இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

நுரை மட்டும் போதும்: கதையின் கதை

January 19th, 2012 · 13 Comments

எங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு.

image

Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் என்பது முழுதும் தொடர்பில்லா எச்சுத் தகவல்கள்.

கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் பிறந்து வளர்ந்த எர்ணான்டொ டேய்யசு இளம் வயதிலேயே பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் எழுதி வந்தாலும், தனது நாற்பதுகளில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பிறகே மிகவும் அறியப்பட்டிருக்கிறார். பின்னர், கொலம்பிய அரசிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணி புரிந்திருக்கிறார். இவர் வாழ்ந்த காலத்தில் கொலம்பியா பல உள்நாட்டுப் போர்களும், இராணுவக் கெடுபிடிகள், வன்முறை, போன்றவற்றைச் சந்தித்திருக்கிறது. தனது பிறந்த மண்ணின் சோகங்களையும் சோதனைகளையும், நடைமுறை வாழ்வின் சிக்கல்களையும் ஊன்றிக் கவனித்து அதையொட்டிய கதைகளைத் தனது எழுத்தின் மூலம் அலங்கரித்திருக்கிறார் – என்னும் இவ்விவரங்கள் எல்லாம் பொதுவில் ஒரு கூகுள் தேடலிலோ விக்கிப்பீடியாவின் மூலமோ எளிதில் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மாணவராக இருந்து இவர் முந்தைய நூற்றாண்டுகளில் நடந்த மூன்று புரட்சிப்போர்களால் வெனிசுவேலா, எக்குவடோர் நாடுகள் கொலம்பியாவில் இருந்து பிரிந்து போனதைப் பற்றியும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்கிறது விக்கி.

நுரை மட்டும் போதும் (Just Lather, That’s All) என்னும் இந்தக் கதையே இவரது கதைகளில் மிகவும் அறியப்பட்ட ஒன்று. ஒரு வகையில் இவரது கதை அண்மைய சில நிகழ்வுகளுக்கு உருவகமாகப் படுகிறது எனக்கு. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு நாவிதனை, ஒரு சாதாரணனை, ஒரு இராணுவத்தானைக் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டால் என்ன என்று எண்ண வைத்து ஒரு மனப்போராட்டத்திற்கு ஆளாக்கும் அளவுக்கு நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனது சகாக்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதைப் பார்த்த போதும், சக உயிரைப் பறிக்க முடியாதென்னும் நிலையில் இருப்பவனை ஒரு விளிம்பு நிலையில் காட்டும் கதாசிரியன், அந்த விளிம்பைத் தாண்ட அவனைத் தள்ள வேண்டியது அதிகமில்லை என்பதையும் மறைமுகமாக உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒருவனைக் கொல்வதும் சுலபமான ஒன்றல்ல என்பதை அந்தப் படைவீரனையும் கொண்டே சொல்லிச் செல்கிறார். படைவீரனோ, அரசோ, தனது மக்களையே கொன்றழிப்பதை அரச/அதிகார வன்முறை என்று தானே எடுத்துக் கொள்ளமுடியும்? எழுதியதைச் சற்றே மாற்றிக் கதையின் நாயகன் பகைவனின் கழுத்தினுள் கத்தியை இறக்குவதாய் முடித்திருந்தால் அப்போதும் அவன் செய்தது சரி என்றோ தவறு என்றோ வாசகனால் மதிப்பிட்டிருக்க முடியுமா? சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை இக்கதை கிளறுகிறது, என்றாலும் இங்கு நான் சொல்ல வந்தது அவையுமல்ல.

இந்தக் கதையை நான் அறிந்தது, எனது மகள் நிவேதிதா மூலம். இங்கே பள்ளிகளில் இக்கதை மிகவும் படிக்கப் படும் ஒன்றாக இருக்கிறது. இதுபோன்ற சிறந்த கதைகளையும் படித்து, அது குறித்த அலசல்கள், கேள்வி பதில்கள், அது தூண்டும் சிந்தனைகள், கதை பற்றிய விமர்சனங்கள் என்று பல நடக்கின்றன. இத்தனைக்கும் இவை அனைத்தும் ஏழாம் வகுப்பிலேயே நடக்கிறது.

மொழிக் கல்வி தானே என்று இங்கே யாரும் அசட்டையாக இருப்பதில்லை. இலக்கியமாக இருந்தாலும் சரி, இலக்கணமாக இருந்தாலும் சரி, மிகவும் ஆழ்ந்தும், விரிவாகவும் படிக்கிறார்கள். மொழி என்ன வாழ்க்கைக்கு உதவவா போகிறது, "சோறு போடுமா?", என்று அலட்சியப்படுத்தும் கேள்விகள் இங்கு கேட்கப் படுவதில்லை.

