காரணமறியாச் சில மகிழ்தருணங்கள்
Sep 20th, 2006 by இரா. செல்வராசு
“ஏனோ எந்தக் காரணமும் இன்றி நான் இன்று மகிழ்வாக உணர்கிறேன் அப்பா”, என்றாள் நந்திதா, ஆங்கிலத்தில். (Somehow, for no reason, I feel very happy today appaa!). சின்னவளின் இந்தச் சந்தோஷத்திற்கு என்ன காரணம் என்று எனக்கும் புரியவில்லை. பெரியவள் நிவேதிதா இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் தன்பாட்டுக்குப் பல்துலக்கிக் கொண்டிருந்தாள். ஆறு மணிக்குக் கடிகாரச் சத்தம் வைத்துத் தாமாக எழுந்து ஆர்வத்துடன் அவர்கள் நாளைத் தொடங்குவதே ஒரு நிறைவான விஷயம்.
பின்னிரவின் இணைய உலா முடிந்து சற்று நேரங்கழித்தே உறங்கச் செல்லும் நான் பெரும்பாலும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் அது 🙂 !
“நான் நந்துவா, தித்துவா, சொல்லுங்க பார்ப்போம்?”
கண் விழிக்காது படுக்கையில் இருந்த என்னிடம் விளையாடிக் கொண்டிருந்தாள் நந்திதா. பெரியவளுக்குத் தன் பெயரை ‘நிவேதிதா’ என்று சொல்லிக் கொடுத்த ஒன்று ஒன்றரை வயதில் அவள் ‘நிவே’வை விட்டுவிட்டு ‘திதா’ என்று மட்டும் சொல்ல முடிந்ததை வைத்து, அவளுடைய வீட்டுப் பெயர் செல்லமாய் ‘தித்து’ என்றாகி விட்டது. அது புரிந்தும் புரியாமலும் ‘நித்து’, ‘நீத்தா’ என்றும் அழைப்பவர்கள் உண்டு. ‘நிவி’ என்றும் சிலர் அழைக்க, இந்த வம்பே வேண்டாம் என்று பள்ளியில் ‘நிலா’ என்று இன்னுமொரு பட்டப்பெயர் சூட்டிக் கொண்ட இவளுக்குப் பின்னாளில் பெயரின் பின்னணிக் கதையென்று சொல்ல நிறைய இருக்கும்.
‘நிலா’ என்பது பிறக்கும் முன் இவளுக்கு வைக்க நாங்கள் பரிசீலித்திருந்த ஒரு பெயர் தான். முதற்பெண் பெயர் வைக்கும் நிகழ்வுகளை மட்டும் வைத்துத் தனியாக ஒரு கதை எழுதலாம். என்ன பெயர் இருந்தால் என்ன? இவள் இவளாகத் தான் இருந்திருப்பாள். பெயரில் என்ன அதே ரோஜா ஷேக்ஸ்பியர்.
தம் புல்வெளியில் களைபிடுங்கிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மேரி-ஆன் இடம் ஒரு நாள் ‘இனியும் பொறுப்பதில்லை’ என்றாற்போல் வேகமாகச் சென்ற நந்திதா, “என் அக்கா பெயர் நீத்தா இல்லை, அவளை நிலா என்று கூப்பிடுங்கள்”, என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வந்து விட்டாள்.
“நீ நந்து… இல்லையில்லை… ம்ம்… தித்து… சரியா?”
கண்விழிக்காமல் பதில் சொல்லியபடி நானும் விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். உறக்கம் கலைந்திருந்தாலும் சிலசமயம் நான் இன்னும் உறங்குவதாகப் பாவனை செய்வதுண்டு. குறிப்பாகச் சின்னவளிடம்! வீட்டிலேயே சிறியவளாய் இருப்பதாலா என்னவோ, எதிலும் தான் கடைசி என்றால் இவளுக்குப் பிடிப்பதில்லை. கடைசி ஆளாகத் தான் எழுந்தாளென்றால் சுமார் இரண்டு மணி நேரமாவது விசும்பிக் கொண்டிருப்பாள் என்பது உறுதி. இவளது இன்றைய மகிழ்விற்கு அவள் முதலில் எழுந்து கொண்டது கூடக் காரணமாய் இருக்கலாம். தெரியவில்லை. எழுந்து கொள்ளும் நேரம் எதுவானாலும் நந்துவிற்கு என்னைக் கட்டிக் கொண்டு ஓரிரு நிமிடமாவது இருக்க வேண்டும்.
