இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கூகுள் – சில குறைகளும் எச்சரிக்கைகளும்

March 8th, 2006 · 16 Comments

Googleஒரு அளவிற்கு மேல் பெரிதாக வளருகிற, நிறுவனப்படுகிற அமைப்புக்களின் மேல் ஐயங்களும் அதிருப்திகளும் ஏற்படுவது இயற்கை என்பதற்கு மைக்ரோசாஃப்ட் ஒரு உதாரணம் என்றால் அண்மைய மாறுதல்கள் கூகுள் நிறுவனத்தையும் அந்தப் பாதையில் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்று கொள்ளலாம். அதன் விளைவு தான் பரவலாய் ஆங்காங்கே எழுந்து கொண்டிருக்கும் அரவங்கள். காரணங்கள் இல்லாமலும் இல்லை.

மக்களாட்சிச் சீருக்குக் குந்தகம் வரும் வகையில் நடந்து கொள்ளும் அமெரிக்க அரசின் வேண்டுகோளை எதிர்த்துப் பயனர் தகவல்களைத் தர மறுத்து வீரநிலை எடுத்து நின்ற அதே கூகுள் நிறுவனம் தான், வணிகக் காரணங்களுக்காகச் சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்குப் பணிந்து செல்கிறது. ஒரு வகையில் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், இது போன்றவை கூகுளையும் சாதாரண முதலாளித்துவ நிறுவனமாகத் தான் காட்டுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பெரு அரசியல் விவகாரங்களை ஒருபக்கம் ஒதுக்கி விடலாம்.

ஒரு புதிய தரவுக்காப்புச் சிக்கல் ஒன்று உருவாகியிருக்கிறது. அண்மையில் கூகுள் மேசைத் தேடல் செயலியின் மூன்றாவது பதிப்பு வெளி வந்திருக்கிறது. அதில் பல கணினிகளின் கோப்புக்களைத் தேடும் வசதியை ஏற்றியிருக்கிறது கூகுள். உதாரணமாய் அலுவலகத்தில் இருந்து கொண்டு வீட்டுக் கணினியின் கோப்புக்களைத் தேடுதல் போன்ற வசதி. இந்த வசதி சில சமயங்களில் பெரிதும் உதவியாய்த் தான் இருக்கும் என்றாலும், இதனை அமைக்க, கூகுள் உங்கள் கணினியின் கோப்புக்களைத் தனது வழங்கிகளின் சேர்த்து வைக்க வேண்டும். ஆகா… உங்களின் கட்டில் இல்லாத ஒரு இடத்தில் உங்கள் கோப்புக்கள் சேகரித்து வைக்கப் படுவது ஒரு பெரிய பாதுகாவல் இக்கு/சிக்கல் அல்லவா? உங்களின் கோப்புக்களும் அதில் இருக்கும் அந்தரங்கங்கள் ரகசியங்கள் இவையெல்லாம் எப்படி எப்போது எவர் கையில் மாட்டும் என்கிற ஐயம் எப்போதும் இருக்குமே. இதனால் சில நிறுவனங்கள் தாமாகவே இந்தச் செயலியின் புதுப்பதிப்பைப் பாவிப்பதைத் தடை செய்திருக்கின்றனர்.

விளம்பரங்களை விதப்பாக்கிக் கொடுக்க, ஏற்கனவே கூகுள்-அஞ்சலில் தனிப்பட்ட மடல்களும் கூகுளால் கண்காணிக்கப் படுகின்றன. என்றாலும் அவை பெரும்பாலும் கணினிகளால் வருடப் படுகின்றனவேயன்றி, மனிதர்களால் உணரப்படுவதில்லை என்பதால் ஒரு நெளிவோடு அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது மொத்தக் கோப்புக்களும் நகலெடுத்துத் தன் வழங்கிகளில் கூகுள் சேர்க்கிறது என்றால் ‘Don’t be evil’ என்கிற அதன் குறிக்கோளைப் பார்க்கும் கண் சற்று சுருங்குவது இயற்கையே.

