இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மான்செஸ்டர் பயணம்

February 14th, 2005 · 7 Comments

விமான நிலையத்தில் எங்கள் நிறுவனப் பெயர்ப்பலகை தாங்கிய ஒருவரைச் சந்தித்து அவருடன் அங்கிருந்து வெளியேறியதைத் தவிர மான்செஸ்டரில் வேறு எங்கும் செல்லவில்லை, எதையும் பார்க்கவில்லை என்பதால் இதை மான்செஸ்டர் பயணம் என்று சொல்வது பொருத்தம் இல்லை தான். இருந்தாலும் இங்கிலாந்து நாட்டில் முதன் முறையாக உள்நுழைவது இந்த நகரின் வழியாகவே என்பதாலும், வந்திருக்கும் இடத்திற்கு அருகிருக்கும் பெருநகரம் இதுவே என்பதாலும் இது மான்செஸ்டர்ப் பயணமாகிறது.

லேசாக மழை துளிர்த்துக் கிடந்தது. ஞாயிறு காலை என்பதாலாக இருக்க வேண்டும் – ஒருவித சோம்பல் அப்பிக் கிடந்தது. கதிரவன் ஒளி பிரகாசமாய் இருந்தாலும், பலமான காற்று முகத்தில் அறைந்து குளிரை அதிகரித்தது. வலதுபுற ஓட்டியோடு சாலையில் இடது புறம் சென்ற வாகனங்களைத் தவிர பெரு வித்தியாசங்கள் தென்படவில்லை. அமெரிக்காவைப் போலவே நெடுஞ்சாலைகள். அதன் இரு புறமும் இலையுதிர்ந்து கிடந்த குளிர்கால மரங்களில் பாசி படர்ந்தாற்போல் கீழே இருந்து கிளைகள் வரை பச்சையாக இருந்தது. குளிர்காலம் முடிந்து வசந்தம் வந்து கொண்டிருக்கும் அறிகுறியாய்ப் புல்வெளிகள் பசுமையை வெளிக் காட்டிக் கொண்டிருந்தன.

மான்செஸ்டரில் இருந்து இருபது இருபத்தைந்து நிமிடப் பயணத்தில் ஃப்ரொட்ஷம் என்னும் சிறு நகரை அடைந்தோம். ‘நல்ல வசதியான தங்குமிடம் ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்றார்கள். அறைக்குள் வந்து பார்த்தால் மொத்தம் பத்துக்குப் பத்து என்னும் அளவில் தான் இருந்தது. அதனுள்ளேயே ஒரு மெத்தை, மேசை, சோபா என்று நிறைத்து மிச்சம் ஒரு கால்வாசி இடம் தான் நிற்க நடக்கவென்று கிடைத்தது. துணி தேய்க்கிற ‘பொட்டி’ கூட வேண்டுமென்று கேட்டால் கொடுத்தனுப்புகிறார்கள்!

Old Hall, Frodshom, Chesire

அறையைப் போலவே குளியலறையிலும் பெரிய படுத்துக்குளிப்பான் (bathtub 🙂 !) இருந்தது போக நிற்பதற்குச் சில சதுர அடிகள் இருந்தன. பெரியதாய் ஒன்றும் சிறியதாய் ஒன்றும் இரண்டு துண்டுகள்!

படுக்கையோரம் இருபுறமும் உள்ள சிறுமேசைகளில் தேடிப் பார்த்தேன். எல்லா அமெரிக்க விடுதிகளிலும் தவறாமல் இருக்கும் விவிலியம் (Bible) இங்கு இல்லை. பழைய தொலைக்காட்சிப் பெட்டியில் BBC பல சானல்களில் வருகிறது. தூர இயக்குவானில் Channel Up Down பொத்தான்கள் இல்லை. மறுதேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிற டோனி பிளேயர்; மறுமணம் புரிந்து கொண்ட வயதான இளவரசர் சார்லஸ் குறித்த விமர்சனங்கள்; இவற்றிற்கிடையே உண்மையான கால்பந்தாட்டமும் பார்க்க முடிகிறது.

ஊர் முக்கியப் பகுதிகளை இரண்டு தெருக்களில் அடக்கிவிடலாம் போலிருந்தது. ஞாயிறு என்பதால் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. செந்நிறத்தில் ஆளுயர அஞ்சல் பெட்டிகள் இன்னும் சாலையோரத்தில் நிற்கின்றன. மூடியிருந்த கதவில் எழுதியிருந்தது பார்த்ததில், எதிரிலேயே இருந்த அஞ்சல் அலுவலகத்தில் டாலரைப் பவுண்டாக்கிக் கொள்ள முடியும் போலிருக்கிறது. க்ளீவ்லாந்து விமான நிலையத்தில் வாங்கி வந்த இருபது பவுண்டுகள் (நாற்பத்திரண்டு டாலர்) இப்போதைக்குப் போதும். கடனட்டை வைத்துச் சமாளித்துக் கொள்ளலாம். ஆனாலும் இன்று சென்ற இடமெல்லாம் (இரண்டு இடங்கள்!) குறைந்தது ஐந்து (அ) பத்துப் பவுண்டுக்கு வாங்கவில்லை என்றால் கடனட்டை பெற்றுக்கொள்வதில்லை.

