இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இந்தியா 2008 – சென்றதும் வந்ததும்

September 16th, 2008 · 16 Comments

‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன்.

ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி பாத்த ஊரு பெருசா மாறி இருக்காதுன்னு நெனச்சா ஆச்சரியந் தான் மிஞ்சும் போங்க. எங்க போனாலும் சதுரடிக் கணக்குப் பேசுறாங்க. வேளச்சேரியில இருந்து வீரப்பன்சத்திரம் வரைக்கும் ‘கம்முன்னு அன்னிக்கே நெலத்த கிலத்த வாங்கிப் போட்டிருந்தா…’ன்னு ஏமாத்தத்தப் பேசி ஆத்திக்கிறாங்க. காடாக் கிடந்துது. இன்னிக்கு ஊருக்கு மத்தியில வந்துருச்சு. பெருந்துறை வரைக்கும் வளந்துருச்சு ஊருன்னு பேசுறப்போ நமக்கே அப்படித் தான் தோணுது. அன்னிக்கே திண்டல் பக்கத்துல எதாவது வாங்கிப் போட்டிருந்தா…

‘வந்தீங்கன்னா கல்லூரி ஆசிரியர் வேலை நிச்சயமா கெடைக்கும்’னாங்க. இருக்குற காலேஜுக்கெல்லாம் பாடம் நடத்த ஆளே கெடைக்கறதில்லையாம். தமிழ்நாட்டுல இன்னித் தேதிக்கு முன்னூத்தியம்பது பொறியியல் கல்லூரி இருக்கு. பொறியியல் கல்லூரி மட்டும். இப்போல்லாம் யாரும் தனியா ஒரு காலேஜு ஆரம்பிக்கறதில்லையாம். அப்படியே ஒரு பல்கலைக்கழகமா ஆரம்பிச்சு, வகைக்கொண்ணா எல்லாத்துலயும் ஒரு காலேஜு கட்டிடறாங்களாம்!

பெருந்துறை ரோட்டுல ராணா கல்யாண மண்டபம்னு ஒரு பெரிய மண்டபம் இருந்துச்சு. அத இப்போ வித்துத் தரைமட்டமா இடிச்சு வச்சுருக்காங்க. வால்-மார்ட் வருதாம்னாங்க. இல்லை, ரிலையன்சுக்காரன் வாங்கிப் போட்டிருக்கான்னாங்க இன்னொருத்தரு. அவ்வளவு பெரிய மண்டபத்த இடிச்சு வச்சுருக்கறதப் பாத்தா எடத்துக்கு எவ்வளவு டிமாண்டு இருக்குதுன்னு தெரியும். அடுத்த தடவ போறதுக்குள்ள அந்த எடமும் அடையாளம் தெரியாம மாறிப் போயிருக்கும்.

‘எனக்குத் தெரியாத ஈரோடா’ன்னு ஈசுவரன் கோயில் சந்து பொந்துக்குள்ளயெல்லாம் பூந்துட்டு வந்தேன். ஊருலயே இருக்கற நண்பர், ‘நானும் அப்படித் தான் நெனச்சேன். ஆனா ஊரு எங்கியோ போயிருச்சு’ன்னார். அது முழுசும் நெசந்தான்னு நானும் தெரிஞ்சுக்கிட்டேன்.