கூகுள் மேசைத் தேடலை ஏற்கனவே பயன்படுத்துபவராய் இருந்தால், ஒரு சிறு குறைபாட்டறிவிப்பும் எச்சரிக்கையும். இந்தச் செயலியை நிறுவும்போது கோப்புக்களை அட்டவணைப்படுத்தும் கூகுள், அதன் பிறகு கோப்பின் இடத்தை மாற்றினால், அதனைச் சேர்த்துக் கொள்வதில்லை. புதிய கோப்புக்களை அட்டவணையில் சேர்த்துக் கொண்டாலும், ஏற்கனவே இருக்கும் கோப்பின் பெயர்/இடம் மாறும்போது சேர்த்துக் கொள்வதில்லை. இதனால் கோப்பிடங்களைச் சரிசெய்து மாற்றி அமைக்க எண்ணினீர்களானால் ஒரு பாதிப்பு இருக்கும் என்பதை (கூகுள் மேசைத்தேடலைப் பொருத்தவரை) உணர்ந்து கொள்ளுங்கள். இதைத் தவிர்க்க வழியில்லையா? கட்டாயப் படுத்தி அட்டவணையைப் புதுப்பிக்க முடியாதா? என்றால் அதற்கு இருக்கும் ஒரு வழி, ஒரே வழி, மீண்டும் கூகுள் மேசைத்தேடல் செயலியை நீக்கி நிறுவிக் கொள்வது தானாம்! என்ன ஒரு சுற்று வழி? மைக்ரோசாஃப்ட் தேடலில் இந்த அடிப்படை வசதி இருக்கிறது என்பதைக் கவனிக்க.

கூகுள் அஞ்சல் பற்றிய எனது தனிப்பட்ட ஒரு குறையையும் சேர்த்துக் கொள்கிறேன். டிராஃப்ட் எனப்படும் முன்வடிவங்களை எழுதும்போதே தானாகச் சேமித்து வைத்துக் கொள்ளும் உயர் நுட்பங்கள் எல்லாம் கொண்டிருக்கும் கூகுள், அந்த டிராஃப்டை நீங்கள் தவறுதலாக எறிந்து விட்டீர்களானால் மீட்டெடுக்க ஒரு வழியும் தருவதில்லை. அந்த அஞ்சலை உங்கள் முகவரிக்கே சுயமாய் அனுப்பி இருந்தால் அது உட்பெட்டியில் இருக்கும். அதனை நீக்கினால் ‘அழிக்கப்பட்டவை’யில் இருக்கும். மீட்டெடுத்துக் கொள்ளலாம். ஆனால், யாருக்கும் அனுப்பாமல் டிராஃப்ட் பெட்டியில் இருந்து நீக்கி விட்டீர்களானால் போயே போச்! ஓ கயா!

கூகுள் அஞ்சல் பெட்டியில் சேர்த்து வைத்துக் கொண்டால் இணையத் தொடர்பிருக்கும் எந்தக் கணினியில் இருந்தும் பதிவை எடுவித்துக் (edit) கொள்ளலாமே என்று எண்ணி நான் ஒரு நீண்ட பதிவை அடித்து வைத்து ஒரு நொடி நேரத் தவறுதலில் இழந்து விட்டேன். கூகுள் உதவிக் குழுவிற்கு ஒரு மடல் அனுப்பினால் அவர்களின் கிடங்குகளில் இருந்தும் வழங்கிகளில் இருந்தும் எடுத்துத் தருவார்கள் என்ற நம்பிக்கை எல்லாம் அனாவசியமாய்க் கொள்ள வேண்டாம். பல்லாயிரக்கணக்கான பயனர்களின் நுட்பக் கோளாறுகளுக்குக் கைகொடுத்து உதவும் நண்பன் அல்ல கூகுள். இது ஒரு பெரு நிறுவனம்.

மீண்டும் மைக்ரோசாஃப்டின் ஹாட்மெயிலில் சோதனை செய்து பார்த்தேன். அழிக்கப் படும் டிராஃப்ட் முன்மடல்களும் ‘அழிந்தவை’ பெட்டியில் இருக்கின்றன. மீட்டுக் கொள்ள முடிகிறது.

