வேனில் முடியும் கூட்டக் குறிப்புகள்
Aug 19th, 2006 by இரா. செல்வராசு
கூறு கூறாய் வெட்டி வைத்திருந்த சாக்லெட்-ஜுக்கினி-கேக்கை முன்வைத்துக் கூட்டம் ஆரம்பித்தது. கலந்து கொண்டது என்னவோ நான்கு பேர் தான். சிறு கையை மேலே தூக்கிப் பெரியவர், “நான் இந்தக் கூட்டம் தொடங்கியது என்று அறிவிக்கிறேன்” என்று ஒரு பூரிப்போடு தொடங்கி வைத்தார். அதற்குள் ஆளுக்கு மூன்று துண்டு கேக் உள்ளே போயிருந்தது. இது மாதிரி கேக் சாப்பிடக் காப்பியும் வேண்டுமே என்று என்றுமில்லாத திருநாளாய் அரைக் கோப்பைக் காப்பியும் கையுமாக நானும் உட்கார்ந்திருந்தேன்.
பெரிதாய் ஒன்றுமில்லை. வேனிற்கால விடுப்பு முடிந்து அடுத்த வாரம் ஆரம்பிக்க இருக்கிற பள்ளியும் அதனையொட்டிய வாழ்வியல் மாறுபாடுகளும் குறித்து விவாதிக்கக் கூட்டப்பட்ட குடும்பக் கூட்டம் தான். இது போன்ற குடும்பக் கூட்டங்கள் அவசியம் என்று பலகாலமாய் மனைவி சொல்லி வந்தாலும், இதுவரை மசிந்து கொடுக்காதவர்கள் இன்று செவி சாய்த்து விட்டோம்.
கூட்டியவர் ஆரம்பிக்கட்டும் என்று நான் மனைவியை நோக்க, நேரடியாக நிகழ்ப்பிற்குள் (agenda) சென்றார். “ஒரு நிமிடம்… ஒரு முன்னுரையாற்றாமல் எப்படி?”, என்று நான் கேட்க, “ஏன் நீங்களே ஆற்றுங்களேன்!” என்று சொன்னதை ஏற்றுக் கொண்டேன். 🙂
“வணக்கம். இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்தமைக்கு எல்லோர்க்கும் நன்றி. இவ்வருட வேனிற்காலத்தை இனிதே கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது…”
என்று ஒரு மிடறு காப்பிக்கு விட்ட இடத்தில் இடையில் புகுந்த பெரியவர், “அப்பா… வெட்டியாய் என்ன பேச்சு? விஷயத்துக்கு வாங்க அம்மா”, என்று தன் தாயை நோக்கினார். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த திட்டவரைவுகளை எடுத்துக் கொண்டு தொடங்கினார் மனைவி. முகத்திலே என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு?
பெரியவரும் சிறியவருமான இருவருக்கும் அன்றாட வேலைப் பட்டியலையும் அதற்கான மதிப்பெண் புள்ளிகளும் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார். அதோடு, பட்டியலில் இல்லாத தினசரி நடவடிக்கைகள், எழுந்து கொள்ளும் நேரம், சுயகவனிப்பு, பிறரிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம், இத்யாதி, இத்யாதி, புள்ளிகள் சில இலக்கை எட்டும்போது கிட்டும் பரிசு எல்லாம் பேசப்பட்டது.
கைவிரல்களைச் சப்பிக் கொண்டு, “நான்காவது துண்டு எடுத்துக்கலாமா?” என்று சிறியவர் கேட்க, இரண்டே போதும் என்ற நிலையில் இருந்து, “சரி… சரி… சின்னது தானே” என்று சொல்லி நானும் நான்காவதற்குக் கையை நீட்டினேன்.
