இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

குழந்தை வளர்ப்பும் அன்பும்

December 14th, 2004 · 7 Comments

பார்க்கின்ற எவரையும் கவர்ந்திழுக்கும் அழகான கண்கள் அங்கும் இங்கும் அலைந்தபடி, ‘இனி எல்லாமும் உங்கள் கையில்’ என்று முழு நம்பிக்கையையும் நம்மில் வைத்து, நம் கைகளில் ஒரு பிஞ்சு தவழ வருவது ஒரு உன்னத அனுபவம். ‘உங்கள் அருகாமையில் நான் நிறைவாய் இருக்கிறேன்’ என்று காட்ட விழைவதைப் போல் விரிந்த விரல்களோடு சிறு கரங்களும் கால்களும் மேலும் கீழும் உதற, அவசர அவசரமாய் மூச்சுக் காற்று உள்ளும் வெளியுமாகத் ததும்பும். விரல் நீட்ட, தளிர்க்கரங்கள் இறுகப் பற்றும். மெய் சிலிர்க்கும். சங்கீத அறிவே துளியும் இல்லாதவனைக் கூடத் தாலாட்டுப் பாடி மெய்யுருகச் செய்யும். அது ஆழ்ந்து உறங்கையிலே, அமைதியாக அருகமர்ந்து தலை கோதி, ‘யார் நீ?’, ‘எங்கிருந்து வந்தாய்?’, ‘என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?’ என்று வினவத் தோன்றும். ஒரு குழந்தைக்குத் தாயாக, தந்தையாக இருப்பது ஒரு பேரானந்தம். பேரனுபவம்.

Daughters Dec 2000குழந்தை வளர்ப்பு என்பது பெரும் பொறுப்பும் கூட. ஆனால் அதைச் சரியாகக் கற்றுக் கொள்ளப் பாடங்களும் இல்லை. பள்ளிகளும் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் பிற அனுபவித்தவர்களின் பட்டறிவையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இது நமக்கே உரித்தான ஒரு தனி வாழ்க்கைப் பாடம். பொதுவான திசையை அறிந்து கொண்டு, அன்பு ஒன்றையே அடிப்படையாக வைத்துக் கொண்டு பிறவற்றை எல்லாம் போகப் போகக் கற்றுக் கொள்ள வேண்டியது தான். சில சமயம் இந்தச் செலுத்தத்தில் நாம் தவறுகள் செய்துவிட நேரிடலாம். ஆனால் அவையும் இயல்பே என்று வாழ்வில் பாடங்கற்றுக் கொண்டு பயணம் செய்ய வேண்டும்.

தனி உயிராய், முழுச்சுயத்தோடு இருப்பதால் தளிர்கள் வளர்கையில் நமக்கு ஆனந்தத்தோடு கூடவே ஆச்சரியங்களும் சோதனைகளும் உண்டாவதும் இயற்கையே. நல்ல பெற்றோர்களாய் இருப்பதெப்படி, வளர்ப்பது எப்படி என்று யோசித்தபடி காலத்தில் நாம் நகர்ந்து கொண்டிருப்போம். அதே வேளையில், தம் எல்லைகள் என்ன, விருப்பு வெறுப்புக்கள், திறமைகள், பயங்கள், மகிழ்வுகள், மனச் சோர்வுகள் என்னவென்று தம் சுயத்தை ஆய்ந்து கொண்டு அந்த உயிர்களும் தம் பயணத்தைத் தொடரும்.

குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் பேணுவதற்குக் கண்டிப்பும் தேவை. அவர்களின் உற்சாகத்தைக் குலைக்காதவண்ணம் இருக்கச் செல்லமும் தேவை. இரண்டுமே அளவாக இருக்க வேண்டும். எது அளவு எது சமநிலை என்பதும் பொதுவாய்க் கூறிவிட முடியாது.