நானாவது பரவாயில்லை. ஜெர்மனியில் ஒரு பாப் தனது மொத்த அஞ்சல் பெட்டியையும் அதில் இருந்த மடல்களையும் இழந்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு நாள் உள்ளே நுழையவே முடியவில்லை என்று முதலில் அலட்டாமல் இருந்தவர் பல மணி நேரங்களுக்குப் பிறகே விபரீதத்தை உணர்ந்திருக்கிறார். அவரது கணக்கே அழிந்து போயிருக்கிறது. யாராவது கொந்தி விட்டார்களோ என்ற சந்தேகமும் இருந்தாலும், போன மச்சான் போனவர் தான். அதில் தான் வைத்திருந்த முக்கியமான தரவுகளை எல்லாம் இழந்து விட்ட சோகத்தில் இருக்கிறார். கூகுள் தான் எல்லாவற்றையும் கிடங்கில் சேர்த்து வைத்திருக்கக் கூடுமே என்றாலும், வாங்க மச்சான் என்று எடுத்துக் கொடுக்க யார் இருக்கிறார்கள்?

இதில் இருந்து அறிய வரும் பாடம் என்னவென்றால், கூகுள் அஞ்சலின் இரண்டிற்கும் மேற்பட்ட GB இடத்தில் சேர்த்து வைத்திருக்கிற தரவுகள் கோப்புக்கள் இவற்றுக்கும் தனியொரு பாதுகாப்பான சேமிப்புக் கிடங்கு வைத்துக் கொள்வது அவசியம். நல்லவேளையாய் கூகுள் அஞ்சல் சேவை POP3 இணைப்புக் கொடுக்கிறது. முதல் வேலையாய் அதனை ஏதுவாக்கி ஒரு POP3 வாங்கி (client) வழியாய் எனது மடல்களை எல்லாம் ஒருபக்கம் இறக்கி வைத்தேன். (காட்டு: MS Outlook, Outlook Express, Eudora…). குறிப்பு: இதே வசதியை முன்பு ஹாட்மெயிலும் தந்து கொண்டிருந்தாலும் இப்போது அதற்கு வருடம் இருபது டாலர் தண்டம் அழ வேண்டும்.

இணைய அனுபவம் என்பதோடு இரண்டறக் கலந்து கொண்டிருக்கிற கூகுள் இலவசமாய்ப் பல வசதிகளைத் தந்தாலும் அதில் உள்ள சில குறைபாடுகளையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். ஒரு மையலுணர்ச்சியோடு மிதந்துவிட்டுப் பின் கண் கெட்ட பிறகு யோசிப்பதில் பயனில்லை என்பதால் அவரவர் நிலைக்குத் தக வேண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இணைய அனுபவமாய் இருந்தாலும், இறுதியில் நம் கையே நமக்குதவி.

Tags: கணிநுட்பம்

16 responses so far ↓

 • 1 krishnamurthy // Mar 8, 2006 at 11:50 pm

  Very useful infos sel. Thanks a lot

 • 2 மணியன் // Mar 9, 2006 at 1:34 am

  பயனுள்ள தகவல். gmailஐ விடுங்கள். gdisc என்று மாய வன்தட்டாக பாவித்தவர்கள் கதி என்ன ?

 • 3 Chandravathanaa // Mar 9, 2006 at 4:33 am

  செல்வராஜ்
  நல்ல பயனுள்ள தகவல். நன்றி.
  யாகூ அஞ்சல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
  அங்கும் இத்தகைய பிரச்சனைகளுக்கு வாய்ப்புண்டா?

  நட்புடன்
  சந்திரவதனா

 • 4 தாணு // Mar 9, 2006 at 4:40 am

  //ஏற்கனவே கூகுள்-அஞ்சலில் தனிப்பட்ட மடல்களும் கூகுளால் கண்காணிக்கப் படுகின்றன.// ஐயோ செல்வராஜ், இப்படி பயமுறுத்தி விட்டீங்களே. வலைப்பதிவு தொடங்கிய காரணத்தால் யாகூ, ஹாட் மெயில் எல்லா உபயோகத்தையும் கூகிள் வழியே செய்ய ஆரம்பித்த வேலையில் இத்தனை சிக்கல்களா? மறுபடி ஏகப்பட்ட வேலை செய்ய வேணும்போல் இருக்கே. தக்க சமயத்தில் உணர வைத்ததற்கு நன்றி

 • 5 venkat // Mar 9, 2006 at 5:46 am

  செல்வா. நீங்கள் சொல்லும் சில விஷயங்களை என்னால் ஒத்துக்கொள்ள முடிவதில்லை. எழுத நீண்டு போனாதால் என் வலைப்பதிவில் இடுகிறேன்.

 • 6 .:dYNo:. // Mar 9, 2006 at 12:40 pm

  >>>>கூகுள் – சில குறைகளும் எச்சரிக்கைகளும்

  செல்வராஜ்

  உங்கள் எச்சரிக்கைகளுக்கு நன்றி!

