இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஈரோடு போயி மைசூரு ஏறுதல்

October 27th, 2005 · 14 Comments

கிழிந்த வாழையிலை ஒட்டிக் கொண்டிருந்த தண்டெடுத்து மண்டபத்துக் குரங்கை ஒருவர் துரத்தியதை வேடிக்கை பார்த்தபடி பண்ணாரியம்மன் கோயில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அர்ச்சனைக்கு நட்சத்திரம் என்னவென்று கேட்ட அர்ச்சகரிடம் என்னுடையதும் மனைவியினதும் நினைவு இருந்து கூறிவிட்டாலும் மகள்களது நட்சத்திரம் சரியாக நினைவில்லாததால், நானும் மனைவியும் ஒத்தையா இரட்டையா என்று குத்துமதிப்பிட்டுச் சொன்ன நட்சத்திரங்களைக் கூட வந்த நண்பரே கூட ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பெயர் மட்டும் போதும் நாமக’ என்று ஏதோ சொல்லிக் கொண்டார் அர்ச்சகர்.

ஈரோட்டில் இருந்து மைசூர் நோக்கிய பயணத்தில் முதல் நிறுத்தம். கிட்டத்தட்டப் புனிதத் தலங்கள் உலா என்றாகிவிட்ட எங்கள் பூசைவிடுமுறைச் சுற்றுப் பயணம் அங்கு தான் ஆரம்பம் என்று கொள்ளலாம். சத்தியமங்கலம் தாண்டிய பின் போக்குவரத்துக் குறைந்து அமைதியாக இருந்த சாலைப்பகுதியில் அழகு சேர்க்கத் தூரத்து மலைப்பகுதியும் அடர்வனமும் சேர்ந்து கொண்டன. தொலைவில் இருந்து காட்சி தந்த அந்த மலைப்பகுதியின் வழியாகத் தான் மேலேறிக் கர்னாடகத்துக்குள் செல்ல வேண்டும். இது வீரப்பன் காடு என்ற எண்ணம் மனவோரத்தில் ஒரு புறம் இருந்து கொண்டே இருந்தது. வீரப்பன் இல்லாத நிகழ்காலத்துச் சாலைச் சோதனைச் சாவடிகள் எந்த நடவடிக்கையும் இன்றிப் பரபரப்பற்றிருந்தன. வீரப்ப வெற்றிடத்தை நிரப்பவென்று பிற நக்ஸலைட்டுகளும் தீவிரவாதிகளும் இந்தக் காடுகளுக்குள் ஊடுருவுகிறார்கள் என்று செய்திகளில் படித்த நினைவு இருக்கிறது. எங்கள் கண்களில் ஒருவரும் தென்படவில்லை!

மலைச்சாலையின் நுழைவாயிலில் காவல் தெய்வம் போல் பண்ணாரி அம்மன். இந்தப் பக்கம் போகும் வரும் வண்டிகள் எல்லாம் இங்கு நிற்காமல் செல்வதில்லை என்றார் நண்பர். பிற வண்டிகள் நிற்கிறதோ இல்லையோ ஓரிரு வருடங்கள் மைசூரில் வாழ்ந்த இவர் ஒவ்வொரு முறையும் இங்கு வந்து வணங்காமல் சென்றதில்லை என்பது புரிந்தது. “இல்லப்பா! எல்லா வண்டியும் நிக்கும். உறுதியா நிக்கும்”, என்றார்.

முன் தினமே ஆயுத பூசைக்காகச் சன் தொலைக்காட்சியில் பாளையத்து அம்மன் முட்டைக் கண்ணு மீனாவைப் பார்த்துக் கொஞ்சம் பக்திப் பரவச நிலை அதிகரித்துத் தான் இருந்தது. அதிலும் அந்தச் சாமி வண்ண வண்ணமாய் உருவெடுத்துக் காட்சி கொடுத்ததே!


“டேய்! தெய்வம்னு ஒண்ணு இருக்குடா! தெய்வத்த நான் எதிர்க்கலே. தெய்வத்தின் பேர்ல மக்கள் பண்ற மூடத்தனத்தத் தான் நான் எதிர்க்கிறேன்” என்று விவேக்கும் படத்திற்கேற்பத் தன் நையாண்டியைச் சற்றுக் மாற்றிக் கொண்டிருந்தார்.