அளவு கடந்த கண்டிப்பும் மிரட்டலும் கொண்டு வளர்க்கப் படும் குழந்தை ‘ஒழுக்கமாக’ நடந்து கொள்ளலாம். ஆனால், அதில் ஏற்படும் பயமும், உள்மனக் காயங்களும் ஆற்ற முடியாதவை. இயற்கையான துறுதுறுப்பையும் உற்சாகத்தையும் வெட்டக் கூடியவை. நான் அறிந்த சில நண்பர்கள் சிறு வயதில் அளவு மிஞ்சிப் பயந்து கிடந்தது நினைவுக்கு வருகிறது. ‘அப்பா’ என்று சொன்னாலே அவர் இடுப்பில் அணிந்திருக்கும் ‘பெல்ட்’ மட்டுமே அதிகமாய் நினைவுக்கு வருவது கொடுமை தானே!

கட்டாயத்திற்கும் அதீத கண்டிப்பான வளர்ப்பிற்கும் மறுகோடியில் இருப்பது அளவு கடந்த செல்லம். எந்தக் காரணத்திற்காகவும் குழந்தையை மிரட்டவோ அடிக்கவோ கூடாது என்று, அவர்கள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொண்டு விட்டு விடுவதும் தவறு. பொது இடத்தில் ஐந்தாறு வயதேயான ஒரு குழந்தை பெற்றவரைப் பார்த்துத் திமிராக ‘என்னடி முறைக்கிற?’ என்று பெயர் சொல்லித் தரக்குறைவாய்ப் பேசுவதையும், ஏன், கை நீட்டி அன்னையை அடிப்பதையும் பார்த்திருக்கிறேன். அதையும் தாங்கிக் கொண்டு, ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். இதுவும் தவறு. குழந்தைகளுக்கு அவர்களின் எல்லைகள் சொல்லித் தரப் பட வேண்டும். தெரிய வேண்டும். அப்படிச் சொல்லித் தந்த பிறகும், அவர்கள் அந்த எல்லைகளைப் பரிசோதிக்கும் வண்ணம் நடந்து கொள்வதும் இயல்பு தான். எனினும் அப்போதும் உறுதியாக இருப்பது அவர்களுக்கும் குழப்பம் தராத ஒன்று. எல்லைகள் மீண்டும் வரையறுக்கப் பட்டுப் புரிந்து கொள்ளத் தெளிவாக இருக்கும்.

அதீத கண்டிப்பு, மிகையான செல்லம் என்று இரண்டு எல்லைகளையும் விட்டுவிட்டு இடையில் அளவான செல்லமும் கண்டிப்புமாக இருக்க வேண்டும். இதில் இரண்டு வழிமுறைகள். ஒன்று, பெரும்பாலான விஷயங்களில் கண்டிப்பும், சிறு சிறு இடங்களில் மட்டும் செல்லமுமாய் இருப்பது. இரண்டாவது, தொட்டதற்கெல்லாம் சட்டம் என்றில்லாமல், ஒரு சில விஷயங்களில் மட்டும் சரியான, ஆனால் உறுதியான எல்லைக் கோடுகளை வகுத்து விட்டு, அதன் பிறகு எல்லாவற்றிலும் இயல்பாகவும், சற்றுக் குறும்புகளையும் அனுமத்தும் வளர்க்கலாம். இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வது அவரவருடைய விருப்பம். இரு பெற்றோரில் ஒருவர் ஒன்றையும் மற்றவர் இன்னொன்றையும் கூடத் தெரிவு செய்யலாம் (ஹிஹி… எங்கள் வீட்டில் கொஞ்சம் அப்படித் தான் !).

இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி. அன்பைப் பொழிந்து வளர்த்தல் அவசியமாகிறது. கண்டிப்போ செல்லமோ எதுவாக இருந்தாலும் அடிப்படையில் பெற்றோர் நம் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து வளரும் குழந்தைகள் இனியவர்களாக வளர்கிறார்கள். தம் மீது வைக்கப் படும் அன்பை உலகத்தின் மீது பிரதிபலிப்பவர்களாய் அமைகிறார்கள்.