எல்லீசுப்பேட்டைக்கிட்ட பை-பாசு வருது. அந்தப் பக்கமெல்லாம் வெலை ஏறிடும்னாங்க. நெடுஞ்சாலைங்க எல்லாம் நல்ல தரமாப் போட்டுக் கிட்டிருக்காங்க. பத்து வருசத்துல திருப்பூர்ல கூட ரோடெல்லாம் நல்லாப் போட்டுட்டாங்க. திருப்பூரு, ஈரோடு எல்லாம் மாநகராட்சியா மாறிடுச்சுன்னும் வெலை எல்லாம் ஏறிப்போச்சாம். தமிழ்நாட்டப் பொருத்த வரைக்கும் உள்ளூர் சாலைங்க கூட நல்லாத் தான் இருக்கு. என்ன? அங்கங்க வேகத் தடைங்க நெறையப் போட்டு வச்சுருக்காங்க. கடசிச் சீட்டுல உக்காந்து பஸ்ஸுல போனீங்கன்னா அத நல்லாத் தெரிஞ்சிக்கலாம். அப்படித் தான் ஒரு நாளு நெய்வேலிக்கு போயிட்டு வந்தேன். சொகுசு பஸ்ஸுல போனாலும் ரோட்டோரமாத் தான் ஒண்ணுக்கடிக்க எறக்கி விடுறாங்க. பிளாஸ்டிக் கப்புல டீயக் குடிச்சிட்டு அப்படியே ரோட்டுல எறிஞ்சுடறாங்க. அப்படி எறியாதீங்கன்னு சொன்னா, இல்லாட்டி என்ன பண்றதுன்னு கேட்டுட்டாங்கன்னா பதில் சொல்லத் தெரியாதேன்னு கம்முனு இருந்துக்கிட்டேன். மத்த ஊரு மாதிரி இல்லாம நெய்வேலி கொஞ்சம் அமைதியா இருந்துச்சு. வெளியூர்க்காரனுக்கு நல்லாத் தான் இருக்கும். இங்கியே இருக்கறவனுக்கு இப்படி இருக்கறதுல சுவாரசியமே இல்லைன்னாங்க.

சென்னைக்கும் ரெண்டு தடவ போயிருந்தேன். சென்னையின் ரெண்டு பக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சம் பாக்க முடிஞ்சுது. ஒரு பக்கம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. மறுபக்கம் பிரமிப்பா இருந்துச்சு. வளர்ச்சி ஒரு பக்கமும், விடுபட்டுப் போன மறுபக்கமும் முரணா இருந்துச்சு. அவசரமா வளர்ற ஊருல இப்படித் தான் இருக்குமோ? பணம் தாராளமாப் புழங்குது. எங்கிருந்துங்க வருதுன்னு ஆச்சரியமா இருக்குது. அசெண்டாசுக்குள்ளறப் போனா வெளிநாட்டுப் பண்டமெல்லாம் வேணுங்கற மாதிரி கெடைக்குது.

எல்லா ஊரும் கூட்டமா இருந்துச்சு. மக்கள் எல்லாம் இப்போல்லாம் அதிகமா வெளீல போறாங்களாட்டருக்குது. ஈரோடு கோபி பஸ் ஒன்னு கூடக் காலியாப் போகலே. அத்தன பள்ளிக்கூடம் காலேஜு ஆரம்பிச்சாலும், எல்லாத்துலயும் பசங்க புள்ளைங்க கூட்டம் கூட்டமாப் போறாங்க. படிப்பறிவு அதிகமாகும்னு ஒரு பக்கம் அது சந்தோசமா இருந்துச்சு.

ஈரோடு புத்தகக் கண்காட்சியில நல்ல கூட்டம் கூடியிருந்துது. நாலு கோடி ரூவாய்க்கு இந்த வருசம் வித்துருக்குது! நான் போயிருந்தப்போ ஒரு நாளு, ‘சிறகை விரி; பற’ங்கற தலைப்புல அந்தம்மா பாரதி பாஸ்கர் அருமையாப் பேசுச்சு. இன்னொரு நாளு மத்தியானமா போயிருந்தேன். பள்ளிக்கூடம், கல்லூரில இருந்து பஸ்ஸு பஸ்ஸாக் கூட்டம் வந்துருந்துது. அந்த வெய்யல்ல வரிசையா நடந்து போறப்போ சில புள்ளை பசங்க காலுல செருப்பே இல்லாமப் போனாங்கன்னு பாத்தேன். வறுமை காரணமான்னு நெனச்சேன். வேற காரணங்க கூட இருக்கலாமுன்னு டிவிட்டர் வழியா நண்பர்கள் அபிப்பிராயப் பட்டாங்க. தெரியலீங்க.

