இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மிதிவண்டிப் பயணங்கள் – 2

May 17th, 2006 · 3 Comments

…எங்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றன பாண்டிக்குச் செல்லும் சாலைகள்.

நடைமுறையில் முடியாதது என்றோ, செயல்படுத்தச் சிரமமானது என்றோ, எப்படிச் செய்வது என்ற திகைப்பைத் தருவதாகவோ இருக்கிற மலையான சில காரியங்களைக் கூடச் சிலசமயம் மனசுக்குள் தூவி விடுகிற ஒரு சின்ன விதை சிறுகச் சிறுகத் துளைத்துச் சட்டென ஒரு இனிய பொழுதில் செயலாக்கிவிடும். எண்ணங்களில் விதைக்கப்படும் சின்ன விதைகளுக்கும் சக்தி உண்டு என்று வாழ்வை உற்று நோக்கும் எவருக்கும் புலப்படும்.

சென்னை-பாண்டிச்சேரிப் பயணத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்படி விதையாய் விழுந்த எண்ணம் வடிவம் பெற்று அண்ணா சாலையில் எங்களைச் செலுத்திக் கொண்டிருந்தது. ஒரு தெளிவான குறிக்கோளுடையதாய் இருந்த சென்னை-பாண்டிச்சேரிப் பயணமும், அந்த நான்கு நாட்களும் ஒரு உன்னத அனுபவம்!

Img (c) http://skyscrapercity.com/showthread.php?t=179795

இலக்கை அடையச் சுய உந்துதலும் சோர்வை மீறச் சுய தள்ளலும் பழகவொரு அரிய வாய்ப்பு. சுயத்தைத் தெரிந்து கொள்ளலும், நட்பை வளர்த்துக் கொள்ளலுமாக, அனுபவித்து அறிய வேண்டிய பொழுதுகள் அவை. முன்னுணராத சொந்த நாட்டின் சில பகுதிகளை, மக்களை, வாழும் முறைகளைச் சில மணித்துளிகளேனும் நேரடியாக நாடி பிடித்து அறிந்து கொள்ள வைக்கும் அனுபவங்கள்.

முதல் நிறுத்தமாகச் சுமார் மூன்று மணியளவில் செங்கல்பட்டு சென்று சேர்ந்தோம். அங்கு இருந்த வகுப்புத் தோழி ஒருவரின் வீட்டில் ‘வீரர்கள்’ எங்களுக்கு ஒரு விருந்து. நினைத்தபடி மதியத்திற்குள் சென்று சேர முடியாமல் போய் விட்டது என்றாலும் களைப்பு நீங்க உதவியது அந்தச் சில மணி நேர ஓய்வு.

வாழ்வின் ஆச்சரியக் கணங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் அமைந்து விடுவதுண்டு. தங்கமணியின் மொழியில் சொன்னால் ஆறாக ஓடும் வாழ்வு இயல்பானது தான்; மனது தான் அதில் ஆச்சரியங்களைச் சேர்த்துக் கொண்டு எதிர்வினைக்கிறது எனலாம். அப்படித் தான் அன்றும் தோழி கூந்தலிற் சூடியிருந்த ஒரு மஞ்சள் ரோசா தூண்டிவிட்ட உணர்வுகளும், அதையொட்டி மிதிவண்டியில் உடன்வந்த நண்பர் மனதில் விழுந்த விதையும் அடுத்த நான்காண்டுகளில் துளிர்விட்டு வளர்ந்து, இன்று அது அவர்களின் இனிய மணவாழ்வாய் இரு மகவுகளோடு மலர்ந்து பெருமரமாகியிருக்கிறது. ஆனாலும் மூன்றடிக்குள் கூடவே இருந்த எனக்கு இந்த மஞ்சள் ரோசாச் சம்பவம் தெரியப் பின்னொரு மூன்றாண்டுகள் ஆனது என்பதை என்னவென்று சொல்ல!

மாலை ஐந்து மணியளவில் செங்கையை விட்டுக் கிளம்பினோம். ஓய்விற்குப் பின் உந்துதலில் இன்னுமொரு இரண்டு மணி நேரப் பயணம். இரவு தங்குவதற்கு மதுராந்தகத்தில் ஒரு மணமண்டபத்தில் ஏற்பாடு. ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 12 கி.மீ என்று அன்று சுமார் எழுபது எண்பது கிலோமீட்டர் தூரமே ஓட்டியிருந்தோம். உடல் அசதி நீங்கத் தண்ணீரில் குளித்துப் பின் நிம்மதியாய் ஒரு நித்திரை. மறுநாள் அதிக தூரம் செல்ல வேண்டும் என்பதால் காலையில் விரைவாகவே கிளம்பத் திட்டமிட்டோம். இரவிற்குள் பாண்டிச்சேரி சென்று சேர வேண்டும் என்பது குறிக்கோள்.

இரண்டாம் நாள் காலை எட்டு மணிக்கு முன்னரே கிளம்பிவிட்டோம். மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் வழியாய் திண்டிவனம் சென்று, சற்றே திசை மாறிப் பின் கிளியனூர் வழியாகப் பாண்டியை நோக்கிச் செல்ல வேண்டும். வழியில் ஆதிபராசக்தி கோயிலில் அப்படி என்னதான் ஈர்ப்பு இங்கே என்று பார்க்க ஒரு சிறு நிறுத்தம்.

ஏப்ரல் மாதத்து வெய்யலில் நிறைய வியர்த்தாலும் வீசிய காற்று அதை வழித்துப் போனது. பயணத்தின் இடையில் நின்று நீர் பருகி நிதானித்து, குழுக்கலந்து, மாறியபடி சென்று கொண்டிருந்தோம். இடையில் வரும் ஊர்களில் சாலையோரத்துக் கையியக்க நீரிரைப்பிக் குழாய்களில் நீர் வாங்கிச் சேர்த்துக் கொண்டு தொடர்ந்தோம் (அப்போதெல்லாம் புட்டித் தண்ணீர் கிடையாதே!).

