இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வாடாத மல்லி

July 25th, 2009 · 10 Comments

வாசிங்டனைச் சுற்றும் ஐ-495 என்னும் ‘பெல்ட்வே’யிற்குச் சற்று வெளியே, ‘ரவுட் 50’ஐ ஒட்டிய சிறு குன்றொன்றின் உச்சியிலே அமைந்திருந்தது ‘சன்ரைஸ் அசிஸ்டடு லிவிங்’ என்னும் அந்த முதியோர் இல்லம். புதிதாக வெட்டப்பட்ட புல்தரையைப் பார்த்துக்கொண்டு ஒரு சனிக்கிழமைக் காலையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த போது அவருக்குச் செம்மண்காட்டுவலசு ஆத்தாவைப் பற்றிய ஞாபகம் வந்தது.

வெளிர் நீலச் சீருடை அணிந்த பணிப்பெண்களில் ஒருத்தி அன்றலர்ந்த வண்ணமலர்கள் சிலவற்றைக் கொய்து வந்து மேசைக் குடுவையினுள் வைத்துவிட்டுத் தினமும் போலவே அன்றும் “குட் டே மிஸ்டர் சின்னூ” என்று
புன்னகைத்துச் சென்றாள்.

செம்மண்காட்டுவலசு ஆத்தாவைப் பற்றிச் சின்னூ என்று அழைக்கப்பட்ட சின்னசாமி முருகையனுக்கு நினைவில் வருவதற்கு இரண்டே இரண்டு விசயங்கள் தான் இருந்தன. இரண்டுமே கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கதை. அப்போது அவருக்கு என்ன ஒரு பத்து வயது இருந்திருக்கலாம்.

தன் பேரனுக்கும் இப்போது சுமார் பத்து வயது தானிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. அவருடைய ஒரே மகளின் ஒரே பையன். அசப்பில் பார்த்தால் தன் சாயல் இருக்கிறதோ என்று தோன்றினாலும் அதைத் தானாக வெளியே சொல்லிக் கொள்ள மாட்டார்.

பணிப்பெண் வாழ்த்தியதைப் போல, உண்மையிலேயே அவருக்கு இன்றைக்கு நல்ல நாள் தான். பல மாதங்களுக்குப் பிறகு மகளும் பேரனும் இன்று அவரைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.

“என்னட அம்மா(யி)யப் பாத்துட்டு வரலாம் வா” என்று தான் அவருடைய அம்மாவும் அப்போது பள்ளி ஆண்டிறுதி விடுப்பில் செம்மண்காட்டுவலசுக்கு அழைத்துப் போயிருந்தார். அந்த ஆத்தாவுக்குச் சொந்தமாக ஏதேனும் பெயர் இருந்ததோ என்னவோ! அம்மாயியின் அம்மா. அல்லது அம்மாவின் அம்மாயி. எல்லோருக்குமே அவர் செம்மண்காட்டுவலசு ஆத்தா தான்.

ஆத்தாவைப் பற்றிச் சின்னச் சின்னசாமிக்குப் பெரிதாக ஒன்றும் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு வயதான, பக்கத்தில் போனால் சற்றே வாடை அடித்த ‘வெள்ளச் சீலக்கார ஆத்தா’ தான்.

“வாரம் ஒருக்கா குளிச்சுட்டாப் போதும்னு உட்டுட்டோம். யாரு வாரா பாக்கறதுக்கு? இல்ல, இவிய தான் எங்க போறாங்க?” என்று அந்த வீட்டு அத்தை ஒருவர் சொன்னார். “ஆத்தா னாலையும் எந்திரிச்சுப் பொடக்காலிக்கு வார முடியறதில்ல. அதுனால, தெனமும் ஒருக்கா இவடத்துகாலயே தொடச்சி விட்டுருவோம்”

கண்கள் இடுங்கி, தோல் சுருங்கி, பல்லில்லாத வெறும் வாயும் அதைச் சதா அசைக்கும் நாக்கும் கொண்ட அந்த ஆத்தா, ஆசையாய்ப் பார்த்து, “வாடா ராசா” என்று தொட முற்பட்டாலும் சின்னுவிற்குப் பயமாகத் தான் இருந்தது அப்போது.

“மாட்டேன்” என்று அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்.

