இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கொப்பரத் தேங்காயும் கடலப் புண்ணாக்கும்

August 12th, 2005 · 15 Comments

அப்புடியே புதுசாச் செக்குல ஆட்டுன எண்ணெய் இருந்தா நல்லா இருக்குமேன்னு எங்கூட்டுக்காரிக்குத் திடீர்னு ஒரு ஆசை வந்துருச்சுங்க. பெத்த புள்ள கேட்டுருச்சேன்னு அவங்கப்பா எங்களயும் கூட்டிக்கிட்டு கெளம்பீட்டாரு. செக்கெண்ணயத் தேடிக்கிட்டு ஊரு தேடி ஊரு தாண்டிக் கடசில கொளப்பலூருக்கு வந்து சேந்தோம். மாடு வச்சுச் செக்காட்டி எண்ணெய் எடுக்கிறதெல்லாம் இப்போ இல்லைன்னு சொல்லீட்டாங்க. மிசினுத் தானாம். ரோட்ட ஒட்டி இருக்குற சந்துல கொஞ்சம் உள்ளுக்கால போனோம். ஓரமா இருந்த சாலக்கொட்டாயில மாடு ரெண்டு அச போட்டுக்கிட்டு இருந்துச்சு. தொறந்திருந்த இரும்புக் கதவத் தாண்டி நொழவாசல்ல உரிச்ச தேங்காமட்ட மலை மாதிரி குமுஞ்சிருந்துது.

பின்னால எங்கிருந்தோ மொதலாளியம்மா வந்தாங்க. “ஏம்மா தேங்கா எண்ண இருக்கா?”. வாச முலுக்க ஒடச்ச கொப்பரத் தேங்காயக் காய வச்சுருந்தாங்க. செவுத்தோரம் ஒரு வண்டி டயரும் வெய்யல்ல காஞ்சுக்கிட்டு இருந்துச்சு. யாரோ ரெண்டு பேரக் கூப்பிட்டு அந்தம்மா ஊத்திக் குடுக்கச் சொன்னாங்க. வரட்டும்னு சுத்திமுத்தியும் வேடிக்க பாத்துக்கிட்டு இருந்தோம். காஞ்சுக்கிட்டிருந்த தேங்காயுல ஒண்ணு அழுகிப் போயிருந்துச்சு. “பாருங்க, இதையெல்லாம் அப்படியே போட்டு அரச்சுருவாங்க”, அப்படின்னாரு எங்க மாமா.

kopparai thEngaa

லிட்டருக்கு அம்பது ரூவா கேட்டாங்கன்னு நெனைக்கிறேன். வெலையெல்லாம் ஒரு நெதானமுந் தெரியலீங்க. அது அதிகமா கம்மியா புரியல. “ஏம்மா, கடல எண்ண உங்ககிட்ட இல்லியா, எங்க கெடைக்கும்?” மாமா மேல வெசாரிச்சுக்கிட்டிருந்தாரு. அப்படியே தெக்கயோ மேக்கயோ என்னவோ சொல்லிக் கொஞ்ச தூரம் போய்க் கேக்கச் சொன்னாங்க. போய் நின்ன எடத்துல ரெண்டு பெருசுங்க ஒக்காந்து பராக்குப் பாத்துக்கிட்டிருந்துச்சுங்க. மூக்கு மேல கண்ணாடி போட்டுக்கிட்டு அதுக்கு மேல இருந்த சந்துல பாத்துக்கிட்டிருந்தவங்க கிட்டப் போயி மொட்டயடிச்சிருந்த ட்ரைவரு கேட்டுட்டு வந்தாரு.


அந்த லைட் கம்பத்தத் தாண்டி இந்தப் பக்கமா போன சந்துல இருக்குன்னு சொன்னாங்க. போனோம். ரெண்டு வீடு வாசல் தாண்டிப் பின்னாடி பச்சயா வயல் தெரிஞ்சுது. வரிசயா தென்னமரம் வச்சுருந்தாங்க. ஒரு ஓரமா வைக்கப்போரு கூட இருந்த மாதிரி ஞாபகம். நாய் இல்லீன்னு நெனைக்கிறேன். இருந்தா நல்லா நியாபகம் வச்சுருந்துருப்பேன்.

வாசல்ல கடலக் கொட்டயக் காயப் போட்டு ஒரு அம்மா நெரவிக்கிட்டு இருந்தாங்க. ஒரு பக்கம் ஈக்குமாத்துச் சீவக்கட்டை. இன்னோரு பக்கம் மொறம். இரும்பு மொறங்கூட ஒண்ணு செவுத்துல சாத்தி வச்சுருந்துச்சு. கடலப்பொட்டோ குப்பையோ பொடைக்கறதுக்கா இருக்கும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்கனால எப்படி அப்படி மடிஞ்சி உக்கார முடிஞ்சுது?

