இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஈரோட்டில் புத்தகக்கண்காட்சியும் வலைப்பதிவர் இருவரும்

August 16th, 2005 · 9 Comments

மொட்டை வெய்யலாய் இருந்தாலும் நடந்தே செல்வது என்று முடிவு செய்தேன். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் வீடு இருக்கும் (இருந்தவென்றாகப்போகிற) வீரப்பன் சத்திரம் சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றால் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருக்கலாம். இருந்தாலும் ஊருக்குத் தனியனாக நான் மட்டும் சென்றதில் கிடைத்த நடைச் சுதந்திரத்தை அனுபவித்தவாறு கிளம்பினேன். அவசரமாய் ஆட்டோவில் அல்லது நகரப் பேருந்தில் சென்றால் எப்படி வேடிக்கை பார்த்துச் செல்வது? அவ்வப்போது அடித்த காற்றின் காரணமாய் வெய்யல் பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை.

தள்ளுவண்டியில் சில பெண்கள் காய் கறி பழங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அந்த வ்ண்டிகளுக்கு எண்கள் குறிக்கப் பட்டிருந்தன. அரசு பள்ளியொன்றின் பெயர்ப்பலகை புதிதாக இருந்தது. சின்னச் சந்தாய் இருந்த இடங்களில் பெரிய வணிகக் கட்டிடங்கள் முளைத்திருந்தன. இன்னும் சில அப்படியே இருந்தன. உருமாலை கட்டிக் கொண்டு இளநீர் விற்றுக் கொண்டிருந்தவர்களைத் தாண்டிப் ‘பாரதி கொட்டாய்’ நிறுத்தம் அருகே சென்றபோது அந்த விளம்பரத் தட்டி என்னைக் கவர்ந்தது. ஈரோட்டில் பத்து நாட்களுக்குப் புத்தகக் கண்காட்சி. இந்தப் பக்கமெல்லாம் இப்படிப் புத்தகக் கண்காட்சிகள் வருவது அரிதாயிற்றே!

புதிதாய் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பாய் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கண்காட்சி ஆரம்பித்துச் சில நாட்களே ஆகியிருந்தன. இன்னும் ஒரு வாரத்துக்கு நடக்கும் என்றாலும் நான் இருக்கப் போவது இரண்டு நாட்களுக்கு மட்டுமே. சென்ற முறை இந்தப் பக்கமாக வந்தபோது கோவை விஜயா பதிப்பகம் சென்றும் பல நல்ல புத்தகங்களைப் பார்த்துவிட்டுப் பெருமூச்சு மட்டும் விட்டுவிட்டு வந்துவிட்டதில் இங்கு மட்டும் போய் என்ன செய்யப் போகின்றேன்? புத்தகங்களை வாங்குவதற்குத் தயங்குவதற்குச் சில காரணங்கள். ஒன்று, அதனை அயல்நாட்டுக்குச் சுமந்து செல்வதில் இருக்கும் சிக்கல்கள். இரண்டு, வாங்கி அடுக்கிப் படிக்க நேரமின்றிச் சும்மாவே போட்டு வைத்துவிடுவேனோ என்னும் ஐயம். மூன்று, நல்ல புத்தகங்கள் என்று எப்படிப் பார்த்து வாங்குவது என்னும் அறியாமை. இவற்றையெல்லாம் மீறிச் சமீபத்தில் மீண்டும் எழுத்துலகில் ஆர்வம் பிறந்திருப்பதற்கு வலைப்பதிவுலகம் நிச்சயமான ஒரு காரணம். நிறைய நல்ல புத்தகங்களின் அறிமுகங்கள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றனவே.

