இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

பூமித் திருநாள்

April 23rd, 2008 · 5 Comments

“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள்.

நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம்.

“எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க உபயோகிக்காதப்போ கொஞ்சம் விளக்கை எல்லாம் அணைச்சுட்டு வந்தீங்கன்னா மின்சாரம் எல்லாம் வீணாகாது பாருங்க!” என்று சற்று மிரட்டலாய்த் தான் வந்தது குரல்.

“இல்லை, அது வந்து… ” என்று கொஞ்சம் சாக்குப்போக்கு சொல்ல முயன்றாலும், தோல்வி தான் என்பதை ஒப்புக் கொண்டு, மரியாதையாய், “சரிம்மா” என்று பயந்தபடி சொல்லிவிட்டோம்.

“அதிலும் இன்னிக்கு பூமித் திருநாள், தெரியுமா?” என்றபடி சென்றாள். “நான் ரொம்ப உறுதியானவ!”

* * * *
மின்சக்தியும், எரிவளியும் வீணாகச் செலவழிக்கக் கூடாது என்பது பற்றி நிறையச் சொல்லி இருக்கிறோம். உருண்டோடும் காலத்தில் உலக சக்தித் தேவைகள் அதிகமாகிக் கொண்டும், நுகர்வு படுவேகமாய் அதிகரித்தபடியும் இருக்கும் பொழுதில், ஒவ்வொருவரும் வீணாக விரயமாகும் சக்தியைச் சேமிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். புவி வெப்பம் முதலான இக்குகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதால் இதில் முக்கிய கவனம் தேவை. அதிலும், அடுத்த தலைமுறையினரிடமும் இந்தக் கரிசனையையும் முக்கியத்துவத்தையும் ஊட்டிவைத்தல் இன்றியமையாதது.

எங்களுடைய முதல் காரைப் புதிதாக வாங்கி இப்போது பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டாவதாக ஒரு பழைய வண்டியை வாங்கி ஆறு வருடங்கள் ஓடிவிட்டது. அதன் வயது இப்போது பதினைந்து. சில பிரச்சினைகள் வந்ததால் சென்ற வருடம் புது வண்டி வாங்கி விடலாமா என்று யோசித்தாலும், அதனைப் பழுது பார்த்துச் சரிசெய்ய முடிந்ததால் அதனை இன்னும் தொடர்ந்து வைத்திருக்கிறேன்.

“எங்க வண்டி பழசாயிடுச்சுங்க. வாங்கி அஞ்சு வருசம் ஆச்சு” என்று புது வண்டி தேடுபவர்கள் சற்றுக் கிண்டலாகக் கூட இதனைப் பார்க்கக் கூடும் என்று உணர்கிறேன். குடும்ப சகிதம் வெளியூர் செல்ல நல்ல சிறு-வேன் வாங்கினால் நன்றாகத் தான் இருக்கும் என்று நாங்களும் கூட அவ்வப்போது எண்ணியிருக்கிறோம். இருந்தாலும், எப்போதாவது தேவைப்படுவதற்கு எப்போதுமே கன்னெய் (பெட்ரோல்) ஊற்றி ஏன் மேய்க்க வேண்டும் என்று இன்னும் தவிர்த்துவிட்டு இருக்கிறோம். அவரவர் விருப்பம் அவரவர்க்கு. முடிந்தவரை நாங்கள் இந்தப் பழைய வண்டியை/வண்டிகளை இழுத்துக்கொண்டு இருக்கப் போகிறோம். (இழுக்க வேண்டிய நிலை வந்தால் வேறு வாங்கிவிடத் தான் வேண்டும்:-) )

* * * *
காலையிலே வழக்கம்போல் அலுவ வளாகத்தில் வண்டி நுழைந்த போது, எப்போதுமின்றி இரண்டாள் உயரத்திற்கு ஒரு கோக் புட்டி வைத்திருந்தார்கள். என்னடாவென்று கவனித்ததில், இன்றைய பூமித்திருநாளை ஒட்டி எனது நிறுவனத்தில் மறுசுழற்சி நினைவுறுத்தலுக்காக அப்படி கவன ஈர்ப்புச் செய்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது. மறுசுழற்சி முறைகள் ஏற்கனவே இருந்தாலும், அவற்றை இன்னும் செம்மைப் படுத்த முனைகிறார்கள். குறிப்பாக, இந்தக் குளிர்பானப் புட்டிகள், கண்ணாடி மற்றும் நெகிழிக் குடுவைகள் மறுசுழற்சி செய்வது சரியாக இல்லை என்று அதனை அதிகரிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி.

