வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
Jul 31st, 2020 by இரா. செல்வராசு
வணிகப்பெயர்களையும் நிறுவனங்களின் பெயர்களையும் தமிழ்ப்புலத்தில் சொல்லும்போது அவற்றை மொழிபெயர்க்கலாமா கூடாதா என்னும் கேள்வி குறித்துச் சிலநாள் முன்னர் ‘பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்’ என்று எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. ஒரு குறிப்பிட்ட பெயரை எடுத்து அலச இருப்பதால், ஒரு கட்டின் ஆய்வு அல்லது அலசல் என்போம்.
[Case என்னும் சொல்லுக்குத் தமிழில் கட்டு என முன்வைத்திருந்தார் இராம.கி. அதையொட்டி, Case analysis என்பதற்குக் கட்டு+ஆய்வு எனக் கட்டாய்வு என்று கொண்டேன். கட்டலசல் என்றும் கூறலாமோ?].
வேற்றுமொழி ஒன்றில் வழங்கும் பெயர்களை அப்படியே ஏற்பதா, அல்லது இலக்குமொழிக்கு ஒத்து மாற்றி எழுதுவதா என்னும் சிக்கல் அல்லது கேள்வி பொதுவாய்ப் பல மொழிகளிலும் இருக்குமொன்றுதான். ஆனால், உலகமயம் பெருகும் இந்நாளில், உள்ளூர்ச் சந்தைக்கும் பண்பாட்டிற்கும் முதன்மைத்துவம் அளித்து அம்மொழிக்கு ஏற்ப ஒரு வணிக நிறுவனத்தின் பெயரையோ, அவர்களின் பொரிம்பு அல்லது புதுக்கு/படைப்பு இவற்றின் பெயரையோ மாற்றி எழுதிக்கொள்வதும் இயல்புதான் என்று பல்வேறு மொழியினரும் இப்போது ஏற்றுக்கொள்வதைப் பார்க்கலாம்.
சென்னையில் வேதிப்பொறியியல்சார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நண்பர் எடுவின் சில நாள்களுக்கு முன்னர் அவருடைய நிறுவனப் பெயரைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். தற்போது எழுதியிருக்கும் முறை நிறைவைத் தரவில்லை என்று கூறியிருந்தார்.
ஒருவேளை ‘இன்னோவேடிவ் சொலுஷன் பிரைவேட் லிமிடெட்’ என்று எழுதியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் அதற்கான தமிழாக்ககத்தைக் கேட்டிருக்கலாம். ஆனால், நாம் இங்கு மொத்தப் பெயரையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வணிகப்பெயர்த் தமிழாக்கத்துக்கான ஒரு கட்டாய்வாக அலசுவோம். 🙂
ChemSys – Innovative Solutions Private Limited என்பது தான் நமக்கு முன்னிருக்கும் நிறுவப்பெயர். இதில் இரண்டாம் பகுதியை மாற்றிக் கொள்வதில் சிக்கல் இல்லை. அவை பொதுவான பொருள்பொதிந்த சொற்கள் என்பதால் எளிதில் தமிழாக்கம் செய்துகொள்ளலாம். Innovative Solutions என்பதற்குப் புதிய தீர்வுகள் அல்லது புதுமையான தீர்வுகள் என்று நான் முன்வைப்பேன். சுருங்கச் சொல்வது நலம்பயக்கும் என்பதால் புதுமைத்தீர்வுகள் என்றே கொள்ளலாம். Private Limited என்பதை Private Limited Company என்பதாகக் கொண்டு தனியார் நிறுவம் என்றே சொல்லிவிடலாம். ஆக, பெயரின் இரண்டாம் பகுதியைப் "புதுமைத் தீர்வுகளுக்கான தனியார் நிறுவம்" என்று வைத்துக் கொள்வோம்.
பெயரின் முதற்பகுதியாகிய ChemSys என்பதை அப்படியே கருதினால் தமிழில் பொருளற்ற ஒரு பெயர். ஆனால் நிறுவனத்தின் சிறப்புப் பெயர். இதனை நாம் தமிழில் எழுதுவதற்கு நம் முன்னால் ஒரு சில வாய்ப்புகள் உள்ளன.
- சிறப்புப் பெயர் என்பதால் அப்படியே மாற்றாமல் வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்வர் சிலர். அது ஒரு வழி. ஏற்கனவே அப்படித் தான் எழுதியிருக்கிறது – கெம்சிஸ் என. ஆனால், கிரந்த எழுத்தைத் தவிர்த்து எழுதுவது சிறப்பு என்று நாம் கருதுவதால், அதனைச் சற்று மாற்றி, கெம்சிசு என்று எழுதலாம்.