  ஆனா குறை? இதில் குறைபட்டுக்கொள்ள என்ன இருக்கிறது? கூகளின் ‘Terms and Conditions’, FAQ, இன்னபிறவெல்லாம் படிக்கவில்லையா?

  அமாசைக்கொருதரம் ‘டெர்ம்ஸ’ப்படி மறுக்காவும் ‘கண்டிசன’படின்னு மத்தவங்களுக்கு ‘தெளிவாகவும் செறிவாகவும்’ எடுத்துப்போடறீங்க ‘நினைவை உறுத்தறீங்க’. நல்லது.

  ஆனா… இப்ப நீங்களே கூகள் என்ற உயர்தரமான இலவசச் சேவையை குறைகூறுவது அவர்களின் சேவை மனத்தை குறை சொல்றது இம்சையா இருக்குதுங்க.

  .:டைனோ:.

  வரிக்கிடையில் வாசிப்பவர்களின் பார்வைக்காக:
  “Terms and Conditions” என்ற விஷயம் நகைப்புக்குறியது மற்றும் ஜல்லியடிக்கவே உதவும் என்பதை சுட்டவே இந்த பின்னூட்டம்.

 • 7 முருகபூபதி // Mar 9, 2006 at 12:42 pm

  அன்பு செல்வராஜ்,
  உங்கள் அச்சத்தை உணர்கிறேன். ஆனால் எனது பார்வையில் இன்றுவரை ஜிமெயில் சேவைகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில்தான் இருக்கின்றன. பாதுகாப்பு விடயம் – எதுதான் பாதுகாப்பு என்று நீங்கள் உணர்கிறீர்கள்?
  இதுவரை எனக்கு ஜிமெயிலில் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை.
  டிராஃப்ட் – குறித்து: நீங்கள் டிராஃப்டாக தட்டச்சு செய்ததை உங்கள் கணினியிலேயே நோட்பேடிலோ, வேர்டிலோ சேமித்து வைத்திருக்கலாமே..? இல்லையெனில் அதையே ஜிமெயிலி உங்கள் பெயருக்கே ஒரு மடலாக அனுப்பி சேமித்து வைத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
  அனுப்பிய மடல்கள் செண்ட் ஃபோல்டரில் இருக்கும். வந்த மடல்களை அழித்தாலும் அவை ட்ராஸில்தான் இருக்கும்.
  இலவசமாக இருக்கும் சேவைகளில் ஒரு சில குறைபாடுகள் இருக்ககூடும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

 • 8 செல்வராஜ் // Mar 9, 2006 at 1:22 pm

  நண்பர்களுக்கு, (குறிப்பாக, தாணு, சந்திரவதனா) என்னுடைய பதிவின் குறிக்கோள் கூகுளைப் பாவிப்பதில் *சிலசமயம்* நேரச் சாத்தியமுள்ள சிக்கல்கள் குறித்தும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க முடிகிற நடவடிக்கைகள் குறித்தும் தான். பிற அஞ்சல் சேவைகளோடு ஒப்பிட்டு இது சிறப்பு அது குறைவு என்று சொல்வதல்ல. மேலே குறிப்பிட்டபடி இலவசச் சேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றில் குறைகள் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே. அது தவிர கூகுள் பாவிப்பதில் இருந்து விலகும்படியான பயமுறுத்தல் இல்லை.

  தனிப்பட்ட முறையில் நான் கூகுள் அஞ்சலை இப்போது அதிகமாகப் பயன்படுத்துகிறேன். கூகுளின் பிற சேவைகளையும் நிறையப் பயன்படுத்துகிறேன். இணைய அனுபவமும் கூகுளும் இரண்டறக் கலந்திருக்கிறது என்றதும் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும் வைத்துத் தான். நாட்பட இப்படி அதிகரித்த பாவனையில் மிகவும் வசதிப்பட்டிருக்கும்போது, இருக்கும் சிறு குறைகள் தனிப்பட்ட இழப்பைத் தந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதற்கான எச்சரிக்கைக் குரல் தான். அதில் இருந்து காத்துக் கொள்ள என்ன செய்ய முடியும் என்று சில ஆலோசனைகள் – அவ்வளவு தான்.

