இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இராகிக்களியும் ‘இராசுபெரி பை’யும்

January 6th, 2019 · No Comments

பேச்சுத்தமிழில் ‘சுத்தியும் முத்தியும் பாத்தேன்’ என்று சொல்வதை எழுத்தில் எப்படிக் காட்டுவது என்னும் சிக்கல் எழுந்தது எனக்கு. வேறொன்றுமில்லை. புத்தாண்டை முறித்துக் கொண்டு தயங்கியே வந்த முதற்சனிக்கிழமை. என்ன செய்யலாம் என்று ‘சுற்றும் முற்றும்’ (சரிதானா?) பார்த்தேன். பல மாதங்களுக்கு முன்னர் வாங்கி வந்த இராகிமாவு கொஞ்சம் கண்ணில் பட்டது. ஆரோக்கியவாழ்வுக்கு அரிசியைக் குறைக்கச் சொல்கிறார்களே என்று இன்று இராகிக்களி செய்துவிடுவோம் என்று இறங்கிவிட்டேன்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவுஇணையத்தில் ஒரு கண்ணம்மாவிடம் -kannammacooks- ஆலோசனை கேட்டுவிட்டுச் செய்து பார்த்தேன். ஆனால் களியோ என்னம்மா செய்வதுபோல் வரவில்லை. இத்தனைக்கும் அம்மாவிடமும் தொலைப்பேசியில் பேசும்போது கேட்டும் வைத்தேன்.

"என்னப்பா? களி சாப்பிடலாம்னு ஆச வந்துருச்சா?"

"இல்லீங்மா. கொஞ்சோம் மாவு இருந்துச்சு. சரி சும்மா செஞ்சு பாக்கலாமேன்னு…", என்று இழுத்தேன்.

"செய்யு. செய்யு. என்ன வேணுமோ செஞ்சு சாப்புடு. ஆனா களிக்கு நல்லாக் கட்டி உழுகாமக் கெளறோணும். திடுப்பு இருக்குதா?"

கைவலிக்க அம்மா கிளறுவதைப் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் அம்மாவுக்குக் களி பிடிக்காது. பெரியவர்களுக்கே பிடிக்காத ஒன்றை நான் சாப்பிடுகிறேன் என்று பெருமையடித்துக்கொள்ளவே நான் சிறுவயதில் களியைச் சாப்பிட விருப்பங்கொண்டேன். இப்போதும் அப்பெருமைக்குக் குறைவில்லை.

"சும்மா கொஞ்சமாப் பன்றேனுங்மா. இங்க என்னத் தவிர யார் சாப்பிடப் போறா? ஒருவேளை நந்து கொஞ்சம் சாப்பிட்டாலும் சாப்பிடும்"

இருந்தாலும் அம்மாவின் வழியைவிடக் கண்ணம்மாவின் வழி எளிதாய் இருக்குமோ என்று தடம் மாறிப் போனேன். விளைபொருளோ களி என்பதைவிட வெந்தமாவு என்று சொல்லலாம் போல் இருந்தது. இந்தக் குறைபாட்டை மறைக்க கடலைச்சட்டினி செய்துவிடுவோம் என்று இன்னும் ஆழத்தில் இறங்கினேன்.

"ஏங்க? இதுவா கடலைச்சடினி? கடலையக் கண்ணுல காட்டின தேங்காச்சட்டினி மாதிரி இருக்கு", என்று கிண்டலடிக்கிறார் மனைவி.

சூ…களிசாப்பிட இயலாதவர்களுக்குக் கடலைச்சட்டினி பற்றிக் கருத்துச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது? கொஞ்சம் கொத்தமல்லித் தழையை அதிகம் சேர்த்துவிட்டேன். நிறம் மாறிவிட்டது. இதெல்லாம் ஒரு குறையா? சுவை நன்றாய் இருக்கிறதா? பிறகென்ன? இச்சட்டினியே களியைக் களியாக ஆக்கியிருக்கிறது. சட்டினிக்காகவே சின்னவளும் இரண்டு உருண்டைகள் சேர்த்துச் சாப்பிட்டார். அதனால் இந்தக் கிண்டலை எல்லாம் எடுத்துக்கொண்டு,

"போம்மா அந்தப் பக்கம்"

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

    —–    
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம் மற்றும் இயற்கைஇராகிமாவாவது வாங்கிச் சிலமாதம் தான் ஆகிறது. ஆனால், நான் இராசுபெரி பை என்னுன் குறுங்களி (சே, களி இல்லைங்க) குறுங்கணி வாங்கி இரண்டு ஆண்டுகளேனும் இருக்கும். இணையம் வழியாய் அறிந்து விளையாடிப் பார்ப்போம் என்று ஆர்வமிகுதியில் வாங்கியது பெட்டி பிரிக்காமலேயே வைத்திருந்தேன். இதற்குமேலும் வைத்திருந்தால் பலனேதுமுண்டா என்றெண்ணி, கல்லூரிவிடுப்பில் வீட்டுக்கு வந்த பெரியவளிடத்தே, ‘இந்தாம்மா உனக்குப் புத்தாண்டுப் பரிசு’ என்று தள்ளிவிட்டுவிட்டேன். பொருள்களின் இணையம் (IoT) குறித்து ஆர்வங்காட்டும் மகள் விரும்பியே ஏற்றுக்கொண்டார்.

No photo description available."ஏதேனும் நல்லதாய்ச் செய்வோமப்பா’ என்று துருவிப்பார்த்துவிட்டு, ஓர் ஒலிவாங்கி, ஒலிபெருக்கி, படக்கருவி என்று வாங்கி ‘அமேசான் அலெக்சாவுடன் இணைக்கலாம்ப்பா’ என்று முயன்றார். பார்த்துக் கொண்டிருந்த ஏதோ நெட்பிளிக்சு படத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு அவருடன் சேர்ந்துகொண்டேன். பலமணிநேர தட்டிமுட்டு உருட்டல்களுக்குப் பிறகு அலெக்சா பேசியது. எடுத்தவுடன் என்ன கேட்பது என்று தடுமாறி, கிறுக்கனாய், "அலெக்சா, உன் பேர் என்ன?" என்று கேட்டேன். "இதுக்கெல்லாம் என்கிட்டே பதில் இல்லை ஐயா", என்று சொல்லிவிட்டது அலெக்சா.

புது ஒலிபெருக்கியில் சிக்கல் என்று ஒதுக்கிவைத்துவிட்டுக் காதணியில் மாற்றிமாற்றிக் கேட்டுக் கொண்டிருந்தோம். காதணியைத் தான் வாங்கிக்கொண்ட மகள், அலெக்சாவிடம், "எனக்கு ஒரு joke சொல்லு", என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அலெக்சா என்னைத் திரும்பிப் பார்த்து, "உனக்கு ஒரு கதை சொல்ட்டா சார்", என்றது.

No photo description available.

Tags: கண்மணிகள் · பொது