Feed on
Posts
Comments

திருமதி. வைதேகி எர்பர்ட்டு அம்மையாரின் சங்கத்தமிழ்க் கலந்துரையாடல் இன்றைய பொழுதை மிகவும் அருமையாக ஆக்கித் தந்திருந்தது. அவரை இன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஏற்பாடு செய்த இயூசுட்டன் பெருநகரத்துத் தமிழார்வலர்களுக்கு மிக்க நன்றி.

வைதேகி அம்மையாரின் குரலில் இருக்கும் ஆர்வமும், காட்சிகளை விவரிக்கும் உடல்மொழியும், சுவைமிகுந்த விவரங்களும், நேரம்போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருக்க வைத்தன. அவரிடம் சொன்னால், ‘நான் எதுவும் சொல்லலைங்க; எல்லாம் இதிலேயே இருக்கு; இதன் தொடர்ச்சி தான் இன்றுவரை எல்லாமே’ என்பதாகத் தான் பதிலிறுப்பார் என்று தோன்றுகிறது.

அவர் சொன்ன செய்திகளில் சில:

 • சங்க காலத்தில் சாதி இல்லை. தமிழர்களிடையே மதப்பிரிவினைகள் இல்லை. ஏன், கொற்றவை, முருகன் பற்றிய சிறுகுறிப்புகள் தவிரக் கடவுள் என்பதே கூட இல்லை. இறந்துபட்ட முன்னோர் வழிபாடு தான் இருந்தது.
 • சங்க காலப் புலவர்களுள் ~15% தான் பெண்கள் என்றாலும், பெரும்பாலான பாடல்கள் (75%) அகத்திணை பற்றியவையே; ஆண்பாற்புலவர்களாலும் அவ்வளவு நுணுக்கமாகப் பெண்ணுணர்வையும் எழுத முடிந்திருக்கிறது என்பது பெரும் ஆச்சரியமான ஒன்று.
 • பாணர்களும் விறலிகளும் தமிழுக்குப் பெருந்தொண்டு ஆற்றியிருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் தமிழ் இசை இல்லை, ஏன் தமிழே கூட இல்லை என்றாகியிருக்கலாம் (என்று முனைவர் இராசம் கூற்றாகக் கூறினார்).
 • குறுநில மன்னர்கள் மக்களோடு மக்களாய் இருந்து அன்பு கொண்டு வழிப்படுத்தினர் என்றும் மூவேந்தப் பேரரசுகள் அவர்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர். தமிழ்ப்புலவர்கள் அம்மன்னர்களோடு நெருக்கம் கொண்டிருந்தனர். அவர்களை இடித்துரைக்கும் வாய்ப்பும் கொண்டிருந்தனர் (“நான் சொல்றதச் சொல்லீட்டன். அதுக்கப்புறம் உன் விருப்பப்படி செஞ்சுக்கோ”, என்று அவர்களால் சொல்ல முடிந்தது).
 • வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அன்றும் எல்லாத் திசைகளிலும் இருந்து வந்த சமயங்கள், அவற்றின் தொன்மங்கள், இனக்குழுக்கள், அரசுகள் என்று எல்லாவற்றிலும் இருந்து தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டிருந்திருக்கிறது. இவை அனைத்தையும் மீறி இன்றும் தொடர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதே அதன் பெருஞ்சாதனை என்றும், இப்படியானதொரு மொழியின் பெருமையை அறியாமல் நாம் அலட்சியமாய் இருக்கிறோம் என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

அனைவரும் இவற்றைப் படிக்க வேண்டும் என்றும் ஊக்கப்படுத்திய அவர் ஆவலைத் தூண்டும் பல பாடல்களையும் அவற்றின் பொழிப்புரையையும் மொழியாக்கத்தையும் வழங்கினார். ஓரிரு நாள் பயிற்சியாகப் பயிலரங்கமாக நடத்திக் கொடுக்க இசைவு தெரிவித்தார். அவரது ஆர்வம் என்னுடைய அரைகுறை ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கவே படிக்கவேண்டியவற்றின் பட்டியலில் இவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன். சங்கத் தமிழ்ப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் ஆர்வத்தையும் கூட்டிக் கொள்கிறேன்.

