இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மீசை மொளச்சு முன்னுக்கு வந்தவன்

August 31st, 2009 · 8 Comments

Growth“அதெல்லாம் நீ கேக்கக்கூடாது. பொம்பளைங்க சமாச்சாரம் பேசிக்கிட்டிருக்கிற எடத்துல ஆம்பிளப்பையனுக்கு என்னடா வேலை? போடா அந்தட்டம்”னு குமார அவங்க அம்மாவே தொரத்தி உட்டாங்க.

குமாருக்குக் கோவம் கோவமா வந்துச்சு. ஊற வச்ச கொட்டமுத்த உறிச்சுக் குடுறான்னு அவங்களே கூப்பிட்டுட்டு இப்பத் தொரத்தராங்க. ‘அப்படி என்ன நான் கேட்டுட்டேன், இல்லாததையும் பொல்லாததையுமா? இவங்க பேசிக்கிட்டிருந்ததப் பத்தித் தானே கேட்டேன்’னு நெனச்சுக்கிட்டு மொறச்சுப் பாத்தான்.

கீழ துணி சுத்தியிருந்த மொளக்குச்சிய ஆட்டாங்கல்லுக் குழிக்குள்ள ஒரு வட்டக்கல்லு வச்சு அடிச்சு தெரமாக்கீட்டு, நெத்தில வடிஞ்ச வேர்வையப் பொறங்கையால தொடச்சிக்கிட்டே பக்கத்து ஊட்டு அன்னபூரணியக்காவும் அவனப் பாத்தாங்க. அவ‌ங்க‌ லேசாச் சிரிக்கிற‌ மாதிரியும் குமாருக்குச் ச‌ந்தேக‌மா இருந்துச்சு. அதுவும் கோவ‌த்த‌ அதிக‌மாக்குச்சு.

ஆனா, அன்ன‌பூர‌ணிய‌க்காவ‌ அவ‌னுக்குப் புடிக்கும். குச்சி ஐஸ் வண்டிக்காரன் வந்தா ‘போனாப் போகுது வாங்கிக்கட்டும் உடுங்க’ன்னு அம்மா கிட்ட அவனுக்குப் பரிஞ்சு பேசுவாங்க. புரட்டாசிச் சனிக்கிழம பெருமாள் மலைக்கு அவங்களோட போனா, வரும்போது நன்னாரி வேர் போட்ட எலுமிச்சம்பழச் சர்பத் வாங்கிக் குடுப்பாங்க. அதனால கோவத்தக் கொஞ்ச‌ம் அட‌க்கிக் கிட்டான். ஆனா, இன்னிக்குத்த பிரச்சினைக்கு இந்த அக்காவும் ஒரு காரணம்.


அப்போவெல்லாம் இப்ப மாதிரி இல்லீங்க. சுச்சுப் போட்டா மாவு தானா ஆட்டிக்கிற மாய வித்தையெல்லாம் யாரும் கண்டுபிடிக்கல்ல. கொறஞ்சது, ஈரோட்டுல குமாரு இருந்த லைன் வூட்டு வரிசையில யாரும் அப்படி ஒரு மிசினு பாத்ததில்ல. மூணாவது ஊட்டுக்காரர் அரிசி மண்டி வச்சிருந்ததால, ஒருவேள அவர் வேணும்னா அப்படியொரு மிசினுப் பத்திக் கேள்விப்பட்டிருக்கலாம்.

வ‌ரிசையா அஞ்சு வீடு இருந்த‌ லைனு வீட்டுல‌ அவ‌ங்க‌ வீடு நாலாவ‌து. அன்னபூரணியக்காவுது அஞ்சாவுது. குமாரு கூடப் படிச்ச பிரியா ரெண்டாவது வீட்டுல இருந்தா. அவங்க அப்பா பேங்க் ஒண்ணுல வேல செஞ்சதனால அவங்க அம்மாவும் பேங்காரம்மா ஆயிருந்தாங்க. பேங்காரம்மா பொண்ணு பிரியா கொஞ்சம் அழகாத் தான் இருப்பா.