 • 9 செல்வராஜ் // Mar 9, 2006 at 1:50 pm

  முருகபூபதி, டிராஃப்ட் குறித்து நீங்கள் சொல்வதைத் தான் நானும் பதிவில் சொல்லி இருக்கிறேன். பார்க்க: அந்த அஞ்சலை உங்கள் முகவரிக்கே சுயமாய் அனுப்பி இருந்தால் அது உட்பெட்டியில் இருக்கும். அதனை நீக்கினால் ‘அழிக்கப்பட்டவை’யில் இருக்கும். மீட்டெடுத்துக் கொள்ளலாம். ஆனால், யாருக்கும் அனுப்பாமல் டிராஃப்ட் பெட்டியில் இருந்து நீக்கி விட்டீர்களானால் போயே போச்! ஓ கயா!

  தனியாகக் கணினியிலேயே நோட்பேடிலோ வோர்ட்பேடிலோ வைத்திருக்கலாம் என்று நீங்கள் சொல்லும் அதே பாடத்தைத் தான் நானும் இந்த அனுபவத்தில் கற்றுக் கொண்டேன் என்று பகிர்ந்து கொள்கிறேன்.

  பாதுகாப்புணர்ச்சி கூட பாவிப்பதைப் பொருத்து அமையும் என்றும் உணர்கிறேன். வலையண்மைத் தேடல் (நன்றி:வெங்கட்) வசதியையும் கூட முடக்கி வைக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் அப்படியின்றி ஒரு நிறுவனத்தில் யாரேனும் அந்த வசதியைப் பயன்படுத்தினால், அதிமுக்கிய கோப்புக்கள் நிறுவனத்தை விட்டு வெளியே செல்கையில் அது பாதுகாப்பு இக்குத் தான் என்று பலரும் சொல்வதையே நானும் முன்வைக்கிறேன். கூகுள் நிறுவனமே இதனை ஒப்புக் கொண்டு எண்டர்பிரைஸ் எடிஷன் மூலம் இதனை மொத்தமாக அமல்படுத்தப் பரிந்துரைக்கிறது.

 • 10 -/பெயரிலி. // Mar 9, 2006 at 1:53 pm

  பாவம் செல்வராஜ் கூகுலை விட்டுவிடுங்கள். ஏற்கனவே ஸ்ரொக்கும் விழுந்து கேஸும் விழுந்து நொந்து போயிருக்கிறார்கள்.

  “Don’t be evil” …. only when there is
  1. no other evil,
  2. no imperfect technology, and
  3. no becoming as a big tech brother

 • 11 செல்வராஜ் // Mar 9, 2006 at 2:02 pm

  டைனோ, உங்களின் பின்னூட்டம் ஆச்சரியப்பட வைக்கிறது. நான் சுட்டிக் காட்டியதைச் சரியான முறையில் புரிந்து கொண்டீர்கள் என்பதை உங்கள் முதல் வரியும் வெங்கட் பதிவின் பின்னூட்டமும் சொல்கிறதாய் எடுத்துக் கொள்கிறேன்.

  ஆனால், தமிழ்மணம் குறித்த பதிவுகளில் Terms and Conditions குறித்த எனது வாதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றோ, ஏற்றுக் கொண்டாலும் அது நகைப்புக்குரியது என்று தான் எண்ணுகிறீர்கள் என்பதோ புரிகிறது. அதை இப்படி நீங்கள் சமயம் கிடைக்கையில் குத்தலாய் வெளிப்படுத்துவது தான் ஆச்சரியம் அளிக்கிறது என்கிறேன்.

  (இன்னிக்கு ஒரு மார்க்கமாய் இருப்பீர்கள் போலிருக்கிறது 🙂 வெங்கட் பதிவில் உங்கள் தொனி குறித்த அவருடைய கருத்தை வைத்தும் 🙂 )

  உங்கள் கருத்துக்குப் பதிலாய்: கூகுளின் Terms and conditions, FAQ எல்லாவற்றையும் முழுமையாகப் படிக்கவில்லையென்றாலும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். இது இன்னும் beta தான் என்று அவர்கள் சொல்வதையும் கூட சீரணித்துக் கொள்கிறேன். அப்படி ஏற்றுக் கொள்வதால் தான் அவர்கள் ‘துரோகம் செய்துவிட்டார்கள்’ என்பது போல் சென்று அவர்களைக் கல்லால் அடிக்கவில்லை. மக்களே, இப்படிச் சில சாத்தியங்கள்/குறைகள் இருக்கின்றன. (குறைந்த பட்சம் குறைகளாக நான் கருதுபவை). அவர்களுடைய ‘டெர்ம்ஸ்’ காரணமாக நாம் வேறு எதிர்பார்க்கவும் முடியாது. அதனால் உங்கள் துண்டு தரவுகளை நீங்கள் தான் காத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு எச்சரிக்கைக் குரல். அவ்வளவு தான்.