எண்பத்தொன்பது காசுக்குத்(பென்ஸ்?) தண்ணீர் வாங்கிவிட்டு சில்லறை நோட்டாக நாலு பவுண்டு வரும் என்று பார்த்தால் நிறைய நாணயம் கிடைத்தது. யோசித்தபடி நின்றிருந்தபோது அது இரண்டு பவுண்டு நாணயம் என்று தலையோரம் நரைத்திருந்த கடைக்காரம்மாள் சொல்ல ஓ என்று ஆச்சரியத்தோடு ஒரு அவுன்ஸ் வெட்கமும் கலந்து கொண்டது.

வெப்பநிலை 40 Fக்கு மேலே இருந்தாலும் (இங்கே சென்டிகிரேடு முறை) கடுங்காற்று குளிரைத் தாராளமாகத் தந்து கொண்டிருந்தது. பெருங்கற்களாலான ஒரு ரயில்பாலம் ஈரோட்டுப் பழைய ரயில்ப் பாலம் ஒன்றை லேசாக ஞாபகப் படுத்தியது. பல்லாண்டு காலம் நம்மை ஆண்டவர்கள் என்று, என்னவோ ஒரு தொடர்பை, எதிர்பார்ப்பை, எதையோ ஒன்றை மனம் ஏற்படுத்த முயல்கிறது. எதிர்பார்க்கிறது. வாயைக் கொஞ்சம் அதிகமாகத் திறந்து திறந்து பேசிய வரவேற்பறைப் பெண்ணுக்கு என்னூரைப் பற்றி என்ன தெரியும்? அவரின் மூதாதையர் யாராவது பிரிட்டிஷ் படை வழியாக இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடுமோ?

தினமும் மாலை மட்டும் திறந்திருக்கும் ஒரு இந்தியக் கறிக்கடையைப் (!) (Curry house) பார்த்தேன். குளிருக்கு நல்ல காரமாகச் சாப்பிட்டால் நன்றாய் இருக்குமே என்று சூடாய்ச் சிக்கன் பிரியாணி வாங்கி வந்து அறையில் உட்கார்ந்து ஆசையாய்ச் சாப்பிட்டால், கறி இருந்த அளவிற்குக் காரமே இல்லை. எண்ணெய் கூட நிறைய இருந்தது. இன்னும் கொஞ்சம் உப்பும் காரமும் இருந்திருக்கலாம்.

பத்துப் பன்னிரண்டு உண்டிகள் இருக்கும் மெக்டானல்ட்ஸ்ஸிலேயே என்ன வாங்குவது என்று முடிவு செய்ய ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டு, பிறகு எப்போதும் வாங்கும் ஒன்றையே மீண்டும் வாங்கிப் பழகிய எனக்கு, இந்தக் கடையில் குறைந்தது நூறு உண்டிகளாவது இருந்தது மலைப்பாய் இருந்தது. அது தான் அவசரமாய்ப் பார்த்துத் தெரிந்த பெயரில் பாதுகாப்பான ஒன்றை அவசரமாய்ச் சொல்லி வைத்தேன். நல்ல வேளை எடுத்துச் செல்ல உண்டிப் பட்டியல் ஒன்றை வைத்திருந்தார்கள். அறையில் வந்து அரை மணி நேரமாவது பார்த்துக் கொண்டிருந்தேன். நாளை என்ன வாங்கலாம் என்ற யோசனையுடன்.

கடைக்காரர் வேறு என்னிடம் இந்தியில் என்னவோ பேசினார். இந்தியன் என்றவுடனேயே இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை இது போன்றவர்களுக்காவது எனது இந்தி மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியன் என்பதற்காக உடனே இந்தியில் பேசுவதைப் போலவே கொஞ்சம் காரமாகவும் விரும்புவார்கள் என்று கேட்காமலேயே போட்டிருக்கலாமே.