“நன்றாகக் கதகதப்பாய் இருக்கிறது அப்பா” என்பாள்.
அதில் தெரியும் அவளின் அன்பு பல நேரங்களில் எனக்கு மகிழ்வளித்திருக்கிறது. ‘இது என் புள்ளை, அது உன் புள்ளை’ என்று குடும்பத்துக்குள் சில நேரம் குழுக்கள் பிரித்து விளையாடிக் கொள்வதும் உண்டு. சில சமயம் குழுக்களின் ஆட்கள் மாறி இருக்கும். சில சமயம் மூன்று பெண்களுமாய் ஒன்று சேர்ந்து கொண்டு தனியே என்னைத் தவிக்க விட்டுவிடுவதும் உண்டு. அதிலும் ஒரு மகிழ்ச்சி உண்டு தான்.
காரணமேயில்லாத மகிழ்வுகளும், காரணமேயில்லாத வருத்தங்களும் சில சமயம் ஏற்படுவது இயற்கை தான் என்றாலும் இவளது இன்றைய மகிழ்விற்கு எனது/எங்களது செயல்கள் ஏதேனும் காரணமாய் இருக்குமோ என்று என் பொதிவுணர் மனம் விழைந்து தேடத் தொடங்கியது. அண்மைய காலத்தில் (“ஒரு ரெண்டு நாள்னு போடுங்க” என்று என் மனைவி குரலில் அசரீரி கேட்கலாம் 🙂 ) குழந்தைகளுடனான என் நேரம் அதிகரித்திருக்கிறது.
மாலையில் அவர்கள் பள்ளி முடிந்து வரும்போது வீட்டில் இருக்க முடிகிற நாட்களில் ‘அப்பா’ என்று சத்தமிட்டபடி ஓடி வருவது நன்றாக இருக்கிறது. ‘இன்னிக்கு என்னல்லாம் செஞ்சோம் பாருங்க’ என்று போட்டி போட்டுக் கொண்டு காட்டுகிற வண்ணந்தீட்டிய காகிதங்களைப் பார்த்து “வாவ்… அருமை” என்று சொல்ல வேண்டியிருந்தாலும் அவர்களின் வளர்ச்சியில் பங்கு கொள்வது நன்றாக இருக்கிறது. அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் ‘அருமை அருமை’ எனப் பாராட்டுரை வழங்குவது சில சமயங்களில் சலிப்பாய் இருந்தாலும், வயதாகிவிட்ட போதும் நம் வேலையைப் பிறர் பாராட்டிக் கூறும் கருத்துக் கேட்கும்போது நாமே ஊக்கமடையும்போது, அந்த ஊக்க உணர்வு இவர்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்று புரிந்து போகிறது.
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சாய் இவர்களின் கிறுக்கலோவியங்களை உண்மையிலேயே விட மனசில்லாமல் சிலவற்றைச் சேர்த்து வருகிறேன். தாங்களே எறிந்துவிடச் சம்மதித்தாலும் விடாமல் எடுத்துச் சேர்த்துக் கொள்கிற என்னைப் பார்த்து www dot packrat dot com என்று கிண்டல் வேறு செய்கிறார்கள்!
காலையில் ஏழரை மணிக்குப் பள்ளிப் பேருந்து நிறுத்தம் செல்லப் போட்டி போட்டுக் கொண்டு என்னை விட்டுவிட்டுச் சென்றுவிடும் விளையாட்டு இவர்களிடம் அதிகம். நிறுத்தம் அடுத்த வீட்டின் முன்புறம் தான் என்பதால் நான் உடன் செல்ல வேண்டுமென்பது கூட இல்லை. சில நாட்கள் இவ்வாறு சோம்பிப் பெரியவள் மட்டும் சென்று கொண்டிருந்த சென்ற வருடம் பல நாட்கள் உடன்செல்லத் தவறி இருக்கிறேன். நான் செல்லாதது பற்றிக் கேட்டபோது, “I don’t care” என்று விட்டேத்தியாகச் சொன்னாலும், உள்ளுக்குள்ளே அவள் ஏமாற்றம் அடைகிறாள் என்பார் மனைவி. தன்னைப் பெரிய பெண்ணாக எண்ணிக் கொண்டு பலவற்றை உள்ளுக்குள்ளேயே இவள் வைத்துக் கொள்வதை இப்போது அங்கங்கே உணர முடிகிறது.