  என்னங்க? தமிழ்மண மாற்றங்களின் போது எழுந்த சொல்லடிகளுக்கும் இந்தப் பதிவுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா என்ன?

 • 12 செல்வராஜ் // Mar 9, 2006 at 3:13 pm

  வெங்கட், நான் இங்கு பதிந்திருப்பது கூகுளை முன்னிருத்தியே. மைக்ரோசாஃப்ட் (எதிர்) கூகுள் என்று ஒப்பீட்டளவில் இல்லை. தேடல்நிரலி அஞ்சல் இரண்டிற்கும் இணையென்று தான் மைக்ரோசாஃப்டை மூன்று இடங்களில் சில கருத்துக்களுக்காக எடுத்து வைத்தேன். அதிலும் ஒன்றில் கூகுளின் நிறை, MS இன் குறை என்றே இருக்கிறது.

  வெளிப்படையாகச் சொன்னால், நீங்கள் தான் கூகுள் சார்பும் மைக்ரோசாஃப்ட் எதிர்நிலையும் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் அவற்றோடு ஒப்பிட்டு அவர்கள் செய்யாததையா கூகுள் செய்துவிட்டது என்று வாதிடுகிறீர்கள்.

  வலையண்மைத் தேடல் பயனுள்ளது என்று தான் நானும் குறித்துள்ளேன். ஆனால் அதில் கோப்புக்கள் உங்கள் வலையை விட்டு வெளியேறும் நிலை இருப்பதால் அதில் ஒரு இக்கு (risk) இருக்கிறது என்று பொதுவாக உள்ள கருத்தைச் சொல்கிறேன். கூகுளே அதனை ஏற்றுக் கொள்கிறார்களே. நீங்கள் ஏன்…?

  இடம்பெயர் கோப்புத் தேடல் அட்டவணை சரியில்லை என்பதால் ஒரு பயனரின் எதிர்பார்ப்பு என்னும் அளவில் என் கருத்தைச் சொல்கிறேன். அது மைக்ரோசாஃப்டால் ஏன் சாத்தியமாகிறது, கூகுளால் ஏன் முடியவில்லை என்று நீங்கள் வாதிட வருகிறீர்கள். நான் ஒரு பயனர் விழைப்புள்ளியை மட்டுமே சொல்கிறேன்.

  ஜிமெயில் கணக்கு தொலைந்து போவதை beta சேவை என்பது நியாயப் படுத்தலாம். அதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அப்படி ஒரு சாத்தியமிருப்பதால் உங்கள் மடல்களை வேறு வகைகளில் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். (அதற்காகப் பாப் வசதி இருக்கிறது. இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் இருந்த நான் முதல்வேலையாய அதைச் செய்து பத்திரப் படுத்திக் கொண்டேன் என்று சொல்கிறேன்). பிறவற்றிலும் தொலைந்து போகும் சாத்தியம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், ஜிமெயிலில் ஒரு பத்திர உணர்வை எனக்கு எப்படிக் கொடுக்கும்?

  டிராஃப்ட் அழிந்து போனதிலும் கூகுள் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அழித்த (Deleted mail) மடல்கள் முப்பது நாட்களுக்கு இருக்கும், அதன்பிறகு முற்றாக ஒழிக்கப் படும் என்று சொன்னாலும் அதன்பிறகும் பல நாட்கள் வைத்திருக்கும் ஜிமெயில் டிராஃப்ட் மடல்களை மீட்க வழியின்றியே இருக்கிறதே. அதுவும் ‘அழிக்கப்பட்டவையில்’ சென்று அதே முப்பது நாட்களுக்கு இருக்கும்படி செய்தால் பயனுள்ளதாய் இருக்குமே என்று மீண்டும் ஒரு பயனர் விழைவைச் சொல்கிறேன். உங்களுக்கு அது அவசியமற்றது என்று தோன்றலாம். நுட்ப அளவில் 2GB வரை இடம் கொடுக்கும் ஜிமெயில் சில டிராஃப்ட்களைச் சேமிக்க என்ன சிக்கல் இருக்க முடியும் என்று உரக்கச் சிந்திக்கிறேன்.