‘எல்லாப் பொருளும் இங்கியே கெடைக்குது. எதுவாயிருந்தாலும் சரி’ன்னு ஒரு நண்பன் சொன்னான். அவஞ்சொல்லித் தான் தெரிஞ்சுக்கணும்னு இல்லை. வெளிப்படையாவே தெரியுது. பாதிச் சாமான் சீனாவுல இருந்து அமெரிக்கா போயி அங்க இருந்து இங்க கொண்டாரதுக்குள்ள சீனாக்காரன் நேரடியா இங்கியே இறக்கீர்றான். ‘சார், சைனா மாடல் சார்’னு அதத் தனியா சந்தைப் படுத்தரதக் கூடப் பாத்தேன். மல்லிகை அரங்கத்துல, வீட்டுப்பொருள் கண்காட்சின்னு ஒண்ணு போட்டிருந்தாங்க. நிம்மதியா எதையும் பாக்க முடியாத அளவுக்கு அத்தன கூட்டம். திருப்பதில மாதிரி கூட்டத்தக் கட்டுப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா உட்டுப் பாத்தாங்க. சமாளிக்க முடியலடா சாமி. வெளிய வர்ற எடத்துல ஒரு அப்பளம் வாங்குணதோட சரி.

சாமின்னதும் ஞாபகத்துக்கு வருது. வேலூருக்குப் பக்கத்துல ஒரு அய்யா தானும் அம்மான்னு சொல்லிக்கிட்டு தங்கத்தால ஒரு கோயில் கட்டி வச்சிருக்கார். பாக்கறதுக்கு வித்தியாசமாத் தான் இருக்குன்னு நெனச்சாலும், அது எனக்கு ஒரு சுற்றுலாத் தளமாத்தான் பட்டுச்சு. அது சரி, திருப்பதியவே அப்படி நெனக்கிற நமக்கு இது எந்த மூலை? நச்சத்திர வடிவத்துல பாதை அமைச்சு நிறைய நடக்க உடறாங்க. தங்கப் பகுதிங்களக் கையில தொடக்கூட முடியாதபடி வெவரமாத் தான் வரிசைய அமைச்சிருக்காங்க. லச்சுமி அம்மா நாராயணி வாழ்க.

அதுக்கு முன்னாடி திருவண்ணாமலக் கோயிலுக்கும் ஒரு நடை போயிருந்தோம். பிரம்மாண்டமா இருந்துச்சு. மத்தியான்ன வெய்யல்ல உள்ளாங்காலு பழுத்துருச்சு. பவுர்ணமி பவுர்ணமிக்கு வண்டி வண்டியா வெளியூர்ல இருந்து கிரிவலத்துக்கு ஆளுங்க வர்றாங்களாம். ரஜினிகாந்து அருணாச்சலேசுவரான்னு படம் எடுத்ததுக்கு அப்புறம் கூட்டம் நெறயா வருதாம். ஊர விட்டு வெளிய போகும்போது தூரத்துல அண்ணாமலை அழகாத் தெரிஞ்சுது! ஆந்திராவுக்குள்ள காணிப்பாக்கம்னு ஒரு ஊரு இருக்கு. அங்க இருக்கற புள்ளையாரு விசேசமானவர் வான்னு ஒரு நண்பர் இழுத்துக்குட்டுப் போனாரு. அதுவும் நல்லாத் தான் இருந்துச்சு. திருப்பதிக்காரங்க தான் இந்தக் கோயிலையும் நடத்தறாங்கன்னு அங்கியே திருப்பதி லட்டு வித்தாங்க. வாங்கிக்கிட்டோம்.