மனதுக்குள் அதிகம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று தெளிவித்துப் பெண்களுடனான எங்களது தொடர்பை பலப்படுத்திக் கொள்ளச் சில சமயம் முயல்வதுண்டு. ஆனால், கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் இல்லாமல் போகும். அல்லது விளையாட்டான பதில்கள் வந்து விழும். இப்போதே இடைவெளியா என்று இது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது. அதற்கு மேலும் வலுக்கட்டாயமாக எதையும் செய்ய இயலாது என்று விட்டு விட்டாலும், இதற்கு மாற்று என்ன என்று மனம் யோசிப்பதுண்டு.
கேள்விகட்குப் பதில்கள் பெறுவது மட்டுமல்ல, சில நேரங்களில் வாக்குவாதங்களும், எதிர்ப்பும், சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பாறையாய் நிற்றலுமாய் இருப்பது சரியான திசைப் பயணமாகத் தெரியவில்லை. குழந்தை வளர்ப்பு என்பது சடத்துவமான முறைகளைப் பின்பற்றுவதல்ல. அவர்தம் வளர்ச்சியைப் பொறுத்தும், சூழலைப் பொறுத்தும், கால ஓட்டத்தினை ஒத்தும், அதன் முறைகளும் மாறுபட வேண்டும்.
‘வீட்டுச் சட்டங்களை மட்டும் சொல்லுங்கள். அதன் பின்னணியை, காரணங்களை விளக்க வேண்டியதில்லை’ என்னும் முறை ஆரம்ப வயதுகளில் சரிவரலாம். ஆனால், வளரும் பருவத்தில் ஒரு கட்டத்தில், ‘வீட்டுச் சட்டங்களுக்கான காரணங்களையும் அவர்களுக்குச் சொல்லுதல் அவசியம்’ என்று அண்மையில் மீண்டும் படித்தது நினைவுக்கு வருகிறது.
எந்த வயதிலும் குழந்தைகளும் முழு மனிதர்கள் என்பதும் அவர்களுக்கும் ‘ஈகோ’ முதலியன உண்டு என்பதும் அலட்சியம் செய்யப்படாமல் இருக்க வேண்டும். அவர்களுடைய உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுக்கப் படவேண்டும். ‘நான் வெச்சது தான் சட்டம். அதன்படி தான் நீ நடக்க வேண்டும்’ என்னும் அடக்குமுறைக்கு அவர்களை ஆளாக்கக் கூடாது. அதோடு ‘தொட்டதுக்கெல்லாம் சட்டம்’ என்றில்லாமல், முக்கியமானவற்றிற்கு மட்டும் என்று கொண்டு ஒரு எல்லைக்குள் சுதந்திரமாகவும் விட்டுவிட வேண்டும்.
வெளியூர்ப் பயணம் சென்றிருந்த ஒரு நாள் அருகில் படுத்திருந்த போது, ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்த பெரியவள், அண்மைய வாழ்வு மாற்றம் ஒன்று பற்றிய கேள்வியைக் கேட்ட போது தான், அது பற்றிப் பெரிதாக ஒன்றும் கரிசனம் காட்டியதில்லை என்றாலும் அதன் தாக்கங்களை அவளும் உணர்கிறாள், அது பற்றி எண்ணிப் பார்க்கிறாள் என்று உணர முடிந்தது. எதுவும் சொல்லாவிட்டாலும் நிலவும் சூழலை வைத்தே குழந்தைகளால் பலவற்றையும் உணர முடியும் என்பது உண்மை தான்.
அப்படித் தான் அன்றொரு நாள் வெளியே ஒரு சிறுநடைக்குச் செல்லும்போதும் பெரிய மனுஷியாகி எனக்குச் சில ஆலோசனைகள் கூறிக் கொண்டிருந்தாள். அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் பார்த்து, “இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?” என்று ஆச்சரியப்பட்டேன்.