 • 13 .:dYNo:. // Mar 9, 2006 at 3:17 pm

  செல்வராஜ்,

  கூகள் குறித்த உங்கள் கருத்து *முற்றிலும்* வரவேற்கப்படவேண்டியது… வரவேற்கிறேன். கூகுள் மீடியாவின் செல்லப்பிள்ளையாக இருப்பதால் அதன் பல அக்கிரமங்கள் கண்டுகொள்ளப்படாமல், கண்டிக்கப்படாமல் தப்பி இருக்கிறது. உங்களைப்போன்ற அதிகம் வாசிக்கப்படுகிற வலைப்பதிவர்கள் இதைப்போன்ற விஷயங்களை எழுதுவதும் மகிழ்ச்சியை தருகிறது. அதற்கு நன்றி!

  ****
  தமிழ்மணம் குறித்து:

  பெரும்பாலும் வணிக நோக்கத்துடன் மட்டும் வெளியிடப்படும் (‘Proprietary’) செயலிகளின் தயாரிப்பாளர்கள் இந்த ‘Terms and Conditions’ மற்றும் ‘Privacy Statement’ ஆகியவற்றைக்காட்டியே டுபாக்கூர் வேலைகளில் ஈடுபடுவது வழக்கம். மைக்ரோஸாப்ட், ஐபிஎம், ஆப்பிள், சன் ஆகிய முதலைகள் இதை உபயோகித்து Licencing feesசை அதிகப்படுத்தியே லாபம் பார்த்த/பார்க்கும் நிறுவனங்கள். பல சமயங்களில் ஒரு செயலியின் சப்போர்டை முழுவது நிறுத்திவிட்டு புதிய versionனுக்கு மாறியே ஆக வேண்டும் என்ற கையை முறுக்கும் வேலைகளிலும் ஈடுபட்டதுண்டு.

  தமிழ்மண மாற்றங்களின் போது அதையே (அதாவது Terms and Conditions) நீங்கள் சுட்டிக்காட்டிய போது எனக்கு மேலுள்ளவைகள்தான் நினைவுக்கு வந்தது. ஆனால் அன்றைய சுழலில் இதைக்கூறியிருந்தால் எந்த அளவு எடுபட்டிருக்கும் (/கண்டிக்கப்பட்டிருப்பேன்) என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். தெரிந்தோ தெரியாமலோ தமிழ்மணத்தின் மேல் ஒரு ‘Community Feel’ உருவாகிவிட்டது. More like a Open Source community. நீங்களோ உங்கள் சக நிர்வாகிகளோ அதை திணிக்கவில்லை/விரும்பவில்லை என்றாலும் அவ்வாறு இருந்ததாகவே நான் உணர்ந்தேன். இச்சூழலின் உங்கள் நிர்வாகத்தினரின் தொடர் அறிவிப்புகள் தமிழ்மணத்தை ஏதோ வணிக தளம் போல கருதச்செய்தன. அந்த அறிவிப்புகள் வந்தபோதே என் கண்டனத்தை உங்கள் / காசி பதிவில் பதிவிட்டிருந்தேன்.

  இன்று உங்கள் கூகளின் குறைகள் பதிவைப்பார்த்ததும் ‘Terms and Conditions’ என்ற அபத்தம் என் நினைவிற்கு வந்து தொலைந்துவிட்டது.
  நீங்கள் கூறுவது உண்மை. இந்த அபத்தத்தை குத்திக்காட்ட தக்க சந்தர்ப்பம் இதுவாக இருக்கும் என்று நான் யூகித்ததால்/கருதியதால் பின்னூட்டினேன்.
  ****

  .:டைனோ:.

 • 14 venkat // Mar 9, 2006 at 4:53 pm

  செல்வராஜ் –
  >வெளிப்படையாகச் சொன்னால், நீங்கள் தான் கூகுள் சார்பும் மைக்ரோசாஃப்ட் எதிர்நிலையும் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் அவற்றோடு ஒப்பிட்டு அவர்கள் செய்யாததையா கூகுள் செய்துவிட்டது என்று வாதிடுகிறீர்கள்.