பாளையத்து அம்மனைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், பண்ணாரி அம்மன் இந்தப் பகுதியில் கொஞ்சம் புகழ் பெற்ற சாமி என்பதை பக்தவரிசை வளைந்து வளைந்து செல்ல அமைத்திருந்த இரும்புக் கம்பிகளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். அது பற்றாது என்று மண்டபத்தை இன்னும் கொஞ்சம் அகலப் படுத்திப் பெரிதாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் கூட்டமில்லாத கோயிலைப் பார்க்க நிம்மதியாகத் தான் இருக்கிறது.

அம்மனைக் கும்பிட்டு வெளியே வந்த போது இன்னொரு கும்பல் துரத்தப்பட்ட குரங்கை அழைத்து இலை கொடுத்துச் சுண்டல் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தது. காரிலேயே செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு வந்துவிட, சிதறிக்கிடந்த சிறுகல் பெருமண் மீது நடக்கச் சிணுங்கிய மகள்கள் ‘குத்துதுப்பா’ என்று புலம்பிய வண்ணம் குரங்குகளைப் போல் எம் மேல் தொற்றிக் கொண்டார்கள்.

இந்த மலைப்பாதையில் இருபத்தியேழு கொண்டையூசி வளைவுகள் இருக்கின்றன என்று ஒவ்வொன்றுக்கும் எண் குறித்து வைத்திருக்கிறார்கள். மலைப்பாதையில் ஏற அதிக நேரம் ஆகவில்லை. ஏறிய பின் தமிழக எல்லை வரை சாலைகள் அருமையாக இருக்கின்றன. கர்னாடக எல்லைக்குள் வந்துவிட்டதை உணர எந்தப் பெயர்ப் பலகையும் தேவையில்லை. குண்டும் குழியுமாய் இருக்கிற சாலைகளும், வண்டி குலுங்குவதில் ‘பெண்டு’ நிமிரும் முதுகுமே காட்டிக் கொடுத்து விடும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உட்பகுதிக்குச் செல்கையில் இது வேறு உலகம் என்று தோன்றும் வண்ணம் வித்தியாசப்பட்டுக் கிடக்கிறது. சாம்ராஜ்நகரின் குறுகிய தெருக்களின் புறங்களில் இருந்த வீடுகளில் வெளித் திண்ணைகளையும் தூண்களையும் பார்க்கும் போது இந்தப் பக்கமெல்லாம் மாட்டு வண்டிகளன்றிப் பேருந்துகள் போகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது.

SivaSamudram 3

“நயாகரா மாதிரியே இருக்கும். உனக்குக் காட்டியே ஆக வேண்டும்” என்று நண்பர் இழுத்துச் சென்ற இடம் சிவன்சமுத்திரம் அருவி. ஒன்றைப் போல் ஒன்று இருப்பதில்லை. நயாகரா போலில்லை என்றாலும் சிவன்சமுத்திர அருவி அருமையாக இருந்தது. ஒருவேளை பெருக்கெடுத்து ஓடும் இந்த வாரக் காவிரியைப் போய்ப் பார்த்திருந்தால் நயாகராவையே மிஞ்சி இருக்கலாம். நாங்கள் சென்ற இடமெல்லாம் மழை துரத்த, அதிக நேரம் நின்று பார்க்க முடியாமல் ஓடிக் கொண்டே இருந்தோம். அப்படியும் மூன்று திக்கில் இருந்து வெவ்வேறு கோணத்தில் சிவன்சமுத்திரத்தைப் பார்வையிட்டோம்.

SivaSamudram 2

திரும்பும் வழியில் பூட்டிக் கிடந்த கோயில் திண்ணை ஒன்றில் பழைய படுக்கை விரிப்பைப் போட்டு, கொண்டு சென்றிருந்த கட்டுசாத வகையறாக்களை (புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம்) ஒரு கட்டுக் கட்டிவிட்டுக் கொட்டிக் கொண்டிருந்த மழையினூடே இன்னும் கொஞ்சம் குண்டுகுழியில் குலுங்கிக் கொண்டு மைசூர் நோக்கித் தொடர்ந்தோம்.