ஊருல இந்த அளவுக்குக் கரண்டு போயிப் போயி வர்றதப் பாத்துப் பல வருசம் ஆச்சு. ஒரு நாளைக்கு நாலஞ்சு மணி நேரம் கரண்டு இல்லாமப் புழுங்குது ஊரு. ஏன் பிரச்சினைன்னு தமிழ்ப்பேப்பருல வெளம்பரம் போட்டு வெளக்குது அரசு. நான் அங்கிருந்தப்போ தான் ஈரோட்டு அமைச்சர் NKKP ராஜாவுக்குக் கல்தா கொடுத்தாரு கலைஞரு. கொஞ்சமாவா ஆடுனாரு அந்த ஆளுன்னு ஊருக்குள்ள பரவலாப் பேசிக்கிட்டாங்க. அப்படிப் பேரு கெடற அளவுக்கு மாட்டிக்கிற மாதிரி ஆடுனா பிரச்சினை தான். மத்தவங்களும் நெறயாக் காசு பணம் பாக்குறாங்கன்னு பேசிக்கிறாங்க. கலைஞரச் சுத்தி நாப்பத்திச் சொச்சம் பவர் செண்டரு இருக்குதுன்னுக்கிட்டாங்க. சுத்தி வளச்சு இல்லாம நேரடியா சம்பந்தப் பட்டவங்க கிட்ட இருந்து இதெல்லாம் கேக்குறப்போ ‘சே’ன்னு ஆயிடுது.

iyanthiram, thirikai, nerichchaankalluஅம்மா பருப்பு பயிறு எல்லாம் கொஞ்சம் பொடச்சு நெரிச்சுக் குடுத்தாங்க. கடசி நிமிசத்துல அதையும் இதையும் பாத்து அவசரப் பட்டுக்கிட்டிருந்ததுலயும் ஒரு நல்லது இருக்குது. அட்டப் பொட்டியக் கட்டறதுக்குச் சரட்டுநூல் கயிறே போதும்னேன். சரியாத் தான் இருந்துச்சு. இருந்தாலும், ‘தள்றா, கட்டறாம்பாரு…’ன்னு அப்பா கட்டிக் குடுத்தது நல்லதாப் போச்சு. என்னட கட்டு விமான நிலையம் வரைக்கும் கூடத் தாங்கி இருக்காது! பொட்டியத் தூக்கிக் காரில் வைக்கப் பக்கத்து ஊட்டுக்காரங்க எல்லாம் உரிமையோட வந்தாங்க.

காருல கோயமுத்தூரும் பிறகு கோயமுத்தூர்ல இருந்து மும்பை வழியாவும் திரும்பி வந்தோம். மும்பைக்காரங்க மறுபடியும் என்னைக் கொஞ்சம் அலைக்கழிச்சுட்டாங்க. எதாவது பிரச்சினை இல்லாம மும்பை என்னை இதுவரை விட்டதே இல்லை.

இத்தனையையும் மீறி ஊரு ஈர்த்து இழுக்கத் தான் செய்யுது. மனசக் கொஞ்சம் ஓடவிட்டாக் கேள்விங்க நெறயா வருது. ‘பாக்கலாம், பாக்கலாம்’னு இப்போதைக்குச் சொல்லி வச்சுக்கிறேன். மறுபடியும் அடுத்த வருசம் வரப் பாக்குறேன்.

Tags: கொங்கு · பயணங்கள் · வாழ்க்கை

16 responses so far ↓

  • 1 `மழை` ஷ்ரேயா // Sep 16, 2008 at 2:08 am

    ஊருக்குப் போறத நினைக்கிறதிலேயும் போறதிலேயும் இருக்கிற சுகம் தனி. சந்தோசமாப் போய் வந்திருக்கீங்க. சின்னவங்களும் கூட வந்தாங்களா?

  • 2 அன்பு // Sep 16, 2008 at 2:44 am

    வணக்கங்க… ரொம்ப நாளாச்சு இங்க சந்திச்சு.
    நல்லாருக்கிங்களா, வீட்டுல, ஊருல சவுக்கியம்தானே.

    நீங்க எவ்ளோ வெரச ஊர் சுத்தினீங்களோ அதைவிட அதிவேகமா இந்தப்பதிவு இருந்துச்சு. பகிர்தலுக்கு நன்றி.

  • 3 செல்வராஜ் // Sep 16, 2008 at 8:14 am

    ஷ்ரேயா, அன்பு, வாங்க, உங்க ரெண்டு பேரையும் இங்க பாத்தும் நாளாச்சு. எல்லோரும் சவுக்கியமே. சின்னவங்க ரெண்டரை மாசம் ஊருல இருந்தாங்க. நான் அதுல கடசி நாலு வாரம் மட்டும்.