ஒரு சான்னட் 14 வரிகள் கொண்டது, ஒரு ஹைக்கூவிற்குப் 17 அசைகள் என்று எண்ணி எண்ணி இங்கு பள்ளி மாணவ மாணவியர் கவிதைகளும் எழுதிப் பயில்கின்றனர். ஏன்! மூன்றாம் நிலையில் இருக்கும்போதே poetry café என்று நந்திதாவின் வகுப்பில் (இரண்டாண்டுகள் முந்தைய நிகழ்வு) நடந்த ஒரு நிகழ்விற்குப் பெற்றோரை அழைத்து மாணவர்கள் எழுதிய கவிதைகளை இது இது இன்ன வகைக் கவிதை என்று பலவற்றையும் அவர்களையே படித்துக் காட்டச் சொல்லிச் சிறப்பாகச் செய்தனர்.

"யாப்பு, அசை, சீர், தளை இதெல்லாம் கஷ்டங்க", என்று யாரும் புகார் செய்வதுமில்லை.

"ஒற்று, சந்தி இவையெல்லாம் இல்லை என்றால் என்ன அழிந்துபட்டது? காலத்துக்கு ஏத்தமாதிரி நம்ம எழுத்து, இலக்கணம் எல்லாத்தையும் மாத்தணுங்க", என்று வியாக்கியானங்கள் பேசுவதில்லை.

நிவேதிதா இந்தக் கதை பற்றிய வீட்டுப்பாடத்தில் என்னிடம் ஏதோ கேள்வி கேட்டபோது, அதைப் படித்துவிட்டுக் கதை எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னேன். நான் ஒரு நாள் இதை மொழிபெயர்க்கப் போகிறேன் என்றும் சொன்னேன். இது போல நிறையச் சொல்லி இருக்கிறேன் என்பது வேறு விசயம். வர்ஜீனியா மாநிலத்தின் வரலாற்றை அவள் படிக்கும் போது, நானும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறேன். Give me liberty or give me death என்று அறைகூவிய பேட்ரிக் ஹென்றியை அவளின் வழியாகத் தான் அறிந்தேன். தாமசு ஜெப்பர்சன், வாசிங்டன், ஏமில்ட்டன் போன்றோரையும் பற்றிப் படிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டதும் என் மகள்கள் மற்றும் அவர்களது பள்ளிப் பாடங்கள் வழியாகத் தான். ஏனையவற்றை இதுவரை செய்யாது போனாலும் இவ்வாரம் இக்கதையைத் தமிழாக்கம் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியே.

இப்போதைக்கு என்னால் முடிந்ததைக் ‘கொணர்ந்திங்கு’ சேர்த்துவிட்டேன். மற்ற திக்குகளுக்கு இனிமேல் தான் பறக்க வேண்டும்.   

Smile

Tags: இலக்கியம் · சிறுகதை · தமிழ்

13 responses so far ↓

  • 1 dharumi // Jan 19, 2012 at 2:21 am

    எல்லா திக்குகளும் கைவசப்பட வாழ்த்து.

  • 2 முத்துலெட்சுமி // Jan 19, 2012 at 10:04 am

    கதையின் கதை நல்லா இருக்கு 🙂 குழந்தைங்க படிக்கும் போது நாம் மீண்டும் ஒருமுறை படிக்கிறோம் தான்..

    என் மகளின் வகுப்பாசிரியைகள் எப்பவும் அவளை கவிதை எழுத ஊக்கப்படுத்தியபடியே இருக்கிறார்கள்.. அது நினைவுக்கு வந்தது.. ஹிந்தி ப்ராகஜக்ட் ஒன்றுக்கும் கூட.. (மற்றவர்கள் குறிப்புகளாக சமர்ப்பிக்கும் ஒன்றை) அவளிடம் நீ அதை கவிதையாக எழுதிக் கொடு என்று கேட்டிருக்கிறார்கள்.

  • 3 ஜோதிஜி திருப்பூர் // Jan 19, 2012 at 1:15 pm

    மொழிக் கல்வி தானே என்று இங்கே யாரும் அசட்டையாக இருப்பதில்லை. இலக்கியமாக இருந்தாலும் சரி, இலக்கணமாக இருந்தாலும் சரி, மிகவும் ஆழ்ந்தும், விரிவாகவும் படிக்கிறார்கள். மொழி என்ன வாழ்க்கைக்கு உதவவா போகிறது, “சோறு போடுமா?”, என்று அலட்சியப்படுத்தும் கேள்விகள் இங்கு கேட்கப் படுவதில்லை.

    இது தான் உண்மையான மாணவர்களுக்கான கல்வி.