கண்காட்சியில் தினமும் மாலையில் சிலரைச் சொற்பொழிவாற்றவும் அழைத்திருக்கின்றனர். அன்றைய தினம் யாரென்று பார்த்தேன். பொன்னீலன் என்றிருந்தது. சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்றாலும் அவரைப் பற்றிப் பெரிதும் அறிந்திராததில் அப்படி ஒன்றும் ஆர்வம் பிறக்கவில்லை. அருகிலேயே சிறிதாய்த் திருமதி. செல்வநாயகி என்றிருந்தது. அவர் யாரென்று பெரிதான விளக்கமில்லை. எனக்குத் தெரிந்து ஈரோட்டில் செல்வநாயகி மருத்துவமனை ஒன்றிருக்கிறது. ஆனால் அந்த மருத்துவர், குடும்ப நண்பர், பெயர் நிர்மலா. அதனால் அவர்களாயிருக்க முடியாது. அதையடுத்து தோழியரில் எழுதிக் கொண்டிருக்கும் செல்வநாயகி. ஒருவேளை இது அவராகக் கூட இருக்குமோ என்னவோ தெரியவில்லை என்று மனதிற்குள் எண்ணியவாறு நடையைக் கட்டினேன். வேறு விவரங்கள் இல்லாததால் தெளிவு செய்து கொள்ள இயலவில்லை.

மாலையில் வீட்டில் வேறு உரையாடல்களில் நேரம் போய்விட்டது. அப்பாவும் வெளியூரில் இருந்து இரவு வரை வரவில்லை. மறுநாள் காலை ஏதோ நீதிமன்றம் வழக்கறிஞர்கள் என்று பேச்சு வரும்போது மீண்டும் நேற்றுத் தட்டியில் பார்த்த செல்வநாயகி நினைவு வந்தது. அது பற்றி அப்பாவிடம் சொன்னேன். அது வழக்கறிஞராக இருந்தால் எனக்குத் தெரிந்தவராய்க் கூட இருக்கலாம் என்றேன். “அட! அங்க மேசை மேல ஒரு அழைப்பிதழ் இருக்குதே, பாத்திருக்கலாம்ல” என்றார். புத்தகக் கண்காட்சி பற்றிய விரிவான அழைப்பிதழை உடனே எடுத்துப் பிரிக்க, அங்கே நேற்றுப் பேசியவர் ‘வழக்கறிஞர் செல்வநாயகி’ என்றிருந்தது. இது நிச்சயம் அவராகத் தான் இருக்கும் என்று ஏற்கனவே இருந்த தொடர்பெண்ணை அழைத்துக் கேட்க, “ஆமாங்க. நான் தான் அது. நேற்று வந்திருந்தேன்” என்றார். ‘இனிவரும் காலம்’ என்ற தலைப்பில் பேசியிருக்கும் அவரது பேச்சைக் கேட்கவும் அவரைச் சந்திக்கவும் கிடைத்த அரிய வாய்ப்பை இழந்துவிட்டேனே என்று ஏமாற்றமாய் இருந்தாலும், தொலைபேசியில் பேசும் வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சியே.

வலைப்பதிவுகளுக்குத் தற்காலிகமாக விடுப்புச் சொல்லிவிட்டுப் போனவர், இதுபோல் சில மேடைப்பேச்சுக்களிலும், சில கல்லூரிகளில் மாணவர்களிடையே பேசுவதிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. தனது பேச்சுக்களில் வலைப்பதிவுகள் பற்றியெல்லாம் அறிமுகப் படுத்துவதாகக் கூறினார். “இன்னும் எங்கெல்லாம் பேசப் போகிறீர்கள்” என்றேன். பல இடங்களில் பேசுவதாய் இருந்தாலும் போதும் என்று விட்டுவிட்டதாகக் கூறினார். இன்னும் ஒரு நிகழ்ச்சி அமையலாம் என்றவர் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கிறேன் என்றார். அப்போது அவரை நிச்சயம் சந்திக்க வேண்டும் என்றிருக்கிறேன். “வேறு யாரையேனும் சந்தித்தீர்களா” என்றேன். “கிழக்குப் பதிப்பகம் கடையின் முன்புறம் அரை டிராயர் போட்டுக் கொண்டு இருந்தவர் தான் பத்ரியாக இருக்கவேண்டும். ஆனால் அவசரமாய்ச் சென்றதில் பார்க்க, பேச முடியவில்லை” என்றார்.