  • 4 நாகு // Sep 16, 2008 at 9:08 am

    நானும் வேலூர், திருவண்ணாமலை, காணிப்பாக்கம்(சித்தூர் பக்கத்துல). வேலூரில் புற்றுநோய் வந்து குணமடைந்து வரும் நண்பனைத்தான் பார்த்தேன். பொற்கோயில் பக்கம் போகவில்லை. திருவண்ணாமலை கோயிலில் வெயிலில் நானும் காலை சுட்டுக் கொண்டேன் :-(. ஐம்பது ரூபாய் வரிசையில் போனால் கிட்டத்தட்ட அருணாசலேஸ்வரர் மடியிலேயே உட்கார வைக்கிறார்கள்.

    தாணிப்பாக்கம் – நான் போனவேலையில் ஒரு அர்ச்சகர் கூட பார்க்கவில்லை. சீருடை அணிந்தவர்கள் கும்பலை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளையார் வளருகிறார் என்று அவ்வளவு கும்பல் குவிகிறது அங்கே. வளருவதற்கு என்ன அடையாளம் என்றேன். 70களில் செய்த வெள்ளிக்காப்பு இப்போது செய்த வெள்ளிக்காப்பும் அளவு ரொம்ப வித்தியாசமாம்.

  • 5 ila // Sep 16, 2008 at 1:40 pm

    செல்வா,
    நம்ம ஊரு நம்ம ஊருதான். என்ன தான் இங்க நாம் இருந்தாலும் பெரியமாரியம்மன் விசேசம்னா அங்கேதானே மனசு நிக்குது.

    //கொஞ்சமாவா ஆடுனாரு அந்த ஆளுன்னு//
    ராயல் தியேட்டரு என்னாச்சுங்க? SCP என்னாச்சுங்க? ராணா என்னாச்சுங்க? அட ….. கேபிள் என்னாச்சுங்க? இப்படி நெறையா ஆடிட்டாருங்க. அதான் இப்படி..

  • 6 vAssan // Sep 16, 2008 at 8:00 pm

    வணக்கம் செல்வராஜ். நலமா..?

    சுருக்கமாய் இருந்தாலும் சுவராசியமாக இருந்தது பதிவு. பதிவை விட நீளமாக ஒரு பின்னூட்டம், கீழே !

    நீங்கள் எழுதியிருந்தீர்கள்:

    1
    //ன்னு ஏமாத்தத்தப் பேசி ஆத்திக்கிறாங்க

    இதில் ஏமாத்தம் = ஏமாற்றம், புரிகிறது.. ஆத்திக்கிறாங்க.. இது புரியலை. பேசி மனதைத் தேற்றிக் கொள்கிறார்கள்
    என எடுத்துக் கொள்ள வேண்டுமோ..?

    2
    //அன்னிக்கே திண்டல்

    திண்டல் என்றால் என்ன..?

    3
    //அசெண்டாசுக்குள்ளறப்

    அசெண்டாசு…? என்ன இது! ஏற்கனவே மண்டையில் 3ம் பிறை, 4ம் பிறைகள்(வளர்) வர ஆரம்பித்துள்ளன. நீங்கள் இது மாதிரி சொற்புதிர்களை போட்டு பாவத்தை வாங்கி கொள்ளாதீர்கள்.

    4
    //கொஞ்சம் பொடச்சு நெரிச்சுக் குடுத்தாங்க

    பொடச்சு = புடைத்து, சரி; நெரிச்சுக் கொடுத்தாங்க = ஒரு நிமிடம் தூக்கி போட்டது! நெரிச்சு என்றால் கழுத்தை நெறிக்கிறது போலவா.. ஒன்றும் புரியவில்லை !