“போ சாமி, போ. ஆத்தா ஆசையாக் கூப்பிடுது பாரு”, என்று அருகிருந்த யாரோ வற்புறுத்தினாலும், ஒரு நிமிடம் இருந்துவிட்டு மீண்டும் அம்மா பின்னே ஒளிந்தார். அந்த ஒரு நிமிட அருகாமை கூட ஆத்தாவுக்கு ஆனந்தத்தையோ, வேறு ஏதேனும் உணர்ச்சியையோ கொடுத்திருக்க வேண்டும்.

“இப்போல்லாம் கண்ணும் கொஞ்சம் மங்கிப் போச்சாட்ட இருக்குது. எடது காதும் சுத்தமாக் கேக்கறதில்ல” என்று அவர் இருப்பதைப் பொருட்படுத்தாது அம்மாவிடம் அந்த அத்தை சொல்லிக் கொண்டிருந்த போது சின்னசாமி ஆத்தாவைத் திரும்பிப் பார்த்தார்.

கொள்ளுப் பேரனை உணர்ந்து கொண்ட சந்தோசத்தில் இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்து கொண்டிருந்தது ஆத்தாவின் குழிவிழுந்த கண்களில் இருந்து.

“லாஸ்ட் இன் சம் டீப் தாட்ஸ் சின்னூ?”

கண்களின் இருப்பைப் பெரிதாக்கிக் காட்டிய பெருத்த கண்ணாடி அணிந்த பக்கத்து அறையின் பிராங்க் தன் தடியை ஊன்றியபடி வந்து அதே மேசையில் அமர்ந்து தனது தேநீரைக் குடிக்கத் தொடங்கினார். அசப்பில் வாரன் பஃபெட் போல இருப்பார். ஆனால் அவ்வளவு காசு பணம் இருந்திருந்தால் இங்கே வந்து தங்கியிருக்க மாட்டார்.

“யூ சீம் ஹேப்பி டுடே”

உணர்ச்சிகளைக் கட்டுக்கள் வைத்திருக்கத் தெரிந்தவன் என்று நினைத்துக் கொண்டாலும் இன்றைய மகிழ்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது போலும். சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினாலும், மகள் தொலைபேசிய போதிருந்து உள்ளத்தினுள் சற்றுக் குதூகலம் நிறைந்து தான் கிடந்தது. ‘என் பேரன் வரான்யா’ என்று துள்ளிய மனதைச் சற்றே மட்டுப் படுத்தி,

“மை கிராண்ட்சன் அண்ட் டாட்டர் ஆர் விசிட்டிங் மீ டுடே”, என்றார்.

“ஓ! ஐ சீ. இட் மஸ்ட் பீ அ ஹேப்பி டே ஃபார் யூ தென் !”

இதுவரை வாழ்ந்த காலம் அவருக்கு இனிய நாட்களாகத் தான் இருந்தன. இதே ரவுட் 50யில் தான் இருபது வருடமாய்க் காலையிலும் மாலையிலும் வீட்டுக்கும் அலுவத்திற்குமாய்ச் சாலை நெரிசலில் முக்கால் முக்கால் மணி நேரம் சென்று வந்திருக்கிறார் சின்னூ.

‘சன்ரைஸ் அசிஸ்டடு லிவிங்’ என்று ஒன்று இருக்கிறது என்று தற்செயலாகக் கவனித்திருந்தாலும், ஒருநாள் தானும் இங்கு வந்து வாழ்வோம் என்று நினைத்துப் பார்க்கவில்லை அவர். அன்பான மனைவி இருந்தவரையில் இனிமையாய் இருந்த வாழ்க்கை அவர் திடீரென்று ஒரு வருடம் முன்பு இறந்த போது தலைகீழாக மாறிவிட்டது.

உடல்நிலையில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்றாலும் உடல் சற்றே தளர்ந்த நிலையில் தனியே பெரிய வீட்டில் இருப்பது உசிதமல்ல என்று விற்றுவிட்டு இங்கு வந்து சேர்ந்துவிட்டார். அப்படி ஒன்றும் இந்தச் சூழல் அவருக்குப் பிடித்திருக்கவில்லை தான். இருந்தாலும் ஒருவருடத்திற்குப் பணம் கட்டிவிட்டதால் வெளியே போகாமல் இன்னும் இங்கேயே இருக்கிறார். ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகு “ஹோல் புட்ஸ்” அருகே இருக்கும் “காண்டோ” ஒன்றிற்குக் குடி போய் விடவேண்டும் என்று யோசனை. இன்று மகள் வரும்போது அவளிடமும் இந்த யோசனையைத் தெரிவிக்கலாம் என்று நினைத்தார்.

