இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

உதிர்ந்த பூக்களும் இறந்த தவளைகளும்

April 1st, 2004 · 5 Comments

தங்கமணியின் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு கவித்துவம் கலந்த தனியான நடையில் அமைந்த அவரின் எழுத்துக்கள் கண்முன்னே காட்சிகளை இதமாக விரிப்பது அருமையான ஒன்று. எல்லோரும் பார்க்கிற காட்சியை அவர் மட்டும் இன்னும் அகலக் கண் விரித்துப் பார்க்கிறாரோ ? வாழ்க்கையை மனதுள் வாங்கி அங்கே அனுபவமாய் மாற்றுகிற நேரத்தில் வாழ்க்கை ஆறாகப் போய்க் கொண்டே இருக்கிறது. அதனால் அனுபவத்தைச் சேகரிக்காமல், அதை எழுத்தாக்குவது பற்றி எண்ணாமல், வாழ்க்கையை வாழ்க்கையாகப் பாருங்கள் என்று சொல்கிறார் இவர் (என்று நினைக்கிறேன்). அப்படிப் பட்ட ஒரு பார்வை உடையவரென்பதால் தான் இப்படி எல்லாம் எழுத முடிகிறதோ என்னவோ ! இவர் மட்டும் இன்றி இவர் பக்கத்தில் பின்னூட்டம் இடுபவர்களும் இப்படித் தத்துவ முத்துக்களையும் தர்க்கங்களையும் பொழிகிறார்கள்.

எல்லாம் சரிதான். ஆனால் என்னைப் போன்ற எளியவர்களுக்குச் சில சமயம் இவரது கடின நடை புரிய நேரம் ஆகிறது (அ) சிரமமாய் இருக்கிறது. பூக்கள் உதிர்கின்ற மழைநாளில் தவளைகள் இறக்கக்கூடும் உரையைப் படிக்க முயன்று இரண்டு முறை இன்னும் பொறுமையான சமயம் வேண்டும் என்று தாண்டிப் போனேன். படிக்காமல் விட்டுவிடவும் மனது வராமல் திரும்பித் திரும்பி வந்தேன். இதையே எனக்குப் புரிகிற மாதிரி எழுதினால் என்ன என்று முயன்றதன் விளைவு கீழே.


அங்கங்கு சிறிது சிறிது மாற்றினேன். இரண்டொரு சொற்கள் சேர்த்து, இரண்டொன்றை மாற்றி அமைத்து இருக்கிறேன். சில வாக்கியங்களை மடித்தும், சிலவற்றை நீக்கியும் இருக்கிறேன். இதில் என் பயம் என்னவென்றால், அவர் கூற வந்த எதையேனும் எனக்குப் புரியவில்லை என்பதால் சிதைத்து விட்டேனோ என்பது தான். இந்த ‘எழுத்து உத்தி’, அது இது என்கிறார்களே – அப்படி எதையேனும் அவர் கையாண்டிருந்து அதை நான் ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டேனோ என்பது தான். தங்கமணி, தவறிருப்பின் மன்னியுங்கள்.

நான் நடந்து கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் மழை நின்றிருக்கவேண்டும். சாலையோரத்து மரங்களின் இலைகளில் இருந்தும், கிளைகளில் இருந்தும் நீர் வடிந்து கொண்டிருந்தது. தொலைவில் தெரிந்த வீடுகளின் கூரைகளில் இருந்து வெண்மையாய் புகை சுழன்று கொண்டிருந்தது. வீடுகள் நெருக்கமற்ற ஒரு ஓய்வான கிராமப் பிரதேசத்தின் ஊடே உறைந்து போன ஒரு நதி மாதிரி அந்தச் சாலை அமைந்து கிடந்தது. பறவையொன்று கிளையினை அழுத்தி எழும்பிப் பறந்ததில் நீர்த்துளிகள் சடசடவென வடிந்தன.

சிறுவர்கள் மழை நீரில் விளையாடுவதற்காக அலைந்து கொண்டிருந்தனர். தொலைவானில் பிரகாசமாய் ஏதோ தோன்றி கணத்தில் மறைந்தாற் போலிருந்தது. அது என்னவாயிருக்கும் என்ற கேள்வி மனதுள் தோன்றி மறுகணமே கவனமிழந்து சிதைந்து மறைந்து போனது. ஏதாவது ஒன்றை பேசினால் நன்றாயிருக்கும் எனத் தோன்றிய அதே வேளையில் வார்த்தைகள் எதுவும் இல்லாமலிருப்பதை உணர்ந்து ஒரு ஆச்சரியம் விரக்தியாய்ப் பூத்தது. இதழ்க் கோடியில் மெல்ல ஒரு சிரிப்பு. கையை உதறிக்கொண்டேன். பன்னீர்ப் பூக்கள் சிதறிக் கிடந்தன. ஒரு கணம் நின்றேன். பூக்களின் மேல் மழையின் துளிகள் மண்னைத் தெளித்திருந்தன. குனிந்து ஒரு பூவை எடுத்தேன். அதை நுகர்வதற்காக முகத்தருகே எடுத்துச் சென்றபோது அதை மறுப்பது போல சட்டென உடைந்து திரும்பிக் கொண்டது. கனவு கலைந்தவன் போல் அதிர்ச்சியுற்றேன். அதன் காம்பு உடைந்திருந்தது போலும். பூவைத் திரும்பவும் மண்ணில் போட மனமின்றி மறுபடி அதை மண்ணில் வைத்தேன்.