அன்னிக்கு மாவாட்டுறப்போ அன்னபூரணியக்கா தான் குமாரு அம்மா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

“முன்னாடி ஊட்டுப் பிரியா, அதாங்க்கா, பேங்காரம்மா புள்ள, இந்த வாரம் வயசுக்கு வந்துருச்சாம்”

“ஆமாமா, சொன்னாங்க. நாங்கூட எங்கடா புள்ள ரெண்டு நாளா வெளியவே வல்லியே. ஒடம்பு கீது சரியில்லையான்னு கேட்டேன். அப்பத் தான் சொன்னாங்க”

கிட்டத்தட்ட எல்லாக் கொட்டமுத்துவையும் உறிச்சிட்டு வெளையாடப் போற அவசரத்துல இருந்த குமாருக்குப் பிரியா பேரக் கேட்டதும் கவனம் இங்க திரும்புச்சு.

“பிரியா எங்க வந்துருச்சு?”ன்னு கேட்டு முடிச்சப்புறம் தான் அந்த அக்கா சொன்னது முழுசாக் காதுல உளுந்துது. ஆமா, இப்பல்லாம் இந்த வயசுக்கு வந்துருச்சுங்கறது அடிக்கடி காதுல அடிபடுதுன்னு நெனச்சுக்கிட்டான். எதையும் கேட்டுத் தெளிஞ்சுக்கணும்னு சொல்றாங்களேன்னு கேட்டான்.

“வயசுக்கு வர்றதுன்னா என்னங்க்கா?”

இதக் கேட்டதும் தான் அவங்க அம்மா அடிச்சுத் தொறத்தாத கொறயாத் தொறத்துணாங்க.

“சரி உடுங்க. அது தான் பொம்பள விசயமா இருந்துட்டுப் போவுது. ஆனா நான் எப்ப வயசுக்கு வருவேன்னு சொல்லுங்க”

இப்ப அன்னபூரணியக்கா சத்தமாவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. “அதெல்லாம் பசங்களுக்கு இல்ல. பொண்ணுங்க மட்டும் தான் வயசுக்கு வருவாங்க” அப்படின்னு சுருக்கமாச் சொன்னாங்க அக்கா.

‘எங்கடா அந்தச் சீவக்கட்டையக் காணோம்’னு குமாரம்மா அவன ரெண்டு போடு போட அங்கயும் இங்கயும் தேடுனாங்க. ஏனோ அவங்க முகம் செவந்து போய்க் கெடந்தது.

எப்படியாச்சும் இதுக்கு என்ன அர்த்தமுன்னு கண்டுபிடிச்சுரணும்னு குமாரு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான்.

“சரி போங்க. நீங்க சொல்லாட்டிப் போங்க. நான் போய் பிரியா கிட்டயே ‘ஆமா நீ வயசுக்கு வந்துட்டியாமே’ன்னு கேட்டுக்கறேன்” அப்படின்னான்.

அவங்கம்மாக்கு வந்ததே கோபம். “மரியாதையாப் பொட்டாட்டப் போயிரு. இல்லாட்டி உங்கப்பன் கிட்டச் சொல்லித் தோல உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவேன்”

ஒரு நாளும் தோலுரிஞ்சு உப்புக் கண்டம் போட்டதில்லைன்னாலும், அம்மா இப்படிப் பேசினா, அதுக்கு மேல போறது ஆபத்துன்னு இத்தனை வயசுல தெரிஞ்சு வச்சிருந்தான் குமாரு. இப்போதைக்கு இத விட்டுறலாம்னு நெனச்சுக்கிட்டான். பிரியா கிட்டயும் கேக்க முடியாது. ஆனா இதப் பத்தி யார் கிட்டக் கேக்கலாம்னு நெனச்சுப் பாத்தா ஒருத்தரும் சிக்கல.