    ++

    //பிளாஸ்டிக் கப்புல டீயக் குடிச்சிட்டு அப்படியே ரோட்டுல எறிஞ்சுடறாங்க. அப்படி எறியாதீங்கன்னு சொன்னா,
    //இல்லாட்டி என்ன பண்றதுன்னு கேட்டுட்டாங்கன்னா பதில் சொல்லத் தெரியாதேன்னு கம்முனு இருந்துக்கிட்டேன்.

    🙂 & ;(

    //நெய்வேலி

    நான் அடிக்கடி போய் வந்த ஊர். 30 வருடங்கள் இருக்கலாம், அங்கு கடைசியாக சென்று. நெய்வேலிக்கு போகும் வழி அழகானது. “செம்மண் நிலமும், முந்திரித் தோப்புகளும்”, கண்ணுக்கெட்டும் வரை சமதளமான பச்சை வயல்களை மட்டும் பார்த்தவர்களுக்கு மாறுதலாக இருக்கும்.

    //இத்தனையையும் மீறி ஊரு ஈர்த்து இழுக்கத் தான் செய்யுது.

    அப்படியா! ஊரா அல்லது மனதை விட்டகலாத மனிதர்களா..

    இந்தியா போகணுமுன்னு தூளி கூட ஆவல் வர மாட்டேன் என்கிறது எனக்கு, அம்மம்மா மற்றும் தாய்மாமாக்களை
    நினைக்கிறதைத் தவிர. ஏதாவது நல்லதொரு சூனாமி வந்து மு.க & கும்பல், ஜெஜெ& கும்பல், சோ ராமசாமி, சு.சாமி போன்ற ஆசாமிக்கள் மற்றும் அனைத்து மதவெறியாளர்கள் & சினிமா குப்பைகளை கொண்டு போனால், 12 வருடங்கள் கழித்து இந்தியா சென்று இதனை தீபாவளி போல கொண்டாடலாம் ;))

    நன்றி, தமிழில் எழுத வாய்ப்பளித்தமைக்கு.

  • 7 செல்வராஜ் // Sep 16, 2008 at 11:13 pm

    நாகு, வாங்க. ரெண்டு நாள் முன்னால ட்விட்டருல மேயறப்ப நீங்க அங்கயெல்லாம் போய் வந்ததப் பத்தி எழுதி இருந்ததப் பாத்தேன். நாங்க போனப்போ திருவண்ணாமலையில் கூட்டம் இல்லை. நாங்களும் முன்னாலே உட்காரும் வரிசையிலே தான் போனோம்.

    இளா, நம்ம ஊரு நடப்பு பத்தி நெறயத் தெரிஞ்சு வச்சுருக்கீங்களே. அடிக்கடி போய்வர்றீங்களோ?

    வாசன், வாங்க. உங்களின் பாதிக் குழப்பத்திற்கு நானே காரணம்.
    1. ஏமாற்றத்தில் இருந்து மனம் ஆறுதல் = ஆற்றுதல் = ஆற்றிக் கொள்ளல் = ஆத்திக்கறது என்றாகிறது. (தேற்றிக் கொள்ளல், தீர்த்துக் கொள்ளல் எல்லாம் சரியான புரிந்துகொள்ளலே).

    2. திண்டல் ஈரோட்டுக்கு அருகே உள்ள இடம். சுமார் பத்து கி.மீ தள்ளி இருக்கும். சிறியதாய் ஒரு மலை மீது முருகன் கோயில் உள்ளது. அதன் அருகே இருக்கும் பள்ளி ஒன்றில் தான் உயர்நிலைக் கல்வி கற்றேன். இப்போது நிறையப் பள்ளி கல்லூரிகள், குடியிருப்புகள் என வளர்ந்து விட்டது.

    3. அசெண்டாசு என் தவறு தான். ஆங்கிலத்தில் Ascendas என்று இருக்கும் ஒரு கட்டிடம் (நிறுவனம்?). டைடல் பார்க் ஐ.டி பார்க்-ஐ ஒட்டி உள்ளது. அதனுள்ளே food court ஒன்றினுள் KFC, Subway, McDonalds, Pizza Hut, முதலியன உள்ளன.