- இரண்டாவதாக, ChemSys என்பது Chemical Systems என்னும் சொற்களின் சுருக்கப் பெயர் தான் என்பதை உணர்ந்து, அவற்றைத் தமிழ்ப்படுத்தி, வேதிக்கட்டகம் என்று கொள்ளலாம். மேலும், அகம் என்னும் பெயர்ச்சொல்லை மாற்றி அம் விகுதியைக் கொண்டு சுருக்கி, வேதிக்கட்டம் என்றும் கூடச் சொல்லலாம்.
- மூன்றாவதானது, மேற்சொன்ன இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலை. அதாவது, பொருளற்று எழுத்துப்பெயர்ப்பு செய்யாமலும், முற்றிலும் வேற்றொலியுடன் பொருளொட்டிப் பெயர்க்காமலும், தமிழில் நெருக்கமான ஒலியுடைய, சிறிது பொருள்பொதிந்த பெயராய்ப் பார்த்து வைப்பது. இங்கு தான் நாம் நிறையத் தேட வேண்டியிருக்கிறது.
இந்தத் தேட்டையைச் சற்று விரிவாகப் பார்ப்போம். கெம்சிசு என்னும் இப்பெயரை நாம் இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். கெம் என்பது முதல் பகுதி. சிசு இரண்டாவது. இவற்றை ஒட்டிய பொருத்தமான தமிழ்ப்பெயர்கள் உள்ளனவா என்று தேடுவோம். சிசு என்பதே வழக்கத்தில் உள்ள ஒரு பெயர் என்றாலும், அது குழந்தை என்னும் பொருளையும், மேலும் வடமொழிப் பெயராக இருக்கலாம் என்னும் ஐயப்பாட்டையும் தருவதால் நாம் அதை விட்டுவிடுவோம்.
‘சி’ என்றே ஒரு விகுதியை நாம் கையாளலாம். தொழிற்பெயருக்கான ஒரு விகுதி அது. எழுச்சி, வளர்ச்சி, கவர்ச்சி, முயற்சி என்றாற்போல வினைகளோடு சேர்ந்து ஒரு பெயரை உருவாக்கவல்லது ‘சி’ யெனும் விகுதி.
‘சிசுகம்’ என்றொரு பெயர் இருக்கிறது. ஒரு மரவகை, முதலை, திமிங்கலம் என்ற பொருள்களில் வழங்குகிறது. இவர் பெரிய முதலை, இந்த நிறுவனம் திமிங்கலம் போன்றது 🙂 என்ற பொருள்களைக் கருதலாம் என்பதால் இதனை ஒருவகையில் ஏற்கலாம்.
‘சிட்டு’, ‘சிட்டம்’ என்றால் பீடு, பெருமை என்னும் பொருள்கள் அமையும் – eminence or greatness. ம்ம்.. இவையும் பொருந்தலாம்.
மேலும் துழாவுகையில், ‘சித்து’, ‘சித்தம்’, ‘சித்தர்’ என்னும் சொற்கள் சிக்கின. சித்தம் என்பது மனம். சித்தர் என்பவர் நுண்ணறிவு பெற்றவர். சித்து அல்லது சித்தில் என்பது அறிவு/knowledge என்று இதுவும் பொருத்தமான ஒன்றாய் அமையும் வாய்ப்புண்டு.
சரி – இனி இப்பெயரின் முதற்பகுதியைக் கொஞ்சம் அலசுவோம். கெம் என்னும் முன்னொட்டுத் தமிழில் இல்லை. கெமி என்றொரு வினை இருக்கிறது. ஆனால், அது போதல் என்னும் வினையையும், புணர்ச்சி என்று இவ்விடம் பொருந்தாத ஒரு பொருளையும் தந்துவிடுவதால் அதனை நாம் தவிர்ப்போம். ஒலியளவில் ஒத்துவந்தாலும், பொருளளவில் பொருத்தமில்லை.
நெருக்கமான வேறு சொற்களை அலசியதில், கெமிளி, கெம்பளி என்று இரண்டு சொற்கள் சிக்கின. இவை இரண்டிற்கும் ஒருவகையில் மகிழ்ந்திருத்தல், கொண்டாடுதல் என்னும் பொருள்கள் இருக்கின்றன. மகிழ்ந்திருத்தலும், அறிவும் என்றாற்போல உம்மைத்தொகையாக்கிக் கெமிளிசித்து என்றோ கெம்பளிசிட்டம் என்றோ சொல்வது ஒரு வழி.