மறுசுழற்சி முக்கியம். அதற்கு முன்னர் மறுபயன் செய்ய முடிந்தால் இன்னும் நல்லது. இவை இரண்டிற்கும் முன்னர் குறைநுகர்வு இன்னும் நல்ல விசயம். சிலசமயம் இங்கே வீணாகத் தூக்கி எறியப்படும் கழிவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தால் வேதனையாக இருக்கும். நுகர்வுக் கலாச்சாரத்திலே இது மிகவும் சோதனையான ஒன்று தான். வீணாகப் பொருட்களை வாங்க வேண்டாம் என்று இருக்க முடிவது சவாலுக்குரிய ஒன்றே.

நுகர்வைக் குறை. மறுபயனாக்கு. மறுசுழற்சி செய்.

* * * *
மாதா மாதம் எங்கள் இல்லத்தின் மின்சக்தி மற்றும் இயற்கை வளி நுகர்வு பற்றிய தரவுகளைச் சில ஆண்டுகளாகச் சேர்த்து வைத்திருக்கிறேன். அதைக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம் வாருங்கள். வரைபடத்தில் 2003, 2004 ஆண்டு நுகர்வுடன் 2007, 2008 ஆண்டுகளின் நுகர்வை ஒப்பிடலாம். இந்தக் காலகட்டத்தில் வேறு ஊர் வேறு வீடு மாற்றி வந்துவிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு ஊர்களுக்கும் இடையே வெதணத்தில் ஐந்து டிகிரியாவது வித்தியாசம் இருக்கும்.
Gas Usage

இயற்கை வளியைப் பொருத்தவரை, நுகர்வில் பெரிய மாற்றம் இல்லை. சராசரியாய் மாதத்திற்கு 120 அலகுகள் உபயோகப் படுத்துகிறோம். இங்கே தெறும் என்னும் அலகை இயற்கை வளி நுகர்விற்குப் பாவிக்கிறோம். ஒரு தெறும் என்பது 100 கன அடி அளவிலான வாயு/வளியைக் குறிக்கிறது. இயற்கை வளி பெரும்பாலும் மெத்தேன் (CH4) என்னும் வளிச் சேர்மத்தினால் (compound) ஆனது. அமெரிக்காவில் சமையலுக்கும் இல்லச் சூடேற்றலுக்கும் பெரும்பாலும் இந்த வளி பயன்படுகிறது.

வரைபடத்தில் பார்த்தால் அக்டோபர்/நவம்பர் மாதங்களில் ஆரம்பித்து ஏப்ரல் வரையான சுமார் ஆறு மாதங்கள் குளிர்காலம் என்பதால், அப்போது இயற்கைவளி நுகர்வு அதிகமாவது தெளிவாகத் தெரியும். எஞ்சியிருக்கும் மாதங்களில் வீட்டுக்கு வெப்பம் சேர்க்க வேண்டியிராததால் நுகர்வு குறைகிறது. குளிர்மாதங்களில் நுகர்வை இன்னும் குறைக்க என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும்.

மின்சக்தி நுகர்வையும் அதே நான்கு ஆண்டுகளின் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, 2003/04 ஆண்டுகளை விட, அண்மைய காலகட்டத்தில் நுகர்வு மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. சராசரியாக 220 அலகுகளில் இருந்து 660 அலகுகள் ஆகியிருக்கின்றது. 2007 தரவில் சூலை, ஆகசுட்டு, செப்டம்பர் மாதங்களில் ஒரு உச்சம் தென்படுவது அந்த மாதங்களில் இங்கு உச்ச வெய்யில் காலம் என்பதும் அப்போது வீட்டினுள் குளிர்ப்பெட்டியை (ஏசி) ஓட்டியதும் காரணம்.