  எனக்கு மைக்ரோஸாஃப்டை எதிர்க்க கூகிளை ஆதரிக்க வேண்டியதில்லை. மைக்ரோஸாஃப்ட் என்னுடைய பதிவில் வரக்காரணம் நீங்கள் பெயர்ந்த கோப்புகளைத் தேட முடிகிறது, ஹாட்மெயிலில் வசதிகள் என்று சொன்னதால்தான்.

  Google is yet to become evil என்றுதான் எழுதினேன் never என்று எழுதவில்லை. டைனோ சொன்னதுப்போல இவை எல்லாமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதுதான் உண்மை. வருங்காலத்தில் என்னிடமிருந்தே கூகிளைப் பற்றிய ஒரு காரசாரமான பதிவு வரலாம். (அப்படித்த்தான் தோன்றுகிறது).

 • 15 செல்வராஜ் // Mar 9, 2006 at 5:35 pm

  டைனோ, தமிழ்மண விவாதத்தின் போது Terms சுட்டிக் காட்டியது ஒரு குமுகாய உணர்ச்சியைக் கெடுத்தது என்கிற உங்களின் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அப்போதே உங்கள் எதிர்கருத்தை நீங்கள் வைத்தீர்கள் என்று எனக்கு நினைவிருக்கிறது.
  தமிழ்மணம் அத்தகைய உணர்ச்சியைத் திணிக்கவில்லை என்று நீங்கள் சொன்னதை ஏற்கிறேன். விரும்பவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  ஒரு முழு வணிக தளத்திற்கும், திறமூலக்குமுகாயத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்ததாகவே எனக்கு, (தனிப்பட்ட வலைப்பதிவர் என்கிற முறையில்) பட்டது. அதனாலேயும் கூட இந்தக் குழப்பங்கள் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் கொண்டு வரப்பட்ட வசதிகள், மாற்றங்கள் இவற்றிற்கு உள்ளீடுகளைப் பலரும் தந்திருக்கிறார்கள். அப்போது குமுகாய உணர்வு இருந்ததாகத் தான் நினைக்கிறேன். பிறகு தவிர்க்க முடியாத மாற்றங்களைக் கொண்டு வரவேண்டிய நிர்பந்தங்களும், அதனை முன்னிருத்தி வாதிடவும் வேண்டிய அவசியங்களும் உருவானபோது தான் ‘டெர்ம்ஸ்’ஐ ஒரு தற்காப்புக் கேடயமாக எடுக்க வேண்டியிருந்தது.

  சிறு குழுவாய் இருக்கும்போது இருக்கும் புரிந்துணர்வு பெரிதாக வளர்கையில் செறிவுக்குறைவடைந்து போவதாலும் இருக்கலாம். பல்வேறு கருத்துக்கள் எழும்போது, அவை எதிரெதிர் திசையில் இருக்கும்போது எந்த முடிவெடுத்தாலும் சிலருக்கு வலிக்கத் தானே செய்யும். அதற்கு என்ன செய்வது? நீங்கள் சொல்வது போல் அபத்தமாக இருந்தாலும் அது அவசியம் என்று கருதியே அன்று தமிழ்மண ‘டெர்ம்ஸ்’ பற்றிப் பேச வேண்டியிருந்தது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

  வெங்கட், உங்கள் கூகுள்/மைக்ரோசாஃப்ட் பற்றிய விரிவான பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நானும் எந்தச் சார்நிலையும் எடுக்காமல் இருக்கவே முயல்கிறேன். இரண்டு நிறுவனப் பொருட்களையும் தேவை ஏற்படும்போது பயன்படுத்துகிறேன். உங்களையும், டைனோவையும் போல அதிகத் திறமூலப் பொருட்கள் பயன்படுத்தலாம் என்றால் என் பணியிடம் இடம் தராது!

  பெயரிலி, நன்றி. பெரியண்ணனாய் கூகுளின் கரங்கள் நீளுகையில் சப்புக் கொட்டிக் கொண்டு அவர்களுக்கும் ஒரு சலனம் எழுவது தவிர்க்க முடியாததாய் இருக்கலாம். அப்போது, பரவலாய்க் கரிசனம் எழுவது இயற்கை தானே. அப்படி எழாமல் கண் மூடி இருந்தால் தான் பிரச்சினை.

 • 16 R CHELLARAJ // Jun 5, 2009 at 7:57 am

  Good