SivaSamudram 1

Tags: பயணங்கள்

14 responses so far ↓

  • 1 குமரன் // Oct 27, 2005 at 1:18 pm

    எப்பவுமே பயணக்கட்டுரை படிப்பதுன்னா கொண்டாட்டம் தான்…நாம பாத்ததெல்லாம் இவங்க பாத்திருக்காங்களா…நாம பாக்காதது என்ன என்ன இவங்க பாத்திருக்காங்கன்னு தெரிஞ்சிக்கலாம்.

  • 2 மூக்கு சுந்தர் // Oct 27, 2005 at 2:04 pm

    //ஆனாலும் கூட்டமில்லாத கோயிலைப் பார்க்க நிம்மதியாகத் தான் இருக்கிறது. //

    இங்கும் அப்படியே 🙂

    எஞாய் பண்ரீங்க செல்வா. பொறாமையா இருக்கு.
    விடுமுறைக்காக போயிருக்கீங்களா..?? இல்லை ஊரோட போயிட்டீங்களா..???

  • 3 துளசி கோபால் // Oct 27, 2005 at 11:57 pm

    நல்லா எழுதியிருக்கீங்க செல்வராஜ்.

    இந்த இடங்கள் எல்லாம் இதுவரை பார்த்ததில்லை. ம்ம்ம் போகணும் ஒருநாள்.

  • 4 அன்பு // Oct 28, 2005 at 12:40 am

    அழகு சேர்க்கத் தூரத்து மலைப்பகுதியும் அடர்வனமும் சேர்ந்து கொண்டன.

    எனக்கு அடர்ந்தகாடு என்றுதான் வரும், அடர்வனம் இன்னும் அழகாயிருக்கிறது.

    இடம் சிவன்சமுத்திரம் அருவி. ஒன்றைப் போல் ஒன்று இருப்பதில்லை. நயாகரா போலில்லை

    கலக்குறீங்க!

    சுந்தர் சொன்னமாதிரி பொறாமையா இருந்தாலும், நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்வதால், மன்னிக்கிறேன். மைசூர் நோக்கித் தொடருங்கள்…

  • 5 சுதர்சன் // Oct 28, 2005 at 2:46 am

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள், மகிழ்வாய் இருக்கிறது.

  • 6 தாணு // Oct 28, 2005 at 5:21 am

    ஈரோடு வந்து 15 வருடங்கள் ஆனாலும், வீரப்பன் இருந்தவரை அந்த பாதையில் செல்ல தைரியம் வந்ததில்லை. போன வருடம் தீபாவளிக்குதான் நாங்கள் மைசூர் போனோம். மழையில்லாத சமயம் ட்ரைவ் ரொம்ப நல்லா இருந்தது. ஆசனூரில் ஒரு சாப்பாடு சுட்ச்ச்சுட கிடைச்சிது பாருங்க, ரொம்ப அருமை.சிவசமுதிரம் பார்க்க வேண்டுமென்பது என்னுடைய ரொம்ப நாள் ஆசை. அடுத்த முறை போகலாம் என்று `மேலிடத்தில்’ சொல்லிவிட்டதால் போன தரம் போகலை. நிஜமா னீங்க எடுத்த அருவி படமா இல்லை, வெறெங்காவது சுட்டதா?
    துளசி ,
    இந்தியா வரும்போது எங்க வீட்டுக்கு வந்திடுங்க. சூப்பரா சுற்றிடலாம்.

  • 7 தாணு // Oct 28, 2005 at 1:03 pm

    முதல்தரம் படித்தபோது ஒரு போட்டோ மட்டுமே டெவலப் ஆச்சுது. அதான் அப்படி ஒரு கேள்வி. சுமைதாங்கியான போட்டோ உண்மை உணர்த்திவிட்டது.

  • 8 மூர்த்தி // Oct 28, 2005 at 8:34 pm

    படங்களுடன் பயணக் கட்டுரை! நன்றாக இருக்கிறது செல்வராஜ் அவர்களே.