மறுநாள் எதற்கும் போய்ப் பார்ப்போமே என்று போனதில் புத்தகக் கண்காட்சி நன்றாகவே இருந்தது. இத்தனை பதிப்பகங்களை ஒரே இடத்தில் இந்த ஊரில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. கடை எண் 62 என்று பார்த்துக் ‘கிழக்கு’ பக்கமாகப் போனபோது கல்லாப் பெட்டியும் கையுமாக உட்கார்ந்திருந்த பத்ரி ஒரு நிமிட இடைவெளியில் கையை ஆட்டினார். முழுக்கால் பேண்ட் தான் அணிந்திருந்தார்! கண்காட்சிக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். “பரவாயில்லை. நன்றாக இருக்கிறது” என்று கூறியவர், “இது போல வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இதனை நடத்த வேண்டும்” என்றார். நல்ல வரவேற்பு என்பதை அவர் முகத்து நிறைவே காட்டிக் கொடுத்தது.

எங்காவது ஒரு இடத்தில் புத்தகங்களை வாங்க ஆரம்பிக்க வேண்டுமே என்று ரா.கி.ரங்கராஜனின் ‘நாலு மூலை’ மற்றும் ஆதவனின் ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’யும் வாங்கினேன். கோவை விஜயாவில் கிடைக்காத தஞ்சைப் பல்கலையின் ‘அருங்கலைச்சொல் அகரமுதலி’ இங்கு எனக்குக் கிடைத்துவிட்டது. “பத்துப் பிரதி கொண்டு வந்தோம், இது ஒன்று தான் மிச்சம்” என்றார்கள். ஈரோட்டில் இந்த அகரமுதலியைப் பத்துப் பிரதியும் வாங்க ஆள் இருக்கிறது என்பது வியப்பாய் இருந்தது. நிறைவாகவும் இருந்தது. பொதுவாகவே தமிழில் அகரமுதலிகள் முன்பைவிட இப்போது நிறையத் தென்படுகின்றன. இவற்றை எப்படிப் பார்த்து வாங்குவது என்பதற்கு என்னிடம் இருக்கும் ஒரு எளிய சோதனை Fermentationக்கு என்ன போட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதே. ‘புளிக்க வைப்பது’ என்றிருந்தால் அது ஓரளவு சரிதான் என்றாலும் விட்டுவிடலாம். ‘நொதித்தல்’ என்று இருந்தால் வாங்கி விடலாம்.

தமிழர் தலைவர் பெரியார் என்று மார்க்ஸ் எழுதிய புத்தகம் என்று தங்கமணி சொன்னதாய் ஞாபகம். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. சாமி சிதம்பரனார் எழுதியது தான் இருந்தது என்று எதுவும் வாங்கவில்லை. சோளகர் தொட்டி பார்த்தேன். அதைப் படிக்கும் மனதிடம் எனக்கில்லை என்று வாங்கவில்லை. டிசே பதிவில் படித்த பாதிப்பே இன்னும் பல நாட்களுக்கு இருக்கும்.

படிக்க நாட்கள் ஆனாலும் பரவாயில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக நல்ல புத்தகங்கள் வாங்க ஆரம்பிக்க வேண்டும்.

Tags: இலக்கியம் · பொது

9 responses so far ↓

  • 1 Thangamani // Aug 16, 2005 at 3:16 pm

    செல்வராஜ், நான் சொன்ன புத்தகங்கள்
    1. தமிழர் தலைவர் பெரியார் – சாமி சிதம்பரனார். இது பெரியார் உயிரோடிருக்கும் போதே எழுதப்பட்டு, பெரியாராலேயே சரிபார்க்கப்பட்டது. நிறைய தகவல்கள் கொண்டது.

