சரியான வார்த்தை இராமகி ஐயா…
சென்ஷி
என்னை மாதிரி இணையத்துல குப்பை கொட்ற பாமரப்பெண்ணுக்கும் புரியற மாதிரி விளக்கிட்டீங்க செல்வராஜ்!
ஷைலஜா
(மரத்தடில குப்பை கொட்டின அதே ஷைலஜாதான்):0
அவசியமான விளக்கமான பதிவு. காசி சொல்லியது போல இதை ஒரு தொடராக போடுங்களேன். IPv6, IP Spoofing, இது போல IPயுடன் தொடர்புடைய இன்னும் பல விசயங்களை அத்தகைய தொடரில் விளக்கலாமே.
இவ்வளவு வெளிப்படையாய் ஒரு inpunch 🙂 வைப்பதற்கு நேரடியாகவே சொல்லி இருக்கலாம் 😉
செல்வா, அறியாமையே ஆனந்தம் (அதாவது மற்றவர்களின் அறியாமையே நமக்கு ஆனந்தம் என்று பொருள் கொள்க) என்ற தாரக மந்திரத்தை நம்பி வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள், யாகங்கள், மறைமொழிகள், தத்துவங்கள் என்ற வரிசையில் இன்று ஐபியையும் வைத்து பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் இப்படி மண்னைப் போடுதல் நியாயமா?
Very good post.
Unfortunately, we find every loop hole in every system and misuse as much as we can.
Its in our blood, I guess.
Polies dont realize they are being watched. Some day, all filthy bloggers will pay the price, however smart they are.
-BNI
அனைவருக்கும் நன்றி.
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விழைகிறேன். இங்கு, இப்பதிவில் வெளியாகும் கருத்துக்கள்/பதிவுகள் நான் தனி ஒரு வலைப்பதிவனாக எழுதுவதே. தமிழ்மணம், டி எம் ஐ நிர்வாகத்தின் சார்பில் எழுதப்படுபவை அன்று/அல்ல.
இரண்டாவது, தனிப்பட்ட முறையில் நான் யாருடைய ஐ.பி முகவரியையும் கண்காணிப்பதில்லை. யாருடையதையும் யாரிடமும் வெளிப்படுத்தியது இல்லை.
இனி,
வாய்ஸ் ஆன் விங்ஸ் பதிவினை ஒட்டி:
திரித்தல்கள் நிறைந்த வலையுலகில் தவறான பிம்பங்கள் பரவக் கூடாதே என்ற எண்ணத்திலும், சம்பந்தப்படாதவர்கள் ஐபி பற்றிய வீண் பயம் கொள்ளக் கூடாதே என்ற எண்ணத்திலும், அதே சமயம், மறைமுகமாய் இருக்கிறோம் என்ற குறைப்புரிதலால் இரகசியமாய் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பெயரின்றி ஏசிவிட்டுச் சென்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு, அப்படிச் செய்தால் மாட்டிக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம் என்கிற செய்தியையும் சொல்ல விழைந்ததே இப்பதிவு.
இயன்றவரை கவனமாக எழுதினாலும் என்னுடைய பத்தியொன்று தவறான புரிதலைத் தந்துவிட்டதோ என்று அஞ்சுகிறேன். வருத்தப்படுகிறேன். இப்போதும் தனிப்பட என் கருத்தைத் தான் இங்கு வைக்கிறேன் (தமிழ்மணம் சார்பில் அல்ல).
ஆதாரமின்றியும் அவதூறாகவும் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தமிழ்மணம் தக்க பதில்களைச் சொல்லியிருக்கிறது. அதன் பிரைவசி பாலிசியும் அதனை அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதையும், யாருக்கும் (ஐபி உட்பட) எந்த அந்தரங்கத் தகவல்களையும் அது தரவில்லை என்று சொல்லியிருப்பதையும் நான் நம்புகிறேன். இனியும் தராது என்றே நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
அதற்கு மாறாகத் தமிழ்மணம் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துகிறது என்றால், அதனை எதிர்ப்பதிலும், அங்கிருந்து எல்லா வகையிலும் விலகிக்கொள்வதிலும் நானே முதல் ஆளாக இருப்பேன்.
தமிழ்மணமோ, தேன்கூடோ, வேறெந்தத் திரட்டியுமோ அன்றி, சிறு நிரல்துண்டுகளை வைத்து யார் வேண்டுமானாலும் ஐபி முகவரிகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதனால், வீணாகப் பொதுப்பதிவர்களின் குழப்பத்தை அதிகரிக்க ஆதாரமின்றித் திரட்டிகள் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதும் நான் சொல்ல விழைந்தது.
மாட்டிக் கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழி,………………………….!?
அதை நான் வேறு தனியாக எடுத்து சொல்ல வேண்டுமா?
மேல்விபரங்களுக்கு என்னுடைய “சிறந்த வலைப்பதிவர் ஆவது” குறித்து எழுதிய பதிவை படியுங்கள். மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழிமுறைகள் அங்கு விரிவாக அலசப்பட்டுள்ளன.
🙂
அன்புடன்
இறை நேசன்
//தமிழ்மணமோ, தேன்கூடோ, வேறெந்தத் திரட்டியுமோ அன்றி, சிறு நிரல்துண்டுகளை வைத்து யார் வேண்டுமானாலும் ஐபி முகவரிகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதனால்,//
பிறகு ஏன் சிலர் தமிழ்மணத்தை மட்டும் ஒரு குறிப்பிட்ட சாரர் “நாகரீகமான” வார்த்தைகளால் அர்ச்சித்து, குறிவைக்கிறார்கள் என்பது என்னைக் குடையும் ஒரு கேள்வி.
தெளிவுதரும் பதிவுக்கு நன்றி.
I have seen that you can explain any concept well and also make it interesting…You will be a good teacher.
நல்ல உபயோகமான பதிவு. ஒரு சின்ன கேள்வி. பின்னூட்டம் எழுதி அவர்கள் அனுப்பு என்று தட்டும் போதே அனானியோ/ பெயருள்ளதோ அவர்கள் ஐ.பி. எண்ணோடு தானாக சேர்ந்து வருவதுபோல் நமது வலைப்பூவில் அமைக்க முடியுமா?
ஜெசிலா, நன்றி. ப்ளாக்கரில் அவ்வசதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் வோர்ட்பிரஸ் நிரலியில் உண்டு.
பெங்களூர் அ.மு.க அல்சூர் கிளைக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் உள்ளது…
அதே சமயம் கடைசி பத்தியில் வைத்த பஞ்சு டயலாக் சூப்பர்…
எனக்கு ஒரு பஞ்சு டயலாக் இருந்தா குடுங்களேன்…:)))
ஐயா,
‘ ஐபீ ‘ குறித்த தகவல்கள் நன்றாக உள்ளன. ஒரே அடியாகத் தமிழிலேயே இருந்தாலும் முழுமையாகப் புரிவதில்லை; ஆங்கிலமும் தெளிவைத் தருவதில்லை. ஏனெனில்
நான் இணையத்திற்கு முற்றிலும் புதிது.
Teen age ஐக் குறிக்கப் பதின்ம வயது என்றது என்றது ஒரு புதிய சொல்லாட்சி.
இணையத்துக்குப் புதியவர்கள் பயன்பெறும் வகையில் என்ன என்ன தளங்கள் உள்ளன என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
தேவராஜன்