    4. நெரிச்சு=நெறித்து என நீங்கள் கொண்டது சரியான பொருள் தான். பாசிப் பயிறு, தட்டைப் பயிறு எனப் பயிறு வகைகளை இந்த நெறிக்கும் கல்லின் இடையே வைத்துச் சுழற்றும் போது இரண்டு கல் பரப்பின் இடையே சிக்கி நெறிபடும் பயிறு உடைந்து பொட்டினை இழந்து பருப்பாகி விடும். பிறகு புடைத்துப் பொட்டை எறிந்துவிட்டுப் பருப்பை வைத்துக் கொள்ளலாம்.

    ஈர்ப்பது ஊரா, மனிதர்களா என்று முக்கிய புள்ளி ஒன்றையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். அது ஒரு கலவை என்றே நினைத்தாலும் மனிதர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை ஒப்புக்கொள்வேன்.

  • 8 `மழை` ஷ்ரேயா // Sep 23, 2008 at 10:27 pm

    //ஈர்ப்பது ஊரா, மனிதர்களா என்று முக்கிய புள்ளி ஒன்றையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். அது ஒரு கலவை என்றே நினைத்தாலும் மனிதர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை ஒப்புக்கொள்வேன்.//

    கலவைதான் செல்வராஜ். நேற்று நூலகத்திலிருந்து எடுத்து வந்த ‘இஸ்லாமியச் சிறுகதைகள்’ தொகுப்பைப் படிக்க ஆரம்பித்ததுமே ஊர் எண்ணம் மேலெழத் தொடங்கியது எனக்கு. மனிதர்களுக்கு முன் நினைவில் வந்தது ஊர் மண்ணும், அதன் புழுதியும், மர நிழல்களும் வெயிலும் தான். கூடவே வாசனைகளும்..
    ——–

    சின்னவங்களுக்கு விடுமுறைக்கு வந்து போற ஊரிலே முளைத்திருக்கிற மாற்றங்கள் தெரிஞ்சுதா? ஏன் கேட்கிறேனென்றால், அவர்கள் பெரியவர்களை விடவும் அவதானிப்பு மிக்கவர்கள். கேட்டுச் சொல்லுங்கள்.

  • 9 vAssan // Sep 24, 2008 at 12:56 am

    இம்மாலை, ஆறுதலாக உண்ட களைப்பு தீர travel channel ஐ கண்ணுற்றிருந்த போது, கண்டதையும் சாப்பிடும் ஸிம்மர்மேனின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

    ஸிம்மர், கோவா, இந்தியாவுக்கு போயிருந்த பகுதி ஓடிக் கொண்டிருந்தது. கோவாவில் ஒரு வீட்டில் இரு உருளை கற்களுக்கு இடையில் பருப்புகள்
    நொறுங்கி விழுவதை கண்பித்தார்கள். நீங்கள் எழுதியிருந்த “பாசிப் பயிறு, தட்டைப் பயிறு எனப் பயிறு வகைகளை இந்த நெறிக்கும் கல்லின் இடையே வைத்துச் சுழற்றும் போது இரண்டு கல் பரப்பின் இடையே சிக்கி நெறிபடும் பயிறு உடைந்து பொட்டினை இழந்து பருப்பாகி விடும். பிறகு புடைத்துப் பொட்டை எறிந்துவிட்டுப் பருப்பை வைத்துக் கொள்ளலாம்,” ஞாபகம் வந்தது.

    தமிழ்நாட்டின் தஞ்சை பகுதிகளில் இதனை ” இயந்திரம்” என அழைப்பார்கள்.

  • 10 செல்வராஜ் // Sep 25, 2008 at 8:33 am

    வாசன், நீங்கள் சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றேதானா என்று தெரியவில்லை. எங்கள் ஊர்ப்பக்கம் இதனை ‘நெறிச்சாங்கல்’ என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். உருளை வடிவம் அல்ல. இரண்டு வட்டக்கற்கள். கீழ்க்கல்லில் நடுவில் ஒரு குச்சி. அவ்விடத்தில் மேற்கல்லில் ஒரு துளை. மேற்கல்லை வட்டமாகச் சுழற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் பிறகு மேற்கல்லை ஒரு ஓரமாகச் சற்றே தூக்கி இறக்கினால், நடுத்துளையில் மேலும் கொஞ்சம் பயிறு இறங்கும். எங்கேனும் படம் கிடைத்தால் போட்டு வைக்க வேண்டும்.