பத்துப் பன்னிரண்டு வயது வரை மகளைத் தோளில் சுமந்து விளையாடியிருக்கிறார். ஆனால், இந்த வயதில் பேரனைத் தூக்க முடியாது என்று தோன்றியது. அவனைக் கட்டிக் கொண்டு உச்சி முகர வேண்டும் என்று தோன்றிய போது தான் செம்மண்காட்டுவலசு ஆத்தா ஞாபகம் வந்தது. ஆத்தாவுக்கும் அப்போது அப்படித் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று இப்போது புரிவது போல் இருக்கிறது.

ரொம்ப உற்சாகம் காட்டி அவனைப் பயமுறுத்திவிடக் கூடாது. மெல்ல மெல்ல அணுக வேண்டும். சிறு வயதுப் பிள்ளைகளை வற்புறுத்தாமல் அவர்கள் போக்கில் விட வேண்டும். அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நிறையப் புத்தகம் படிக்கிறானாம். மகளுக்கும் புத்தகம் பிடிக்கும் என்றாலும் பெரும்பாலும் நூலகத்தில் இருந்தே எடுத்துக் கொடுப்பது வழக்கம். இன்று வழக்கம் மாறி பேரனுக்கு என்று சில புத்தகங்களை அமேசான் வழியாக வாங்கி வைத்திருந்தார். தான் தெரிவு செய்தது அவனுக்குப் பிடிக்குமா?

மனைவி இருந்தவரை யாருக்கு என்ன வாங்குவது என்னும் தெரிவு பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தார். அவர் இறந்த பிறகு அதிகமாக எங்கும் செல்லவில்லை. யாருக்கேனும் அன்பளிப்பாக என்ன வாங்குவது என்று தெரியாமல் தடுமாறுவார். சிலசமயம் மனைவியைப் பின் தொடர்ந்து தானும் சாவுக்குக் காத்துக் கொண்டிருக்கிறோம் போலும் என்னும் எண்ணத்தை வலுக்கட்டாயமாகத் துடைத்து எறிவார்.

ஆத்தாவைப் பற்றிய நினைவில் இருந்த இரண்டாவது விசயமும் அந்த ஆத்தாவின் சாவைப் பற்றியது தான். படுத்த படுக்கையாய் இருந்த ஆத்தா செத்துப் போன போது சுத்துப் பத்துச் சொந்தமெல்லாம் வந்து கூடியிருந்தது. மூன்று தலைமுறைச் சொந்தமல்லவா?

முதன்முதலாய் இறந்த ஒருவருக்கு மூக்கில் துணி வைத்திருந்ததையும் கால்களின் கட்டைவிரல்கள் கட்டப்பட்டிருந்ததையும் அன்று தான் பார்த்தார் சின்னசாமி. மாடத்தில் ஒரு எண்ணெய் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருந்தது.

“மூக்கில எதுக்குமா துணி வச்சுருக்காங்க” என்று அம்மாவிடம் கேட்டபோது அவருக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை.

சுடுகாட்டுக்கு ஆத்தாவைச் சுமந்து செல்லும் முன் பேரன்கள் பூ போடவேண்டும் என்று நிறைய மல்லிகைப் பூக்களை உதிரியாகத் தட்டில் குவித்து வைத்திருந்தார்கள். ஆத்தா விட்டுப் புழக்கடையிலேயே மல்லிகைப் பூச்செடி நிறைய இருந்தது. குளிக்கும் நீர் சலதாரை வழியாகப் பாய்ந்ததில் செடி எப்போதும் பூத்துக் குலுங்கி இருக்கும்.

Image Courtesy:http://songs-i-love.blogspot.com/2008/08/song-zuying-molihua-jasmine-flower-and.htmlஆத்தா உயிருடன் இருந்தபோதே போய் கட்டிக் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றிய எண்ணத்தோடே, ‘நல்லா பூவாச்சியும் போடலாம்’ என்று சின்னசாமி தட்டுப் பக்கத்தில் போன போது,

“நீ என்னப்பா பன்றே? ஆம்பேரன் தான் பூப் போடணும்; பொம்பேரன் எல்லாம் போடக் கூடாது” என்று அவரை ஓரமாக உட்கார வைத்து விட்டார்கள். சொந்த மாமா, ஒன்றுவிட்ட மாமா, என்று எல்லா மாமா பையன்களும் வரிசையாக வந்து பூ போட்டுவிட்டுச் சென்றார்கள்.