* * * *
லைன் வீட்டுல‌ அச்ச‌டிச்சாப்புல‌ எல்லா வீடும் ஒரே மாதிரி தான் இருக்கும். ரெண்டு ரூம்பு. ஒரு ச‌மைய‌ல‌றை. அப்புற‌ம் முன்னால ஒரு க‌ட்டல் போட‌ற‌ மாதிரி கொஞ்ச‌ம் எட‌ம். பாதி பேரு அங்க‌ ஒரு கையித்துக் க‌ட்ட‌ல் போட்டிருப்பாங்க‌. அவ‌ச‌ர‌த்துக்கு நெற‌யாப் பேரு வீட்டுக்கு வந்துட்டாங்க‌ன்னா, க‌ட்ட‌ல‌ எடுத்து நிறுத்திட்டுப் பாய் போட்டுப் ப‌டுத்து உருண்டா ஒரு அஞ்சாறு பேரு உருள‌லாம். உருண்டு எந்திரிச்சு வெளிய‌ வ‌ந்தா வாச‌ச் ச‌ந்து பின்னால‌ இருந்த‌ வாச‌லுக்குக் கூட்டீட்டுப் போகும்.

ச‌ந்து அஞ்சு ஊட்டுக்கும் பொதுவா ஒரு ஆறடி அகலத்துல நெடுகத்துக்கும் இருக்கும். அங்க‌ தான் அவுங்கவுங்க‌ வ‌ச‌தி போல‌ சைக்கிளும், மொப்ப‌ட்டும், புல்ல‌ட்டும் வ‌ச்சிருக்கிற‌வ‌ங்க‌ நிறுத்தி வ‌ச்சுக்குவாங்க‌. புல்ல‌ட்டு வ‌ச்சுருக்கிறது அன்ன‌பூர‌ணிய‌க்கா புருசன் முருகேசு மாமா தான். அவரு போலீசுக்காரரா இருக்கறமுன்னு தெம்பாத் தான் போய்வந்துக்கிட்டுருப்பாரு. கெணத்துக்கிட்ட வேப்பங்குச்சில பல்லு வெளக்குனாலும் தோள் மேல டருக்கித் துண்டு போட்டுக்கிட்டுத் தான் போவாரு. அவங்களுக்கும் ஒரே பையன். பேரு கார்த்தி. குமார விட நாலஞ்சு மாசம் தான் சின்னவன்னாலும், பொறந்த மாசம் தேதினால பள்ளிக்கோடத்துல குமாருக்கு ஒரு வருசம் பிந்தி இருந்தான். இருந்தாலும் குமாருக்கு ந‌ல்ல‌ கூட்டாளி.

கார்த்தி கிட்ட கேக்கலாமான்னு நெனச்சான் குமாரு. என்னதான் நல்ல நண்பன்னாலும், இதப் பத்திக் கேக்க என்னவோ கொஞ்சம் தயக்கமா இருந்தது. இது என்னமோ மர்மமான விசயம் போல இருந்ததும் அதப் பத்திக் கேட்டா விசயம் பரவி திரும்பி நம்மளையே கிண்டல் அடிச்சா என்ன பண்றதுன்னு அந்த யோசனைய வேண்டாம்னு விட்டுட்டான். தவிர அவன் ஒரு வருசம் சின்னப் பையன். சின்னப் பசங்க கிட்ட எல்லாம் இந்தப் பெரிய விசயமெல்லாம் பேச முடியாது!

அஞ்சு வீட்டையும் தாண்டிப் போனா பின்னாடி சின்னதா ஒரு வாசல். வாசக் கடசீல‌ ஒரு சேந்து கெணறு, பாத்ரூம்பு எல்லாம் இருக்கும். வாசல்ல இந்தக் கோடீல தான் செக்கு, அம்மிக்கல்லு, ஒரலு எல்லாம் போட்டு வச்சுருப்பாங்க. யாரு வேணும்னாலும் வந்து பொழங்கிக்கலாம். சுத்தம் பண்ணி வச்சுட்டுப் போயிரோணும். அவ்வளவு தான். அங்க தான் இன்னிக்கு அம்மாவும் அன்னபூரணியக்காவும் மாவாட்டிக்கிட்டு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் நல்ல ‘பிரெண்டு’ன்னு சொல்லிக்குவாங்க.

“முத்துக்குமார்ல புதுசா ரஜினி படம் போட்டுருக்கான்க்கா. முள்ளும் மலரும். நல்லா இருக்குன்னு அரிசிமண்டி லட்சுமி சொல்லுச்சு. இன்னிக்குப் போலாம் வர்றீங்களா”ன்னு திட்டம் தீட்டிக்குவாங்க.

