இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

என் சென்னைக்கு வயது பதினைந்து

August 24th, 2006 · 13 Comments

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசம் உண்டு. அது, வாழுகின்ற மண்ணின் வாசமா, கண்ணிற்படுகிற காட்சிகளின் தொகுப்பா, காட்சிமாந்தர் எழுப்பும் ஒலிக்கோவையா, நாவூறக்கிட்டும் தனிப்பட்ட சுவையா, அல்லது இவையெல்லாம் கலந்த ஏதோ ஒரு உணர்வா? திருநெல்வேலியின் பாளையங்கோட்டையாக இருந்தாலும் சரி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் என்று நகரம் பேரூர் சிற்றூர் கிராமம் எதுவானாலும் சரி, சிறு பொழுதேனும் தன்நிலை மறந்து திளைக்க வைக்கிற வாசம் எல்லா ஊருக்கும் உண்டு. குடிக்கிற தண்ணீருக்கு அலைந்தவனாகவோ கொளுத்துகிற வெய்யலின் சூடு தாங்காமல் வாளிநீரினுள் காலை வைத்து ஆற்றிக் கொண்டவனாகவோ இருந்தாலும் அந்த வாசத்தை நுகர்ந்தவனிடத்திற்போய் ‘மோசமான ஊர்’ என்று சொல்லி ஒப்புக்கொள்ள வைப்பதென்பது இயலாத ஒன்று.

ஓய்வாய் ஒரு பொழுது கண்களை மூடியமர்ந்து நீள்மூச்சை உள்ளே இழுக்கையில், காற்றோடு உள்நுழையும் நினைவலைகள் சில உங்கள் நெஞ்சம் விரித்து நிறைவை ஊட்டுகின்றவெனில் அப்படி ஏதோ ஒரு ஊர் உங்கள் மனதையும் தைத்திருக்கிறது என்று பொருள். அந்த ஊரின் வாசத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள், சுவாசித்திருக்கிறீர்கள் என்று பொருள். அது உங்களின் நாளங்களிலும் படிந்திருக்கக்கூடும்.

Anna University, 1991


காதோரக் கேசத்தைக் கலைத்துச் சிலிர்க்க வைக்கும் கடலோரக் காற்று முகத்தில் மெல்ல வந்து மோதும்போது சென்னையின் வாசத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். இருப்பினும், காலை அதிகாலையிலே சென்ட்ரலில் வந்து நிற்கும் இரயில் வண்டிகளில் இருந்து இறங்கிப் பெட்டியையோ பையையோ தூக்கிக் கொண்டு, கலையும் கூட்டத்தினூடாக நடந்து வெளிவந்து, செஞ்சட்டைத் தோழர்களின் கூலிச்சேவை அழைப்பையும் சவாரி தேடும் வாடகையூர்திகளையும் தாண்டி, நகரப் பேருந்தைப் பிடிக்க நடக்கையில் வீசும் குளிர்காற்றின் ஈரத்திலே அந்த வாசத்தை இன்னும் சிறப்பாக என்னால் உணர முடியும்.

பெரும்பாலும் ஈரோட்டில் இருந்து நான் சென்னை நோக்கிக் கிளம்புவது ‘ஏற்காடு’ விரைவுவண்டியில் தான். வண்டி கிளம்பிய சிறிது நேரம் கழித்துச் சேலத்தின் அருகே சிலசமயம் லுங்கிக்கு மாறியபின், இரவைப் பார்த்தபடி உறங்கிய கண்கள் சென்னைக்கு வரும் முன்னரே விழித்துக்கொள்ளும். அம்பத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர் முதலான சுற்றுவட்டம் விழித்து, நகர இரயிலோடு தடக்-தடக் என்று இயங்கிக் கொண்டிருக்கும். மெல்ல வேகம் குறைந்த வண்டி பேஸின்பிரிட்ஜ் நிலையத்தைத் தாண்டும்போது, இறங்க இன்னும் ஓரிரு நிமிடங்கள் தான் என்று மனம் உணர்ந்துகொள்ளும். தமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வந்து சைதாப்பேட்டையில் இறங்கிச் சென்னைக்குள் கலந்து கரைந்து போனதுண்டு என்றாலும், இரயில் வண்டிகளின் இலக்கை அடையும் கம்பீரமோ கனமோ சாதனையுணர்வோ, நகர மையத்திற்கே அழைத்து வந்த தைரியமோ, யாரோவென ஊரோரத்தில் இறக்கிவிட்ட பேருந்துகளில் கிடைத்ததில்லை எனக்கு.