“போட்டா என்ன ஆச்சு? உடுங்காயா” என்று யாரோ குரல் கொடுக்க, “அதெப்படீங்க, மொறையின்னு ஒன்னு இருக்குல்ல” என்று அழுது முடித்திருந்த கூட்டத்தில் இருந்து வேறு யாரோ சொன்னார்கள்.

‘இவனுங்க எல்லாம் ஒரு தடவ கூட ஆத்தாவப் பாத்திருக்க மாட்டானுங்க’ என்று மனதுக்குள் நினைத்தவாறே தட்டோரமாய் இருந்த இரண்டு மல்லிகைப் பூவைக் கையில் எடுத்துக் கொண்டார். தன்னைக் கட்டிக் கொண்டபோது ஆத்தா கண்ணில் வந்த சொட்டுக் கண்ணீர்த் துளியினால் நெருக்கமாய் உணர்ந்து யாரும் பார்க்காத நேரமாய் ஆத்தாவின் மீது மல்லிகையை வீசினார்.

“மிஸ்டர் சின்னூ… லுக்ஸ் லைக் யூ ஆர் டே ட்ரீமிங்…” என்று கனவைக் கலைத்துச் சென்றாள் வெளிர்நீலி.

விருந்தினர் நேரத்திற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. இருந்தாலும் வரவேற்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் சின்னூ.

வாசிங்டன் டிசியில் தான் இருக்கிறாள் மகள். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம். ஆனாலும் பாவம், வாரம் முழுதும் வேலையும், பையனைப் பள்ளிக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் அனுப்புவதும், வார இறுதிகளிலும் நண்பர்களைப் பார்ப்பதும், பிற வீட்டு வேலைகளுமாய் மும்முரமாய் இருப்பவளை, “இன்னும் கொஞ்சம் அடிக்கடி வந்து போம்மா” என்று கேட்கத் தயக்கமாய் இருந்தது அவருக்கு.

எப்படியும் வாரம் ஒருமுறையோ, மாதம் இரண்டு முறையோ தொலைபேசியில் அழைத்துப் பேசுவாள். நேரில் வந்து தான் இப்போது பல மாதம் இருக்கும். அவளுடைய கணவன் அமெரிக்க நடுவண் அரசில் வேலை செய்கிறான். அவனைப் பற்றிச் சொல்ல… வேண்டாம் அது தனிக் கதை.

வரவேற்பறையில் அன்றைய செய்தித்தாள் பிரிக்கப் படாமல் கிடந்தது. பெரிதாய் ஆர்வமின்றித் தொடாமலே பார்த்தார் சின்னூ. இருபது நிமிடம் கடந்திருக்கும். கதவு திறந்தது. மகள். மலர்ச்சியோடு எழுந்தார்.

“வாம்மா… நல்லாருக்கியா?”

அருகே வந்து கட்டிக் கொண்டாள். “நல்லா இருக்கேன் அப்பா. நீங்க எப்படி இருக்கீங்க?”

பின்னால் கதவு மூடியது. பேரன் மருமகனுடன் வருவானாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து வைத்து வெளியே தேடினார். உள்ளே வரும் வழி யாருமற்று வெறுமையாக இருந்தது. தேடும் கண்களைப் பார்த்தவள் தயங்கியபடியே சொன்னாள்.

“உங்க பேரனுக்கு இன்னிக்கு திடீர்னு சாக்கர் பிராக்டீஸ் வச்சுட்டாங்க அப்பா. அதான் அவனால வர முடியல்லே. இல்லன்னா வந்திருப்பான்”

பொய் சொல்கிறாள். தான் வரவில்லை என்று சொல்லி இருப்பான் கணவன். ‘அப்பா கூடவே இருந்துக்கறேன்’ என்று பேரனும் சிணுங்கி இருப்பான். வற்புறுத்த மனமில்லாமல் இவள் மட்டும் வந்திருப்பாள்.

“ஓ அப்படியாம்மா? சரி பரவாயில்ல விடு. அடுத்த தடவ பாத்துக்கிட்டாப் போச்சு!”

முகத்தில் உணர்ச்சியைக் காட்டக் கூடாது என்று தான் முன்பு போல் இப்போதும் நினைத்தார். அது வெற்றியடைந்ததா தெரியவில்லை.