கெம்பீரம் என்றொரு சொல் உள்ளது.
ஆழம், மேன்மை, வீரம், அல்லது ஆழ்ந்த அறிவு என்னும் பொருள்களில் வழங்கும் ஒரு பெயர்ச்சொல். இதன் ஈற்று அம் விகுதியை விடுத்து ஒரு பெயரடையாகக் கொண்டு, ஆழ்ந்த, மேன்மையான அறிவு என்னும் பொருளில் ‘கெம்பீர்ச்சித்து’ என்று சொல்ல முடியுமா?
கெம் என்னும் முன்னொலியை விட்டு நகர்ந்து முதல் உயிரைச் சற்று மாற்றுவோமானால், கம் அல்லது கும் என்னும் இரு முன்னொட்டுகள் பொருள் பொதிந்தனவாக இருக்கின்றன. கம் என்றால் தொழில் – act, operation, employment என்று கிடைக்கிறது. கருமம்->கம்மம்->கம் என்றாகி வந்திருக்கிறது. அதுவே சற்றுத் திரிந்து கும் என்றால் கூடல் என்னும் பொருளிலும் வருகிறது. கும்பணி, கும்பல் என்று குழுமும் பொருளும் ஒரு நிறுவனத்துக்குப் பொருந்தி வரலாம்.
கம், கும், இரண்டும், மகர ஈற்றில் முடிவதால், வருமொழி வல்லினத்தோடு புணரும்போது இடையில் உகரம் தோன்றும் என்னும் தொல்காப்பிய விதிப்படி, கம்மு, கும்மு என்றாகும். அதன்படி, கம்முச்சித்து அல்லது கும்முச்சித்து என்று தொழிலறிவு என்றோ, கூடிய அறிவு (குழுமியோரின் அறிவுத் தொகுதி) என்றோ பொருள் கொள்ளலாம்.
கும்-இலிருந்து திரிந்து குமு என்றொரு வினைச்சொல் கிடைக்கிறது. குமு என்றால் பெருகுதல், பரவுதல். பெருகிப் பரவும் அறிவு என்பதை முக்காலத்துக்கும் உணர்த்தும் வினைத்தொகையாக ‘குமுசித்து’ என்றும் கூட ஆக்கலாம். அல்லது சி விகுதியைக் கொண்டு (எழு-> எழுச்சி என்றாவது போல) குமு-> குமுச்சி என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.
பெருகிப் பரவும் பெருமை என்னும் பொருளில் வருவது: குமுசிட்டம் அல்லது குமுசிட்டு.
கம்-ஐ அடுத்து வரும் கமி என்றொரு வினைச்சொல்லும் பொருந்தும். கமி என்றால் to support, to bear with, endure, forgive என்னும் பொருள்கள். தாங்குவதும் பொறுத்துப்போவதுமான பொருள்கள். கமிசித்தம் என்றால் பொறுத்துப்போகும், அல்லது உறுதியாகத் தாங்கும் மனம் என்னும் பொருள் வரும்.
ஆக, கெம்பீர், குமு, கமி என்பதில் ஒன்றை முற்பகுதிக்கும், சித்து, சித்தம், சிட்டு, சிட்டம், என்பதில் ஒன்றைப் பிற்பகுதிக்கும் சேர்த்து ஆக்கிக்கொள்வது ஒரு வழி.
மொத்தத்தில்: ChemSys – Innovative Solutions Private Limited என்னும் நிறுவனத்திற்கு, [கெம்சிசு, வேதிக்கட்டம், கெம்பீர்ச்சித்து, குமுசிட்டம், கமிசித்தம்] – புதுமைத்தீர்வுகளுக்கான (ஒரு) தனியார் நிறுவம் என்ற பெயரைப் பரிந்துரைக்கின்றேன்.
இதன் நிறைகுறைகளை அலசி, நண்பருக்குப் பிற மேம்பட்ட யோசனைகளை அள்ளித் தந்து என்னிடம் இருந்து அவரைக் காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் 🙂
****
பி.கு.: இங்குப் பதிவிடும் முன்னர் நண்பர்க்கு அனுப்பியிருந்தேன். ‘மொத்தப் பெயரையும் *ஒலிபெயர்ப்பில்* சிறப்பாக எழுதுவது பற்றித்தான் கேட்டேன். நீ விரிவாய் ஆராய்ந்திருப்பாய் போலிருக்கிறதே’, என்றார் என்னைத் தேற்றுமாற்போல்! 🙂
முகநூலில் பகிர்கிறேன். நன்றி நண்பரே 🙏