பொதுவாகவே சிறு சிறு குழுக்களாய்ப் பிரிந்து இருவர் மூவராய், நால்வராய் அவரவர் வேகத்திற்கேற்றபடி சென்றோம். எங்கள் குழு எல்லோர்க்கும் முன் திண்டிவனத்தை அடைந்து விட, ஊருக்கு வெளியே ஒரு மர நிழலில் படுத்து இளைப்பாறினோம். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சாலையோரத்துத் தென்றல் வீச உச்சி வெய்யலில் உறங்கியும் விட்டோம்.

திண்டிவனத்தில் இருந்து மதியம் மூன்று மணிக்குக் கிளம்பி, மாலை வாக்கில் வழியில் இருந்த ஒரு (மேரீ?) பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தோம். தமிழ்நாடு-பாண்டிச்சேரி எல்லைக்கருகில் இருந்த திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்திற்கு வந்து சேர்ந்த போது மாலையாகி இருந்தது. அன்றைய பயணத்தை அதோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்தோம். அங்கிருந்த ஒரு அரசுப்பள்ளியில் இரவு தங்கல்.

மறுநாள் பாண்டிக்குச் செல்வோமா இல்லை இப்படியே திரும்பிவிடுவோமா என்னும் குழப்பம் வரவே, இரவு பல நண்பர்கள் சும்மா ஒரு பயணத்திற்கு என்று ஒரு பேருந்து ஏறிப் பாண்டியைப் பார்த்து வரச் சென்றோம். இவ்வளவு தொலைவு வந்து விட்டுப் பாண்டிக்குள் செல்லவில்லை என்றால் எப்படி? தவிர, மனதுக்குள் இன்னொரு சிறு விதையும் இருந்தது.

பாண்டியை ஊராகக் கொண்ட எனது பள்ளிக்காலப் புதலியல் (botany) ஆசிரியையைச் சென்று சந்தித்து வரவேண்டும் என்று மனதில் இருந்த ஆசையே அது. ஒரு ஆசிரியையாக மட்டுமின்றி நல்லதொரு நண்பராய்ப் பழகிய அவரின் முகவரியை எழுதி வைத்திருக்கவில்லை என்றாலும் மனதில் பதிந்திருந்த ‘xx முத்துமாரியம்மன் கோயில் தெரு(?)’ என்பதை வைத்துத் தேடியபடி சென்றேன். பாண்டிச்சேரியின் திட்டமிட்டது போன்ற குறுக்கும் நெடுக்குமான நேர்ச்சாலைகள் போன்று தமிழகத்தில் வேறு எங்கும் பார்த்தது இல்லை. ஆசிரிய நண்பரின் வீட்டை எளிதாகக் கண்டுகொள்ள முடிந்தது.

Img (c) mapsofindia.com

இரவு பத்து மணி ஆயிற்றே என்ற தயக்கத்தையும் மீறிச் சந்திக்கும் ஆவல். அந்த நேரத்தில் யாரிதுவென்று அவருடைய பெற்றோர் கேள்வியுடனேயே திறந்தாலும், நல்லவேளை அவர்கள் உறங்கச் சென்றிருக்கவில்லை. அவ்வளவு நேரம் கழித்து எப்படி அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டப் போனேன் என்று இன்று நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.

இருப்பினும் தனது முன்னால் மாணவன் ஒருவனை எதிர்பாராத விதமாய்ச் சந்தித்த மகிழ்வை என் ஆசிரியையிடமும் உணர முடிந்தது. இரண்டு வருடக் கதைகளை அரை மணி நேரத்தில் பேசிவிட்டுக் கிளம்பினேன். அதன்பிறகு வாழ்வில் எங்கள் பாதைகள் சந்தித்துக் கொள்ளவில்லை. அசாதாரணச் சூழலில் அன்று அவர்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே.

பாண்டியில் இருந்து கிளம்பிய கடைசிப் பேருந்தை ஓட்டமாய் ஓடிப் பிடித்து, மீண்டும் திருச்சிற்றம்பலம் வந்து அப்பள்ளியின் வகுப்பறையில் படுத்துறங்கினோம். விட மனமில்லாமல் மறுநாள் பாண்டி மறுபடியும் எங்களை அழைத்துக் கொண்டது.

-(தொடரும்).

Tags: பயணங்கள்

3 responses so far ↓

  • 1 இராதாகிருஷ்ணன் // May 17, 2006 at 1:28 am

    நினைவுகள் மீள்கின்றன.
    //தலைமுறைகளில் இழக்கின்றவற்றில் இதுவும் ஒன்றா தெரியவில்லை// அப்படி நடக்குமென்று தோன்றவில்லை. அதன் வீச்சு வேண்டுமெனில் குறையலாம்(அதுவும் நம்மூர்களில் மட்டும்தான்).

  • 2 சுதர்சன் // May 17, 2006 at 6:51 am

    //மாலை வாக்கில் வழியில் இருந்த ஒரு (மேரீ?) பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தோம்.//

    True biscuits

  • 3 செல்வராஜ் // May 17, 2006 at 12:57 pm

    இராதா, நம் ஊர் குறித்தே அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தினேன். நீங்கள் சொல்வது போல் ‘வெளியே’ அந்த மாற்றம்/தாக்கம் குறைவாகத் தான் இருக்கும்.

    சுதர்சன், நன்றி. நீங்கள் அந்தப் பக்கமோ?