“யேர்க்காடு கொஞ்சம் லேட்டாயிருச்சு. நீங்க ப்ளூல வந்தீங்களா?”

சென்ட்ரலில் இருந்து கோட்டூர்புரத்திற்குச் செல்ல 18-B என்னும் பல்லவனுக்குக் காத்திருக்கையில் அடுத்தடுத்த இரயில்வண்டிகளின் பயணிகள் சென்னைக்குள் வந்து கொண்டிருப்பார்கள். பழங்காலக் கட்டிடங்கள் எதிரே கம்பீரமாய் நின்று கொண்டிருக்கும். நிறுத்தத்தில் கூட்டம் கண்டால் தாண்டிச் சென்று நிறுத்திக் கூட்டத்தை ஓடவிடும் பல்லவன், பெருங்கூட்டமில்லாத காலை நேரங்களில் வண்டிகளில் காய்கறிக் கீரைக் கூடைகளையும் கூட ஏற்றிக் கொள்ளும் தாராள மனம் கொண்டிருக்கும். அவற்றின் புதுவாசத்தோடு அடுத்தடுத்த நிறுத்தங்களில் நிறையும் கூட்டத்தினரின் சலசலப்பும் பேருந்து விடும் டீசல் மூச்சும் ஒருங்கே கலந்து வீசும்.

ஒரு ‘டோக்கன்’ கொடுத்தால் நகரில் எங்கே வேண்டுமானாலும் கொண்டு விடும் பல்லவன் மாணவர்களின் நல்ல நண்பன். பொருபொருத்த(boring) ஒரு நாளில் இலக்கின்றி ஒரு பல்லவனில் ஏறி அதன் ஈற்றுநிறுத்தம் வரை சென்றுவிட்டு, அதிலேயே திரும்பி வந்த நாட்களும் உண்டு. அடையாள அட்டை கூடக் கொடுக்க முடியாத அரசு கல்லூரிகளின் “நேர்த்தி”யைச் சமாளிக்க எங்களுக்குப் பல்லவனின் டோக்கன்முறை அடையாள அட்டை தான் உதவியது. கேள்வி கேட்காமல் சென்னை அதனை ஏற்றுக் கொண்டது.

* * * *
பெட்டியைத் தூக்கி வந்து அறையில் வைத்துவிட்டு, நீர்த் தொட்டியைத் தேடி ஒரு ஞெகிழ்வாளி தூக்கிக் கொண்டு கூட்டத்தோடு சேர்ந்து செல்வது ஒரு சென்னை விடுதிவாசிக்குப் பழகிய ஒன்று. ஓ! சில நாட்கள் குளியலறைக்கே சொகுசாய் வரும் தண்ணீர். சில கட்டிடத்துத் தொட்டிகள் மொட்டை மாடியில் இருந்தாலும் சாலையில் போகிற இளங்கன்னியர் கடைக்கண் படக்கூடும் என்கிற கிளுகிளுப்பில் நீரில்லாக் கவலையை மறக்கும் கூட்டம். எந்தச் சிக்கலிலும் பொதிவுச் சிந்தனையை விடலாகாதென்னும் வாழ்க்கைப் பாடத்தை ‘தண்ணித்தொட்டி’ அன்று கற்றுத் தந்தது.

“டேய்! அலுங்காம மொண்டு ஊத்துடா. அடியில் இருக்கிற பாசியக் கலக்கீராத!”