“எங்கூட்டுக்காரரு தோடு பண்ணிக்கன்னு சொன்னாரு. அர அரப் பவுன்ல பண்ணிக்கிட்டேன். நல்லாருக்கா? “ன்னு காதக் காதக் காட்டிக்குவாங்க.

அப்படியே பேசிக்கிட்டிருந்தா பிரச்சினையே இல்ல. முன்னாடி ஊட்டுப் பொண்ணு வயசுக்கு வந்துட்டான்னு ஏன் இன்னிக்குப் பேசணும்?

வாசல்ல செக்கிருந்த எடத்துக்கு மேல ஒரு ஓலக் கொட்டாயி போட்டு மத்தியான வெய்யிலு நேரத்துல குளுக்குளுன்னு தான் இருக்கும். அந்த லைனு ஊட்டுல எல்லாருக்குமே அந்த எடம் தான் வம்பு தும்பு வதந்தி பேசறதுக்கு எல்லாம் வசதிப்பட்ட எடம். தனியா யாரும் அங்க மாவாட்டிப் பாத்ததே இல்ல. புள்ள‌ குட்டி புருச‌ம்மார‌ எல்லாம் அனுப்பி வ‌ச்சுட்டு யாராவ‌து ரெண்டு மூணு ஊட்டுக்கார‌ங்க‌ சேந்து தான் வேல‌ செய்வாங்க. ஆனா மத்தவங்க மாதிரி இல்லாம பேங்க் வீட்டுல மட்டும் அதிகமா வெளிய வர மாட்டாங்க. பள்ளிக்கூடத்துக்குப் போறப்போ மட்டும் பசங்க புள்ளைங்க எல்லாம் சேந்துக்குவாங்க.

ஒருத்தரும் இல்லீன்னா மொதவீட்டுக் காய்க்காற ஆத்தாவாச்சும் மாவாட்டறவங்க கிட்டப் பேசிக்கிட்டே யாரையாவது புடிச்சு அங்க தாயக்கரம் வெளயாடீட்டு இருப்பாங்க. ஆத்தா முன்னாடி எந்தக் காலத்துலயோ கொஞ்ச நாள் காய்கறி வித்துக்கிட்டு இருந்தாங்க. அதனால காலத்துக்கும் ‘காய்’ பேருல ஒட்டிக்குச்சு. மத்த வீட்டுல இன்னும் ரெண்டு ஆத்தா இருந்ததுனால, ஒரு அடையாளத்துக்கு அதுவும் வசதியாப் போச்சு.

லீவு நாளான்னா குமாரும் அந்த‌ப் ப‌க்க‌மா வெளையாடிக்கிட்டு எதாவ‌து ஒத்தாசை கேட்டா செஞ்சுக்கிட்டிருப்பான். யாரும் கெடைக்க‌லீன்னா காய்க்காற‌ ஆத்தா தாய‌ம் வெளயாட‌ வாடான்னு கூப்டுக்குவாங்க‌. அதுல‌யும் செட்டு சேந்து வெள‌யாண்டா அந்த‌ ஆத்தா கூட‌ச் சேந்து வெள‌யாட‌க் குமாருக்குப் புடிக்கும். ஒரு அஞ்சு போடு, ப‌ன்ன‌ன்டு போடுன்னு ஆத்தா கேட்டு அதுவே உளுந்துருச்சுனா ‘பேராண்டி பேராண்டி’ன்னு ஆத்தா பாச‌த்த‌த் தெளிச்சு உட்டுரும். கேட்ட‌த‌க் கொடுத்த‌ வ‌ள்ள‌ல் க‌ண‌க்கா உள்ள‌ம் பூரிச்சுரும்.

வயசுப் பிரச்சினைய‌ அந்த ஆத்தா கிட்டக் கேக்கலாம்னு நெனச்சதும் மண்ணாப் போச்சு. குமாரு அவங்க அம்மா கிட்ட முக்கியமான கேள்வியக் கேட்டப்போ வெத்தல எச்சயத் துப்ப வெளிய போயிருந்த ஆத்தா, திரும்பி வந்து நடந்ததக் கேட்டதும் பெரிய பரவசத்தையே கண்டது போல குமாரப் பாத்து சிரிச்சுது.