மதிப்பெண்கள், நட்சத்திரங்கள் இவற்றை வைத்து வீட்டு வேலை பழக்குவது பற்றி நிறைகுறைகளை யோசித்தாலும், ஏனோ எங்கள் பெண்களுக்கும் அவை பிடித்திருக்கின்றன. ஏன் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமான ஒன்று. ஆச்சரியங்களுள் ஒன்று. பரிசு பெறும் ஆர்வம் ஒரு உந்துதலைத் தருகிறது. சரி, இதிலொன்றும் நொசிவு இல்லையே; சில ஆண்டுகள் முன் வெளிப்போக்குப்பயிற்சி கூட இந்த நட்சத்திர முறையால் எளிமையாக இருந்ததே.
விலாவாரியான திட்டத்தை உருவாக்கியிருந்த மனைவியைப் பார்த்தேன். இது பற்றி முந்தைய ஆண்டுகளில் பேசிக் கொண்ட ‘டேஜா வூ’ ஆக இருந்தது.
“இதை எல்லாம் நீங்களே நிர்வகித்துக் கொள்வீர் தானே?”. (நம்ம தலையில் கட்டாத வரைக்கும் ஆதரவு தருவதில் நமக்கென்ன பிரச்சினை?!). பட்டியலைக் கணியில் அச்சடித்துத் தரும் சிரமமான வேலையை நான் சிரமேற்றுக் கொண்டேன்.
“அவ்வளவு தான். இனி வேறு யாருக்கும் வேறு விஷயங்கள் இருக்கின்றனவா?”
உடனே நான் கையை உயர்த்தினேன்.
“நூலகத்தில் இருந்து எடுத்து வரும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும்”
இன்று மதியம் தான் சுமந்து வந்த தலைக்குப் பத்துப் புத்தகங்கள் நினைவுக்கு வந்தன. பல படிப்பை ஏதுவாக்குகிற நூலகங்கள் இங்கே சிறப்பு வாய்ந்தவை. வேனிற்காலத்தில் மட்டும் இவர்கள் தலைக்கு 120 முதல் 150 வரையிலான புத்தகங்கள் படித்திருக்கக் கூடும் என்று ஒரு அணுமானம்.
“பள்ளி ஆரம்பித்த பின் தினமும் படிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கி விடலாம். அதனால், வாரம் நான்கு புத்தகங்கள் எடுத்து வந்தால் போதும்” என்றேன். முன்பின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வார இறுதிகளில் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
“கூட்டத்தை முடித்துக் கொள்ளலாமா?” என்ற கேள்வி எழுந்தபோது, நானும் பெரியவரும் ஒரே நேரத்தில் கையைத் தூக்கினோம். அடுத்த கூட்டம் எப்போது என்பது குறித்தான கேள்வியே அது.
“அம்மா. சும்மா நினைச்சபடி எல்லாம் கூட்டத்துக்கு கூப்பிடக் கூடாது. ஒரு நாள் முன்னரே சொல்ல வேண்டும். அதோடு அடிக்கடி இல்லாமல் கூட்டத்திற்கான விஷயங்கள் சேர்ந்த பிறகு வைத்துக் கொண்டால் போதும்”, என்றார்.
“அதையே தான் நானும் சொல்ல நினைத்தேன். அடுத்த கூட்டம் எப்போது வைத்துக் கொள்ளலாம்?”
புதிய திட்டங்கள் எப்படிப் போகின்றன என்று பார்க்க வாரம் ஒருமுறை என்று வைத்துக் கொள்ள நினைத்தவரிடம் நான் பெரியவர் இருவருமாய் எதிர்ப்பைப் பதிவு செய்தோம். மாதம் ஒருமுறை வைத்துக் கொண்டால் போதுமானது என்பதில் உறுதியாக இருந்தோம். சின்னவர் உதவிக்கு வருவாரா என்று மனைவி பார்க்க, அவர் தன்னுலகில் கனவு கண்டு கொண்டிருந்தார்.
குடும்பக் கூட்டங்கள் முக்கியமானவை என்று அமெரிக்கச் சூழலில் படிப்பதுண்டு. நல்லனவற்றை எடுத்துக் கொள்வது சிறப்பானது தானே? இன்று ஒரு புதுவித அனுபவமாய்க் களிப்பாய் இருந்தது. பின்னாட்களில் இதன் இன்றியமையாமையை நன்கு உணர முடியும் என்று தோன்றுகிறது. இன்றைய கூட்டம் முடிவதற்கு முன் “அப்பா இன்னொரு விஷயம்” என்று பெரியவரின் கை உயர்ந்தது.
