இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இந்தியாவுக்குப் போயிடலாமா?

December 19th, 2004 · No Comments

“நந்து… இந்தியாவுக்குப் போயிடலாமா?”

நண்பர் ஒருவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததன் தாக்கத்தில் நான்கு வயதினளிடம் கேட்டேன். திரையில் ‘லயன் கிங்’ பார்த்துக் கொண்டிருந்தனர் மகள்கள். பெரியவள் ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘லயன் கிங்’ படம் கூட இன்னும் சிறிது அச்சத்தைத் தருவதாய் இருக்க, சின்னவள் என்னுடன் பேசும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன் பார்வையைத் தொலைக்காட்சித் திரையில் இருந்து விலக்கிக் கொண்டாள்.

“நந்து… இந்தியாவுக்குப் போயிடலாமா?”

“யேய்” என்று உற்சாகமான பதில் வந்தது.

ஞாயிறு என்பது ஒரு நிறைவான தினம். இரண்டடிக்குப் பனிக் கொட்டிக் கிடக்கிற ஊரில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியிருந்தாலும், எந்த அழுத்தமும் இன்றி நினைத்ததைச் செய்து கொண்டு, செய்யவேண்டிய சிலவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கிடந்த தினம். யாராவது நண்பர்களோடு சிலசமயம் நீண்ட தொலைப்பேச்சிலும் ஈடுபடும் போது அந்த நிறைவும் அதிகரிக்கும். மகள்களுக்கும் ஞாயிறு என்பது பிடித்த ஒரு தினம். அன்று தான் மாலையில் அவர்களுக்குத் தொலைக்காட்சியில் ஏதாவது படமோ வேறு நிகழ்ச்சிகளோ பார்க்க அனுமதி உண்டு. மற்றும் இரவு உணவிற்குப் பீட்ஸாவும், நினைவிருந்து கேட்டால் ஐஸ்கிரீமும் கிடைக்கும் தினம் அது.

“இந்தியாவுக்குப் போய் அங்கேயே இருந்துக்கலாமா?”

“ம்” – புரிந்தும் புரியாமலும் கேள்விக் குறியோடு என்னைப் பார்த்தபடி இருந்தாள்.

ஆறு வாரங்கள் பயணமாய் இந்தியா சென்று வந்தது மகளுக்குப் பிடித்திருந்தது. திரும்பி வந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் எப்போது போவோம் என்று கேட்க ஆரம்பித்திருந்தாள்.

“யெஸ் அப்பா. இந்தியாவுக்குப் போகலாம்”

“சரி. இங்க வா. அப்படி உனக்கு இந்தியாவில் என்ன பிடித்திருந்தது?”

“அங்கு தானே ஞாயிறு வரை காத்திராமல் தினமும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்!”

இயல்பான பாசாங்கு இல்லாத பதில் மலர்ச்சியைத் தந்தது. அமெரிக்காவிலேயே பிறந்து ஆங்கிலத்திலேயே வளர்ந்து கொண்டிருக்கும் நான்கு வயதுக் குழந்தையிடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்? உறவின் நட்பின் அருகாமையில் உணர்ச்சிக் களிப்பில் இன்புற்றிருக்கலாம் என்று ஒரு பதிலை எதிர்பார்க்க முடியாது தான். விடுமுறைக்குப் போன இடத்தில் விதிகள் தளர்த்தப்பட்டு இருந்தது அவள் நினைவில் இருக்கிறது. இருந்தாலும் ஐஸ்கிரீம் ஒன்று தானா என்று இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாத் தவிப்பில் கேட்டேன்.

“சரி, இங்கேயும் ஞாயிறு வரை காத்திராமல் தினமும் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அப்போ என்ன தோணும்? அப்போ எதுக்கு இந்தியாவுக்குப் போலாம்னு சொல்லுவே?”

சிறிது நேரம் யோசித்தாள். முகத்தில் ஏதோ காரணத்திற்காகப் புன்முறுவல். “சரி அப்பா. அப்பவும் இந்தியான்னு தான் சொல்வேன். ஏன்னா எல்லா நாளும் ஐஸ்கிரீம் சாப்பிட்டது முதல்ல அங்க தானே?”

ஒவ்வொருவருக்கு ஒரு காரணம். அவரவர் காரணம் அவரவர்க்கு.

Nandhu Nov2004

Tags: வாழ்க்கை