(ஏற்கனவே டிசி பகுதியில் நடந்த பயிலரங்கைப் பயணத்தின் காரணமாகத் தவற விட்டவனுக்கு இன்னுமோர் வாய்ப்பாக இது அமையும்).

சாவடி என்றால் தெரியும். காவடி… தெரியும். ‘டாவடி’ என்றால் கூட என்னவென்று சொல்லிவிடலாம்.  ஆனால், “தாவடி” என்றால் என்ன சொல் பார்க்கலாம் என்று நண்பர் மடக்கியபோது சற்றே அயர்ந்துதான் போனேன்.

தமிழிற் கொஞ்சம் ஆர்வம்/புலமை உண்டு எனப் படம் காட்டிக்கொண்டிருப்போனைச் சோதிக்கவென்று இருக்கும் இக்குழு அவ்வப்போது இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்பதுண்டு. அரைகுறையாகத் தெரிந்தாலும் சரியான விடை பகரவேண்டுமே என்று இன்னும் கொஞ்சம் ஆராய்வதும், அதில் கிளை பிரிந்து போய் வேறு சில தெரிந்து கொள்வதுமாய் இருப்பதால் எனக்கும் இது பிடித்த ஓர் ஆட்டம் தான்.

ஆனால் ‘தாவடி’ என்னும் ஒரு சொல்லைக் கேட்டதே இல்லையாதலால், அதெல்லாம் தமிழ்ச்சொல்லாய் இருக்காது என்றோ, தட்டுப்பிழை என்றோ கூற எத்தனிக்கையில், “பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியிருக்கிறார், வீரர்கள் தங்கும் பாசறை போன்ற ஒன்று” என்று தான் விசாரித்து அறிந்துகொண்டதையும் சொன்னார்.

நான் தேடிப் பார்த்தவரையில் ‘தாவடி’ என்று இலங்கையில் ஓர் ஊர் இருப்பது போல் தெரிகிறது. அருள்மொழிவர்மன் இலங்கையில் இருக்கும்போது தான் இந்தப் பேச்சு வருகிறது என்பதால் அதனோடு ஏதேனும் தொடர்பிருக்குமோ எனத் தோன்றியது. ஆனால், பல அகர முதலிகளும் போர், பயணம் அல்லது தாண்டுகால் (stride) என்னும் பொருள்களையே முன் வைக்கின்றன.

கல்கியின் பயன்பாட்டிலோ இப்பொருள்கள் பொருந்துவதாகத் தெரியவில்லை.

 • தாவடி போட்டுக் கொண்டு தங்கியிருந்தோம்
 • தாவடிக்குச் சமீபத்தில் ஒரு குரல்
 • தாவடியின் ஓரத்தில் இருந்த வீரர்கள்
 • தாவடியைச் சுற்றி
 • தாவடியைக் கிளப்பிக் கொண்டு
 • தாவடியைப் பெயர்த்துக் கொண்டு
 • தாவடிக்கு அருகில்

போர்ச்சூழல், போர்வீரர் குறித்த பாவனை என்றாலும், நேரடியாக, போர், பயணம் போன்ற அகரமுதலிப் பொருள்களில் இவை வழங்கப்பெறவில்லை. மேற்சொன்ன பயன்பாடுகளைப் பார்க்கும் போது, போர்வீரர்கள் கூடாரம்/கொட்டகை அமைத்துத் தங்கியிருக்கும் தற்காலிகப் பாசறை என்னும் பொருள் தான் தெரிகிறது.

பொன்னியின் செல்வனிலும் வேறு எங்கும் மீண்டும் இச்சொல் ஆளப்படவில்லை. வேறு கூகுள் தேடலிலும் இச்சொல் புழங்கிய விவரங்கள் பிடிபடவில்லை.

பல கேள்விகள் எழுகின்றன.

 • எந்த அகரமுதலிகளிலும் காணப் பெறாத பொருளில் கல்கி தாவடி என்னும் சொல்லைக் கையாண்டிருப்பது எங்கனம்?
 • கல்கியே மீண்டும் வேறு எங்குமோ, வேறு யாரும் பிற இடங்களிலோ இது போன்ற சொல்லையும் பொருளையும் காட்டியதில்லையே, ஏன்?
 • தாவடி என்ற சொல்லை அறிந்தவர்கள் உண்டா? மேற்காட்டிய இரண்டு வகைப் பொருளில் ஏதேனும் ஒன்றைக் கண்டிருந்தாலும் அவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காட்ட இயலுமா?