  • 4 Amarabarathi // Jan 19, 2012 at 7:24 pm

    கதையும் அது உருவான விதமும் அருமை.  எர்ணாண்டோ டெய்யசு என்று திருத்தி எழுதியிருக்கும் நீங்கள் //தாமசு ஜெப்பர்சன், வாசிங்டன், ஏமில்ட்டன்// //   இசுப்பானிய// இப்படி பெயர்களை எழுதியது ஏனோ? ஒரு வேளை இப்படி தமிழ்ப் ‘படுத்தினாதான்’ அறிவாளியோ?

  • 5 இரா. செல்வராசு // Jan 19, 2012 at 8:53 pm

    அமரபாரதி, கதைக்கான உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பெயர்களைச் சரியாகத் தானே எழுதியிருக்கிறேன்? தமிழல்லாத பெயர்களை எப்படியிருந்தாலும் முடிந்தவரை தான் ஒலிப்புச் சரியாக இருக்கும்படி எழுத முடியும். கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். நான் முடிந்தவரை தவிர்க்க எண்ணுகிறேன். செவ்வர்சன் (அ) செஃபர்சன் என்றும் கூட எழுதுவது சரியே. சிலசமயம் கொஞ்சம் சமரசம் செய்து கலந்து எழுதுகிறேன்.

    Hispanic என்பதற்கு ஸ்பானிஷ் என்பதை விட இசுப்பானிய என்பது தானே நெருக்கமாக இருக்கிறது.

  • 6 இரா. செல்வராசு // Jan 19, 2012 at 8:54 pm

    முத்துலெட்சுமி, நமது சூழலில் புளங்கும் புழங்கும் மொழியைத் திறம்படக் கற்றுக் கொள்வது நன்றே. இந்தியிலும் கவிதை படைக்கும் உங்கள் மகளுக்கு என் வாழ்த்து.

  • 7 Amarabharathi // Jan 19, 2012 at 9:18 pm

    //முடிந்தவரை தான் ஒலிப்புச் சரியாக இருக்கும்படி எழுத முடியும்// ஜெஃப்பர்சன் என்பதுதானே அமெரிக்கர்கள் ஒலிக்கும் முறை? அதை கிரந்தம் கலக்காமல் எழுத முடியாது அல்லவா? எப்படியிருதாலும் கிரந்த சர்ச்சைக்கு இது இடமல்ல என்பதால் மறுபடியும் கதைக்கு வாழ்த்துச் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

  • 8 சொ. சங்கரபாண்டி // Jan 19, 2012 at 10:26 pm

    //ஒரு வேளை இப்படி தமிழ்ப் ‘படுத்தினாதான்’ அறிவாளியோ?// வேணும்னா மாத்திச் சொல்வோமே! சரியான தமிழில் எழுதத்தெரியாதவர்களை முட்டாளென்று சரியாக அழைத்துப் பழகினாச் சரியாப் புரியும்.

    இம்மாதிரி தம்மை அறிவாளின்னு நினைத்து நக்கலடிக்கிறவர்களைப் பார்த்தால் கிரந்தத்தைத் தவிர்த்து “சரியான தமிழில்” (தனித்தமிழென்றெல்லாம் கூட அழைக்கக் கூடாது) எழுதவேண்டும் என்ற உணர்வு வர ஆரம்பித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஒரு மின்னஞ்சல் குழும விவாதத்தில் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் வெள்ளை அமெரிக்கர் ஒருவர் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுத சரியாக எழுத மேலும் புதிய எழுத்துகளைச் சேர்க்க வேண்டுமென்றார். அவரிடம் பதிலுக்கு ஆங்கிலத்தில் ஒரு சிறிய எடுத்துக்காட்டைச் சொல்லி மறுகேள்வி கேட்டேன். மாதவி என்ற பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதினாலும் அமெரிக்கர்கள் முற்றிலும் தவறாகவே உச்சரிக்கின்றனர். அதே போல் எத்தனை முறைகள் எடுத்துச் சொன்னாலும் என்னுடைய பெயரில் உள்ள ‘ச’வை குறிலாக உச்சரிக்காமல் நெடிலாக உச்சரிக்கிறார்களே என்று கேட்டேன். சரியாக உச்சரிப்பதற்காக ஆங்கிலத்தில் புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொள்ள அவர் பரிந்துரைப்பாரா என்று கேட்டேன். அவர் சொன்ன அதிர்ச்சியளிக்கும் பதில் – ‘மாதவி’ போன்ற பெயர்களைத் தவிர்த்து சீனர்களைப் போல் அமெரிக்கர்கள் சரியாகச் உச்சரிக்கக்கூடிய ‘மேக்கி’ போன்ற பெயர்களைச் சூட்டிக்கொள்ளுங்கள்”.

    இன்று எப்படி நம் மொழிகளில் (அனைத்து இந்திய மொழிகளிலுமே) ஆங்கிலச் சொற்களை கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல் ஏற்றுக்கொள்கிறோமே, அதுபோல்தான் அன்று தமிழில் கிரந்த எழுத்துகளைப் புகுத்தியபொழுதும் நம் முன்னோர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சரியான தமிழில் பேசத்தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடியிருந்தால் அன்றும் கிரந்தம் புகுந்திருக்காது. இன்றும் ஆங்கிலம் புகுந்து மொழியை அழிக்கவும் செய்யாது.