    2. பெரியார்? – அ.மார்க்ஸ்.
    இது பெரியாரை ஒரு பார்ப்பன எதிர்ப்பாளராக, கடவுள் மறுப்பாளாராக, தமிழர் தலைவராக மட்டும் குறுக்கிக்காட்டும் முயற்சிகளைத் தவிர்த்து பெரியார் மனித விடுதலையை தனது சுய ஒளியில் தேடும் முயற்சியையும், சகல நம்பிக்கைகளையும் கட்டுடைக்கும் அவரது நேர்மையையும் காட்டும் ஒரு சிறிய புத்தகம்.

    இரண்டுமே வாசிக்க வேண்டியவை என்பது என் எண்ணம்.

    நன்றிகள். ஈரோட்டில் இப்படிப்பட்ட புத்தகக் கண்காட்சிகள் நடப்பது மகிழ்ச்சிக்குரியது.

  • 2 Thangamani // Aug 16, 2005 at 3:18 pm

    செல்வநாயகி அவர்களை மறுபடியும் தொடர்புகொண்டால் என் அன்பைச் சொல்லவும்.

  • 3 DJ // Aug 16, 2005 at 3:52 pm

    செல்வராஜ், தங்கமணி கூறவந்ததைத்தான் நானும் உங்கள் பதிவை வாசித்தபோது நினைத்தேன். அ.மார்க்ஸ் எழுதிய ‘பெரியார்?’ வித்தியாசமான கோணத்தில் பெரியாரை அணுகிய நூல். செல்வநாயகி எழுதிய சில பதிவுகளை வாசிததபோது, அவர் மேடைப்பேச்சுகளில் வல்லவர் என்று தெரிந்து வைத்திருந்தேன். அவர் குறித்த உங்கள் தகவுலுக்கும் நன்றி.

  • 4 செல்வராஜ் // Aug 17, 2005 at 12:54 am

    நன்றி தங்கமணி, டீசே. முடிந்தால் அடுத்த வாரம் சென்று வாங்குகிறேன். சனிக்கிழமை வரை கண்காட்சி இருக்கும். பெரியார் பற்றி நான் படிக்க வேண்டும்.

    தங்கமணி, தனிப்பேச்சு என்பதால் செல்வநாயகியுடன் பேசியது எல்லாம் எழுதவில்லை. வலைப்பதிவுகள் பற்றிப் பேசிய போது உங்கள் பதிவு பற்றியும் குறிப்பாகப் பேசிக் கொண்டோம். உங்களின் மற்றும் டீசேவின் விசாரிப்புக்களை அடுத்த முறை பேசினால் சொல்கிறேன்.

  • 5 Suresh Kannan // Aug 17, 2005 at 2:50 am

    சமீப வெளியீட்டில் நீங்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகம் – கோணல் பக்கங்கள் (தொகுதி 3) 🙂

    – Suresh Kannan

  • 6 செல்வராஜ் // Aug 17, 2005 at 7:08 am

    சுரேஷ், கிண்டலாத் தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். சாருவின் கோ.ப வை விகடனின் இணைய தளத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையால் படிக்க ஆரம்பித்துப் பின் விட்டுவிட்டேன். பின்னொரு காலத்தில் படிக்கலாம், ஆனால் இப்போதைக்கு அதற்கு என் பட்டியலில் கீழே எங்கேயோ தான் இடம்.

  • 7 RPRAJANAYAHEM // Aug 17, 2005 at 10:27 am

    i read this selvaraj’s article. good.

    R.P.RAJANAYAHEM

  • 8 செல்வராஜ் // Aug 17, 2005 at 2:00 pm

    ராஜநாயகம் உங்கள் கருத்துக்கு நன்றி.

  • 9 என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் » Blog Archive » கவிஞர் செல்வநாயகியின் பனிப்பொம்மைகள் // Sep 20, 2005 at 5:22 pm

    […] ேடைப் பேச்சை இரண்டாவது முறையாகத் தவற விடப் போகிறேன். வார இறுதியையொட்டி வ […]