• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« இனிக்காதது
புதூர் புகுதல் காதை »

அகத்திணை

Dec 12th, 2006 by இரா. செல்வராசு

பொருள் தேடி வேற்றூர் சென்ற தலைவன் கார்காலம் கழித்து வருவதாய்ச் சொன்னானே, இன்னும் வரவில்லையே என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த தமிழ்ப்பெண்ணைத் தலைவியாய் வைத்துப் பாடிய சங்கப் பாடல்கள் ஆயிரங்காலத்துக்கும் முன்புண்டு தமிழ் மரபில்.

இன்னும் ஏன் அவன் வரவில்லை, வரும் வழியில் அவனை ஏதேனும் கொடிய மிருகம் கொன்றிருக்குமோ, காட்டில் தொலைந்தானோ, மேகத்துள் மறைந்த கதிரவனால் இரவு என்று நினைத்திருப்பானோ, வேறு பெண்ணைச் சந்தித்திருப்பானோ, இன்னும் ஏதேதோ கற்பனைகள் அவளை வாட்டும். தோழியரும் செவிலித் தாயாரும் ஆறுதல் சொல்லியும் பயனின்றி அவள் மேனி இளைக்கும். படர்கின்ற பசலையின் காரணமாய்த் துவண்டு இளைக்கும் அவளின் இடையை அழகு செய்யும் அணிகள் கழண்டு விழுந்து சிதறும்…

தற்காலிகமாய் வெளியூரில் இருக்கிற என்னைப் பார்த்துக் கூடச் சிலர் இளைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்! அது பசலையாய்த் தான் இருக்க வேண்டும். நல்ல சாப்பாட்டுக்குத் திண்டாட்டத்தினால் என்று நீங்கள் தவறாக எண்ணிவிடக் கூடாது. பசலை இன்னும் கொஞ்சம் பரவினால் கூடத் தேவலை. வஞ்சனையின்றி உண்டுகொழுத்த வயிற்றுத் தொப்பையாவது சுருங்கும்!

அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்று ஆயிரங்காலத்துக்கும் முன்பிருந்து அகத்தினைப் பாடி வருகிற தமிழர் மரபினர் நமக்கு, கட்டியவளிடம் அன்பைச் சொல்லக் கூட வெட்கமும் தயக்கமுமாய் இருப்பது ஆச்சரியத்திற்குறிரியது. (சரி சரி… நமக்கு என்று உங்களையும் ஒரு கூட்டம் வேண்டிச் சேர்த்துக் கொண்டேன். இதில் சாராதவராயின் மன்னித்து விட்டுவிடுங்கள்!).

உங்களைப் பற்றித் தெரியவில்லை. திருமணம் உறுதியான பின் வெளிநாடு வந்துவிட்ட போது, வந்து சேர்ந்த செய்தி சொல்லவே சுற்றிலும் யாரும் இல்லாத நிலை வேண்டும் என்று அர்த்த இராத்திரியில் குளிராடை போர்த்திக் கொண்டு கல்லூரிக்குச் சென்ற ஆசாமி நான். என்னவோ ஒரு வெட்கமாக இருந்திருக்க வேண்டும்! அட… அவ்வளவு ஏன்… ‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு’ என்று சொல்லவே வளிப்பறனை ஏறி மும்பைக்குச் சென்று தொலைபேசியைச் சரணடைந்தவன் நான்.

வெளிநாட்டுத் தம்பதியர் பலர் தம்மிடையே அன்பைத் தெரிவிக்கப் பிறரைப் பற்றிய கவலைகள் இன்றிப் பொது இடத்திலேயே கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்துக் கொள்கிற இக்காலத்தில், என் அன்பு அவளுக்கும் கூடத் தெரியாத ரகசியமாய் இருக்கட்டும் என்று அதிகமாய் அது பற்றிப் பேசவும் செய்யாத என் போன்ற ஆசாமிகளை என் செய்வது?

ஒரு வேளை அகநானூறையும் ஐந்திணையையும், அணுவளவில் அனுபவித்து உணர்ச்சிகளைக் கொட்டிச் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியப் பெருமக்கள் பதின்ம வயதில் அமைந்து இருந்திருக்கலாம். கட்டுப்பெட்டிக் காதலைக் கற்பனை மட்டுமே செய்யும் கூட்டமாய் இல்லாமல் அன்பைச் சொல்லிப் பழக இளம் அணங்கையர் நால்வர் அப்போது உடனிருந்திருக்கலாம்! (சும்மா ஒரு பயிற்சியாய் இருந்திருக்குமே என்று தான்… அடி கிடைக்கப் போகிறது எனக்கு?!). காணி நிலம் கேட்ட பாரதி கூடப் பத்துப் பன்னிரண்டு என்று சொல்லிக் கடைசியில் தென்னைமரமும் ஒரு பத்தினிப் பெண்ணும் என்று பின்வாங்கிவிட்டார்! நான் என்ன செய்ய!