“பையனுக்கு மீச மொளைக்குது, பாராயா”ன்னு அவன் அம்மாக்கிட்டக் காட்டிக் குறும்பாச் சிரிச்சுது.

“போங்காத்தா” என்றான் குமாரு. ‘இனிமே என்ன வெளயாடக் கூப்பிட்டுப் பாருங்க சொல்றேன்’னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான். அப்புறமா, ‘வயிறு கொஞ்சம் உப்புசமா இருக்குது. ஒரு ஏப்பம் உட்டாச் சரியாப் போயிரும். முக்குக் கடையில போயி ஒரு சோடா வாங்கியா கண்ணு’ன்னு சுருக்குப் பைக்குள்ள நோண்டி நோண்டி எட்டணாக்காச எடுத்துக் கொடுத்துட்டுச் சொல்லுவீங்கள்ள, உங்கள அப்பப் பாத்துக்கறேன்’ன்னு நெனச்சுக்கிட்டு அங்கிருந்து ஓடீட்டான்.

அடுத்த நாள் பள்ளிக் கூடம் போகும் போது பிரியா வீட்டு முன்னாடி தயங்கி நின்னான். தன்னோட‌ அம்மா பாக்கலைன்னு உறுதி செஞ்சுக்கிட்டு, ஒன்னும் தெரியாதவனாட்டம், “என்னுங்க? பிரியா பள்ளிக்கூடத்துக்கு வல்லியா” என்றான் பேங்காரம்மாவிடம்.

“இல்லப்பா, அவளுக்கு இன்னிக்குக் கொஞ்சம் ஒடம்பு சரியில்ல. நீ வேணா சாயந்திரம் வரும்போது வீட்டுப் பாடம் என்னன்னு கொண்டாந்து குடுத்துட்டுப் போறியா?”

“சரிங்க”. சாயந்திரம் அவளப் பாக்க முடியுதான்னு பாக்கலாம்.

“யாராவது கேட்டா, அவ அநேகமா அடுத்த வாரம் தான் வருவான்னு சொல்லீரு”.

சாயந்திரம் வந்தப்போ அவங்க அம்மா பேசிக்கிட்டு இருந்ததனால அவன் நோட்டு எல்லாம் பேங்காரம்மா கிட்டயே குடுத்துட்டு ஒண்ணும் பேசாம வந்துட்டான்.

* * * *
அந்த வாரம் முழுசும் பிரியா வரலை. அடுத்த திங்கக்கிழம தான் பள்ளிக்கூடத்துக்கு வந்தா. ஆனா எப்பவும் போல மத்த பசங்க கூட வராம, அவள அவங்க அப்பாவே வண்டில கொண்டு போய் உட்டுட்டு வந்துட்டார்.

வகுப்புல முன்சீட்டுல பிரியா மத்த பொண்ணுங்க கூட உக்காந்திருந்தா. இவனப் பாத்ததும் லேசாச் சிரிச்சிட்டுத் திரும்பிக்கிட்டா. இன்னிக்கு என்னவோ கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு மண்டைய ஒடச்சிக்கிட்டுப் பாத்தான் குமாரு. ஒருவேள தலைக்குக் குளிச்சிட்டு வித்தியாசமாச் சீவியிருக்காளோ? இல்லியே. ஓ! முன்னாடி மாதிரி பாவாட, சட்டைன்னு போடாம, இன்னிக்குப் பொண்ணு தாவணி போட்டிருக்குது. அதான் வித்தியாசமா இருக்குது.

சரி. தாவணி போட்டதுனால வயசுக்கு வந்துருச்சா. வயசுக்கு வந்ததுனால தாவணி போட்டுக்குச்சா? இதப் பத்தி மத்த பசங்க கிட்டப் பேசலாமான்னும் ஒரு முடிவுக்கு வர முடியல்ல குமாரால. நேரம் போகப் போக அப்பப்ப பிரியா பக்கம் திரும்பிப் பாத்தான். ஒண்ணும் தெரியல்ல. ரொம்பப் பாத்தாலும் பின்னாடி இருக்கற பசங்க கிண்டலடிப்பாங்கன்னு அது வேற பயமா இருந்தது அவனுக்கு. ஏற்கனவே பக்கத்து ஊட்டுப் பொண்ணுன்னு முன்னாடி கிண்டல் பண்ணி இருக்காங்க.

