இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்

July 20th, 2020 · 2 Comments

Brand என்னும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பொரிம்பு என்றொரு சொல்லைப் பல்லாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்திருந்தார் இராம.கி ஐயா. அவர் முன்வைக்கும் சொற்கள் சிலசமயம் ஆங்கிலச் சொல் ஒலிப்புக்கு நெருக்கமாக இருப்பதையொட்டிச் சிலர் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பிற தமிழ்ச்சொல் மூலங்களிலும் வேர்களிலும் இருந்து அவர் அவற்றை வருவித்துக் காட்டும்போது அவற்றில் பிடித்தவற்றை ஏற்றுக் கொள்வதில் எனக்குச் சிக்கலில்லை. பொரிம்பும் அப்படியான ஒன்றுதான்.

clip_image001

பொரித்தல் என்னும் வினை தமிழில் தீயிலிட்டோ, சூடுவைத்தோ, வறுத்தோ செய்யும் ஒரு செயலைக் குறிப்பது என்பது நமக்குத் தெரிந்ததே. பொரிகடலை, பொரியல், பொரித்த குழம்பு, பொரிக்கும் வெய்யல், சுட்டுப்பொரித்தது, என்று அளவற்ற காட்டுகளைப் பார்க்கலாம். Branding என்பது அக்காலத்தில் குதிரை, எருமை, மாடு முதலான விலங்குகளின் உரிமையாளர், தனது உரிமையின் அடையாளமாக இரும்புக் கம்பியைச் சூடாக்கி அதன் மூலம் அவற்றின்மேல் ஏற்படுத்தும் ஒரு குறி அல்லது தழும்பைக் குறித்ததே. பின்னர், வணிக நிறுவனங்கள் தமக்குரிய ஒரு முத்திரை, சின்னம் அல்லது தனித்தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள உருவாக்கிக் கொண்ட ஒரு குறி, பெயர், எழுத்துரு, வண்ணம், அல்லது அனைத்தும் சேர்ந்த ஒரு கலவையை brand, branding என்று அழைத்தனர். சூட்டுத் தழும்பு >>பொரித்தழும்பு என்று கொண்டு அதைச் சுருக்கிப் பொரிம்பு என்கிறார் இராம.கி.

நிற்க. பொரிம்பின் பொருத்தப்பாட்டைப் பற்றிப் பேசுவதல்ல இப்பதிவின் நோக்கம். Brand = பொரிம்பு என்பது இன்றைய சில இணைய அகரமுதலிகள் வரை போய்ச்சேர்ந்திருக்கிறது. வலியது நிலைக்கும். ஆனால், இன்று இப்பதிவு பேச விழைவது, பிறமொழிகளில் வழங்கப்படும் வணிகப்பெயர்கள், பொரிம்புப்பெயர்கள் ஆகிய இவற்றை தமிழில் நாம் எப்படி அழைப்பது என்பதைப் பற்றியது தான்.

பதிவுசெய்யப்பட்ட பிறமொழி வணிகப் பெயர்களை, நிறுவனங்களின் பெயர்களை, அல்லது அவர்களின் புதுக்குகளின் பெயர்களை, அப்படியே அவற்றின் ஒலிப்பு மாறாமல்தான் எழுதவேண்டும் என்பது ஒரு பார்வை. ஏன்! ஏறத்தாழப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர், அறியாத வயதில் (!) நானே கூட அப்படியான எண்ணம் கொண்டிருந்தவன் தான். காட்டாக, "தயவுசெய்து யூனிகோடு என்னும் சிறப்புப்பெயரை ஒருங்குறி என்று தமிழாக்க வேண்டாம்", என்று வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன்! (https://blog.selvaraj.us/archives/65). ஆனால், இன்று தமிழில் ஒருங்குறி என்னும் பெயர் வலுவாக நிலைத்துப்போன ஒன்று. நானும் அதனை ஏற்றுக் கொண்டு ஒருங்குறி பற்றிய வேறு பதிவுகளை அடுத்தாண்டுகளில் எழுதியிருக்கிறேன். (ஒருங்குறியில் தமிழுக்கான ஒதுக்கீட்டின் நிறை குறைகள் என்பன வேறு!).

கடந்து போன ஆண்டுகளின் பட்டறிவும், சான்றோரோடு உரையாடலும் பெயர்களைத் தமிழ்வழிப்படுத்துவதில் இன்று எனக்குச் சில தெளிவுகளைக் கொடுத்திருக்கின்றன. அது போன்ற வாய்ப்புகள் வாய்க்கப் பெறாததாலோ, தமக்கே எல்லாந்தெரியும் என்னும் இளங்குருதிப் பாய்ச்சலாலோ சில புதிய இணையத்தம்பிகள் தெளிவற்று அண்மையில் எழுதியிருந்தவற்றைப் படிக்க நேர்ந்தது. அறியாமை மட்டும் என்றால் கூடப் பரவாயில்லை. ஆனால், அதீதம், முட்டாள்த்தனம், கேலிக்கூத்து, பித்தலாட்டம் என்னும் சுடுசொற்களைப் பயன்படுத்திச் சாடியிருந்தது உவப்பானதாய் இல்லை. (அவர்தம் பதிவை இங்கே நேரடியாகச் சுட்டுவதைத் தவிர்க்கிறேன்).