தொலைவில் ஒரு மாடு தன் தோலைச் சுருக்கிச் சிலிர்த்தது. எப்போதோ தின்ற தட்டைத் திரும்ப அசை போட்டபடி, வாலைச் சுழற்றி அசைத்துக் கொண்டு நகர்ந்தது. இன்னும் சிறிது தூரம் நடந்திருப்பேன். ஒரு மழை நேரத்து மாலை நேரம் எப்படி எளிமையாய் இருக்கிறதோ அதே போன்று புதிர் சூழ்ந்தும் இருப்பதை உணர்ந்து கொண்டிருந்த வேளையில் ஒரு நினைவு மெல்லக் கரைந்து, எங்கிருந்தது இத்தனை நேரம் என்று தெரியாமல் திடீரென வெடித்துச் சிதறியது. ‘நீ இனிப்புகளைக் கொடுத்து உன் விரல்களை மெல்ல விடுவித்துக் கொண்டாய்’ குற்றஞ்சாட்டும் பாவனையில் ஒரு மூச்சு எழுந்தது. தொடர்ந்து ‘இனிப்புகளை விட உன் விரல்கள் மேலல்லவா ?’ கேள்விக்குப் பதிலுமாய் ஒரு வாக்கியம் ஓடியது. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். தலையின் நடுவில் சில்லென்று நீர்த்துளி விழுந்தது.

எனது பாவனைகளை விட நம்பிக்கை சில சமயம் வென்று விடுகிறது. ஆனால் அந்த வெற்றிகளின் ஒளி ஒரு குமட்டலைத்தான் ஏற்படுத்துகிறது. தூரத்தில் பையன்களிடம் இருந்து கூச்சல் எழுந்தது. தவளையொன்றை அவர்கள் அடித்துக் கொன்றிருக்க வேண்டும். அற்ப சந்தோசத்திற்கும் வாழ்வுக்குமான போராட்டத்தில் தவளை அங்கே கேள்விகளுடனேயே இறந்திருக்கும்.

இன்னொரு பக்கம் இப்படி அவர் எழுதியதை நான் திருத்திக் கொண்டு இருப்பதை அவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்றும் சிறு பயம் எனக்கு. அநேகமாய் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், முகவாயில் கைவைத்துக் கொண்டு ‘என் எழுத்தை முகமே அறியாத எவனோ எங்கோ இருந்து மாற்றிப் பார்க்கும் வாழ்க்கையின் விந்தையைப் பாரேன்’ என்று வியந்தபடி அவர் அமர்ந்திருப்பாராய் இருக்கும். சாளரத்தின் வழியாகத் தெரியும் மேகமூட்டத்தின் இடையே தோன்றும் ஒரு மழைநாள் வானவில் கண் இமைக்கும் நேரத்தில் வண்ணமும் அளவும் மாறும் விந்தையென்ன என்று இன்னும் அவர் வாழ்க்கைக் காட்சிகளை வியந்து கொண்டு அவற்றோடு மனிதத்தின் இயல்பு எதையேனும் தொடர்பு படுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிற நேரத்தில் வேறு யாரேனும் இன்னும் கொஞ்சம் மாற்றி எழுதிப் பார்க்கலாம் என்றாலும் முயன்று பாருங்கள் ! ஆனால் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்லை.

Tags: இலக்கியம்

5 responses so far ↓

  • 1 Thangamani // Apr 2, 2004 at 12:04 am

    அன்புள்ள செல்வராஜ்:

    உங்கள் வலைப்பக்கத்தில் என்னுடைய எழுத்தைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதியிருந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்னும் விரிவாக எழுத வேண்டும். மாலையில் எழுதுகிறேன். நன்றி.