(தாவடியாட்டம் தாவடியாட்டம் தாவடீ…யாட்டம் என்று தான் எனக்குப் பாட்டுத் தோன்றுகிறது Smile  ).

tawiki10

தமிழ் சார்ந்த ஈடுபாடுகள் பலவற்றுள் மனநிறைவு தரும் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவது. தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவினைச் சென்னையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் நண்பர்கள். எல்லோருக்கும் ஒரு பயனராகவும் பங்களிப்பாளராகவும் என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய கூட்டுழைப்பாளர்கள் பலரை நான் நேரடியாக அறிந்திருக்கவில்லை என்றாலும் அவர்களுடைய பெயரையோ, படத்தையோ, விக்கித்தொடர்பு பற்றிய குறிப்பையோ கண்டால், ‘அட இவங்க நம்மாளு’ என்று ஒரு சொந்தம் கொண்டாடவும் தோன்றுகிறது.

பத்தாண்டுகளாகவும் நான் ஒரு பயனராக இவ்விக்கிப்பீடியாவினை அறிவேன் என்றாலும், முதல் மூன்றாண்டுகள் எழுத்துப் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாகவும் வாசகனாகவும் இருந்து வந்திருக்கிறேன்.

Continue Reading »

"அங்க்கிள்… இது ஏன் தப்புன்னு போட்டிருக்கீங்க?"

அண்மையில் எங்கள் தமிழ்ப்பள்ளியின் நிலை-4 மாணவி ஒருவர் தேர்வு முடிவினைப் பார்த்து விட்டுக் கேட்டார். ஆங்கிலத்தில் இருந்து ஒரு சொற்றொடரைத் தமிழாக்கம் செய்திருந்ததில் சில ஒற்றுப் பிழைகளைச் சுழித்திருந்தேன்.

"ஓ! அதுவா… அந்த இடத்துல ஒற்று வரவேண்டும். (கதவைத் திறந்தான்). இது பத்தி அடுத்த வருசம் இன்னும் விரிவாப் படிப்போம்"

"ஆனா… இதுக்கு மார்க் குறைக்கலியே?"

"இல்லம்மா… பரவாயில்ல. இத நீங்க தெரிஞ்சுக்கணும்னு தான் குறிச்சிருக்கேன். பெரியவங்களே பல பேரு இதச் சரியாச் செய்யறதில்ல! அதனால இதுக்கு நான் முழு மதிப்பெண்ணும் கொடுத்துட்டேன்.

இதுக்கு நிறைய விதிகள் இருக்கு. நாம அப்புறம் படிக்கலாம். இப்போதைக்கு, ஒரு object -அ எழுதும்போது அதுக்கப்புறம் வரும் ‘ஐ’க்கு அடுத்துக் க, ச, த, ப எழுத்து வந்தா அப்போ அந்த எழுத்த இரட்டிச்சு எழுதணும். அத மட்டும் ஞாபகம் வச்சுக்குங்க"

ATA Nilai4ஆர்வமாகக் கற்றுக் கொள்கின்றனர் அயலகத்துத் தமிழ்ச் சிறார்கள். வெறும் தமிழ்ச்சூழலும், அறிமுகத் தமிழும் தாண்டி அமெரிக்கத் தமிழ்க்கல்வி இலக்கணமும், சற்றே இலக்கியமும் கற்றுத் தரவும் தொடங்கியிருக்கிறது. ஆரம்பக் கட்டங்கள் தான். ஆனால் வளர்முகமாகச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அயற்சூழலில் தமிழ்க்கல்வி என்பது அதன் தனிச் சவால்களைக் கொண்டது என்பதைக் கற்றுத் தருவோர் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம். இந்தச் சிக்கல்களையும் சவால்களையும் கூட்டாகச் சமாளிக்க அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் போன்ற அமைப்புகள் பெரும் உதவியாக இருக்கின்றன. தனித்தனியே ஆங்காங்கே நண்பர்கள் தமிழ் அறிமுகம் செய்து வைத்தது போய், அனைவரது உழைப்பையும் அனுபவத்தையும் பகிர்ந்து பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள இது வழிவகை செய்கிறது. அடுத்த கட்ட நகர்வுக்கு இது அவசியமும் கூட.

Continue Reading »

பூரண குணம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி, மருத்துவமனை நீங்கி வீடு வந்த பின்னொரு நாள், பின்னொரு பொழுதொன்றில் சொல்லுவார் அப்பா,  "பரவால்லப்பா! பெரிய கண்டத்துல இருந்து இந்தத் தடவ தப்பிச்சாச்சு. பெரிய ஆபத்தே நீங்கிடுச்சு போ!"

நிம்மதி கலந்த பெருமூச்சொன்றோடு முன்னறைச் சோபா இருக்கையில் அமர்ந்திருப்பார். முகத்தில் ஒரு அமைதியான நிறைவு மலர்ந்திருக்கும். அவருக்கும், அருகே அமர்ந்திருக்கும் எனக்குமாகக் காப்பியோ தேநீரோ கொண்டு வந்து, மேலே சுழலும் மின்விசிறியின் காற்றில், ‘சித்த ஆறட்டும்’ என்றபடி கீழே அமர்வார் அம்மா.

"ஏதோ… கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம். வேற என்னாலும் ஆயிருந்தா என்ன பண்றது!" என்று நடந்துவிட்டதும், நடந்துவிடக் கூடாததுமாக எண்ணி அசை போட்டுக் கொண்டிருப்பார் அம்மா.

ஒரு பார்வை. ஒரு சிரிப்பு. ஒரு தலையசைப்பு. அவ்வளவு தான். அப்பா காப்பியைக் குடித்துவிட்டுக் கிளம்பிவிடுவார். "நான் அப்படியே அந்தப் பொட்டிக் கட வரை போய்ட்டு வரேன்". கட்டில் மெத்தையடியில் மடித்து வைத்திருந்த சட்டையை மாட்டிக் கொண்டு அதில் கண்டுபிடித்துவிட்ட சிறு சுருக்கம் ஒன்றை நீவி விட்டபடி வெளியே செல்வார் அப்பா.

சில காலமாகவே என் அப்பாவின் உலகம் சுருங்கி இருந்தது. நான்காண்டுகளுக்கு முன் உண்டான ஒரு இதயக் கோளாறின் காரணமாக அதன் இறைப்புக் கொண்மை குறைந்திருந்தது. ‘அதிக அலைச்சல் வேண்டாம்’ என்னும் மருத்துவ அறிவுரையின்படி வெளியூர், பண்டிகை, விழா என்று எதுவும் இல்லாமல் வீடும், வீட்டை ஒட்டிய ஐந்து நிமிட நடைச் சுற்றளவும் மட்டுமே அவருடைய உலகமாக இருந்தது.

ஒரு பெட்டிக் கடை, வங்கி, இரண்டு கோயில், மருந்துக் கடை, கடிகாரக் கடை என்று தன்னுலகம் சுருங்கி இருந்தாலும் அது பற்றி எந்தக் கவலையையும் வெளிக் காட்டிக் கொண்டவரில்லை அப்பா. வருடம் ஒரு முறை நான் விடுப்பில் ஊர் வரும்போது மட்டும் இராசாக் கோயிலுக்கும் தான் பிறந்து வளர்ந்த ஊருக்கும் போய் உறவுகளைப் பார்த்து வரலாம் என்று இருப்பார்.

அழுத்தக்காரர் அவர் என்பார் அம்மா. "எதையாச்சும் சொல்லுதா இந்த மனுசன்? ஒரு கவலை உண்டுமா? ஆசை, சந்தோசம்; ஒரு வருத்தம், கோபம்; ஒண்ணயும் சொல்றதில்ல! நான் தான் இப்படிக் கவலப் பட்டுக்கிட்டு, ஆத்திரப் பட்டுக்கிட்டு… இப்படிக் கெடக்குறன். எதையாச்சும் சொல்லலாமுல்ல?"

"ஏங்ப்பா? அம்மா இப்படிச் சொல்றாங்களே?" என்று நான் கேட்டால், ‘இப்ப என்ன ஆயிருச்சு?’ என்றாற்போல் உதறி எறிந்து விட்டு, "கெடக்குது உடு. அதையும் இதையும் நெனச்சுக் கொழப்பிக்கிட்டு இருந்தா என்ன வரப் போவுது?" என்பார்.

Continue Reading »

« Newer Posts - Older Posts »