இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/01 –

June 25th, 1993 · No Comments

இனிய தோழி சுனந்தா,


மனசு குழம்புகிற போதெல்லாம் மட்டுமல்ல, சற்றுத்தெளிவாய் இருக்கிற போதும் உனக்கு எழுதத் தோன்றுகிறதுஎனக்கு. என் வாழ்வில்ஏற்படும் இன்ப துன்பங்களை எல்லாம் உன்னோடுபகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.


ஒரு நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, நம்மிடையே உள்ள நட்பு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. நீ எங்கோ மிகத் தொலைவில் இருக்கிறாய்… இருப்பினும், உன்னை எண்ணும் போதெல்லாம் என் உள்ளத்திற்குள் ஒரு குதூகலம் !

எனக்குள் ஏற்படுகின்ற கவலைகள், குழப்பங்கள் இவற்றை எல்லாம் உனக்கு எழுதி விட்டால் எல்லாமே தீர்ந்து விட்டாற்போன்ற ஒரு உணர்வு. பெரும் பாரங்கள் இறங்கிவிட்டாற் போன்ற ஒரு நிம்மதி. தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தன் தாயிடம் வெளிப்படுத்திவிட்ட நிம்மதியில் அமைதியாய்ப் பாதுகாப்பு உணர்வுடன் தூங்குகிற குழந்தையைப் போன்ற உணர்வு.

ஒரு வகையில், உன்னைப் போன்ற சினேகிதி ஒரு தாயும் கூட. உன்னோடு சேர்ந்திருந்த அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். ஏதோ எண்ணிக் குழம்பிக், கஷ்டப்பட்டு, ஆற்றாமையில் விசும்பிக் கொண்டிருந்த என்னை, ஆதரவுடன் அணைத்து, `என்னடா ஆச்சு… ?’ என்று தலையை மெதுவாகக் கோதி விட்ட உனது அன்பை எண்ணிப் பல நாள் நான் சந்தோஷப் பட்டு அழுதிருக்கிறேன். சந்தோஷத்தில் கூட அழுகின்ற எனது விசித்திர இயல்புகளை நன்கு புரிந்து கொண்டவள் நீ தான்.

உனது மடிமீது தலை வைத்து உறங்கும் போது எந்தக் கவலையும், சலனமும் இன்றி ஆழ்ந்து உறங்கி இருக்கிறேன். இது போன்ற ஒரு தாய்மையைக் கூட உனது நட்பு தந்து என்னை மகிழ்வித்திருக்கிறது.

என்னவோ தெரியவில்லை. உனக்குக் கஷ்டங்கள் வந்தபோதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாய் இருந்திருக்கிறது. தனிமையில் உனது கஷ்டங்களை எண்ணிக் கண்ணீர் கூட உகுத்திருக்கிறேன். நாம் `ஈரோட்டில்’ பள்ளியில் சேர்ந்து படித்த அந்த நாளில் இருந்து, சென்னைக் கல்லூரியில் பொறியியல் முடித்துப் பின் பிரிந்தோமே—அவ்வளவு நாளும் உன்னுடன் இருந்தவன் என்கிற முறையில், உனக்கு ஏற்பட்ட துன்பங்களின் போதெல்லாம் நான் வருந்தி இருக்கிறேன்; ஆனால், அவ்வளவையும் நீ எதிர்கொண்டு, நெஞ்சுரத்துடன் சமாளித்து வந்ததை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன்.

“செல்…, வாழ்க்கை என்பது இப்படித் தான். எதிர்பாராமல் வரும் மேடு பள்ளங்களில் திகைத்து நின்று விடக் கூடாது. எதற்கும் கலங்காத நெஞ்சு வேண்டும். கலங்கினால் நமக்கு நாமே அழிவைத் தேடிக் கொள்கிறோம். சிதையா நெஞ்சு கொண்டு, மேன் மேல் ஏற வேண்டும். கீதை என்ன சொல்கிறது தெரியுமா?—வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத போராட்டம். எதைப் பெற வேண்டுமானாலும் உயிர்கள் அதன் பொருட்டுப் போராடியாக வேண்டும். எத்துறையிலாவது மனிதன் சிறிது முன்னேறி இருக்கிறான் என்றால், அவன் வெற்றிகரமாகப் போராடி இருக்கிறான் என்னும் பொருள் அதனில் புதைந்து இருக்கிறது”, என்று நீ கூறியது எல்லாம் இன்னும் அவ்வப் போது நான் நினைவு கொள்வேன். அந்த வயதிலும் உனக்குத் தான் எவ்வளவு மன முதிர்ச்சி !

நல்லாசிரியை ஆக இருந்து நீ பயிற்றுவித்தது எல்லாம் எனக்கு இன்றும் உதவுகிறது, தெரியுமா?

தொடர்வேன்,

அன்புடன்
செல்வராஜ்.

Tags: கடிதங்கள்