ஒரு வேளை அவர் இந்தியில் இல்லாமல் ஆங்கிலத்தில் தான் பேசினாரா? ஆங்கிலேயர்களின் (!) ஆங்கிலம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. தொலைக்காட்சிகளில் (ஃப்ரேசியர் டேஃப்னி), செய்திகளில் கேட்டிருந்தாலும், சாதாரண இடங்களில் பொதுமக்களின் பேச்சில் இருக்கும் சரவலான மொழி நடை சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்தச் சிக்கல் விமானத்தில் பணிமக்களிடமே ஆரம்பித்து விட்டது. அவர்கள் பேசி அது எனக்குப் புரிவதற்குச் சில விநாடிகள் யோசிக்க வேண்டியிருந்தது. (Lag-ற்குச் சரியான நுட்பப் பதம் பார்க்க வேண்டும்).

“இன்று மட்டும் இங்கு இருக்கப் போகிறீர்களா” என்ற கேள்விக்கு, “இல்லை, நேற்றே வந்துவிட்டேன்”, என்று கூறிப் பிறகு சுதாரித்துக் கொள்கிறேன்!

Lagல் இன்னொன்று ஜெட்லேக். அறை முழுக்க வெளிச்சமாய் இருந்தால் தூக்கம் வராது என்று சாளரமறைப்பை விலக்கி, எல்லா விளக்குகளையும் போட்டுக் கொண்டாலும் காலை பதினொரு மணிக்குத் தூக்கம் வந்தது. தூங்க வேண்டிய இந்த நேரத்தில் (இரவு இரண்டு மணிக்கு) எழுதிக் கொண்டிருக்கிறேன். வெளிக்கடிகாரம் இரவு இரண்டு மணி என்று சொன்னாலும் உட்கடிகாரம் இன்னும் ஒன்பது மணி என்றே நம்புகிறது. இருந்தாலும், இன்னும் இரண்டு வாரம் இங்கே இருக்க வேண்டுமென்பதால் எனது குழப்பங்களையும் மீறி அது ஒரு தெளிவுக்கு வந்துவிட வாய்ப்பிருக்கிறது.

Tags: பயணங்கள்

7 responses so far ↓

 • 1 அன்பு // Feb 14, 2005 at 8:02 pm

  நல்ல அனுபவம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிறைய எழுதுங்க… ஊருக்குபோய் எழுதலாம்னு தள்ளிப் போட்டுறாதீக, அப்புறம் நேரம் கிடைக்காது:)

  உங்கள் எழுத்தில் அதிகம் ஆச்சரியப்படுத்துவது உங்களின் விடாப்பிடியான தமிழ்ப்படுத்துதல் (தமிழைப்படுத்துதல் இல்லண்ணே:)
  படுத்துக்குளிப்பான்
  தூர இயக்குவானில்
  இதை உங்களைப்போல் நானும், அனைவரும் செய்யவேண்டும்.

 • 2 மூக்கன் // Feb 14, 2005 at 3:02 pm

  செல்வா,

  வெளியூர்லயா இருக்கீங்க. ஓ…நிறைய எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க.

  மேல எழுதினது நல்லா இருக்கு.

 • 3 Ravikumar // Feb 14, 2005 at 3:02 pm

  வாங்க செல்வராஜ்… இந்திய கறிக்கடையின் அனுபவம் இங்கு வந்த புதுசில் எனக்கும் ஏற்பட்டது! அடுத்தமுறை போனா “வின்டலூ” சமாச்சாரம் சாப்பிட்டு பாருங்க.. காரம் காதைப் பிடுங்கும்! வேறு ஏதாவது ஆர்டர் செய்தால், “மேக் இட் ஹாட்” அப்படி’னு சொன்னீங்கன்னா, பச்சை மிளகாயை தூவி விடுவானுவ.. கொஞ்சம் குளிர் தெளிய வாய்ப்புள்ளது. நேரம் கிடைத்தால் மான்ச்சஸ்டர் நகரில் உள்ள “Rusholme” என்ற இடத்துக்கு போனால், கொஞ்சம் authentic’ஆன இந்திய உணவு கிடைக்க வாய்ப்புண்டு. உங்கள் வரவு நல்வரவாகுக.

 • 4 -/பெயரிலி. // Feb 14, 2005 at 1:02 pm

  /இந்தியன் என்றவுடனேயே இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்./

  உங்களுக்கு இதெல்லாம் ஒரு குறை! 🙂
  இந்தியன் இல்லாவிட்டாலும் ஹிந்தி தெரியவேண்டுமென்று எதிர்பார்க்கும் உத்தர்ப்ரதேஷிகள், பீஹாரிகளைச் சந்தித்திருக்கின்றேன் 😉