“இந்தாம்மா… இந்தப் புத்தகங்களை அவன் கிட்டக் குடுத்துடு”. புத்தகத்தை எடுக்கும் சாக்கில் ஒரு நிமிடம் திரும்பிச் சுதாரித்துக் கொண்டார். “பேரனுக்குப் பிடிக்கும்னு நினைச்சு வாங்கினேன்”

கைகளில் வாங்கிக் கொண்டவள் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். செம்மண்காட்டுவலசு ஞாபகம் வந்தது அவருக்கு. ‘எம் பேரு தெரியுமா அவனுக்கு?’

“ஏம்மா, ஹோம் டிப்போவில ஒரு தடவை கிடச்சுதுண்ணு தொட்டியில மல்லிகைப்பூ வாங்கி வச்சோமே ஞாபகம் இருக்கா உனக்கு?”

“ஜேஸ்மின் தானேப்பா… சொல்லுங்க… நல்லா வாசமா இருக்குமே”

“அது எனக்கு ரொம்பப் பிடிச்ச பூவுன்னு ஒரு நாள் உன் மகன் கிட்ட சொல்லு”.

“ம்”, அவள் குரல் லேசாகக் கம்மியது.

“அப்பா…”

“சொல்லும்மா”

அவர் கையைப் பிடித்துக் கொண்டு மெல்ல விசும்பினாள்.

“ஆத்தா கிட்ட போன்ல பேசு பேசுன்னு என் சின்ன வயசுல நீங்க சொன்னப்போ நான் பேசியிருக்கணும்ப்பா. அதுக்காகவாவது அப்பவே நான் தமிழ் படிச்சிருக்கணும்”

சின்னசாமி ஒன்றும் சொல்லவில்லை. மகளின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டு கனிவாகச் சிரித்தார்.

கிளம்பும் நேரம் ஆகிவிட்டது. தோளைப் பற்றியபடி கதவுவரை வந்தவர், ‘அடிக்கடி வந்து போம்மா’ என்று சொல்ல நினைத்து “எப்பவும் சந்தோசமா இரும்மா” என்றார்.

* * * *

Tags: சிறுகதை

10 responses so far ↓

  • 1 கெக்கெ பிக்குணி // Jul 25, 2009 at 9:11 am

    கதை எதிர்பார்த்தாப் போல போனாலும், நடையும் புனைவும் நல்லா இருக்கு.

    50 + 10 = 60. அறுபது வயசிலெல்லாம் தள‌ர்ந்துடறாங்களா? இன்னும் கொஞ்சம் வயசாளியா சொல்லியிருந்திருக்கலாம்.

  • 2 செல்வராஜ் // Jul 25, 2009 at 11:30 pm

    நன்றி கெக்கெ பிக்குணி. நீங்கள் சொல்வது உண்மை தான். இதற்கு முன்னர் ஒரு கதை எழுதி இந்த வயசுப் பிரச்சினையால் பாதியிலேயே விட்டுவிட்டேன். யோசிச்சு யோசிச்சுத் தான் எழுதினாலும், சரியான இடத்தில் ஓட்டை கண்டுபிடிச்சிடறீங்களே 🙂 இருப்பினும், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. சீராக்கிக் கொள்ள உதவும்.

  • 3 Rathinamurthy // Jul 26, 2009 at 6:28 am

    அருமையான நடை. வயதானவங்க உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிற விதம் நல்ல இருக்கு.
    நன்றி
    இரத்தினமூர்த்தி

  • 4 குறும்பன் // Jul 26, 2009 at 6:02 pm

    சில தாத்தா\பாட்டிங்க தன் பேர பிள்ளைகளோட பேச முடியாம தடுமாறுவதை நினைத்து வேதனைப்படுவதை பார்த்திருக்கிறேன். இது அவர்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் திரும்ப கிடைக்காத பெரிய இழப்பு.

    சின்னுசாமி பொண்ணுக்கும் தமிழ் தெரியாதா? 🙁
    கதையின் கருத்து & சொல்லிய விதம் அருமை.

  • 5 செல்வராஜ் // Jul 27, 2009 at 9:54 pm

    இரத்தினமூர்த்தி, பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

    குறும்பன், சின்னுசாமி பொண்ணுக்குக் கதை-நிகழ்காலத்துல தமிழ் தெரியும். சின்னதா இருக்கறப்ப முழுசா தெரியல்லே. (கொஞ்சம் பெருசானப்புறம் நம்ம மொழி, வேர்னு ஆர்வம் வந்து படிச்சிருக்குமா இருக்கும் 🙂 ). ஊக்கத்திற்கு நன்றி.