“நீங்கள் எங்களிடம் சொல்லவில்லை என்றாலும், பெரியவர்கள் பேசும்போதோ, தொலைபேசியில் யாருடனாவது பேசும்போதோ நான் நல்லா ஒட்டுக் கேட்டுட்டு இருப்பேன்”
“…”
“அந்த ரூம்ல இல்லாட்டியும், வேற எதாச்சும் விளையாடிட்டு இருந்தாலும் நீங்க பேசுறத காது குடுத்துக் கேட்டுட்டிருப்பேன்”
“நாங்க பேசுற எல்லாமே கேட்டுட்டு இருப்பியா?”
“இல்லை அப்பா. சில சமயம் எதாவது போரடிக்கிற விஷயமா (like ammaa talking about recipe…) இருந்தாக் கேட்க மாட்டேன்” !!
எங்களின் கேள்விகளுக்குக் கேட்கிற நேரத்தில் அவள் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவளுக்கு எப்போது இயல்பாய்ப் பேசத் தோன்றுகிறது என்று கவனித்தல் நலம் என்று தோன்றியது. அப்படிப் பொறுமையாக அவளால் பேச முடிகிற ஒரு நேரம் இரவு உறங்கச் செல்லும் முன் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
முன்பெல்லாம் போல் படுக்கை நேரத்துக் கதை நேரம் போய், எட்டு மணிக்கே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும் என்னும் உறுதியான சட்டம் காரணமாய் அதிகம் பேச முடியாமல் போன நாட்கள் உண்டு. “நீங்களே போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்” என்று விரட்டி விடுவதுண்டு என்றாலும், அண்மையில் மீண்டும் அவர்களுடன் சென்று உறங்கும் முன் சில பொழுதுகள் கழித்து விட்டு வரவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். ஒரு ஐந்து பத்துப் பதினைந்து நிமிடங்கள் தாமதமானாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொள்கிறேன்.
இரண்டு நாட்கள் முன்பு உறங்க வைக்கச் சென்றபோது கண்ணில் இன்னொரு பொக்கிஷம் பட்டது. ஒரே அறையில் மேலும் கீழுமாய்க் கட்டிலில் இருப்பவர்கள், தம்மிடையே ஒரு தொடர்புக்கு எனவொரு குறிப்பேட்டைப் பயன்படுத்துவதைக் கண்டேன். “டியர் நந்து” என்று தொடங்கி ஒரு கடிதத்தை இவள் எழுதி அவளுடைய ‘அஞ்சல் பெட்டியில்’ வைக்க, அதைப் படித்தபின் சின்னவள் அதற்குப் பதிலாக என்னவோ எழுதி வைக்கிறாள். சில நாட்களாய் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் சுவாரசியம் மிகுந்து, ‘அப்படி என்னதான் எழுதுகிறீர்கள்’ என்று நான் கேட்கப் போக, “நோ நோ அப்பா… அது எங்களுக்குள்ளான ரகசியம்” என்று மறைத்துக் கொண்டார்கள்.
“சரி இரு… இது பத்தி நான் என் வலைப்பதிவுல எழுதறேன்”
“அத நாங்க உங்களுக்குக் காட்ட மாட்டோம்னு சொல்லிட்டோம்னும் எழுதுங்க”
“…”
“அப்படியே, வேணும்னா நான் திருட்டுத் தனமா அவங்க இல்லாதப்போ தான் படிக்க முடியுமாட்ட இருக்குன்னும் எழுதுங்க!”
நந்திதாவுக்குக் கொஞ்சம் இளகிய மனசு. அல்லது, இன்னும் அப்படியாக ரகசியங்களை வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. அதனால் அவள் மட்டும் படித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் அனுமதி வாங்கிப் பார்த்து விட்டேன். பதில் எழுத ஆங்கில எழுத்துக்கூட்டவும் உதவினேன்.
“எனக்குச் சென்ற வாரத்துக் கனெக்டிக்கட் பயணம் மிகவும் பிடித்திருந்தது. உனக்கு?” என்று ஒரு கேள்வி. “உனக்கொரு ஆச்சரியம் வைத்திருக்கிறேன்”, என்று சில விவரங்கள். “நம் பிறந்தநாள் பற்றித் திட்டமிடவேண்டும்” என்று அக்டோபருக்கான யோசனைகள்.