  • 2 Thangamani // Apr 2, 2004 at 4:04 pm

    அன்புள்ள செல்வராஜ்:

    என்னுடைய எழுத்தைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மகிழ்ச்சிக்குப் பின்னுள்ள எளிய காரணங்கள் அனைவரும் அறிந்தவைதான். அந்தக் குறிப்பில் சில மொழி சார்ந்த தவறுகள் (அவன் கனவு காண்பவன் போல் அதிர்ச்சியுற்றேன்) இருக்கின்றன. அவையும் கூட வாசிப்பை கடினமாக்குகின்றன. பிறகு அது ஒரு மழைக் கால மாலை நேரத்தைச் சொல்லும்போது அதில் ஒரு மாட்டைப்போல, தவளையைப் போல, ஒரு பாத்திரமாய் அவன் (நான்) வருகிறான். ஆனால் அவனொருவனே அங்கு மனதைச் சுமந்து திரிபவன். அவன் மனது கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் இடையில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது. கூரையின் மேல் வெண்மையாய் சுழன்று எழும் புகையும், கண்களின் வழியே பிசிறாய் வந்த பிரிவின் தவிப்பும் முறையே நிகழ்கால, கடந்தகால சுழற்சிகளாகின்றன. (ஏன் இந்த வரிகளை நீக்கி விட்டீர்கள் செல்வராஜ்!)

    மனம் மெல்லிய புகையின் மேல் கண்களின் வழியே கசிந்து வந்த பிரிவின் தவிப்பை, ஏக்கத்தை கொண்டுவந்து பொருத்துகிறது. இவ்வாறு செய்வது மனதின் இயல்பு. ஒரு காட்சியைக் காணும் போது மனம் ஏதோ ஒரு விதத்தில் ஒரு பழைய செய்தியை, நம்பிக்கையை, பாதிப்பை, அம்மனதின் இயல்புக்கு ஏற்ப அக்காட்சியின் மேல் பொருத்தி அந்த காட்சியனுபவத்தை ஒரு வாழ்வனுபவமாக மாற்றுகிறது. இதைத்தான் நான் ‘வாழ்வெனும் ஆறில்’ சொல்ல முயன்றேன். இவ்வாழ்வனுபவம் மீண்டும் மனதின் அந்த செய்தியை, நம்பிக்கையை, பாதிப்பை செறிவூட்டி, ஆழப்படுத்தி, இறுகச்செய்கிறது. பாரதி சொன்னது போல “அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பையாய்” சுமக்கிறது. வயதேற ஏற இந்த ‘வாழ்வனுபம்’ இறுகி, பெருகி நாளடைவில் ‘நான்’ ஆகத் திண்மை பெறுகிறது. ஆதலால் தான் ‘நான் எனும் பொய்யை’ என்கிறான் பாரதி. பொதுவான ஒரு காட்சியனுபவம் ஒவ்வொரு மனதின் இயல்புக்கெற்ப தனித்துவமான ‘வாழ்வனுபவமாக’ மாறுகிறது, இது பின் ஒரு தனித்துவமான ‘நானைச்’ சமைக்கிறது. இந்த நான் கண்ணின் முன்னே (எல்லா புலன்களின் முன்னேயும்) ஒரு திரையாய்த் தொங்கி உண்மையைத் தரிசிக்கவொட்டாமல் செய்கிறது. இதனால் தான் வாழ்வனுபங்களை எழுதுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று சொன்னேன்.

    உறைந்து போன நதிமாதிரியான சாலையென்பது மனது இந்த ஊசலாட்டத்தின் போது பதிவு செய்யும் ஒரு நினைவு. இதில் கூட மனம் சாலையின் மீது நதியை கொண்டு வந்து போர்த்துகிறது. தனது இந்த உவமையை இன்னும் சரியாகப் பொருத்துவதற்காக சாலையை உறைந்து போன நதியாக்குகிறது. அப்போது கிளையினை அழுத்திப் எழும்பிப் பறந்த பறவையின் நிகழ்வு மனதை நிகழ்காலத்துக்கு இழுக்கிறது. ஏனெனில் எந்த ஒரு எதிர்பாராத நிகழ்வும் அது நிகழும் கணத்தில் மனதை இல்லாமல் செய்யும் தன்மையுடையது. ஏனெனில் மனம் நிகழ்காலத்தில் இருக்க முடியாதது (மனமே கடந்த காலத்தின் தொகுப்புதான்). ஆனால் மனம் உடனே சுதாரித்துக் கொண்டு நிகழ்காலத்தின் மீது கடந்தகால வாழ்வனுபவத்தைப் போர்த்தச் சில கணங்களாகும். இந்த நிகழ்கால மிகச் சிறு இடைவெளியிலேயே ஒருவன் விழிப்புணர்வுடன் இருந்தால் உண்மையான வாழ்வைத் தரிசிக்க முடியும். விழிப்புணர்வு ஆழமாகும் போது மனம் வந்து கவிழ்ந்து கொள்ளும் கணங்கள் இன்னும் தாமதமாகும். அப்போது மனதின் வலிமை குறைந்து பின் அழிந்து போகிறது.