ஆச்சு. இன்னும் ஒரு வகுப்புத் தான். தமிழய்யா பெரியசாமி உள்ள வந்து என்னவோ பாடம் நடத்த ஆரம்பிச்சார். கொஞ்சம் எலும்பும் தோலுமாத் தான் ஒல்லியா இருப்பார். எப்பவுமே கடசி வகுப்புங்கறதானலயோ எல்லாருமே சோர்ந்து போயிர்றதாலயோ முழு ஆர்வம் இல்லாமத் தான் இருப்பாங்க எல்லாரும். ஒண்ணு ரெண்டு பேரு தூங்க ஆரம்பிச்சிருவாங்க. சாக்குக் கட்டிய ஒடச்சி ஒடச்சி அவங்க மேல எறிவாரு தமிழய்யா.

குமாரு தனக்கு வந்த கொட்டாய அடக்கிக்கிட்டுத் தற்செயலாத் திரும்புனவன் கண்ணுல பிரியா பட்டா. மத்த பொண்ணுங்களும் அவளும் கூடத் தான் சோர்ந்து போய்க் கொஞ்சம் தூங்கி வழிஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அவளுடைய தாவணி கொஞ்சம் விலகி இருந்துச்சு.

பளிச்சுனு முழிச்சுக்கிட்டான் குமாரு. மனசு படபடன்னு அடிச்சிக்கிட்டுது. பெருமாள் மலையில அன்னபூரணியக்கா சர்பத் வாங்கிக் குடுத்த கடை ஏனோ ஞாபகத்துக்கு வந்துச்சு. மனசுக்குள்ள கொஞ்சம் குறுகுறுன்னு இருந்துச்சு. ஆனா, இப்ப அவனுக்குப் புரிஞ்சிருச்சு. பிரியா ஏன் வயசுக்கு வந்துட்டாங்கறது மட்டுமில்லாம ஏன் பசங்க வயசுக்கு வர மாட்டாங்க அப்படீங்கறதும் புரிஞ்சு போச்சு.

தனக்குத் தானே கொஞ்சம் சிரிச்சுப் பேசிக்கிட்டவனப் பாத்துத் தமிழய்யா ஏதோ கேள்வி கேட்டார். சும்மா இருங்க சார். போன மாசம் வேலைக்குச் சேந்த இயற்பியல் வாத்தியாராச்சும் கொஞ்சம் கொஞ்சம் வயசுக்கு வந்த மாதிரி இருக்கார். நீங்க நம்மளையாட்டத் தானேன்னு நெனச்சுக்கிட்டே எந்திரிச்சு நின்னான் குமாரு. இப்போ அடக்கமாட்டாம அவனுக்குச் சிரிப்பா வந்தது.

“டேய்! டேய்! ஏண்டா சிரிக்கறே”ன்னார் தமிழய்யா.
* * * *

Tags: சிறுகதை

8 responses so far ↓

  • 1 K.V.Rudra // Sep 1, 2009 at 2:19 am

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறு கதை நல்லாயிருக்கு, தொடரட்டும்

  • 2 சத்யராஜ்குமார் // Sep 1, 2009 at 8:37 am

    கதை நல்லாருக்கு செல்வராஜ். முக்கியமா ‘வயத்துல உப்புசமா இருக்குங்கற’ மாதிரியான மண்ணின் வாக்கியங்கள். சித்ரன் எழுதிய கவிதை ஒண்ணு நினைவுக்கு வந்தது.

    http://chithran.wordpress.com/2007/08/26/aangalukkumattum/

  • 3 இளவஞ்சி // Sep 1, 2009 at 9:18 am

    அசத்தீட்டீங்க செல்வராஜ்! கதை நடையில அப்படியே ஊருக்குள்ள ஒரு நடை போயிட்டு வந்தாப்புல இருக்கு!

