இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மிதிவண்டிப் பயணங்கள் – 3

May 18th, 2006 · 6 Comments

…விட மனமில்லாமல் மறுநாள் பாண்டி மறுபடியும் எங்களை அழைத்துக் கொண்டது.

பாரதியும் பாரதிதாசனும் சில காலமேனும் வாழ்ந்த புதுச்சேரி, பிரெஞ்சிலே எழுத்துப் பிழையால் பாண்டிச்சேரி ஆகியிருக்கிறது. இன்னொரு முறை மொத்தக் குழுவோடும் நகருள் செல்ல முடிவு செய்து போகும் வழியிலே ‘ஆரோவில்’ என்னும் சர்வதேச நகருள்ளும் சென்றோம். அரவிந்தர் ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்புடைய இந்த நகரம் சற்று வித்தியாசமாய் இருந்தது. என்னவோ ஒரு பரிசோதனை முயற்சியாக நிர்மாணிக்கப்பட்டு, பல வெளிநாட்டினர் வந்து வசிக்கும் இடமாக இருக்கிறது. மத்தியிலே வட்ட வடிவமாய் ஒரு பெரிய கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தனர் என்பது மட்டும் நினைவிருக்கிறது. இந்தப் பரிசோதனையின் அடிப்படை என்ன? யார் எப்படி என்ன அன்ன இன்ன பிற கேள்விகள் பற்றியெதுவும் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் ஒரு கூட்டமாய்ச் சுற்றிச் சில படங்கள் பிடித்துக் கொண்டோம். கேட்டாலும் பதில் சொல்வதற்கு அவ்வளவாய் யாரையும் அங்கு காணோம்.

1988 Cycle Trip

சுற்றியிருந்த முந்திரிக் காடுகளில் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் காயமாக்கிக் கொண்ட நாவினைச் சப்புக் கொட்டிக் கொண்டு பயணத்தை பாண்டி நோக்கித் தொடர்ந்தோம். முந்திரிப் பழம் சாப்பிட்டால் நாவு சொரசொரத்துப் போய்விடும் என்று முன்பு யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை.


குழுவிலிருந்த மூன்றாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புத்தோழி ஒருவர் வீட்டிற்கு மதிய உணவு நேரத்தில் சென்றோம். இல்லை, இங்கே எந்த வண்ண ரோசாவும் இருந்ததாக எனக்கு நினைவில்லை :-). இருப்பினும் அந்தத் தோழியின் மீது ஒருதலையாய் அன்பு வைத்திருந்ததாய்ப் போகையிலும் வருகையிலும் ஒருவரைப் போட்டுக் கலைத்தது கும்பல். இது போன்ற சமயங்களில் கிண்டலில் உண்மையில்லை எனினும் முன்னிருத்தப்பட்டவர் வெட்கி முகம் சிவக்க அது மேலும் கிண்டலை அதிகரிக்கக் காரணமாகி விடுகிறது. மொத்தத்தில் நொகையாக (negative) எதுவும் இல்லாத இனிய பொழுதாய் இருந்தது. கிண்டப்பட்ட அந்த நபர் தான் காலையில் பாண்டி நகருக்குள்ளே என் மிதிவண்டியின் சக்கரத்தில் ஏற்பட்ட பொத்தலை அடைக்க உதவினார்.

1988 Cycle Trip

மதியம் மூன்று மணியளவில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு மீளும் பயணத்தைத் தொடங்கினோம். வந்த வழியிலேயே திரும்புவதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று என்னைப் போன்றே வேறு சிலரும் யோசித்ததில் திரும்புகையில் மரக்காணம், மாமல்லபுரம் வழியாகக் கடலையொட்டிய சாலையில் செல்வோம் என்ற வாதம் வெற்றி பெற்றது. அது சற்றே குறைவான தூரமும் என்று நினைக்கிறேன்.