‘பேரன்பிற்குரியவள் நீ’யென்று என் தலைவியிடம் அவ்வளவாய்ப் பகிரா அங்கமாய் இருந்த என் அன்பைப் பகிர் அங்கமாக இப்போது சொல்வதன் மூலம் அந்தத் தயக்கங்களை விடுக்க முயலும் இந்நாளில், வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவளைப் பாடிய அந்தப் பாரதிக்கும் கூட பிறந்த நாள் என்பதால் வாழ்த்துக்களைச் சொல்லி விடுவோம்! வாழிய பாரதி! வாழிய!

* * * *

…. – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் …

* * * *

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in வாழ்க்கை

13 Responses to “அகத்திணை”

  1. on 12 Dec 2006 at 1:11 am1-/.

    http://music.cooltoad.com/music/song.php?id=187892

    “புதுபுது வண்டி பொள்ளாச்சி வண்டி
    வடக்கே போகும் விமான வண்டி
    பறந்தே போகும் பிளேனே
    நீதான் போ போ போ” ” என்றும் பாடலாம் 😉

  2. on 12 Dec 2006 at 2:39 am2மணியன்

    வளிப்பறனை – airplane ? நீங்கள் ஒரு கடுஞ்சொல் விளக்கம் சேர்த்துக் கொண்டால் முதன்முறையாக இச்சொற்களை பாவிப்பவர்களுக்கு எளிதாகும், நடைமுறையில் கொண்டுவர ஊக்குவிக்கும்.

    பாரதிக்கும் உங்கள் பாதிக்கும் வாழ்த்துக்கள்! மூன்று சொல் சொல்ல இத்தனை ஆலாபனையால் எங்களுக்கு நல்ல கட்டுரை கிடைத்தது :))

    இதயங்கள் பேச மொழியும் வேண்டுமோ ? விழிகள் சந்தித்தால் தில்லானா மோகனாம்பாளும் சண்முகசுந்தரமும் போல ஆயிரம் பேசலாமே!

    நீங்கள் சொல்வதும் சரிதான்; அகத்திணை பேசி ஆலயங்களில் வெளிப்படையாக சிலைகள் அமைத்த நமது வெளிப்படைத் தன்மை நடுவில் காணாமல் போனதெப்படி என்று பட்டிமன்றம் தான் வைக்க வேண்டும்.

  3. on 12 Dec 2006 at 2:56 pm3Vimala

    Somebody should be happy(!!). You feel/realize its significance(more) when you are away?

  4. on 12 Dec 2006 at 7:47 pm4பத்மா அர்விந்த்

    பொதுவாகவே இந்தியர்கள் (ஆசியர்கள்?) அன்பை வெளிப்படுத்துவதில்லை. இதனால் சில இடங்களில் taken for granted என்ற உணர்வும் தோன்றி பிரச்சினை இருந்திருக்கிறது.

    அழகாக எழுதத் தெரியும் உங்களுக்கு சொல்வதில் தயக்கம் என்பது முரணாக இருக்கிறது. சில நேரங்களில் வார்த்தைகளும் அவசியம் இல்லைதானே:))

  5. on 12 Dec 2006 at 11:05 pm5வசந்தன்

    //அழகாக எழுதத் தெரியும் உங்களுக்கு சொல்வதில் தயக்கம் என்பது முரணாக இருக்கிறது. சில நேரங்களில் வார்த்தைகளும் அவசியம் இல்லைதானே:)) //

    சொல்லத் தெரியாதவர்கள் அல்லது தயங்குபவர்கள் தாம் இப்படி அழகாக எழுதுவார்கள் என்று நான் நினைக்கிறேன் ;-).

  6. on 13 Dec 2006 at 7:22 am6thanu

    உங்க வீட்லே இதை வாசிப்பாங்களா? எவ்வளவுதான் முற்போக்குச் சிந்தனைகள் இருந்தாலும் சில நேரங்களில் வரும் தவிப்பும் வெட்கமும் கொள்ளை அழகு, கொடுத்துவைத்தவர் நீங்கள். உணர்ச்சிகளை விஞ்ஞானம் கொள்ளை கொண்டு சென்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்த பதிவு இதமாக இருக்கிறது செல்வராஜ்.

  7. on 13 Dec 2006 at 10:48 pm7வெற்றி

    செல்வராஜ் அண்ணா,
    மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பதிவின் துவக்கத்தைப் படித்த போது ஏதோ இலக்கியக் கட்டுரை என நினைத்தேன். பின் உங்கள் அனுபவங்களைச் சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    சில சொற்கள் புரியவில்லை:

    செவிலித் தாயாரும் ==> இதில் செவிலி என்பதன் பொருள் என்ன?

    பசலை == ? இச் சொல்லை திருக்குறள் படிக்கும் போதும் அறிந்தேன். பொருள் தான் புரியவில்லை.

    வளிப்பறனை == ?

  8. on 14 Dec 2006 at 2:17 am8selvanayaki

    செல்வராஜ்,
    படிக்கவேண்டியவங்க படிச்சிட்டாங்களா இந்தப் பதிவை:)) எனக்கென்னவோ முதல் பின்னூட்டமிட்டவங்களே அவங்கதானோன்னு தோணுது:)) பெயரிலி, நீங்க எல்லாம் ரொம்பநாள் கழிச்சுத் தலைகாட்டுவதே பெரிய விடயமாயிருக்கு.