அதையும் மீறிச் சில பச்சைச் சமாச்சாரம் மிதந்தால் தூக்கி ஓரம்போட்டுவிட்டு ஊற்றிக் கொள்வதும் பெரிய விஷயம் அல்ல.

தண்ணீரில்லாத நாட்களுக்கு நேரெதிராய், மழைக்காலத்தில் ஓவென்று அடித்துக் கொண்டு பெய்யும் பேய்மழை. அந்த மழையிலும் சிலசமயம் தொப்பலாய் நனைந்தபடி மிதிவண்டியில் சில வெதுப்பகங்கள் சென்றிருக்கிறோம். பாதிச் சென்னையில் படகோட்டும் அளவிற்கு நீர் நிறைந்திருக்கும். ஏன்! எங்கள் அறையில் இருந்து ஒரு எட்டுத் தள்ளியிருக்கிற உணவுக்கூடம் செல்லக் கூடக் குடையைப் பிடித்துக் கொண்டு நீந்தீக் கொண்டு தான் செல்ல வேண்டும்!

சாளரத்தின் வழித்தெறிக்கும் சாரல்களில் சிலிர்த்தபடி கையில் பாலகுமாரனோடு இருந்த அந்த நாட்களின் வாசங்களும் அருமையானவை. தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மேலும் விழும் துளிகள் பல ஜாலம் காட்டும். கருத்த வானம் கொஞ்சம் இடைவிட்டாலும் ‘வாடா டீ குடிக்கப் போலாம்’ என்றொரு கூட்டம் கிளம்பிவிடுவதற்குக் காரணம் அந்தக் கடைகளின் தேநீர்ச்சுவை என்பதைவிட, தோழமையுடன் அந்த நாட்களின் மிச்ச வாசத்தை நுகர்வதற்கு என்பது தான் சரியாக இருக்கும். அதுவும், அபூர்வம் தானென்றாலும், ‘தோழிமை’யும் ( 🙂 ) உடன் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம்.

நான் சென்னைக்குப் போய்விட்டுத் திரும்புவதற்குள் ஈரோடு தாவணி பாவாடையில் இருந்து ஜீன்ஸ் டீ-சர்ட்க்கு மாறி நவீனமாகிவிட்டது. இருந்தும் ஏற்கனவே நவீனமாய் இருந்த சென்னையை முதலில் பார்க்கப் பரவசமாய்த் தானிருந்தது. கடற்கரைச் சாலையில் பேருந்து ஒன்றுக்காய்க் காத்திருக்கையில் வேறுந்தில்(!) சென்ற வண்ணங்களைக் கண்டு திளைக்க முடிந்திருக்கிறது. வேறொன்றுமில்லை, வயசுக் கோளாறு. சன்னல் வரை ஓடிச் சென்று, “ஏங்க, நீங்க அழகா இருக்கீங்க!” என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடவேண்டும் என்று மனசு துடிக்கும். ‘சொன்னாச் சந்தோஷப் பட்டுக்குவாங்கடா’ என்று சொல்லிக் கொண்டாலும் அதற்குத் தைரியம் வராததால், அவை எல்லாம் ஒருநொடியின் ஒருதலைக் காதலாய் மின்னி மறைந்திருக்கின்றன. ஓரிரு முறை மட்டும் இரயில்நிலையத்தில் கண்ட முட்டைக் கண்ணுப் பெண்ணின் கட்டழகு குறித்து நாட்குறிப்பினுள் வேண்டுமானால் எழுதியிருக்கக் கூடும். தோண்டினால் கிடைக்கும்.