கடற்பகுதியில் நிறைய ஊர்களுக்குப் ‘பாக்கம்’ என்ற விகுதியில் பெயர் முடிந்திருந்ததைக் கண்டது தமிழில் ஊர்ப் பெயர் குறித்த சிந்தனைக்கும் ஆய்வுக்கும் வழிவகுத்தது. கொங்கு நாட்டிலே பல ஊர்களுக்குப் ‘பாளையம்’ என்ற விகுதி அதிகம் இருக்கும். பிற விகுதிகள்: ஊர், வலசு, மேடு, பள்ளி, கல், தோட்டம், துறை, சத்திரம், சாவடி… (இந்த ஊர்ப்பெயர் விகுதிகளைப் பற்றியே தனியாய் எழுத வேண்டும் என்று ஒரு காலத்தில் நினைத்ததுண்டு). கடலை ஒட்டிய ஊர்களுக்குப் ‘பாக்கம்’ என்பது பொருத்தமாய் இருக்கிறது. இப்படிப் பொருட்பட இருக்கிற பெயர்களை விட்டுவிட்டு, “சிட்டி ஆப் வாஷிங்டன்” என்றெல்லாம் புதிய ஊர்களுக்குப் பெயர் வைக்கும் அவல நிலையை இன்றைய தமிழகத்தில் காணலாம் என்பது பெருஞ்சோகம். (பெருமாநல்லூர் – திருப்பூர் சாலையில் உண்மையிலேயே இப்படிப் பெயர் தாங்கிய ஒரு ஊர் இருக்கிறது!).

வந்த வழி போலின்றி, திரும்பு வழி சற்றுக் குறுகலாய் இருந்தது. மரக்காணம் என்னும் ஊருக்கு மாலையில் வந்து சேர்ந்தோம். சற்றே இருட்டிக் கொண்டு வந்தாலும் அன்று இன்னும் கொஞ்சம் தூரம் செல்ல வேண்டும். முழுதும் இருட்டாத பொழுதிலேயும் வானில் முழு நிலவு தோன்றி அழகு காட்டிக் கொண்டது.

‘வெண்ணாங்கப்பட்டு’ கிராமத்திற்கு வந்து சேர்ந்து ஒரு கடையில் தேநீர் பருகவோ எதற்கோ நின்றோம். என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை, யாரோ அங்கு யாரையோ என்னவோ சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது. அந்த ஊர் மக்கள் சிலருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அல்லது இருட்டிய நேரத்தில் இப்படி ஒரு கும்பலைக் கண்டு பழகாத ஒரு சூழலில் காரணமின்றி அவர்கள் மருண்டும் போயிருக்கலாம். வரிசையாக நிறுத்தி இருந்த மிதிவண்டிகளின் ஒரு எல்லையில் சிலர் வந்து எட்டி உதைக்க படபடவென்று கீழே விழுந்தன வண்டிகள். எதிர்கொண்டு சச்சரவுக்குச் சென்றிருக்கலாம் என்றாலும், தெரியாத ஊரில் இரவு நேரத்தில் தரும அடி வாங்குவானேன் என்று, விலகிச் செல்ல முடிவு செய்து, உடனே அவரவர் வண்டிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு சாலையில் விரைந்தோம். அப்போது முழுதாய் இருட்டி இருந்தது. முழுநிலவு வழிகாட்ட, கடற்காற்று சுகம்வீச, இன்னும் சிறிது தூரம் ஓட்டிச்சென்று ‘கடப்பாக்கம்’ கிராமத்தை அடைந்தோம்.

கடப்பாக்கத்திலும் ஒரு அரசுப் பள்ளி எங்களுக்குப் படுக்க இடம் தந்தது. இதமான சூழல் அமைய, அந்தப் பள்ளியின் மைதானத்திலேயே மணல்மீது விரித்த விரிப்புக்களின் மீது படுத்துறங்கினோம். உடல் அசதிக்கு மணல் படுக்கை அருமையாய்க் குளுகுளு ஒத்தடம் கொடுத்தது. வானத்தில் தாரகைகளையும் வட்ட நிலவையும் பார்த்தபடி உறங்கிப் போனோம். சுகம்.