Daughters Jul 2004

புதிதாய்க் குழந்தைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களோ, இப்போது தான் பெற்றோர்களாய் ஆகியிருப்பவர்களோ, இந்தப் புதிய பொறுப்பிற்குப் பயப்பட வேண்டாம். உங்கள் பக்கத்து வீட்டுக்காரரோ, நண்பரோ, இது போன்ற வலைப்பதிவு வைத்திருப்பவரோ(!) சொல்வதை எல்லாம் கேட்க வேண்டாம். உங்கள் இயல்பு போலிருங்கள். அழுத்தம் கொள்ளாதீர்கள். அளவற்ற அன்பைக் கலந்து உங்கள் உள்ளுணர்வை நம்பி அதன் படி நடந்து வருவீர்களானால் இது அவ்வளவு ஒன்றும் கடினமான செயல் அல்ல. குழந்தை வளர்ப்பு பெற்றோர்களின் சுய வளர்ச்சியிலும் ஒரு முக்கியப் படி.

சந்தேகம் இருப்பின் நாற்பதுகளில் வெளியாகிப் பல பதிப்புக்கள் கண்டு, சுமார் நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட Dr. Spock’s Baby and Child Care புத்தகத்தில் ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் முதல் அத்தியாயத் தலைப்பே “உங்களை நம்புங்கள்” (Trust Yourself) என்பது தான்.

பிற்சேர்க்கை:
இந்தக் கட்டுரை தமிழோவியம் இணைய இதழில் 23 டிசம்பர் 2004 வாரத்தில் வெளியாகியுள்ளது.

Tags: வாழ்க்கை

7 responses so far ↓

  • 1 meena // Dec 15, 2004 at 12:12 am

    அருமையான உபயோகமான பதிவு செல்வராஜ்!

    எனக்குத் தெரிந்த இரண்டொரு வீடுகளில் அப்பா என்றால்
    பெல்ட் நினைவு வரும் வீட்டில்த்தான் குழந்தைகள்
    பிரகாசமாய் வளர்ந்திருக்கிறார்கள்! ஒரு வேளை
    ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்ங்ற மாதிரியோ? 🙂

  • 2 sundaravadivel // Dec 15, 2004 at 4:12 am

    பொதுவிட ஒழுக்கம் என்பதில் இரண்டரை வயசுக்காரனிடமிருந்து ரொம்ப எதிர்பார்க்க முடியாதென்றாலும் சில நேரங்களில் இப்படி
    இரு அப்படிச் செய்யாதே என்று சொல்ல நேர்வது கடினமாகவும், பல கேள்விகளை நமக்குள்ளே எழுப்புவதாகவுமிருக்கிறது.
    சிலவிடங்களில், முக்கியமாய் உணவகங்களில், இது நம்மை நிலை கொள்ளவிடாமலடிக்கிறது. அயலவர், நாட்டவர் எவருக்குமான
    பிரச்சினையாகத்தான் இது தோன்றுகிறது. என்னோடு பணிபுரியும் ஒரு அமெரிக்கர் சொன்னார், “சில சம்பவங்களுக்குப் பிறகு, அவளுக்கு
    5 வயசு வரைக்கும் அவளோட உணவகத்துக்குப் போறதில்லன்னு முடிவு பண்ணிட்டம். அப்புடிப் போறதாருந்தா புள்ளய பாட்டி
    வீட்ல விட்டுட்டுப் போவோம்”. ஒரு மூட்டை நெறைய ஒழுக்கவிதிகளை வச்சிருக்கோம். புள்ளையோ எல்லாத்தையும் பாத்துச் சிரிக்குது.
    செடியை ட்ரிம் பண்ணி வளக்குறேன் பேர்வழின்னு முளையையும் குருத்தையும் ட்ரிம் பண்றதை நெனச்சும் பாக்க முடியலை. அதான்
    அஞ்சுல வளை(யாதது 50ல்?)ன்னு ஒரு ரேஞ்சு வச்சிருக்காங்களோ! எது எப்புடி இருந்தாலும் நிதானம் வேணும்னு நீங்க சொல்றது
    சரியாத்தான் படுது.
    என்னமோ போங்க, நானெல்லாம் புள்ள வளத்து…(அந்த ட்ரஸ்ட் புஸ்தகம் பேரென்னா?!)…ஏதோ ஊட்டுக்காரம்மா கொஞ்சம் உருப்படியா இருக்கதால புள்ள பொழச்சுக்குவான்:)
    பி.கு: ‘செல்வ’ங்களுக்கு என் அன்பு!