Kadalai Kaaithal

காஞ்ச கல்லய மூட்டைல போட்டு நெறச்சு வச்சுருந்தாங்க. நடுவால ஒரு மிசினு இருந்துச்சு. மூட்டைல இருந்த கடலய அதுல போட்டு ஆட்டிக்கிட்டு இருந்தாங்க. ஓரத்துல துளியூண்டா எண்ண வழிஞ்சிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு அம்மா வந்து என்னவோ குத்தி உட்டாங்க. அடப்ப எடுத்து உட்டாங்க போல இருக்கு. அதுக்கப்புறம் கொஞ்சம் நெறயாவே எண்ண வந்துது. வழிஞ்ச எண்ணயப் புடிக்க கீழே ஒரு டின்னு வச்சுருந்தாங்க.

kadalai moottai

உருமால கட்டிக்கிட்டு வெறுமேலோட வேல செஞ்சுக்கிட்டிருந்தவர்கிட்டே “எவ்வளவு கடலைக்கு எவ்வளவு எண்ணை வருமுங்க”ன்னு கேட்டேன்.

“ஒரு மூட்டைக்கு முப்பத்திரண்டு கிலோ எண்ணை வருமுங்க”

மூட்டையா? மூட்டைன்னா எவ்வளவு? “மூட்டைக்கு அம்பது கிலோங்களா?”

“இல்ல தம்பி. இது எம்பது கிலோ மூட்டை”

ennai chekku

எம்பது கிலோவுக்கு முப்பத்திரண்டு கிலோ எண்ணைனா ரொம்பக் கம்மியா இருக்கேன்னு நெனச்சுக்கிட்டேன். இதயெல்லாம் அதிகம் பண்ற மாதிரி எதாவது செய்ய முடிஞ்சா இவங்களுக்கெல்லாம் நல்லா இருக்குமில்லே?

புண்ணாக்குன்னு நெறயா செந்தமிழ்லே பேச்சுக் கேட்டிருப்பீங்க. அந்தப் புண்ணாக்கப் பாத்திருக்கீங்களா? கடலய அரச்சு எண்ணை எடுத்த பிறகு மிச்சமிருக்கறது தான் புண்ணாக்குன்னு ஒரு ஓரமா போட்டு வச்சுருந்தாங்க. மாட்டுக்குக் கரச்சு ஊத்தரதுக்காம்.

“அதுல கொஞ்சம் எடுத்துட்டு வந்துருக்கலாம்ல. காலைல கொஞ்சம் எண்ணெய் கலந்து பிரெட்ல போட்டுப் ‘பீனட்-பட்டர்’னு குடுத்திருக்கலாம்” அப்படின்னு ரவுசு பண்றாங்க ஊட்டம்மா. அதுனால எல்லாம் ‘கடலை வெண்ணெய்ச்’ சமாச்சாரத்த உட்டுருவன்னு நெனச்சிக்க வேணாம். உக்கும்.

punnaakku

இப்படிப் பாடுபட்டுப் போய் வாங்கிட்டு வந்த எண்ணெய்ல தேங்காய் எண்ணெய் பெங்களூர்க் குளுருக்கே ஒறஞ்சு போச்சு. ஒரு கரண்டி வெளக்கெண்ண உள்ளுக்குள்ள ஊத்தியிருந்தா ஒறயாம இருந்துருக்கும்கறாங்க வீட்டுல. நெஜமாச் சொல்றாங்களா கால வார்றாங்களான்னு முழிக்க வேண்டியிருக்கு. ஒறயாம இருக்குற க(ட)ல்லெண்ணயப் பாத்தா அது உண்மையாக் கூட இருக்கலாம்னு தோணுது.

இதெல்லாம் நமக்கென்னங்க தெரியுது, புண்ணாக்கு!

Tags: கொங்கு · வாழ்க்கை

15 responses so far ↓

  • 1 Pari // Aug 12, 2005 at 4:36 pm

    வயித்தெரிச்சலக் கொட்டிக்காதீங்க 🙁

    கொஞ்சம் தேங்காப்புண்ணாக்கு எடுத்துத் தின்னுப் பாத்திருக்கணும் நீங்க(நெசமாத்தான் சொல்றேன்).

    >
    தொப்பை இல்லை 🙂
    அப்டி உக்காந்தாத்தான் எதையுமே காயவைக்க முடியும்.

    >

    >
    1 & 2 -க்கு நேரடி சம்பந்தமிருக்கு. மாடு கட்டி செக்காட்டினா முப்பத்திரெண்டு கெடைக்காது. சக்கையாப் பிழியமுடியாது.