    வெற்றி,
    பசலை என்பது ஒருவித நோய். அது தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது நம் இலக்கியங்களில். தோல் பொழிவிழந்து இளைத்துப்போதல்தான் அப்படிக் கூறப்படுகிறது. இது பெண்களுக்கு மட்டுமே வருவது போல்தான் இலக்கியங்கள் சுட்டுகின்றன. ஆனால் ஆண்களும் பசலை நோயால் பாதிக்கப்படுவதுண்டு என்பதை நீங்கள் (நாம்) செல்வராஜின் இந்தப் பதிவிலிருந்து அறியலாம்:))

    வளிப்பறனை என்பது விமானமா செல்வராஜ்? புதிய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.

  9. on 14 Dec 2006 at 12:07 pm9KARTHIKRAMAS

    எதையாவது எழுதினா,

    1. மாட்டிக்கொள்வேன்

    இல்லை

    2. அடிவாங்குவேன்

    அதானால் சும்மா இருப்பதே சுகம் 😉

  10. on 14 Dec 2006 at 2:06 pm10செல்வராஜ்

    கார்த்திக், எழுதாமல்/சொல்லாமல் போனால் தப்பித்துக் கொள்ளலாம் என்பது வெகுளித்தனம். நினைத்தாலே மாட்டிக் கொள்வோம்/அடி வாங்குவோம் என்பதைப் புரிந்து கொள்ளும் நிலை உமக்கு எப்போது வருமோ தெரியவில்லை 🙂

    * *
    செல்வநாயகி, தாணு, ம்ம், வீட்டில் படிச்சாச்சு. வேறு எதுவும் சொல்வதாய் இல்லை:-)

    பறனை என்பது விமானம் தான். அட்லாண்டா சந்திரசேகரன் பரிந்துரைத்ததாக இராம.கியின் வளவிலே படித்திருக்கிறேன். Aeroplane-க்கு வான்பறனை என்றார்கள். Airplane-க்கு நான் வளிப்பறனை ஆக்கி விட்டேன்!

    * *
    மணியன், அடைப்புக் குறிக்குள் நான் கொடுத்திருக்க வேண்டும். முன்பு கொடுத்ததுண்டு. பறனை என்று முன்பே எழுதி இருக்கிறேன். தவிர இடங்கொண்டு பொருள் புரிந்து கொள்ளலாம் என்று இந்த ஒரு முறை விட்டுவிட்டேன்.

    கூகுள் வழியாகப் பறனை.

    * *

    வெற்றி, பசலை பற்றி செல்வநாயகி சரியாக விளக்கி இருக்கிறார்கள். வேறொரு நண்பரும் திணை, பசலை பற்றிக் கேட்டதற்கு நான் அனுப்பிய மடலை இங்கும் இடுகிறேன்.

    thiNai – can be loosely used to define an area/discipline/subject/landscape/category…

    Sangam poem literature are roughly classified as akam + puram (literally, inside and outside). One dealt with love/etc and the other with bravery/war/etc.

    Poems are also classified into the five thiNais – kurinji/mullai/neithal/marutham/paalai based on the landscape/theme/ and other unique characteristics.

    Tonnes of info. here – even I should read this patiently sometime to refresh my memory.
    http://en.wikipedia.org/wiki/Sangam_landscape#Symbolism
    = = = =
    pasalai:
    “Oh my dearest friends (ones who have beautiful foreheads)! There is no
    benefit at all hereafter in my feeling shy to tell you all of my
    situation. That Blue hued Lord kaNNan has stimulated my Virahathaapam and
    has made me thin down with my bangles falling off and my fair complexion
    getting pale. I am suffering from “pasalai” disease ( pasalai- name in
    tamil for the disease the lover causes by leaving his beloved suffering
    from pangs of separation. The beloved gets pale, thin, body gets tired –
    she simply languishes!) ”

    From: http://72.14.203.104/search?q=cache:2JhIXY8XPP4J:www.ibiblio.org/sripedia/ebooks/tvm/tvm8-2.html+pasalai&hl=en&gl=us&ct=clnk&cd=6

    * *
    பத்மா, உங்கள் கேள்விக்கு வசந்தன் சரியாகப் பதில் சொல்லி இருக்கார் 🙂 🙂

    * *
    பெயரிலி, நன்றி. பாட்டு (பொள்ளாச்சி வண்டி) நல்லா இருக்கு!

    * *
    விமலா 🙂 சும்மா படம்காட்டுதல் என்றும் கூட வச்சுக்கலாம் 🙂 (எப்படி ஒப்புக்கொள்வது!)

  11. on 14 Dec 2006 at 3:24 pm11பாலராஜன்கீதா

    வெட்கமும் தயக்கமுமாய் இருப்பது ஆச்சரியத்திற்கு*றி*யது ?

  12. on 14 Dec 2006 at 3:34 pm12செல்வராஜ்

    நன்றி பாலராஜன்கீதா. திருத்திவிட்டேன்.

  13. on 15 Dec 2006 at 4:00 am13ntmani

    நல்ல பதிவு செல்வா!
    🙂

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook