இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

இனிய தோழி சுனந்தாவிற்கு…! -1/04-

June 29th, 1993 · No Comments

இனிய தோழி சுனந்தா,


‘எல்லாம் நன்மைக்கே’ என்பது எனது தாரக மந்திரம் சுனந்தா ! உனது அன்னை கூட உன்னிடம் அடிக்கடி அப்படிக் கூறுவதாய் எழுதி இருந்தாய். நாங்கள் இருவரும் ஒரே நாளில் (ஆக 19) பிறந்தவர்களல்லவா! அதனால் எங்கள் எண்ணங்கள் கூடப் பல சமயம் ஒத்துத் தான் இருக்கும். 🙂 :-). ஆகா, அவர்கள் கைச் சமையலில் செய்த உணவை உண்டு எத்தனை நாட்கள் ஆயிற்று !


சில தினங்களாய் உனக்கு உடல் நிலை சற்றுச் சரி இல்லை என்று நீ எழுதி இருந்தாய். தோழி, உடம்பை நன்கு கவனித்துக் கொள் என்று உனக்கு நான் கூற வேண்டியதில்லை. “சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்” என்று எனக்குப் போதித்தவளே நீ தான். அதனால் உனது உடல் முன்னேற்றத்தில் நீ சரியான அக்கறை செலுத்துவாய் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

வீணில் கவலைப் படாதே. மனசு தளர்ந்துவிடாதே. மனசு சந்தோஷமாய் இருந்தால் பாதி நோய் காணாமல் போய் விடும். எப்படியாவது உற்சாகமாய் இருக்க முயற்சி செய். படி. பாரதியைப் படி. கவிதை படை. நல்ல சங்கீதம் கேள். காலாறச் சற்று நடந்து தென்றலைத் தழுவி வா. மனசுக்குப் பிடித்தவர்களுக்குக் கடிதம் எழுது. ஏதாவது.

கவலைப் படாதே. உனக்கு விரைவில் குணமாகும். ஏற்கனவே சற்றுக் குணமாகி வருவதாய் எழுதி இருந்தாய். இந்தக் கடிதம் உன்னை வந்து சேர்வதற்குள் உனக்குப் பூரண குணம் ஆகி விட வேண்டும். உன்னை அறிந்த நல்லோர் பலரும் அப்படித் தான் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அந்த எண்ணங்களின் கூட்டுச் சக்தி நிச்சயம் உனக்கு உறுதுணையாய் இருக்கும்.

நீ வலியால் துடிப்பதைத் தன் கண்ணால் கண்ட பிறகும், ஒரு தாயின் உள்ளம், தனது வேதனையையும் மிஞ்சி, ‘இதுவும் கூட நன்மைக்காகத் தான் இருக்கும்’, என்று கூறுகிறது என்றால்… எனக்கு அந்த மந்திரத்தின் மீது இன்னும் நம்பிக்கை அதிகரிக்கிறது.

இயற்கை மாசு மறுவில்லாதது சுனந்தா. இயற்கையில், நீயும், நானும், நிலவும், மலரும், நீள்கடலும், வான் கதிரும், யாவும் ஒரு அங்கமே என்பதால், அவற்றிற்கு நடப்பது எல்லாம் கூட நன்மைக்குத் தானே இருக்க முடியும். எனினும், உனக்கு விரைவில் நலமாக வேண்டும் என்று நானும் இங்கு வேண்டுகிறேன்.

‘வேண்டுகிறேன்’ என்று எழுதும் போது, நாம் கடவுள் பற்றிப் பேசியதெல்லாம் கூட எனக்கு நினைவுக்கு வருகிறது சுனந்தா…

நாளை தொடர்வேன்,

அன்புடன்
செல்வராஜ்.

Tags: கடிதங்கள்