    மாடு கட்டி செக்காட்டி எடுத்த தேங்காப் புண்ணாக்கு, மெஷின்லேர்ந்து எடுத்ததவிட ருசியா இருக்கும். தங்கியிருக்கிற எண்ணை தான் காரணம்.

  • 2 Pari // Aug 12, 2005 at 4:38 pm

    அடப்போங்க, less thaan, greater than sign ellaam தின்னுடிச்சி 🙁
    மறுபடியும்…
    —-
    வயித்தெரிச்சலக் கொட்டிக்காதீங்க 🙁

    கொஞ்சம் தேங்காப்புண்ணாக்கு எடுத்துத் தின்னுப் பாத்திருக்கணும் நீங்க(நெசமாத்தான் சொல்றேன்).


    அவங்கனால எப்படி அப்படி மடிஞ்சி உக்கார முடிஞ்சுது?

    தொப்பை இல்லை 🙂
    அப்டி உக்காந்தாத்தான் எதையுமே காயவைக்க முடியும்.


    1. மாடு வச்சுச் செக்காட்டி எண்ணெய் எடுக்கிறதெல்லாம் இப்போ இல்லைன்னு சொல்லீட்டாங்க. மிசினுத் தானாம்.


    2. எம்பது கிலோவுக்கு முப்பத்திரண்டு கிலோ எண்ணைனா ரொம்பக் கம்மியா இருக்கேன்னு நெனச்சுக்கிட்டேன். இதயெல்லாம் அதிகம் பண்ற மாதிரி எதாவது செய்ய முடிஞ்சா இவங்களுக்கெல்லாம் நல்லா இருக்குமில்லே?

    1 & 2 -க்கு நேரடி சம்பந்தமிருக்கு. மாடு கட்டி செக்காட்டினா முப்பத்திரெண்டு கெடைக்காது. சக்கையாப் பிழியமுடியாது.

    மாடு கட்டி செக்காட்டி எடுத்த தேங்காப் புண்ணாக்கு, மெஷின்லேர்ந்து எடுத்ததவிட ருசியா இருக்கும். தங்கியிருக்கிற எண்ணை தான் காரணம்.

  • 3 Vimala // Aug 12, 2005 at 5:25 pm

    புதுசாச் செக்குல ஆட்டுன
    கட்லை எண்ணெய் தோசைக்கு ரொம்ப நல்லாருக்கும்!!
    எங்க அம்மாய் விட்ல செய்வாங்க!!

  • 4 துளசி கோபால் // Aug 12, 2005 at 7:55 pm

    நல்லெண்ணெய்க்கு எள்ளு ஆட்டிட்டுக் கடைசியிலே கொஞ்சம் அதுலெ வெல்லம் சேர்ப்பாங்க. அந்தப் புண்ணாக்கு
    நல்ல சுவையா இருக்கும். மணக்க மணக்க எள்ளுவாசமும், லேசான இனிப்புமாய்.

    கிடைச்சா விடாதீங்க.

  • 5 ராம்கி // Aug 13, 2005 at 1:24 am

    செக்காட்டி இன்னும் எண்ணெய் எடுக்கிறாங்கங்கறதே ஆச்சரியமாகத்தான் இருக்கு. மளிகைக் கடைக்குப் போய் வீட்டுல கொடுத்த பட்டியலைக் கொடுத்துட்டு அங்க பக்கத்துல இருக்கற சாக்குல கொட்டிக் கிடக்கற கடலைப் புண்ணாக்கை எடுத்து சாப்பிட்டுப் பார்த்த இளமைக் காலம் உண்டா செல்வராஜ்?

  • 6 Padma Arvind // Aug 14, 2005 at 5:22 pm

    இதேபோல கடலை எண்ணை ஆட்ட, தோலிஅயி உரித்து தந்தால் படிக்கு பத்துபைசா (remove shell), வேப்பம்பழம்பொறுக்கி எடுத்து கொட்டையை காயவைத்து ஏரப்பதம் போக கொண்டுபோய் தந்தால் படிக்கு 10பைசா தருவார்கள்.புண்ணாக்கை கொண்டுபோய் மாடு இருக்கும் வீட்டில் தரவேண்டு. இதெல்லாமந்தகால வேலைகள். இன்னமும் இப்படி எண்ணெய் ஆட்டுவது படிக்க வியப்பாக இருந்தது.

