இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஜப்பான் கொரியா பழங்கதை

January 25th, 2006 · 4 Comments

மடத்துவாசல் பிள்ளையார் கானாபிரபா மூன்று வருடங்களுக்கு முன்சென்று வந்த ஜப்பான் பயணம் பற்றி அருமையான ஒரு பதிவு எழுதி இருக்கிறார். நல்ல படங்களுடன் உணவு, கலாச்சாரம், எழுத்து, பழக்க வழக்கங்கள் என்று சகலமும் தொட்டு எழுதியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது.

Japan Korea Map  (c) http://www.lib.utexas.edu/maps/middle_east_and_asia/korea_eastsea01.jpg

அது சுமார் பதின்மூன்று வருடங்களுக்கு முன் ஜப்பான்/கொரியாவிற்கு நான் சென்று வந்த ஒரு பயணத்தை நினைவுபடுத்தி விட்டது. நினைவுகளின் மூலையைச் சுரண்டி ஒரு பதிவு எழுதலாம். அதைவிட, திரும்பி வந்தபின் நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் அந்தப் பயணம் பற்றி ஒரு பத்தி எழுதியிருந்ததை எடுத்துப் போடலாம் என்று தோன்றியது.

யூனிகோடு, வலைப்பதிவு இவற்றிற்கெல்லாம் முந்திய காலம் அது. ஏன், அப்போது வலை என்பதே இன்றைய நிலையில் இல்லை. பலருக்கும் அனுப்ப வேண்டும் என்று, கனடாவின் முனைவர் ஸ்ரீனிவாசன் உருவாக்கிய ஆதமி என்னும் ஆங்கிலம்-தமிழ்-உருமாற்றி ஒன்றினைக் கொண்டு எழுதிய கடிதத்தின் நகல் ஒன்றைப் பத்திரமாக வைத்திருந்ததற்கு இன்று ஒரு பயன். அதிலிருந்து ஒரு பகுதி கீழே:

லூயிவில்
06 டிசம்பர் 93.

இனிய நண்பர்களுக்கு,


1993-ஆம் ஆண்டு முடிந்து ஒரு புதிய ஆண்டு 1994-ஆக மலரப் போகும் இந்த நேரத்தில், உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களும் உங்கள் வாழ்வில் நல்ல நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் தரட்டும். எனது வாழ்த்துக்கள்.


1993-ஆம் ஆண்டு எனக்கும் நன்றாக் இருந்தது. சமநிலைப்பட்ட வாழ்க்கை போல எல்லா அம்சங்களும் கலந்த ஒரு இனிய வருடமாய்க் கழிந்தது.


எங்களுடைய ஆசிரியரோடும், ஆய்வுக் குழுவினர் சிலரோடும், எனக்கும் ஜப்பான், கொரியா நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ‘டோக்கியோ’வுக்கு அருகில் உள்ள ‘யோக்கோஹமா’ என்னும் நகரில் நடந்த ஒரு (கடல் நீர் சுத்தகரிப்புப் பற்றிய) கருத்தரங்கு ஒன்றைக் காணச் சென்றோம். அதன் பிறகு, கொரியாவில், ‘உல்ஸான்’ என்னும் நகரில் இருந்த ஒரு தொழிற்சாலைக்குச் சென்று வந்தோம் (Hyundai Heavy Industries Ltd). ‘சியோல்’ நகரில் மூன்று நாட்கள் தங்கி சும்மா ஊர் சுற்றிப் பார்த்தோம். ஒலிம்பிக் விளையாட்டுத் திடலையும் நேரில் சென்று கண்டேன்.

ஜப்பான், தென்கொரியப் பயணங்கள் நன்றாகவே இருந்தன. மொத்தம் சுமார் பத்து தினங்கள் அவ்விரண்டு நாடுகளிலும் இருந்தோம். திரும்பி வந்தபின் ஒரு பயணக் கட்டுரை மாதிரி ஏதாவது எழுதி இருப்பேன். நல்ல வேளை, பிற வேலைகள் இருந்ததால் அப்படி ஏதும் நான் செய்துவிடவில்லை. தப்பித்தீர்கள் எல்லோரும் !

இருப்பினும் சில வரிகள். அமெரிக்காவில் நான் இதுவரை பார்த்ததுபோல் அல்லாமல், அந்த நகரங்கள் வெறிச்சோடிப் போயிருக்கவில்லை. கூட்டம் கூட்டமாய் எங்கும் மக்கள். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு, அத்தனை மக்களைப் பார்க்கச் சந்தோஷமாய் இருந்தது. நிலத்தடி இரயில் பாதைகள் போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக இருந்தன. பல இடங்கள் எனக்கு இந்தியாவைத் தான் நினைவுபடுத்தின.