    எனவே தமிழ் மொழியை சரியாக எழுதத்தெரியாதவர்கள் என்று என்னைப் போன்று கிரந்தம் கலந்து எழுதுபவர்களையும் சரியான தமிழில் எழுதுகிற உங்களைப் போன்றவர்கள் கேலி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மேலே வந்ததுபோல் அறிவாளிகள் உங்களைக் கேலி செய்யமாட்டார்கள்.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

  • 9 இரா. செல்வராசு // Jan 20, 2012 at 12:25 am

    அமரபாரதி, நன்றி. கிரந்தம் தவிர்ப்பது பற்றி எழுத இருந்தேன். ஒரு நாள் முன்பே ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்த இடுகை அதுபற்றித் தான்.

    சங்கர், உங்கள் மறுமொழிக்கு நன்றி. சிலரின் இரட்டை வேடத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இது. பல முறை கிரந்தம் தவிர்ப்பது குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்புக் குரல்களின் மூர்க்கம் ஆச்சரியப்பட வைக்கிறது. என்னை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது.

  • 10 Amarabarathi // Jan 20, 2012 at 8:09 am

    //சரியான தமிழில் எழுதத்தெரியாதவர்களை முட்டாளென்று சரியாக அழைத்துப் பழகினாச் சரியாப் புரியும்.// உங்க சவுகரியம்.  நானெல்லாம் உடம்புக்குக்குப் பொருந்துற மாதிரித்தான் உடை வாங்குவேன்.  பெப்புட்டோ பிச்சுமால்  (கிரந்தம் கலக்காமல் எழுதியிருக்கிறேன்) என்ற மருந்து சாப்பிடலாம்.  எழுதியிருக்கும் அதே உச்சரிப்பில் அமெரிக்க பார்மஸியில் கேட்டு வாங்கலாம். 😉

  • 11 Amarabarathi // Jan 20, 2012 at 8:18 am

    // சிலரின் இரட்டை வேடத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இது// இதில் என்ன இரட்டை வேடம்? கிரந்தம் கலக்காமல் சரியான உச்சரிப்பை கொண்டு வர முடியாது.  நம்முடைய எல்லைகளுக்குள் இருந்த வரை கிரந்தம் தேவையில்லாமல் இருந்தது.  தற்போது தேவைப் படுகிறது, அவ்வளவே. ஒரு உதாரணத்துக்கு ஒருவருக்கு ஆங்கிலம் தெரியும் என்றும் அந்நிய பெயர்ச் சொற்களின் சரியான உச்சரிப்புத் தெரியாது என்ற நிலையில், ஆங்கிலத்தில் உரையாற்றும் போது “சரியான தமிழில்” எழுதப் பட்ட பெயர்ககளை அதே உச்சரிப்பின் சொன்னால் சரியாகுமா?

  • 12 குறும்பன் // Jan 20, 2012 at 3:18 pm

    என் பிள்ளை பள்ளிக்கூடத்துக்கு போனால் தான் மற்ற மொழி சிறந்த கதைகளை என்னால் படிக்க முடியும். அட இராமா என் நிலைமை இப்படி ஆயிடுச்சே 🙂

  • 13 இரவி // Jan 21, 2012 at 7:46 am

    //இம்மாதிரி தம்மை அறிவாளின்னு நினைத்து நக்கலடிக்கிறவர்களைப் பார்த்தால் கிரந்தத்தைத் தவிர்த்து “சரியான தமிழில்” (தனித்தமிழென்றெல்லாம் கூட அழைக்கக் கூடாது) எழுதவேண்டும் என்ற உணர்வு வர ஆரம்பித்துள்ளது.//

    //பல முறை கிரந்தம் தவிர்ப்பது குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்புக் குரல்களின் மூர்க்கம் ஆச்சரியப்பட வைக்கிறது. என்னை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது.//

    2005ல் தான் எனக்குத் தமிழ் இணையம் அறிமுகம் ஆனது. அதற்கு முன்பிருந்தே எனக்குத் தமிழார்வம் இருந்தாலும் கிரந்தம் விடுத்து எழுத வேண்டும் என்று எந்த நிலைப்பாடும் இல்லை. ஆனால், இராமனுஜன் என்பதை இராமானுசன் என்று எழுதுவது அவருக்கான அவமானம், அநாகரிகம் என்று கிரந்த ஆதரவாளர்கள் கிளம்பிய போது தான் ஒலி அரசியல் புரிந்தது. அன்று முதல் இயன்ற வரை கிரந்தம் தவிர்க்கிறேன்.