* * * *
வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் நான்கு வருடம் ஓடிமறைய, அண்ணா மேம்பாலத்தருகே இருந்த ஒரு நீண்ட வரிசையில் ஒருநாள் காலையில் சிலமணி நேரங்கள் நின்றதனால் சென்னையின் தொப்புள்கொடியை வெட்டிவிட்டுத் தான்நகரும் படியேறி விமானமொன்றுள் நான் நுழைந்து வெளிநாடடைந்து பதினைந்து வருடங்கள் முழுதாய் முடிந்துவிட்டன – கடந்துபோன இவ்வாரத்தின் ஒரு நாளில். அந்த நாளில் பிறந்த என் சென்னைக்குப் பதினைந்து வயதாகிறது. சிலர் முன்னூற்றி அறுபத்தெட்டாம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு பதின்ம வயதினளைப் போல இத்தனை ஆண்டுகளில் பெரிதும் மாறி விட்டிருக்கிறது சென்னை. ஊரெங்கும் மேம்பாலங்களும் உள்நாட்டு வெளிநாட்டு ஊர்திகளும், பறக்கும் இரயிலும், கட்டிடங்கள் முளைத்த ‘ஐ.டி’ பூங்காக்களும், ஸ்டெர்லிங் பிளாசாவும், இன்ன பிறவுமாய் அதன் வனப்புப் பெரிதும் மாறியிருக்கிறது. வடபழனி தெரியும் எனக்கு. வடசென்னை என்று இன்னுமொரு பகுதி அத்தனை நாளும் எனக்குத் தெரியாமலே அங்கு இருந்து வந்திருக்கிறது!

பழைய கணியச்சுத்தாள் தேடி அலைந்த பாரிமுனையும், மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டமென்று சென்ற டிநகரும், அதைவிட அதிகக் கூட்டம் நிரம்பியிருந்த சரவணா பவனும், தீபாவளித் தலைகளால் நிறைந்திருந்த ரங்கனாதன் தெருவும், மாநகரால் சூழப்பட்டு மறக்கப்பட்ட கோட்டூர் போன்ற சிறு கிராமங்களும், மிதிவண்டி எட்டிய தூரம் வரை (பாண்டிச்சேரியைச் சேர்க்கலாமா? 🙂 ) விரிந்திருந்த எம் எல்லைகளும் திரையரங்குகளும்… ஆகிய இவ்விடங்களின்/நிகழ்வுகளின் குறிப்புகள் நினைவில் மறைந்து கொண்டிருந்தாலும், அவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பான அந்தச் சென்னையின் வாசம் மட்டும் நினைவில் நீங்காது இருக்கிறது. இன்னும் இருக்கும் பல்லாண்டு.

* * * *

Tags: பயணங்கள் · வாழ்க்கை

13 responses so far ↓

  • 1 அருள் குமார் // Aug 25, 2006 at 12:31 am

    //ஓய்வாய் ஒரு பொழுது கண்களை மூடியமர்ந்து நீள்மூச்சை உள்ளே இழுக்கையில், காற்றோடு உள்நுழையும் நினைவலைகள் சில உங்கள் நெஞ்சம் விரித்து நிறைவை ஊட்டுகின்றவெனில் அப்படி ஏதோ ஒரு ஊர் உங்கள் மனதையும் தைத்திருக்கிறது என்று பொருள். // ஆமாம் செல்வராஜ். பல ஊர்களை இப்படி உணர்ந்திருக்கிறேன்.

    //ஒரு நாளில் இலக்கின்றி ஒரு பல்லவனில் ஏறி அதன் ஈற்றுநிறுத்தம் வரை சென்றுவிட்டு, அதிலேயே திரும்பி வந்த நாட்களும் உண்டு. //

    //தோழமையுடன் அந்த நாட்களின் மிச்ச வாசத்தை நுகர்வதற்கு என்பது தான் சரியாக இருக்கும். அதுவும், அபூர்வம் தானென்றாலும், ‘தோழிமை’யும் ( ) உடன் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம். //

    //சன்னல் வரை ஓடிச் சென்று, “ஏங்க, நீங்க அழகா இருக்கீங்க!” என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடவேண்டும் என்று மனசு துடிக்கும். //

    பல விஷயங்களில், நான் என்னையே திரும்பிப் பார்த்துக்கொள்வதுபோல் இருக்கிறது 🙂

    அப்படியே இந்த சுட்டியயையும் பாருங்கள்…

    http://chennapattinam.blogspot.com

  • 2 vasanth // Aug 25, 2006 at 12:35 am

    ada.. namma uurk kaarar…. nallaa ezuthaRiingka….