“நீங்க வலைப்பதிவு பக்கம் போவதைக் குறைக்கணும்”
“அடப் பாவிங்களா! இப்போல்லாம் நான் எழுதறதே இல்லையே”
“அப்பவும் படிக்கப் போறீங்களே!”
“சரி. சரி… இப்படி வச்சுக்கலாம். சாய்ந்தரம் நீங்க புத்தகம் படிக்கற நேரத்துல நானும் எதாவது படிக்கிறேன். கம்ப்யூட்டர் பக்கம் போகல்லே. சரியா?”
விரைந்து வளர்கிறார்கள் பெண்கள். நேற்றும் அவர்களோடு நடைக்குச் சென்றிருந்த போது, “அப்பா, நீங்கள் சொல்லவில்லையென்றாலும், பெரியவங்க பேசிக்கிறத நாங்க கவனிக்கிறோம்” என்றாள். வேற்றறையில் இருந்தாலும் வேறு செயல் புரிந்தாலும், பெரியவர்களின் பேச்சை, கூர்தீட்டிக் கேட்கும் ஞானத்தை வைத்து நிறையத் தெரிந்து கொள்கிறார்கள். சொல்வது வேறு செய்வது வேறாக இருந்தால் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுடைய உணர்ச்சிகளையும், எண்ண ஓட்டங்களையும் சில சமயம் அவதானிக்க வியப்பாய் இருக்கிறது. சுயமாய் அவர்கள் நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் கற்கிறேன்.
முத்தமிரண்டு கொடுத்துவிட்டு உறங்கச் செல்ல ஓடுகிறார்கள். வளரும் அவர்களின் நிறைந்த அன்பினிலும், சாக்லெட் கேக்கின் இன்னொரு துண்டிலும் ‘எச்சாய் ஒரு வளத்தி’ வளர்ந்தாற்போல் உணர்கிறேன்.
வேனில் முடியும் கூட்டம் இங்கே இனிதே முடிகிறது.
Family meetings are good, it teaches lot of things to the kids. Amazed to see the no:of books they read….kudos to both of you..especially 🙂
Vimala
machaan ithae maathiri ezhuthunga… nalla irukku…
தமிழ்மணத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திலும், உங்கள் மீள்வரவிலும் எதுவும் சம்பந்தமிருக்கிறதா?!
(தமிழ்மண நிர்வாகியின் எழுத்து நடை கிட்டத்தட்ட உங்களதை மாதிரியே இருப்பது வேறு விஷயம்!)
மாயவரத்தான், தமிழ்மணம் குறித்தான கேள்விகளைக் காசியிடமோ TMI நிறுவனத்திடமோ நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.
நான் என் பதிவில் சொன்னபடி,
“எனது வாழ்விலும் சில சிறிய/பெரிய மாற்றங்களினூடாகப் பயணிக்க வேண்டியிருப்பதால் அவற்றில் முழுக் கவனம் செலுத்த வேண்டியும்… வலைப்பதிவுகளில் எழுதுகிற நேரமும் குறையும் என்றாலும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முயல்வேன். ”
எழுதுவதில் இருந்து விடைபெறவில்லை என்பதால் மீள்வரவு என்பது சரியல்ல.
உங்களுக்குத் தெரியவேண்டுமானால்: இல்லை, என் வாழ்வு மாற்றங்கள் இன்னும் முடிந்து ஒரு நிலைக்கு வரவில்லை. இடையில், எழுத்து எனக்கு ஒரு வடிகால். அக்கறைக்கு நன்றி.
நல்ல பதிவு செல்வராஜ்.
நல்ல கூட்டம்:))
நாங்களும் இதைப்போலவே செய்யலாம் என நினைக்கிறேன். ஆனா கூட்டம்னா ஒரு நாலு பேராச்சும் வேணுமில்லையா? காத்திருக்கோம்!