தமிழோடைத் திரட்டி
Feb 1st, 2004 by இரா. செல்வராசு
தமிழ் வலைக்குறிப்புக்கள் அதிகமாகி வரும் இன்னாளில், புதிதாய் யார் எழுதியிருக்கிறார்கள் என்று அதிக நேரம் விரையப்படுத்தாமல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு முதலில் வலைக்குறிப்பர்கள் தங்களது பக்கங்களுக்கு செய்தியோடை ஏற்பாடு செய்ய வேண்டும். Blogger-ல் இப்போது அந்த வசதி தரப்பட்டுள்ளது.
இரண்டாவது, செய்தியோடைத் திரட்டிகள் கொண்டு பிறரது தளங்களைக் கவனித்துக் கொள்ளலாம். அவரவர் தனித்தனியாக செய்தியோடைத் திரட்டிகள் வைத்துக் கொண்டு தாம் விரும்பும் பிறரின் ஓடைகளை இணைத்துக் கொள்ளலாம். அந்தத் திரட்டிகள் NewsMonster போன்று அவரவர் மேசை மீது இருக்கலாம். அல்லது Bloglines போன்று இணையச் சேவையாய் இருக்கலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், புதிதாக யாராவது எழுத ஆரம்பித்தால் அவரை நாமாகச் சேர்க்க வேண்டும். அதோடு திரட்டி வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த வேலையைச் செய்ய வேண்டும் (அவரவர் விருப்பம் பொருத்து). இதற்கு பதிலாகத் தமிழ் வலைப்பக்கங்கள் போலே எல்லோருக்கும் பொதுவான ஒரு இணையப் பக்கமாய் திரட்டித் தளம் இருந்தால், யாராவது ஒருவரோ, நிர்வாகிகள் என்று சிலரோ, ஒரு இடத்தில் புதிய ஓடையைச் சேர்த்து விட்டால் போதும். எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம்.
இப்படியான ஒரு முயற்சியைத் தான் வெங்கட் இங்கே செய்திருக்கிறார். ஆனால், அதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். யூனிகோடு குறியீட்டைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் கூறியிருந்ததைப் போல, பத்ரியின் ஓடை எனக்குச் சரியாகப் பாயவில்லை. யூடிf-இன் மூன்று பைட்டுக்கள் ஒன்றொன்றாகக் குதறித் தான் தென்படுகிறது.
அவரைப் போன்றே கடந்த பல மாதங்களாக நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். BlogStreet தரும் சேவை ஒன்றையொட்டி அமைந்த எனது முயற்சியை இங்கே காணலாம். இங்கும் நன்றாகத் தெரிவது வெங்கட்டின் ஓடை மட்டுமே. பிற ஓடைகள் எல்லாம் அதே பைட் குதறல்களுக்கு ஆளாகிக் காணாமல் போகின்றன. ஆங்கில எழுத்துக்களோ, அல்லது எண்களோ இருந்தால் மட்டும் தெரிகிறது. கண்ணனின் “வைகைக்கரைக் காற்றே” வெறும் …32, …33 என்று தெரிவதைக் கவனியுங்கள்.
அதோடு Atom ஓடைகளை BlogStreetற்கு இன்னும் அடையாளம் காணத் தெரியவில்லை. BlogStreet-ல் தனக்குள்ள தொடர்பை வைத்து பத்ரி தான் இந்த வசதியை அவர்கள் ஏற்படுத்தித் தருமாறு செய்ய வேண்டும். Bloglines மக்கள் கூட ஒரு மாதம் முன்னர் தான் இந்த வசதியைச் செய்திருக்கிறார்கள். அது ஏற்பட்டால் அப்புறம் திரட்டிப்பக்கம் வந்தாலே போதும் – புதிய பதிவுகளைப் படிப்பதற்கு. அதற்குள் வெங்கட் ஏதேனும் Magic செய்யவும் கூடும். இப்போதைக்கு அதற்கும் Atom ஓடைகளைப் படிக்கத் தெரியவில்லை என்று எண்ணுகிறேன்.
இவை இரண்டில் ஒன்று செயல் படுத்த முடிந்தாலும் நல்லது தான்.
இது நல்ல முயற்சி … அனைவருக்கும் மிக உதவும் ..klipfolio என்ற மென்பொருளையும் இதற்குப் பயன்படுத்தலாம் …என்னுடைய வலைப்பூவில் அது பற்றி நேற்றி எழுதியிருக்கிறேன்..atom,rss,food என அனைத்து ஓடைகளுக்கும் பயன்படுத்த முடிகிறது
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
ப்ளாக் டிரைவில் இருப்பது போல நமது மெயில் விலாசத்தை கொடுத்து வைத்தால், சுருக்கமாக செய்திகள் நமது விலாசத்துக்கு வருவது எளிதாக இருக்கிறதே?