  • 3 நெல்லைக் கிறுக்கன் // Aug 25, 2006 at 4:26 am

    ரொம்ப அருமையான சென்னயப் பத்தின பதிவு…
    //நான் சென்னைக்குப் போய்விட்டுத் திரும்புவதற்குள் ஈரோடு தாவணி பாவாடையில் இருந்து ஜீன்ஸ் டீ-சர்ட்க்கு மாறி நவீனமாகிவிட்டது.//

    இந்தக் கொடும எல்லா ஊருலயும் நடக்கது தான். இப்பெல்லாம் தாவணியப் பாக்குததே அபூர்வமாப் போச்சு.

    //தமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வந்து சைதாப்பேட்டையில் இறங்கிச் சென்னைக்குள் கலந்து கரைந்து போனதுண்டு என்றாலும், இரயில் வண்டிகளின் இலக்கை அடையும் கம்பீரமோ கனமோ சாதனையுணர்வோ, நகர மையத்திற்கே அழைத்து வந்த தைரியமோ, யாரோவென ஊரோரத்தில் இறக்கிவிட்ட பேருந்துகளில் கிடைத்ததில்லை எனக்கு.//

    நீங்க சொல்லுதது நூத்துக்கு நூறு உண்ம

  • 4 கண்ணன் // Aug 25, 2006 at 9:31 am

    //தமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வந்து சைதாப்பேட்டையில் இறங்கிச் சென்னைக்குள் கலந்து கரைந்து போனதுண்டு என்றாலும், இரயில் வண்டிகளின் இலக்கை அடையும் கம்பீரமோ கனமோ சாதனையுணர்வோ, நகர மையத்திற்கே அழைத்து வந்த தைரியமோ, யாரோவென ஊரோரத்தில் இறக்கிவிட்ட பேருந்துகளில் கிடைத்ததில்லை எனக்கு. //
    //எந்தச் சிக்கலிலும் பொதிவுச் சிந்தனையை விடலாகாதென்னும் வாழ்க்கைப் பாடத்தை ‘தண்ணித்தொட்டி’ அன்று கற்றுத் தந்தது//

    செல்வா!
    🙂
    மேற்கோள் காட்டி மாளாது போலிருக்கிறது.

    சாதாரண விஷயங்களான அன்றாடக் காட்சிகளையும், சோர்வு தரும் தினசரி நடப்புக்களையும் கூட மனம் ஒன்றி இரசிக்க முடியும் என்பதும், பொதுவில் Beauty lies in the eyes of the beholder என்பதும் உங்களின் பதிவுகளைப் பார்க்கும்போது உறுதியாகிறது.

    உங்கள் அனுபவப் பதிவுகளில் (பயணக் கட்டுரைகள் உட்பட) வெளியனுபவங்களை மட்டுமல்லாமல் உள்ளனுபவங்களையும் அழகுறக் காட்சிப்படுத்துவது உங்களின் தனித்திறமை என்று எனக்குத் தோன்றுகிறது.

    உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…

    எங்கே “பெரியவர்” வலைப்பக்கம் போகக்கூடாது என்றதும் அதை சிரமேற்கொண்டு இந்தப் பக்கம் வரமாட்டீர்களோ என்று பயந்தேன். அடுத்த கூட்டத்தில் இதைப் பற்றி மேலும் விவாதித்து ஒரு நல்ல முடிவு எடுங்கள் 🙂 பெரியவருக்கும் சின்னவருக்கும் என் அன்பு.

  • 5 செல்வராஜ் // Aug 25, 2006 at 10:33 am

    அருள், நன்றி. கூட்டுப்பதிவு நல்ல முயற்சி. சுட்டியதற்கு நன்றி. இப்போது தான் பார்க்கிறேன். இதைத் தான் மதியும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்!