  • 9 சிவா // Oct 28, 2005 at 11:52 pm

    அழகா பயணக் கட்டுரை சொல்லியிருக்கீங்க. நல்லாயிருக்குதுடே!

  • 10 Nithya // Oct 30, 2005 at 1:53 pm

    Selvaraj,

    This is Nithya, your friend from Louisville. Glad to see that you are still writing. Keep it up and I will try to catch up with all your writings soon.

  • 11 Alex Pandian // Nov 7, 2005 at 1:03 am

    செல்வராஜ்,

    அருமையான படங்கள்.
    ஈரோடிலிருந்து மைசூர் செல்லும் வழியில் பலமுறை பயணித்துள்ளேன் (வீரப்பன் பலத்துடன் ஆண்டு(?)கொண்டிருந்த போது).

    நீங்கள் சொன்ன மாதிரி கர்நாடக எல்லை வந்தவுடனேயே சாலைகளின் மோசமான நிலை. இதற்குக் காரணம் – கர்நாடக அரசு இந்தப் பகுதியை பின் தங்கியபகுதியாய் வைத்திருப்பதுதான். சேலம்/ஈரோடிலிருந்து பல கோடி ரூபாய் பெருமானமுள்ள விளைபொருட்கள் இந்த ரூட்டில் தான் கர்நாடகம், மகாராஷ்டிரம், வட இந்தியாவிற்கு
    செல்லும் லாரி போக்குவரத்து. ஆனால் இதன் பயன் அனைத்தும் தமிழகத்திற்கு என்பதால் கர்நாடக அரசு இந்த சாலைகளைக் கண்டுகொள்வதில்லை. மேலும் அந்தப்பகுதி (சாம்ராஜ நகர்) விசிட் செய்தால் கர்நாடக அரசுக்கு ஆபத்து (அதாவது முதலமைச்சர் / அமைச்சர்) பதவிக்கு, என செண்டிமெண்ட் இருப்பதால் எந்த பெரிய தலைகளும் அங்கு செல்வதில்லை. அதனாலும் சாலைகள் சரி செய்யப்படுவதில்லை.

    சாம்ராஜ நகர் – சத்தியமங்கலம் ரயில் பாதை போடுவதாக ரயில்வேயில் சர்வே
    எடுக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டிலும்
    ஒரு வரி இதைப் பற்றி படிப்பார்கள் ஆனால் ஆக்ஷன் எதுவும் இருக்காது.

    இந்த சாலைகளைச் செப்பனிட்டால் அல்லது ரயில் போக்குவரத்து ஏற்படுத்தினால்
    நிச்சயம் பொருளாதாரத்தில் இந்தப் பகுதிக்கு (தமிழகம், கர்நாடகம் இருவருக்கும்)
    முன்னேற்றம் இருக்கும் (அப்படியே மைசூருக்கும்!)

    – அலெக்ஸ்

  • 12 கோ.இராகவன் // Nov 7, 2005 at 2:01 am

    அருமையான பதிவு செல்வராஜ். சிவன்னசமுத்திரம் நான் சென்றிருக்கிறேன். அப்பொழுது தண்ணீர் வரத்துக் குறைவாக இருந்தது. ஆகையால் கீழே இறங்கியும் மேலே ஏறியும் மகிழ்ந்தோம். இப்பொழுது வெள்ளமாக ஓடும். ஆகையால் கண்ணுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    அங்கே அரைநெல்லிக்காயை உப்பும் மிளகாய்ப் பொடியும் தூவி விற்பார்கள். அவ்வளவு புளிப்பும் உரைப்பும். வாங்கினீர்களா?

  • 13 krishnamurthy // Nov 29, 2005 at 3:20 am

    Sel. What happend. why no blogs from u.

  • 14 செல்வராஜ் // Nov 29, 2005 at 12:16 pm

    அனைவரது பின்னூட்டங்களுக்கும் நன்றி. நீண்ட நாள் இணையத் தொடர்பு சரியாக இல்லாத வெளியூர் சென்றுவிட்டதால் உடனே பதிலெழுத முடியவில்லை.