  • 3 Balaji-paari // Dec 15, 2004 at 11:12 am

    nalla pathivu selvaa….
    Ithu enna vaarisukalin vaaaaaraamaa?
    🙂

  • 4 செல்வராஜ் // Dec 15, 2004 at 6:12 pm

    மீனா, உங்க கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. பெல்ட் நினைவு வராமலேயும் அவர்கள் பிரகாசமாய் இருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு வேளை இப்போது போலின்றி வேறு விதங்களில் பிரகாசித்திருக்கலாம்.

    சுந்தர், எங்கள் வீட்டிலும் கொஞ்சம் அப்படித்தான். (ஊட்டுக்காரம்மா கொஞ்சம் உருப்படியா இருக்கிற சங்கதி 🙂 ).
    ஒழுக்க விதிகளை நாங்களும் தான் வச்சிருக்கோம். கொஞ்சமா இருக்கணுமா, நிறைய இருக்கணுமான்னு எங்க வீட்டுலயும் கொஞ்சம் அவ்வப்போது விவாதம் இருக்கும். ஒரு மாதிரி சமநிலை வேணும்னு தோணுது. அது எங்கே என்பது புதிர் தான். சுவாரசியமான அனுபவமாய் அதுவும் ஓடுது.

    “நான் சொல்றேன். அதுனால இப்படி நட”ன்னு முரட்டுத் தனமாச் சொல்லக்கூடாதுன்னு தோணுது. ஆனால் பல சமயங்களில் அப்படிச் சொல்ல வேண்டியிருக்குது. என்ன செய்ய ?

    பாரி – நன்றி. “வாரிசுகளின் வாரம்” அப்படித் தான் தோணுது. உண்மையிலேயே தமிழ்மணத்தில சொல்லி இப்படி ஒரு வாரம் கொண்டாடிட்டா என்ன? 🙂

  • 5 முத்து // Jan 29, 2005 at 8:01 pm

    //ஆனால் அந்த அளவுக்கு கண்டிப்பு இல்லையென்று இந்த //

    .. மேலேயுள்ள பதிவில் ” ஆனால் அந்த அளவுக்கு கண்டிப்பு இல்லையென்றால் இந்த…” என்று திருத்திக்கொள்ளவும்.

  • 6 மூக்கன் // Jan 29, 2005 at 1:01 pm

    செல்வா,

    அருமையான அர்த்தமுள்ள கட்டுரை.

    படங்களுக்கும் நன்றி. குழந்தைகளுக்கு என் அன்பு.

  • 7 முத்து // Jan 29, 2005 at 8:01 pm

    //எனக்குத் தெரிந்த இரண்டொரு வீடுகளில் அப்பா என்றால்
    பெல்ட் நினைவு வரும் வீட்டில்த்தான் குழந்தைகள்
    பிரகாசமாய் வளர்ந்திருக்கிறார்கள்//

    மீனா..
    இது சாத்தியம்தான், ஆனால் அந்த அளவுக்கு கண்டிப்பு இல்லையென்று இந்த அளவுக்கு பிரகாசமாய் வந்திருக்கமாட்டார்கள் என்று அர்த்தமில்லையே. அவ்வாறு மிகக் கண்டிப்புடன் இருக்கும் தந்தையர்கள் அதை உணரும்போது காலம் கடந்திருக்கும், ஆனால் என்ன செய்வது..?

    அப்பா அல்லது அம்மா என்று ஒரு மனிதன் தனது 30 வயதில் நினைத்துப் பார்த்தால் வெறும் மரியாதையும், பயமும் மட்டும் வராமல் மனதில் சில்லென்ற பனிக்காற்று வீசி மனதை நெகிழச் செய்யுமானால் அந்தத் தாய் தந்தையும் அக்குழந்தையும் கொடுத்து வைத்தவர்கள். தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும் பிற்காலத்தில் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஒரு போதும் மறக்கவேண்டாம்.