Electricity Usage

2003/04 ஆண்டுக்காலத்தில் வேறு ஊரில் வேறு வீட்டில் இருந்தோம். அங்கு சுற்றிலும் பசுமையான மரங்கள் நிறைந்திருந்ததால், வீட்டினுள் ஏசி போட வேண்டிய அவசியமின்றி மின்சக்தித் தேவை மிகவும் குறைவாகவே இருந்தது. கதவையும், சன்னல்களையும் திறந்து வைத்தால் இதமான காற்று வீசியது. இப்போது இருக்கும் இடத்தில் சுற்றிலும் கான்க்ரீட்டுக் கட்டிடங்கள், புல்தரையின்றித் தாரும் சிமெண்டுமாக இருக்கும் சுற்றுவெளி, இவற்றினால், வீட்டினுள் வெப்பம் அதிகரிக்கிறது. அதோடு எல்லாப் பக்கங்களிலும் இருக்கும் குண்டு பல்புகள் எவ்வளவு சக்தியை எடுத்துக் கொள்கின்றன என்பது பற்றியும் பார்க்க வேண்டும்.

தேவைகளையும் நுகர்வையும் குறைத்துக் கொள்வதால் இன்றைய பணச்செலவு குறைவது ஒரு பக்க விளைவு தான். முக்கிய விளைவு அதனால் நமது வருங்காலச் சந்ததியினருக்கு ஒரு வளமான பூமியை விட்டுச் செல்ல முடிவது தான். யாரோ ஒருவர் சொல்லக் கேட்டது போல, இந்த உலகம் நம் முன்னோர்களிடத்திருந்து நாம் சுவீகரித்ததல்ல. நமது வருங்காலத்தினரிடம் இருந்து நாம் கடனாகப் பெற்ற ஒன்று.

Tags: கண்மணிகள் · சமூகம் · வாழ்க்கை

5 responses so far ↓

  • 1 ILA // Apr 23, 2008 at 3:28 pm

    Good post!

  • 2 Karthikramas // Apr 23, 2008 at 4:57 pm

    வாயுவும் வளியும் ஒன்றா?

    குளிர்காலத்திலே வளியைக்குறைக்கலாம் என்று சூடேற்றிகள் (ரூம் ஹீட்டர்) இரண்டை வாங்கி வைத்துள்ளேன். சூடு ஏறியது , வளி குறைந்ததா என்று கவனித்ததில்லை. இந்த சூடேற்றிகள் வாங்குவதில்கூட நிறைய அறிவியல் சமாச்சாரங்கள் இருக்கிறதாம். எண்ணெய் சுழற்றும் சூடேற்றியே சரியானது என்று கடைசியில் கண்டறிந்த ‘உண்மை’..
    அதன் படி நடந்து எல்லா ஆசிகளும் பெறுக 😉

  • 3 செல்வராஜ் // Apr 23, 2008 at 8:48 pm

    நன்றி இளா.

    கார்த்திக், வளி என்பது காற்றைக் குறித்தாலும், அதனை இப்போது தமிழ்கூறும் நல்லுலகம் (:-)) gas என்பதற்கு இணையாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. காட்டாக fuel gas = எரிவளி. வாயு என்பதை விட வளி என்று பாவிப்பது இது தொடர்பான பிற சொற்களைக் கையாள்வதற்கு எளிதாய் இருப்பதும் ஒரு காரணம்.

  • 4 சத்யராஜ்குமார் // Apr 24, 2008 at 7:35 am

    //குடும்ப சகிதம் வெளியூர் செல்ல நல்ல சிறு-வேன் வாங்கினால் நன்றாகத் தான் இருக்கும் என்று நாங்களும் கூட அவ்வப்போது எண்ணியிருக்கிறோம். இருந்தாலும், எப்போதாவது தேவைப்படுவதற்கு எப்போதுமே கன்னெய் (பெட்ரோல்) ஊற்றி ஏன் மேய்க்க வேண்டும் என்று இன்னும் தவிர்த்துவிட்டு இருக்கிறோம். //

    மிக நல்ல முடிவு.
    – வேன் சுட்டு கை விட்டவன்

  • 5 செல்வராஜ் // Apr 24, 2008 at 9:46 pm

    // – வேன் சுட்டு கை விட்டவன் //

    🙂 சத்யராஜ்குமார், நல்லது. பிறகு சலனங்கள் ஏற்பட்டால் இதனை நினைவில் கொள்கிறேன்!