  Lag: பின்னடை(வு); பின்னடைவுக்காலம்; பின்னடைபொழுது

 • 5 பரி // Feb 14, 2005 at 12:02 pm

  லேசாக மழை துளிர்த்துக் கிடந்தது.
  >>>
  வருஷம் முழுக்க அப்டித்தான்

  ஞாயிறு காலை என்பதாலாக இருக்க வேண்டும் – ஒருவித சோம்பல் அப்பிக் கிடந்தது.
  >>>>
  வாரம் முழுக்க, வருஷம் முழுக்க அப்டித்தான் 🙂

  அறைக்குள் வந்து பார்த்தால் மொத்தம் பத்துக்குப் பத்து என்னும் அளவில் தான் இருந்தது.
  >>>>
  இங்கயே அபார்ட்மெண்ட் பக்கம் போய்ப் பாருங்களேன் இப்போ :))

  அமெரிக்க பிரமாண்டத்தோட (நம்மையும் அறியாமல்)ஒப்பு நோக்கறதால வர்றது இது. மத்தபடி அந்த ஊருக்கு அது பெருசு 🙂
  ஆனாலும் பாத்ரூம் சைஸ் ரொம்ப ஓவர்! நிக்கக்கூட முடியாது 🙁

  கறி இருந்த அளவிற்குக் காரமே இல்லை.
  >>>>
  தேடினாலும் கிடைக்காது 🙂

  பத்துப் பன்னிரண்டு உண்டிகள் இருக்கும் மெக்டானல்ட்ஸ்ஸிலேயே
  >>>
  Veggie Burger ரொம்ப நல்லா இருக்கும். இங்க வந்ததுக்கப்புறம் அது இங்கெ இல்லேன்னு தெரிஞ்சதும் ஆச்சரியமா இருந்துச்சி.

  ஆங்கிலேயர்களின் (!) ஆங்கிலம் சற்று வித்தியாசமாக இருக்கிறது.
  >>>
  Cardiff (Wales) பக்கம் போனா வெறுத்துடுவீங்க 🙂

  6 மணி ஆச்சோ இல்லையோ ஊரே சுடுகாடு மாதிரி அமைதியா இருக்கும். வாழ்க்கையே வெறுத்துடும் 🙁

  முடிஞ்சா Scotland போயிட்டு வாங்க. நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்.

  -(கொஞ்ச நாள் அங்கே(MAN) குப்பை கொட்டிய அனுபவத்திலிருந்து)

 • 6 paari // Feb 14, 2005 at 12:02 pm

  இது மிகவும் சுவாரசியமாய் இருக்கு. 🙂
  //பெருங்கற்களாலான ஒரு ரயில்பாலம் ஈரோட்டுப் பழைய ரயில்ப் பாலம் ஒன்றை லேசாக ஞாபகப் படுத்தியது. பல்லாண்டு காலம் நம்மை ஆண்டவர்கள் என்று, என்னவோ ஒரு தொடர்பை, எதிர்பார்ப்பை, எதையோ ஒன்றை மனம் ஏற்படுத்த முயல்கிறது.//
  🙂 🙂

 • 7 செல்வராஜ் // Feb 17, 2005 at 11:02 am

  பரி, ரெண்டு நாள் குளிரும், ஒரு நாள் நல்ல வெளிச்சமும் பிறகு இன்று மறுபடியும் ‘மோடம்’ போட்டிருக்கு. அறை அளவு பத்தி நீங்க சொன்னது உண்மை தான். இப்போ பழகிருச்சு. வேறு இடம் வேண்டுமானால் மாத்திக்கச் சொன்னார்கள். ஆனால் இங்கேயே இருக்க முடிவு செய்துவிட்டேன்.

  பாரி, நிறையத் தொடர்பு பார்க்கிறேன். விட்டத்திலே தெரிகிற சட்டத்தில் இருந்து, வழுவழுப்பான சுவர், போண்டா, இன்னும் சில பாலங்கள்.

  பெயரிலி – முதல்லே பின்னடை நான் நினைச்ச இடத்தில் ஒத்து வருமான்னு சந்தேகம் வந்தாலும் பாவிக்கலாம் என்றே நினைக்கிறேன். செலுத்தக் கட்டுறுத்தல் துறையில் வரும் first order lag போன்றவற்றிற்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

  நன்றி மூக்கன், ரவிக்குமார், அன்பு. ரவிக்குமார், நீங்க சொன்ன விண்டளூ சமாச்சாரத்தப் படிக்கும் முன்பே அடுத்த கடைக்குப் போயிட்டேன் (ப்ரொட்ஷம் பதிவுல பாருங்க). ஆனா இணைய இணைப்புக் கிடைக்காததாலே முன்னாலயே பதிய முடியவில்லை. நீங்க இங்கிலாந்தில தான் இருக்கீங்களா? அன்பு நீங்க சொன்னத என்னைக் கிண்டல் செய்யறீங்கன்னு எங்க விட்டுல சொல்றாங்க:-)