ரோட்டோரம் பெட்டிக் கடைகளும், பேருந்து நிறுத்தங்களும், ரயில்வண்டிப் பாதையோரம் வீடுகளின் கொடிகளில் காய்ந்து கொண்டிருக்கும் துணிகளும், வண்டியினுள்ளே ஏதாவது புத்தகத்தைப் பார்த்தவாறு, சோர்வாய் வேலையில் இருந்து திரும்பி வருவோரும், அங்கங்கு தென்பட்ட மிதிவண்டிகளும், இரு சக்கர வாகனங்களும், இரும்பு மடக்கு கதவுகள் கொண்ட கடைகளும், அதன் வாயில்களில் கயிறுகளால் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் சாமான்களும், அன்று பெய்த மழையில் நனைந்து அங்கங்கு தேக்கம் கொண்டிருந்த ரோடுகளும், இப்படிப் பல விஷயங்கள் எனக்கு இந்தியாவை நினைவுபடுத்தின. மற்ற சில விதங்களில் அவை அமெரிக்காவை ஒத்து இருந்தன. இவ்விரு இடங்களுக்கும் இடைப்பட்ட இடமாக அவ்விரு நாடுகளையும் கூறலாம் என்று எண்ணுகிறேன்.

ஆங்கிலம் அவ்வளவாய் அறியாத அந்த நாட்டினரிடம், கையில் ஒரு வரைபடத்தை வைத்துக் கொண்டு, ஊமை மொழியில் பேசிக் கொண்டு, அலைந்து திரிந்த அந்தப் பத்து நாட்களும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான்!

* * * *

இன்னும் நிறைய எழுதி இருந்திருக்கலாம். ஏனோ அன்று விட்டுவிட்டேன். துருவப் பாதை என்று சிகாகோவில் இருந்து வடதுருவம் வழியாகச் சென்று டோக்யோவில் இறக்கி விட்ட விமானம், ஜப்பானில் இடப்பற்றாக்குறையால் வாகன நிறுத்துமிடங்களில் கார்களை ஒன்றன் மேல் ஒன்று நிறுத்த இருக்கும் லிப்ட் வசதிகள், ஒரு பெரிய உணவகத்தினுள் சென்று உணவுத் தெரிவு செய்யும் முன் விலைப்பட்டியலைப் பார்த்தவுடன் எழுந்து வெளியே வந்தது, தேடிப் போய் ஒரு அமெரிக்கக் கே.எப்.சிக்கோ மெக்டானல்ட்ஸ்க்கோ சென்று சாப்பிட்டது, அத்தனை மக்கள் கடக்க வேண்டி அசாதாரண அகலத்துச் சாலைக் கடவுக் கோடுகள், ஒன்றும் புரியாமற் சென்று வந்த ஷிண்டோக் கோயில், இப்படிப் பல சுவாரசியங்கள் அந்தப் பயணத்தில் அடக்கம்.

கொரியாவில் ஒரு சுற்றுலாத் தலத்துக்கு வந்திருந்த பள்ளிச் சிறுவர் சிறுமியர் அனைவரும் ஒரே உயரத்தில் சீருடையில் வரிசையாக நின்று கொண்டிருந்த அழகு, அவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியைகளின் இளமை 🙂 , ஜப்பானுக்கும் கொரியாவிற்கும் நடந்த போர் பற்றிய சாலையோரத்துக் குறிப்புகள், பணத்தாளில் இருந்த குல்லாப்போட்ட குறுந்தாடிக்காரர், காற்று வாங்கிக் கொண்டிருந்த முடிந்துபோன ஒலிம்பிக் அரங்குகள், கனரகத் தொழிற்சாலையின் ஆரம்ப நாட்களில் இரவு பகல் பாராமல் வீடு குடும்பம் பார்க்காமல் கொடும்பணி செய்த மக்களின் கதை, கூட வந்த ஷேக் அழைத்துப் போன ஒரு விருந்துணவு, சியோல் விமான நிலையத்தில் இறங்கியவுடனேயே தாக்கும் சிகரெட் புகை நெடி, அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக் கொரியக் குடும்பத்திற்கு வாங்கி வந்த கொரிய பிஸ்கெட், மற்றும் கின்செங் டீ, பதினான்கு மணி நேரம் நில்லாது சியோலில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்-ற்குப் பறந்த விமானப் பயணம், ஒரு வாரம் தீராத முட்டி வலி என்று எல்லாமே சுவையான அனுபவம் தான்.

Tags: கடிதங்கள் · பயணங்கள்

4 responses so far ↓

  • 1 Nithya // Jan 26, 2006 at 12:17 am

    Selvaraj,

    It is very impressive that you remember so much from a trip that happened long ago.

  • 2 krishnamurthy // Jan 26, 2006 at 4:04 am

    Nice. did u come again here without my knowledge? How come u remember so well. Great!!

  • 3 Kana Praba // Jan 26, 2006 at 4:56 am

    தங்களின் ஜப்பானிய மற்றும் கொரிய அனுபவங்கள் அருமை.
    வாழ்த்துக்கள்.

  • 4 Uma Maheswaran J // Jan 26, 2006 at 11:53 am

    தங்களின் ஜப்பான்/கொரியப் பயணம் பற்றிய நினைவுகளுக்கும்
    கானாபிரபா எழுதிய ஜப்பான் பயணம் பற்றிய தங்களின் அறிமுகத்திற்கும் நன்றி !