காற்றை அனுப்பி வைத்துச் சொகுசு தந்த கடலைக் காணக் காலையில் சென்றோம். சிறிது நேரம் கடலாடி விட்டுக் கடைசி நாள் பயணத்தைத் தொடர்ந்தோம். மதிய உணவிற்குப் புதுப்பட்டிணம் என்னும் ஊர். சிறு சிறு இலக்கு வைத்துக் கொண்டு மணிக்கு இவ்வளவு தொலைவு என்று சலிக்காமல் தொடர்ந்து ஓட்டிக்கொண்டு மாலைக்குள் மாமல்லபுரம் வந்துவிட்டோம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஊரில் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இரவே சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்பதால் சிறிது நேரம் மட்டுமே அங்கு இருந்தோம். அதிலும், பின்னால் வந்து கொண்டிருந்த குழுவினர் எங்களை வந்து சேரும் வரை மட்டுமே கடற்கரையில் சில இடங்களுக்குச் சென்றோம்.

மாமல்லபுரத்தில் இருந்து திருப்போரூர் சுமார் ஒரு மணி நேரப் பயணம் தான். திருப்போரூரில் மிகவும் நல்லதொரு முருகன் கோயில் இருக்கிறது என்றனர். இரவு நேரமாகிவிட்டதால் உள்ளே செல்ல இயலவில்லை. இரவுணவைத் திருப்போரூரில் முடித்துக் கொண்டு குழுவிலே மீண்டும் ஒரு விவாதம். இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அங்கு தங்கிவிட்டு மறுநாள் தொடரலாம் என்று ஒரு சாரார். நினைத்ததைச் செய்ய வேண்டும் என்று என்ன ஆனாலும் இரவே சென்னை சென்று விட வேண்டும் என்று இன்னொரு சாரார். இறுதியில் இரு பிரிவாய்ப் பிரிந்து ஒரு குழு தங்குவது என்றும் இன்னொன்று சென்னைக்குச் சென்றுவிடுவதென்றும் தீர்மானித்தோம்.

அன்றிரவே திரும்ப முடிவு செய்த எட்டு பேரில் நானும் ஒருவன். இரவுப் பயணம் என்பதால் மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும். எந்த வண்டிக்கேனும் ஏதேனும் இடைஞ்சல் என்றால், பழுதுபார்க்கச் சற்றுச் சிரமம் என்பதால் மிகவும் ஓரத்தில் சென்று முட்கள் குத்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பேருந்து போன்ற பெரிய வண்டிகள் வரும்போது மாட்டிக் கொள்ளாமல் கவனமாகவும் செல்ல வேண்டும் என்பதால் நடுரோட்டிலும் செல்ல முடியாது. அதனால், இரண்டிரண்டு பேராய், நான்கு சோடி சேர்ந்தோம். பெருவண்டிகள் வந்தால் ஒற்றை வரிசைக்கு உடனே மாறிக் கொள்வோம். மாமல்லபுரம் – சென்னை சாலை அப்போது தான் புதிதாகக் கட்டமைத்திருந்தார்கள் போலிருக்கிறது. பயணம் மிகவும் இடைஞ்சல் இன்றி அதிர்வின்றி இருந்தது. நல்ல வேகத்தில் ஓட்டிச் சென்று சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்னையை அடைந்தோம். மொத்தப் பயணத்தையும் சிறப்புறுத்திய இறுதிக் கட்டம்.

ஐ.ஐ.டி அருகே ‘சந்திரன்ஸ்’ கையேந்தி பவன் கடைகளில் வந்து தான் நிறுத்தினோம். செம்மஞ்சள் நிறக் கேழ்வரகுப் பால் குடித்து, பயணத்தை முடித்து வைத்து, சுயமாகவே வெற்றியைப் பாராட்டி ஹிப் ஹிப் ஹுரேவும் கத்தி வைத்தோம்.

வெற்றிகரமாய் முடிந்த பயணம் என்னவோ ஒன்றைச் சாதித்த பொதிவுணர்ச்சியும், கிளர்ச்சியும் சேர்த்திருந்தது. வாழ்வனுபவக் கொத்தில் வித்தியாசமான ஒன்றைச் சேர்த்துக் கொள்ள உதவியது.

