இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/06 –

July 1st, 1993 · No Comments

இனிய தோழி சுனந்தா,



“இந்த ஊரில் உள்ள கோயில் அர்ச்சகர் ஒரு கதை சொன்னார் சுனந்தா – அதைப் பற்றி…”

இந்த ஊரில் உள்ள இந்திய மக்களெல்லாம் சேர்ந்து சின்னதாய் ஒரு கோயில் கட்டி உள்ளனர் சுனந்தா. கூட்டு முயற்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டு அது. இவ்வளவு தொலைவு வந்த போதும், நம்முடைய கலாச்சாரத்தோடு இன்னும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்னும் இவர்களின் ஆவல் அதில் நன்கு வெளிப்படுகிறது.



தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று அவ்வப் போது இங்கு வரும் விஷேச தினங்களில் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டாடி மகிழ்வதைக் காணும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அமெரிக்க வாழ்வின் நன்மைகளோடு இந்திய நாட்டின் நல்ல பழக்கங்கள், கலை, கலாச்சார உணர்வுகள், நம்பிக்கைகள், ஆகியவற்றைச் சேர்த்து ஒரு புதிய பாதையை இவர்கள் உருவாக்குவதாகவே எனக்குப் படுகிறது. இங்கு மட்டும் அல்ல, அமெரிக்காவின் பல ஊர்களில் உள்ள இந்திய மக்களும் இவ்வாறு ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டு வருவதாய் அறிந்தேன்.

இங்கு இருக்கிற அந்தக் கோயிலுக்கு ஒரு முறை சென்றிருந்தபோது அங்கே இருக்கிற அர்ச்சகர் இந்தக் கதையைச் சொன்னார். (‘ராமராஜன் போல இருக்கு’ என்று எனது சிவப்புச் சட்டையைப் பார்த்துக் கேலி செய்வாயே!) அன்று நான் அதைத்தான் அணிந்து சென்றேன் – ஆனால் அதற்கும் இப்போது நான் கூறப் போவதற்கும் யாதோரு சம்பந்தமும் இல்லை. 🙂 ) மிகவும் எளிமையானது தான் என்றாலும், மிகப் பெரிய உண்மையை அவருடைய வார்த்தைகள் கூறுவதாகவே பட்டது எனக்கு.

குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கையில், ‘A’ for Apple, ‘B’ for Bat, என்றும், ‘அ’-அம்மா, ‘ஆ’-ஆடு என்றும் கற்றுக் கொடுக்கிறோம். ‘A’,’B’, ‘அ’, ‘ஆ’, இவற்றை அவர்கள் மனதில் பதிய வைப்பதற்காக, Apple-உம், Bat-உம், அம்மாவும், ஆடும் அவர்களுக்கு நாம் உதாரணப் படுத்தி வைக்கின்றோம்.

வளர்ந்த பிறகு, அவர்களால் Apple-ஐ நினைக்காமலே ‘A’ -வை உபயோகப் படுத்த முடியும். ‘B’ என்று எழுத அவர்களுக்கு ‘Bat’ ஞாபகம் இருக்க வேண்டியதில்லை. (உனக்கு உன் தாய் மீது இருக்கும் பற்று எனக்குத் தெரியும். அதனால் ‘அ’ என்று எழுதும் போதெல்லாம் உன்னால் அம்மாவை நினைக்காமல் இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை!). கடவுள் விஷயமும் இது போலத் தான். உருவம் இல்லாதவன் (இல்லாதது?) கடவுள். முதலும், முடிவும் இல்லாத அந்தத் தத்துவத்தை; கற்பனைக்கும் எட்டாத உண்மையை மனிதனுக்குச் சொல்லித் தர, வெவ்வேறு உருவங்களும் பெயர்களும் கற்பனையாய்ச் சொல்லப் பட்டது.

சக்தி வாய்ந்தவர் கடவுள் என்று காட்டப் பல கைகளும், தலைகளும், நீண்ட நாக்கும், உருண்ட விழிகளும், பன்னிரண்டாயுதமும், காட்டப் பட்டது. இயற்கையின் அங்கங்கள் ஆகிய மிருகங்களும் கடவுளின் உருவங்களே என்று விளக்க, யானை வினாயகனானது. மயிலும் சேவலும் முருகனின் சின்னங்களாயின. பாம்புகள் சிவன் தலைக்குச் சென்றன. பசு புனிதமானது. உருவம் இல்லாத அந்த மாபெரும் தத்துவத்தைச் சொல்லித்தரப் பல உருவங்கள் காட்டப் பட்டன.

இதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். பல பேர் ‘A’ for Apple என்கிற அந்த நிலையில் இருந்தே இன்னும் மாறவில்லை. அதனால் தான் சண்டையும், பூசலும் இன்னும் உள்ளது. மனிதன் வளர வேண்டும் சுனந்தா. இன்னும் அவன் மனது முதிர்ச்சியும் வளர்ச்சியும் பெற வேண்டும்!

வளர்ச்சி என்கிற போது, ‘நம்மைப் பெற்றோர் வளர்த்த விதம்’ பற்றி நாம் பேசியதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருகின்றது சுனந்தா…

தொடர்வேன்,

அன்புடன்
செல்வராஜ்.

——–

Tags: கடிதங்கள்