  • 7 செல்வராஜ் // Aug 16, 2005 at 11:12 am

    அட! இந்த செக்கு ஆட்டி எண்ணெய் சமாச்சாரம் தொடர்பா பல பேருக்கு அனுபவங்கள் நினைவுகள் இருக்கும் போலிருக்கே. எனக்கு அவ்வளவா இல்லை. புண்ணாக்கும் நினைவு தெரிஞ்சு சாப்பிட்டதில்லை 🙂 (வீட்டுச் சாப்பாடு பத்தியெல்லாம் பேசக் கூடாது!!:-) )

    எண்ணெய்னா இன்னொன்னு நினைவுக்கு வருது. அந்தக் காலத்துல கள்ளுக்கடைமேட்டுல லைன்-வீட்டுல இருந்தப்போ ஒரு ஐயன் மாட்டு வண்டில வச்சு எல்லா வகை எண்ணெயும் கொண்டு வருவாங்க. அவங்க கிட்டத்தான் எல்லா எண்ணெயும் வாங்குவோம். சதுர சதுர டப்பாவுல வச்சுருப்பார். சின்னச் சின்ன அளவைகளில் மொண்டு ஊத்துவார்…

    இதெல்லாம் ஏறக்குறைய மறந்தே போச்சு! எங்கம்மாவுக்கே ஞாபகம் இருக்கான்னு அடுத்த முறை ஊருக்குப் போகும் போது கேக்கணும்.

  • 8 கோ.இராகவன் // Aug 17, 2005 at 7:49 am

    சின்ன வயதில் ஊருக்குப் போகையில் எள்ளுப் புண்ணாக்கை கருப்படியோடு இடித்துத் தின்றது நினைவிற்கு வருகிறது.

    தேங்காய்ப் புண்ணாக்கையும் வெல்லத்தோடு இடித்துத் தின்பார்களாம். நான் தின்றதில்லை.

    கடலைப் புண்ணாக்கு……தண்ணீரில் ஊற வைத்து செடிகளுக்கு ஊற்றுவோம். அது நினைவில் இருக்கிறது.

  • 9 செல்வராஜ் // Aug 17, 2005 at 1:58 pm

    இராகவன், வாங்க. எள்ளுப்பொடி வேண்டுமானால் நான் சாப்பிட்டிருக்கிறேன். கருப்பட்டி வெல்லமும். இப்போதெல்லாம் கருப்பட்டி கிடைக்கிறதா தெரியவில்லை.

  • 10 கோ.இராகவன் // Aug 18, 2005 at 1:59 am

    செல்வராஜ், கருப்பட்டி இன்னும் கிடைக்கிறது. தெற்கில். நான் தூத்துக்குடி, கோயில்பட்டி, திருச்செந்தூர் பக்கம் போகையில் வாங்கி வைத்துக் கொள்வேன். யாராவது வந்தாலும் தேவையென்றால் கருப்பட்டியும் பனங்கற்கண்டும் வாங்கி வரச் சொல்வதுண்டு.

    இனிப்புச் சுவைகளிலேயே எனக்குப் பிடித்தது கருப்பட்டிச் சுவைதான். கருப்பட்டிப் பாயாசம் என்று காய்ச்சுவார்கள். அரிசுமாவு உருண்டைகளைப் போட்டு. மிகவும் சுவையாக இருக்கும். ஏன்? உளுந்தங்களி கருப்பட்டி நல்லெண்ணெய் கூட்டணி போல வருமா?

  • 11 Jagadhees // Aug 18, 2005 at 5:38 am

    எண்ணெய்னா நினைவுக்கு வருவது, எங்க வீட்டு பக்கத்து Oil Mill. இப்பல்லாம் வெளிய இருந்து வாங்கிட்டு வந்து விக்கிறதா அம்மா சொல்வாங்க !.

    இன்னொன்னு..ஒருத்தர் சைக்கிள்ல வச்சு எல்லா வகை எண்ணெயும் கொண்டு வருவாரு. அவங்க கிட்டத்தான் எல்லா எண்ணெயும் வாங்குவாங்க. இன்னமும் வர்றதா அம்மா சொன்னாங்க. பெரிய சுருட்டு புடிச்சுட்டு வருவாரு !!!

  • 12 babu // Oct 6, 2005 at 12:57 am

    intha foto va ethaa competition ku anupunga… its too good…

  • 13 செல்வராஜ் // Oct 6, 2005 at 1:40 pm

    வாங்க வாங்க பாபு. நல்ல இடமாப் பாத்து சொல்லுங்க. அனுப்பிச்சுருவோம்!

  • 14 B.Pannirselvam // May 22, 2006 at 3:25 am

    Kirukkuththanama illama kiranga vaikuthu

  • 15 செல்வராஜ் // May 22, 2006 at 8:58 pm

    பன்னீர்செல்வம், உங்க வருகைக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றிங்க.