மீண்டும் இது போன்ற ஒரு பெரும் பயணம் செல்ல வேண்டும் என்று அதன் பிறகு மனதுள் ஆசை வளர்ந்து கொண்டே இருந்தது. விடுமுறையில் ஊர் வரும்போது பள்ளி நண்பர்களிடமும் சொல்லிக் கிளப்பப் பார்த்தேன். முடியவில்லை. சென்னை முதல் குமரி வரை கூடச் சென்றால் எப்படி இருக்கும் என்று சில யோசனைகள். அரிமா, இளம் அரிமா சங்கங்களின் வழியாக முயற்சி செய்யலாமா என்று எண்ணங்கள். ஆயினும் மீண்டும் மிதிவண்டியில் ஒரு நெடும்பயணம் என்பது நடைமுறைக்கு வராத ஒரு கனவாகவே இருந்தது. அன்றிலிருந்து சுமார் ஆறு வருடம் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஒரு விதை துளிர்க்கும் வரை…

-(தொடரும்).

Tags: பயணங்கள்

6 responses so far ↓

  • 1 நந்தன் // May 18, 2006 at 11:01 pm

    எதைப் பற்றி பின்னூட்டம் இடுவது என்றே தெரியவில்லை…ஒவ்வொரு வரியும் ஞாபகங்களை தட்டி கொடுத்து செல்கிறது.
    அவற்றுள் முதல் இரண்டு
    //குழுவிலிருந்த மூன்றாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புத்தோழி ஒருவர்….//
    இங்கே யாரோ என நினைத்தேன்…மனதை படித்தது போல் அடுத்த வரி:)

    //சுமார் ஆறு வருடம் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஒரு விதை துளிர்க்கும் வரை…//

    அடுத்த விதை தூவும் போது என்னையும் கூப்பிடுங்கள்

  • 2 Nithya // May 19, 2006 at 9:16 am

    செல்வராஜ்,

    அடுத்த பாகத்தில் எனக்கு தெரிந்தவர் வருவாரோ? 🙂

    நித்யா

  • 3 Vimala // May 19, 2006 at 1:28 pm

    Great experience and you have got good memory too!!

  • 4 செல்வராஜ் // May 19, 2006 at 6:56 pm

    நன்றி நந்தன். மீண்டும் இதுபோன்ற ஈடுபாடு எப்போது வருமென்று தெரியவில்லை.

    நித்யா, நிச்சயம் வருவார். படத்தோடும் 🙂

    விமலா, நன்றி. மாங்கு மாங்கென்று எதற்கென்று வருந்தாது எழுதி வைத்த நாட்குறிப்புக்கள் சில உதவுகின்றன. விட்டுப்போன பழக்கத்தை இது போன்ற சமயத்திற்காகவேனும் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

  • 5 ராசா // May 22, 2006 at 8:24 am

    ‘நல்லாயிருந்த்து’ அப்படின்னு மொக்கையா எழுதாம, வேற எதாவது எழுதலாம்னு நானும் யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன்.. வார்த்தையே வரமாட்டேங்குதுங்க..
    🙂

    சைக்கிள் பயண அனுபவம் நமக்கும் உண்டுங்க.. ஆனா இந்த மாதிரி ‘அழகா’ அதை எழுதமுடியாது.. உங்க எழுத்தை படிச்சு, அதுல நம்ம விஷயத்தை ஞாபகப்படுத்தி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

  • 6 செல்வராஜ் // May 22, 2006 at 9:04 pm

    நன்றிங்க ராசா. நீங்களும் போயிருக்கீங்களா, சந்தோஷம். அப்படியே நீங்க ஞாபகப்படுத்திக்கிட்டதோட சின்ன குறிப்பா எப்போ எங்கே போனீங்கன்னாவது எங்களுக்கும் சொல்லியிருக்கலாம். (அப்புறம் ப்ளாக் க்ளீக்னு இங்கிலீச்சுல மிரட்டாம, வலைப்பதிவுன்னு சொல்லிப் பாருங்க 🙂 )