பல கலந்துரையாடல்களில் கனடா பேரா. செல்வா எனக்கு(ம்) exonym என்பதை அறிமுகப் படுத்தி வைத்திருந்தார். ("exonym செல்வா" என்று தேடினால் இணையம் பூராவும் அவர் இதுகுறித்து சலிக்காமல் எழுதிவருவது தெரியும்).

ஒரு நாடு, ஊர், அல்லது இனக்குழுவின் (சிறப்புப்) பெயரை அந்த வட்டம் தாண்டிய பிற மொழியினர் எப்படித் தம் மொழியில் உள்வாங்கி எழுதுகின்றனர் என்பதைப் பற்றியது இது. காட்டாக, செருமனி நாட்டை எடுத்துக்கொள்வோம். அதனை அவர்கள் மொழியில் இடாய்ச்சுலாந்து என்று சொல்கின்றனர். ஆனால், ஆங்கிலத்தில் இதனை Germany என்கிறார்கள். இடாய்ச்சுலாந்து என்பது endonym அல்லது அகப்பெயர். Germany என்பது exonym அல்லது புறப்பெயர். தமிழிலும் இதனை, செருமன் (இடாய்ச்சு) மொழியை ஒட்டி இடாய்ச்சுலாந்து என்றோ, ஆங்கிலத்தை ஒட்டிச் செருமனி என்றோ நாம் எழுதலாம். ஒலிப்புக்கு நெருக்கமாக, ஜெர்மனி என்றுதான் தமிழில் எழுதவேண்டும் என்பார்கள் சிலர். அவர்கள் அறியாதோர். அறியாமையில் உழல்வோர்.

கிரந்தம் தமிழல்ல என்பதால் தவிர்க்க வேண்டும் என்பது ஒன்று. முதலெழுத்து குறிலானால் அடுத்தது ரகர மெய் வராது என்பது இரண்டாவது புள்ளி. செருமானியர்கள் அவர்கள் நாட்டை அப்படி அழைப்பதில்லை என்பது மூன்றாவது. இக்காரணிகளால் நாமும் செருமனி என்றோ இடாய்ச்சுலாந்து என்றோ தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப எழுதிவிடலாம். London-ஐ பிரான்சிய மொழியில் Londres என்கிறார்கள். அதனால் நாமும் லண்டன் என்றுதான் எழுதவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் தமிழ் வழக்குப்படி இலண்டன் என்று எழுதுவோம்.

ஆங்கில விக்கியில் இருந்து:

"An exonym (from Greek: éxō, ‘outer’ + ónuma, ‘name’; also known as xenonym) is a common, external name for a geographical place, group of people, individual person, or a language/dialect, that is used only outside that particular place, group, or linguistic community. Exonyms not only exist for historico-geographical reasons, but also in consideration of difficulties when pronouncing foreign words.

For example, India, China, Egypt, and Germany are the English-language exonyms corresponding to the endonyms Bhārat (भारत), Zhōngguó (中国), Masr (مَصر‎), and Deutschland, respectively."

மீண்டும் பொரிம்புப் பெயருக்கு வருவோம். வாட்சப், ட்விட்டர் போன்ற வணிகப் பெயர்களைத் தமிழில் பெயர்த்து எழுதவேண்டுமா என்பது கேட்கப்பட்ட கேள்வி. மேலே சொன்ன புறப்பெயர்கள் ஒலியைத் தானே பெயர்த்து எழுதியிருக்கிறார்கள், மொழிமாற்றி எழுதவில்லையே என்று கேட்கலாம்தான். ஆனால், உண்மையில், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தேவைப்பட்டால் பொரிம்புப்பெயர்களை மொழிமாற்றி எழுதச் சிறிதும் தயங்கமாட்டார்கள். உலகமயமாக்கல் காலத்தில் வணிக வெற்றியெனும் குறிக்கோளுக்காக இந்தக் கடவுகளையெல்லாம் சட்டெனத் தாண்டிவிடுவார்கள்.