  • 6 revathinarasimhan // Aug 18, 2009 at 10:28 am

    எத்தனை உணர்வுகள். அருமையான நடை.
    அமெரிக்காவில் வயதானவர்களின் கதி இப்படியா.
    அவர் நினைத்தைதான் சொல்லவில்லை.

    உலக முழுவதும் வயதானால் இந்தத் துன்பம் தான்.
    எங்கேயோ ஒரு சங்கிலி விட்டுப் போகிறது.

    நன்றி செல்வராஜ்.

  • 7 இரா. செல்வராஜ் // Aug 19, 2009 at 9:50 pm

    ரேவதிநரசிம்மன், உங்களது பாராட்டுக்கு நன்றி. இதை ஒரு கதையாகத் தான் எழுதி இருக்கிறேன். ஆனாலும் சில இடங்களில் நிகழ் சாத்தியத்துக்கு அருகில் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

  • 8 பாலாஜி-பாரி // Aug 20, 2009 at 11:43 pm

    நாங்க முன்பிருந்த வீட்டின் உரிமையாளரின் தாய், 75 வயது மூதாட்டி. பக்கத்து வீட்டுல இருந்த மூதாட்டிக்கு 70 வயது. இருவரும் நல்ல நண்பர்கள். உரிமையாளரின் தாய்க்கு அவ்வீட்டில் தனியே இருக்க உடல் நலம் இடங்கொடுக்காததால் அவர் அந்த ஊரில் இருக்கும் முதியோர் நிலையத்தில் சேர்ந்துவிட்டார். ஆகையால் அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டு நாங்கள் அங்கே இருந்தோம். பக்கத்து வீட்டுக்காரம்மா எங்ககூட நல்லா பழகினாங்க. ஆனா தன்னோட நண்பி வாழ்ந்த வீடுன்னு சொல்லும் போதெல்லாம் கண்ணீர் வரும் அவங்களுக்கு.
    நாங்க சந்தர்ப்பம் வரும் போதெல்லாம், உரிமையாளரின் அம்மாவை, பக்கத்து வீட்டு பாட்டியுடன் சேர்ந்து கொண்டு சிற்றுண்டிக்கு அழைத்தோ அல்லது அவரது முதியோர் நிலையத்தில் சந்தித்தோ வந்துள்ளோம். அந்த சமயத்தில தோணும், நட்பு-ங்கிறது வாழ்வின் ஒரு மைய நீரோட்டம்-னு. பக்கத்து வீட்டு பாட்டி (எங்க வீட்டு பாப்பா இப்படித்தான் சொல்லும்) தான் எப்போ அந்த இடத்துக்கு போவேணுமோன்னு பயப்படற மாதிரியெல்லாம் என் நினைப்பு ஓடும். இந்த சந்திப்புகள் கட்டாயமா ஒரு பதில் இல்லாத உண்ர்வுகள கேள்வியா எழுப்பிட்டு அலை கழிச்சது மட்டும் உண்மை.

  • 9 giri // Aug 30, 2009 at 8:09 am

    it is very nice but little deeper feelings required,padikkirappo kannula thanni varanumda,just try that.

  • 10 இரா. செல்வராஜ் // Sep 1, 2009 at 7:08 pm

    நீங்க சொல்றதும் சரிதான் கிரி. இப்பத் தான் சிறுகதை எழுத முயன்று கொண்டிருக்கிறேன். இந்தக் கதையைச் சொல்லச் சொல்லி என் மகள் கேட்டாள். சொல்ல ஆரம்பித்து இரண்டு மூன்று நிமிடத்தில் முடிவை ஊகித்து விட்டாள். அவளுக்குப் பெருமை. எனக்கு ஆச்சரியம். எதிர்பார்த்த முடிவு என்று பிறர் சொன்னதை விட ஒரு பத்து வயதினள் சொல்வது ஆழமாகப் பதிகிறது. உங்களுடைய விமர்சனங்களும் வளர உதவும். நன்றி. (ஆனா வெறும் உணர்வுகள மட்டும் வைத்துக் கொண்டு எல்லாக் கதையையுமே எழுதுவதை சிலர் தவிர்க்கச் சொல்லி இருக்கிறார்கள்).