    வசந்த், நெல்லக்கிறுக்கரே, உங்கள் கருத்துக்கும் நன்றி.

    கண்ணன், பெரியவர் சிறியவருக்குப் பள்ளி ஆரம்பித்து விட்டது. அவர்களுக்கென்று பதிவு வேலையில் ஈடுபட்டால் ஆட்சேபிக்க மாட்டார்கள் 🙂 கொஞ்சம் கவனித்துக்கொண்டால் சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறேன். இருப்பினும் அவர்களைச் சாக்கிட்டு நானே கொஞ்சம் விலகி இருப்பது நல்லது என்று தான் அப்படி ஒத்துக் கொண்டேன். தொடர்ந்த உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி!

  • 6 Nithya // Aug 25, 2006 at 3:54 pm

    நல்ல பதிவு செல்வராஜ். என் சென்னைக்கு எத்தனை வயசுன்னு சொல்ல முடியாது. சொன்னா என் வயசு தெரிஞ்சுடுமே!!!!

  • 7 ரேவதிநரசிம்ஹன் // Aug 26, 2006 at 9:01 am

    செல்வராஜ்,
    நீங்கள் சொல்லும் “வாசனை”
    ரயிலில் வரும்போதுதான் அருமை.
    மீனம்பாக்கம் வழியில் மனசு சுருங்கி விடும்.

    எங்கள் சென்னை என்றும் வாழ வேண்டுகிறேன்.
    வாழ்வில் எத்தனை இடம் போனாலும் நிம்மதி தருவது நம் சென்னை.

  • 8 தமிழ் வலைப்பதிவு » என்னுடைய சென்னை - சில நினைவுத்துளிகள் // Aug 26, 2006 at 10:23 am

    […]

  • 9 மீனா // Aug 26, 2006 at 1:29 pm

    செல்வராஜ்.. மதியும் நீங்களுமாக சென்னையை(அவ்வளவாக தெரியாத எனக்கு)நன்றாக சுத்தி காண்பித்துவிட்டீர்கள்!

    \\தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மேலும் விழும் துளிகள் பல ஜாலம் காட்டும்\\

    உங்களின் ஒவ்வொரு அனுபவமும்! அதுகுறித்த வார்த்தைகளின் அழகும்! நல்ல பதிவு.

  • 10 raghs // Aug 26, 2006 at 3:07 pm

    Excellent article on chennai,
    chennai might lack the infrastructure like modern cosmos like london , NY, Tokyo,
    chennai may lack that much of green environment like europe,
    chennai might lack in cleanliness,
    but….
    no part of the world can’t give me the mental peace i get in chennai.
    what to say and how to explain this.

  • 11 துளசி கோபால் // Aug 26, 2006 at 7:43 pm

    செல்வா,

    கொன்னுட்டீங்க ( வழக்கம்போல):-))))))

    அருமைப்பா. எப்படித்தான் இப்படி வார்த்தைகள் கோவையா வந்து விழுதோ?
    ‘எல்லாம் அப்படியே வர்றதுதான்’ இல்லெ?

  • 12 செல்வராஜ் // Aug 26, 2006 at 9:12 pm

    நித்யா, கவனமாகப் பார்த்தால் நான் ஒரு எதிர்-உருவகம் முயற்சி செய்திருக்கிறேன். (மனசுக்குள் வந்துவிட்ட ஒரு தலைப்பிற்காகக் கட்டாயத் திணிப்பு என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்!). அதனால் உமது சென்னைக்கு எத்தனை வயது என்று சொன்னால், உமது வயதைக் காட்டாது 🙂

    ரேவதிநரசிம்ஹன், மீனா, raghs, துளசி, உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுரைக்கும் நன்றி.

  • 13 mohamedalijlnnah // Dec 26, 2010 at 10:17 am

    “A journey of a thousand miles must begin with a single step.” — Lao Tzu

    “Travel and change of place impart new vigor to the mind.” — Seneca