    சரி கதைக்கு வருவோம். கடந்தகாலம் எப்போதும் வார்த்தையும், காட்சியும் கலந்ததாகவே இருக்கமுடியும். பறவையோடு மனம் நிகழ்காலத்துக்கு தாவிய பொழுதில் சடசடவென வடிந்த நீர்த்துளி மனதையும், அப்போது வடிந்த நீர்த்துளிகளுடன் அவனது வார்த்தைகளும் அர்த்தத்தையும், ஒளியையும் இழக்கின்றன என்ற வரி, நிகழ்காலத்தில் மனம் திராணியற்றுபோவதனால் அர்த்தத்தையும் காட்சியையும் (ஒளி) தரமுடியாமற் போவதையும் சொல்லுகின்றன. மனமற்ற அந்த நிகழ் கணத்தில் தான் கேள்வி கவனமிழந்து போவதும், வார்த்தைகள் எதுவும் இல்லாமல் இருப்பதும் நிகழ்கிறது. ஆச்சர்யம் பூத்தது என்பது மனது திரும்ப அதிகாரத்தைக் கைப்பற்றும் கணங்கள் தொடங்கி விட்டதைக் குறிக்கின்றன. இதழ் கோடியின் சிரிப்பாய் நெளிவது உண்மையில் சிரிப்பல்ல, அதிகாரத்தைக் கைப்பற்றிய மனம். மனம் மறுபடியும் வேலை செய்யத் தொடங்கி விட்டது. உடைந்த மலர் சட்டெனத் திருப்பிக் கொண்டதின் மீது ‘மறுப்பது போல’ என்கிற தனது கருத்தை ஏற்றுகிறது. அங்கு உடைந்த மலர் திரும்பிக்கொண்ட ஒரு சாதரண நிகழ்வு ஒரு மலரின் மறுப்பாக வாழ்வனுபவமாகிறது. (இதற்கு அவன் மனம் பிரிவின் பால் இருப்பததே காரணம்; இதுவே அவன் மனம் மகிழ்வின் பால் இருந்தால் அந்த மலரின் திரும்பல் அதன் வெட்கமாக வாழ்வனுபவமாயிருக்கும்)

    மாட்டைத் தொடர்ந்து மனம் மறுபடியும் காட்சியும், வார்த்தைகளூம் கலந்து இயங்கத்துவங்குகிறது. வாழ்வு மறைகிறது. சட்டென விழும் நீர்த்துளி அடுத்த எதிர்பாரத நிகழ்வு; மனம் அக்கணம் அழிகிறது……

    செல்வராஜ், உங்களது வலைக்குறிப்பு இன்னும் எளிதாக எழுதவேண்டும் என்ற உணர்வையும், தவறில்லாமல் எழுதவேண்டிய பொறுப்புணர்வையும் தருகிறது. எளிமையாய் இருப்பதே உண்மையின் ஒரு சாட்சி. நான் எதையும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. நமது அனுபவத்தை படரவிடாமல் இருக்கும் போது அன்பையும் நட்பையும் புரிந்து கொள்ளுதல் மிக எளிது. உங்கள் அன்புக்கும், தோழமைக்கும் நன்றி.

    பின்குறிப்பு: நேற்றும் இன்றும் மழை பெய்யும் போது இரவாகிவிட்டதால் வானவில் வரவில்லை. ஆனால் மழையே அதனளவில் நன்றிக்கும், போற்றுதலுக்கும் உரியதல்லவா!

    இதையே என்னுடைய வலைக்குறிப்பிலும் இட்டுள்ளேன்

  • 3 udhayachelvi // Apr 5, 2004 at 11:04 am

    நன்றீங் தம்பி அந்தப் பக்கம் வந்து பாத்து நல்ல வார்த்த நாலு சொல்லிட்டு போனதுக்கு!

  • 4 மீனா // Apr 6, 2004 at 12:04 am

    ஆம் செல்வராஜ் தங்கமணியின் எழுத்து அற்புதமானது
    எனக்கும் ஆரம்பத்திலிருந்தே அவரின் பக்கத்திற்கு போகும் போதும் இதே எண்ணம்தோன்றும்

  • 5 மீனா // Apr 6, 2004 at 12:04 am

    உதயா சொன்னது போல் நீங்கள்அப்பப்ப அங்கு(Womankind) வந்து பாராட்டுவது மனதுக்கு உற்சாகமாக இருக்கு
    நன்றி செல்வராஜ்