    முடிவு எதிர்பார்க்கவில்லை! ஆனா விடலைப்பய இன்னமும் முன்னுக்கு வரனும்னு புரிஞ்சது 🙂

  • 4 giri sivagiri // Sep 1, 2009 at 10:09 am

    oorukkul oru valam poi vantha mathiri irukku sel!nanum intha mathiri kelvi kettu virattup pattirukken,nan munnukku vanthittanannu innum theriyale.

  • 5 பாலகுமார் // Sep 1, 2009 at 2:28 pm

    சூப்பர் செல்வா…கலக்கி இருக்கீங்க…இங்க நீங்க எழுதி இருக்கிற பல வார்த்தைகள் மண்டைக்குள் ஓடிக்கிட்டு இருக்கு…

    நம்ப ஊருல எல்லா தெருவிலும் ஒரு குமார் இருப்பான்….

  • 6 பாலகுமார் // Sep 1, 2009 at 2:31 pm

    நண்பன் ஒருத்தன் ஊருக்கு போறான்.. தாய கட்டைய கொண்டாரா சொல்றேன்..

  • 7 பதி // Sep 1, 2009 at 3:41 pm

    கலக்கலா வந்திருக்குங்க….

    தமிழய்யா தொல்லை கொடுத்தாரா??? நான் படிச்ச எல்லா பள்ளிக்கூடத்துலயும் தமிழய்யா தான் இந்த மாதிரி “முக்கியமான” விசயத்தைப் பூராவும் பசங்களுகு விளக்கி இருக்காங்க !!!!
    பள்ளி முடிக்கும் வரை படிச்சது பூராவும் சேவல் பண்ணையா, தமிழ், உயிரியல் வாத்தியாருங்க அட்டகாசம் தாங்காது போங்க!!!!!
    :)))))

  • 8 இரா. செல்வராஜ் // Sep 1, 2009 at 7:04 pm

    K.V.Rudra,
    உங்க பாராட்டுக்கும் ஊக்கப் படுத்தலுக்கும் நன்றி.

    சத்யராஜ்குமார், மிக்க நன்றி. சித்ரனின் கவிதையும் படிச்சேன். சொல்லாமல் சொல்லி இருக்கிற விசயங்கள் அருமை. த‌லைப்போடு பொருத்த‌ம் கூட‌.

    இள‌வ‌ஞ்சி, ரொம்ப‌ ந‌ன்றி. நீண்ட‌ நாளுக்க‌ப்புற‌ம் உங்க பதிவுலயும் உங்க எழுத்துக்க‌ளைப் பார்க்க‌ முடிவ‌து ந‌ன்றாக‌ இருக்கிற‌து. முடிவு ப‌த்தின‌ உங்க‌ க‌ருத்துக்கும் ஆமோதிச்சுக்கிறேன். :‍)

    சிவ‌கிரி அய்யா, எங்கூர்ப்ப‌க்க‌ம் சிவ‌கிரின்னு ஒரு ஊரு இருக்கு. இது சும்மா த‌க‌வ‌லுக்காக‌. த‌மிழ் த‌ட்ட‌ச்சு ப‌ற்றி ஒரு மின்ம‌ட‌ல் அனுப்பி வ‌ச்சிருக்கேன். உங்க‌ க‌ருத்துக்கும் ந‌ன்றி.

    பாலா, கொஞ்ச‌ நாளாவே ஊற‌ வ‌ச்சு எழுதின‌ கதை இது. உங்க‌ வ‌ர‌வேற்பிற்கு ந‌ன்றி. குமாரு மாதிரி ஒரு கால‌த்துல‌ நானும் தாய‌க்க‌ர‌ம் நிறைய‌ விளையாடி இருக்கேன்.

    பதி, ந‌ன்றி. ஒவ்வொருவ‌ருக்கும் ஒவ்வொரு வித‌மாப் பாட‌ம் கெட‌ச்சிருக்கும். உங்க‌ளுக்குத் த‌மிழ‌ய்யாவும், உயிரிய‌ல் அய்யாவுமா? ‘சேவல் ப‌ண்ணை’ ஒரு நிமிட‌ம் யோசிக்க‌ வைத்துப் பிற‌கு புன்சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து.