    ஷ்ரேயா,
    உண்மை. கலவை தான். சிலசமயம் வீசுகின்ற காற்று கூட நினைவில் இருக்கும்.
    சிறியவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். ஆனால், முன்பு சென்றிருந்தது வேறூர் (பணி காரணமாய்) என்பதால் அவர்களால் ஒப்பிட முடியவில்லை. தவிர அப்போது இன்னும் பொடிசுகளாய் இருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு. அதற்கும் முன்பு ஊருக்குச் சென்றிருந்தாலும் அப்போது இன்னும் பொடிசுகள், சின்னவளுக்கு அப்போது மூணு வயசு தான்.

  • 11 vAssan // Sep 28, 2008 at 12:33 pm

    நீங்கள் சொல்லியிருப்பதுதான் சரி.

    வலையில் கிடைத்த இரு படங்கள்.

    http://tinyurl.com/iya-nthiram

    http://tinyurl.com/iya-nthiram2

    தற்கால ‘நவீன இந்தியாவில்’ (இது முரண் நகையோ?) கல் கொத்துகிறவர்கள் (இயந்திரம்,அம்மிக்கல் போன்றவற்றை உருவாக்குபவர்கள்) என்ன செய்கிறார்கள்..? அவர்களுடைய விற்பனை பொருட்களுக்கு தேவைகள் உள்ளதா..?

  • 12 vAssan // Oct 1, 2008 at 4:27 pm

    http://tinyurl.com/iyanthram

  • 13 செல்வராஜ் // Oct 1, 2008 at 10:04 pm

    வாசன், படங்களுக்கு நன்றி. இதே தான் நான் கூறியதும். உங்கள் ஊரில் இதனை இயந்திரம் என்பார்கள் என்பது புதிய செய்தி எனக்கு.
    (முதல் பட இணைப்பு முதலில் வேலை செய்தது. பிறகு முறிந்துவிட்டது. இரண்டாவதும் அப்படியே).

  • 14 முத்துலெட்சுமி // Oct 2, 2008 at 11:21 am

    http://sirumuyarchi.blogspot.com/2008/09/blog-post.html இந்த என்னுடைய பதிவில் கடைசிக்கு முந்தின படத்துல இருக்கே திரிகை இதைத்தானே சொல்றீங்க பருப்பு நெரிக்க உபயோகிக்கும் இந்திரம் என்று..

    தில்லியில் அருகில் இருக்கும் மாவு மில்லில் இந்த உளிகொண்டு பெரிய திரிகையில் பள்ளங்களை உருவாக்கிக்கொண்டிருந்தவர்களைப்பார்த்த போது நானும் ..இன்னமும் இவர்களுக்கு வேலை கிடைக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.. நம் ஊரில் கூட சின்ன சின்ன அம்மிக்கல் செய்து தங்கள் வியாபாரத்தில் புதுமை புகுத்தி இருக்கிறார்கள்..

  • 15 செல்வராஜ் // Oct 5, 2008 at 9:07 pm

    முத்துலெட்சுமி, வாங்க. தாமதமாகத் தான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். உங்கள் படத்தில் இருப்பதும் அதே தான். உங்க பக்கம் இதைத் திரிகை என்பீர்கள் என்பதும் எனக்குப் புதிய செய்தி. ஒரே விசயத்திற்கு எத்தனை பெயர்கள்! கருத்துக்கும் படத்துக்கும் நன்றி.

  • 16 செல்வராஜ் // Oct 5, 2008 at 9:17 pm

    வாசன் இணைத்த படம் சுட்டியில் இருந்து நேரடியாகத் தெரியவில்லை என்பதால், அதனைப் பதிவில் இணைத்திருக்கிறேன். நன்றி வாசன்.