இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

முதலுரை

October 25th, 2003 · 1 Comment

நல்ல நடையில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களைப் படிக்க எனக்குப் பிடிக்கும். படிப்பதோடு இருந்து விடாமல் படைப்பவனாகவும் ஆக வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. இதுநாள் வரையில் பெரியதாய் எதுவும் எழுதிய அனுபவம் எனக்கு இல்லை என்றாலும், சிறிது சிறிது எழுதிய அனுபவங்களும், அதோடு முக்கியமாக, எழுத வேண்டும் என்கிற உந்துதலும் நிறையவே இருப்பதால், அவற்றை வைத்து என்னைச் செலுத்திக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில், இந்த வலைப் பக்கங்களில், என் எண்ணக் கிறுக்கல்களைப் பதிவு செய்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்களையும் விமரிசனங்களையும் தெரிவித்து ஆதரவளியுங்கள். நன்றி.



முதலில், எல்லோருக்கும் வணக்கம். எனது பயணம் தொடங்கிய கொங்கு நாட்டுக் கொஞ்சும் தமிழில் கூறினால், “வணக்கமுங்க” !

சுமார் 2, 3 ஆண்டுகளுக்கு முன் இந்த வலைப் பதிவு வடிவம் பிரபலமாகிக் கொண்டு இருந்த போது எனக்கும் தமிழ் வலைக்குறிப்பொன்று அமைக்க வேண்டும் என்று ஆசை. வழிமுறை சரியாகத் தெரியவில்லை. சில தளங்களில் வேற்று மொழியில் அமைக்க அனுமதியும் தரவில்லை. பிறகு இந்த ஆசையைக் கிடப்பில் போட்டுவிட்டேன் இத்தனை நாட்களாக. மிகச் சமீபத்தில் தான் தமிழ் வலைப் பதிவுகளே பரவலாக உருவாகி வருவதைக் காண முடிந்தது. இந்த 2, 3 மாதங்களாக நானும் உள்ளே குதித்து என் எண்ண அலைகளைப்(!) பரவ விட வேண்டும் என்று எண்ணியபடியே தான் இருந்தேன். ஆனால் செயல்படுத்தத் தாமதம் ஆகிக் கொண்டே போய்விட்டது.

பின்னணியில் இத்தனை நாட்களாக நிறைய வலைப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். (என் ஓட்டு வலைப்பதிவு, வலைக்குறிப்பு இரண்டுக்கும் உண்டு. இன்னும் சிலரைப் போல, பூவில் எனக்கும் கொஞ்சம் தயக்கம். அவ்வளவாய் உடன்பாடு இல்லை). செயலிகள், எழுத்துருக்கள், தானிறங்கிகள், யூனிகோடு, தகுதரம் என்று பலவாரானவற்றைப் பற்றியும் பார்த்துக் கொண்டு இருந்தேன். சில சோதனைகளும் செய்து கற்றுக் கொள்ளலாம் என்றும் சில பின்னணி வேலைகள் செய்து கொண்டிருந்தேன். நாலைந்து நாள் கழித்துத் தான் வெளியுலகிற்குத் தெரியப் படுத்த வேண்டும் என்று எண்ணிச் சோதனை வடிவத்தில் வைத்திருக்க அதற்குள் சிலர் வந்து பார்த்துப் பின்னூட்டமும் அளித்து விட்டனர். அதனால், இனியும் தாமதிக்கலாகாது என்று இதோ முடிவான என் முதலுரை.

கிறுக்கல்கள் தொடரும்…

Tags: பொது

1 response so far ↓