இவற்றிலென்ன ரகசியமோ தெரியவில்லை. இருந்தும் தன் முழுக்கட்டில் ஒரு விஷயம் இருக்கிறது என்னும் இறுமாப்புத் தேவையாய் இருக்கலாம். நம் எல்லோருக்குமே நமது கட்டில் சில விஷயங்கள் இருத்தல் சந்தோஷமாகத் தானே இருக்கிறது?
நல்ல நண்பர்களாய்ச் சகோதரிகள் இருப்பதும் ஒரு நெகிழ்வனுபவம். (அடித்துக் கொண்டு சண்டை போடுகிற நேரத்தை இப்போதைக்கு மறந்து விடலாம் 🙂 ). ஏனோ காரணமிருந்தோ இல்லாமலோ சில மகிழ்தருணங்கள் நிறைந்திருக்குமொரு வாழ்க்கை முறை அமைந்திருப்பதில் ஒரு நிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.
பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சேர்த்துக் கொள்வதற்குச் சிறு நினைவுகள் போதும்.
சிலசமயம் ஏதாவது தீனி ஏற்பாடு செய்யும்படியோ தேநீருக்கு உதவும்படியோ நான் கேட்கும்போது ஆர்வம்/விருப்பம் இருப்பின் உதவி செய்பவர்களைப் பார்த்து, “வாவ்… இன்னிக்கு ரொம்ப நல்லாருக்கே! என்னடா பண்ணீங்க?” என்றால்,
“ரெண்டு ஸ்பூன் அதிக அன்பு (extra love) போட்டுக் கலந்தோமப்பா” என்பார்கள்.
அவ்வளவு தான் தேவை.
இரண்டு ஸ்பூன் அன்பு.
* * * *
கீழே உள்ளது போல் இருந்திருக்க வேண்டும். என் முதற்பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள். நன்றி.
பதிவு படித்ததும் எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கு செல்வராஜ். 🙂 வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.
அம்மாவும் நானும் (இருவருடைய நேரங்களும் சந்திக்க வாய்ப்புத் தருவது இரவிலென்றபடியால்) பாவித்த குறிப்பேடுகள்தான் ஞாபகம் வருது. அவற்றைப் பத்திரமாய் வைத்திருந்தால், இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் நல்லதொரு மீள் வாசிப்பு அனுபவம் நிச்சயம். 😀
திரு.செல்வராஜா அவர்களே,ஒரு அருமையான பதிவைத் தந்திருக்கிறீர்கள்.சிறார்களின் அகத்தைச் சிறார்கள்போலவே மிக அருமையாக வடித்துள்ளீர்கள்.இத்தகைய குறிப்புகளை நாம் தமிழில் காணுவது மிக அருமை.ஆங்கிலத்தில் ,ஜேர்மனிய மொழியில் இத்தகைய பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான சம்பாஷணைகள் அடங்கிய குறிப்புகள் மிகச் சிறந்த இலக்கியங்களை நான் படித்திருக்கிறேன்.இதே அநுபவத்தை,அழகை,அன்பை,அரவணைப்பை உங்களின் இந்தப் பதிவினூடாகப் பார்க்கிறேன்!தமிழ் வாழ்வுக்குள் பெற்றோர்கள் பிள்ளைகளோடு இவ்வளவு அன்னியோன்யமாகப் பழகி,அவர்களை அவர்களது சாயலோடு வெளிப்படுத்துவது மிகக் குறைவே.உங்கள் பதிவெங்கணும் நெகிழ்வும்,பரிவினதும் நெருங்கியவொரு உணர்வு என்னைத் துரத்தியபடி இருக்கிறது.நிச்சியம் இத்தகைய பதிவுகளை அச்சுப் பதிவாக்கணும்.
அப்பாவை உரித்து வைத்திருக்கும் மழலைகள்.
நீடூழீ நலமுடன் வாழ்க செல்வங்களே!
“காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சாய்…”செல்வாராசு அவர்களே அமரர் கல்கி எழுதிய அலையோசை வாசித்திருப்பீர்கள்.அந்த நாவலுக்கான முன்னுரையின் ஆறாவது பக்கத்தை ஒருக்கால் வாசியுங்களேன்.