பொரிம்புப்பெயர் மொழிமாற்றத்தை மூன்று வகையாகப் பார்க்கலாம்:

  1. பொரிம்புப்பெயரை அதன் மூலமொழியின் ஒலி அடிப்படையில் மாற்றி எழுதுவது. காட்டாக WhatsApp என்பதை வாட்சப் அல்லது வாட்சாப் என்பது. ஆனால் இது தவறானது; ஒலியடிப்படையில் எழுதினாலும் அம்மொழியிலக்கணத்திற்கு உட்பட்டு எழுதவேண்டும். தமிழில் வல்லின மெய்யில் சொற்கள் முடியலாகா என்பதால், குறைந்தது ‘வாட்சாப்பு’ என்றேனும் எழுத வேண்டும். நோக்கியா-வைச் சீனத்தில் Nuojiya என்கிறார்கள். அதற்குப் பொருளேதும் இல்லை என்றாலும் அவர்கள் மொழிப்படி நோக்கியாவை அப்படித் தான் எழுத முடியுமாம்.
  1. பொரிம்புப்பெயரை மூலமொழியின் ஒலிக்கு நெருக்கமாகப் பெயர்த்துவிட்டு, அந்தச் சொல் இலக்குமொழியிலும் சற்றுத் தொடர்புடைய பொருள் தருவதாகச் சற்றே மாற்றுவது. காட்டாக, மைக்குரோசாட்டின் பிங்கு எனும் தேடுபொறியை எடுத்துக்கொள்வோம். சீனத்துக்கு மாற்றும்போது அதனைப் பிங்கு என்று சொல்லாமல் பி’யிங்கு என்று சொன்னார்களாம். ஏனெனில் பிங்கு என்றால் சீனத்தில் ‘நோய்’ என்றும் பி’யிங்கு என்றால் ‘விடை சொல்’ என்றும் பொருளாம். கோக்கோ கோலாவை "ke kou ke le" என்று சற்றே ஒலிநெருக்கமும், "சுவையானதும் மகிழ்வைத் தருவதும்" என்றாற்போன்ற பொருளும் வரும்படி ஆக்கியிருக்கிறார்கள். எல்லா நேரத்திலும் எல்லா மொழியிலும் இவ்வாறு பொருள் பொருந்துமாறு அமைவது எளிதன்று.
  1. பொரிம்புப்பெயரை இலக்குமொழியில் முற்றிலுமாக மொழிபெயர்த்தோ, வேறு பெயர் உருவாக்கியோ வழங்குவது. காட்டாக, வோக்சுவேகன் நிறுவனத்தின் பெயரைச் சீனத்தில் 大众汽车 (Dàzhòng qìchē) என்று பெயர்க்கிறார்கள். அது மக்களின் வண்டி என்று பொருள் பெறுகிறது. மூலமொழிக்கு இணையான பெயர் தான், ஆனால் ஒலிப்பும் எழுத்தும் முற்றிலும் வேறானது. முற்றிலும் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். வாட்சாப்புக்குத் தமிழில் புலனம் அல்லது கட்செவி என்று சிலர் ஆக்கியிருப்பதும் இதனை ஒட்டியது தான். மேற்சுட்டிய ‘யூனிக்கோடு’ தமிழில் ‘ஒருங்குறி’யாவதும் இப்படித்தான்.

இன்னொரு காட்டாக, Facebook-இன் பெயரை எடுத்துக் கொண்டு மேற்கண்ட மூன்று வகையாகவும் தமிழுக்காக எப்படி மாற்றுவது என்று பார்க்கலாம்.

  1. "ஃபேசுபுக்கு" என்பது ஒலியடிப்படையில் மாற்றுவது (ஃபேஸ்புக் என்பது தவறு).
  2. ஒலியோடு பொருளும் கூடி வருமாறு நானாகத் தேடிக் கண்டடைந்தது – "பேசுபுக்கில்". புக்கில் என்றால் இருக்குமிடம் என்னும் ஒரு பொருள் உண்டு – புக்கு+இல் (புகுந்த இடம்). பேசு என்பதை வினையாகக் கொண்டு பேசுபுக்கில் என்னும் வினைத்தொகையாக, முக்காலத்தும் பேசிக்கொண்டிருக்கும் இடம் என்று நான் முன்வைப்பேன் 🙂
  3. "முகநூல்" என்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்து இன்று பரவலாகப் புழக்கத்தில் இருப்பது.

இம்மூன்றில் இயல்பாகவும் எளிதாகவும் இருப்பது முகநூல் என்பதே. அதனால் அவ்வாறெல்லாம் மொழிபெயர்த்தல் தவறு என்ற கண்ணோட்டத்தைக் கைவிடுங்கள். எந்தத் தயக்கமும் இன்றி முகநூல் என்றே பயன்கொள்க. ஆங்கில-மையச் சிந்தனைகளை விடுத்துத் தமிழ்-மையச் சிந்தனைகளை வளர்ப்பீர்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குத் தமிழிலேயே சேர்ப்பீர்.

****

Tags: இணையம் · தமிழ்

2 responses so far ↓