இப்படியான பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி!
நனறாக உள்ளது
எனக்கு அவர்கள் எப்போதுமே, திதா சகோதரிகள்தான்….Thitha Sisters….பார்க்க வேண்டும், பழக வேண்டும், அவர்களது தந்தைக்கு நண்பனாயிருத்தல் போல அவர்களுக்கும் நண்பனாயிருக்க வேண்டுமென இருக்கிறது. பார்க்கலாம், காலம் நம்மை எங்கே சந்திக்க வைக்கிறது, எங்கே வைக்கிறது என….
எளிய, ஆனால் அட்டகாசமான வாசிப்பனுபவம், வாழ்வனுபவமாய் உணரப்பட்டது என்றால் மிகையில்லை. முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞ்சருமான, வா.வே.குழந்தைசாமி சொல்லுவார், மனம் நினைப்பதில் பாதி கூட சொல்ல மொழிக்கு வலிமையில்லை, அதையும் எழுதினோமென்றால், பத்தில் ஒரு பங்கு கூட வெளிப்படுத்துதல் இயலாது. அந்த சதவிகிதத்தை அதிகப்படுத்துபவர் சிறந்த எழுத்தாளராகிறார்..
கதை கூட எழுதிவிடலாம். மனம் நினைப்பதை அழகாக எழுதுதல், அதுவும், படிப்போரையும் அந்த அனுபவம் ஆட்கொள்ளும்படி எழுதுதல், … வாழ்க, வளர்க..வளர்க்க…
அருமை.
அருமையான பதிவு செல்வராஜ்.
//அடித்துக் கொண்டு சண்டை போடுகிற நேரத்தை இப்போதைக்கு மறந்து விடலாம் // இதுவும் நட்பில் ஒரு பகுதிதானே 🙂
மிகவும் அருமையான பதிவு. நல்ல நேர்த்தியாகவும் அழகாகவும் சொல்லியுள்ளீர்கள்.
செல்வா,
சிறீரங்கன் சொன்னதை வழிமொழிகிறேன்.
இருந்தாலும் பொறாமையாகத் தான் இருக்கிறது. உங்களை மட்டும் “ஆட்டைக்கு” சேர்த்துக்கொள்வார்கள். நான் நீங்கள் எழுதுவதை வேடிக்கை பார்க்கமட்டும்… 🙂
குழந்தைகள் இன்னும் கண்ணிலேயே நிற்கிறார்கள். அவர்களுக்கு என் நிறைந்த அன்பு.
ஷ்ரேயா, நன்றி. இதுபோன்ற இனிமைகள் என்றும் நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன். மீள்வாசிப்புக்குக் கொடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் பின்னூட்டம் பற்றிச் சொன்னேன். “ஆமாம் அப்பா. சின்ன வயதில் Nila’s Feelings என்று நான் எழுதி வைத்ததை இப்போது படிக்கப் பிடித்திருக்கிறது” என்கிறாள்!
ஸ்ரீரங்கன், உங்கள் அன்பிற்கு நன்றி. அலையோசை படித்ததில்லை. ஆனால் வைத்திருக்கிறேன். ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள். சென்று பார்க்கிறேன்.
கிருஷ், dhitha sisters என்று இன்னும் ஒரு சிலரும் கூடக் கூறுவார்கள். சந்திப்போம் ஒரு நாள்.
கண்ணன், நன்றி. அருகே விளையாட இன்னும் சில மாமா (அத்தை!) எல்லோரும் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். என்ன செய்ய?
என்னார், பாலா, அருள், வெற்றி உங்களுடைய அன்பான கருத்துக்களுக்கும் நன்றி.
அழகான பதிவு. குழந்தைகளின் உலகம், நம் துயர உலகிலிருந்து சடுதியில் நம்மை விடுவிக்கும் வலிமை பெற்றது. ஞானிகள் குழந்தைகள் போன்ற உணர்வை உடையவர்கள் என்றும் சொல்வார்கள்.
குழந்தைகளிடம் விளையாடும் போது உண்டாகும் மிக மென்மையான உணர்வுகளை அருமையாகச் சித்தரிக்கிறீர்கள்.
நன்றி – சொ. சங்கரபாண்டி