இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

சிக்கு விழுந்த நூல்கண்டும் சிந்தனைகளும்

November 21st, 2004 · 4 Comments

ஏதோ வேலையாகக் கீழ்த்தளத்திற்குச் சென்றபோது, என் வீட்டுக் கண்மணிகள் ஒரு செந்நிற நூல்கண்டை உருவி விளையாடிச் சிக்குப் போட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதைப் பார்த்துவிட்டு தலையை ஆட்டிவிட்டு அகன்றிருக்கலாம். இன்னும் கொஞ்சம் உருவிச் சிக்கிய பாகத்தை வெட்டி எறிந்துவிட்டு எஞ்சியதைச் சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் இன்றைய தேதியில் மனம் வேறு வழியில் சிந்தித்து விட்டது. அந்தச் சிக்குகளை எல்லாம் நீக்கி மீண்டும் சுற்றி வைக்கலாம் வா என்று என்னை அணைத்துக் கொண்டது. அழைத்துச் சென்றது.

சட்டைப் பொத்தான் தைக்க உதவும் சிறு நூல் அல்ல. அதுவாக இருந்தால் அத்தனை சிக்கை நீக்க வெட்டி எறிவதைத் தவிர வேறு வழியில்லை. இது கொஞ்சம் பருமனான நூல். (“ட்வைன் நூல்” என்று சொல்வதைப் போல). ஏதாவது கைவினைக் கலையில் பயன்படுத்த என்று மனைவி வாங்கி வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். “சரி வா” என்று (பெரிய) மகளையும் அழைத்து இருவருமாகச் சிக்குப் பிரிக்க இறங்கினோம். இந்த நடவடிக்கையில் வெளிப்படையாய்த் தெரியாத பலன்கள் இருக்கக் கூடும் என்று நியாயப் படுத்திக் கொண்டேன். அவசரமாய் அங்கும் இங்கும் இழுத்து மேலும் சிக்குச் சேர்க்காமல், பொறுமையும் நளினமும் பயிற்சி கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். தந்தை-மகள் சேர்ந்து செய்யும் ஒரு வேலை என்று ஒரு குழுவுணர்ச்சி எழும்பலாம். “நானும் தான் உதவுவேன்” என்று போட்டி போட்டுக் கொண்டு வந்த சின்னவளின் அன்பு கலந்த பொறாமையுணர்ச்சியை வெளிக்காட்டியதாய் இருக்கலாம். இந்தப் பொருட்களில் விளையாடக் கூடாது என்று மக்களுக்கு எல்லை வகுப்பதாய் அமையலாம். எந்தப் பொருளும் உதாசீனப் படுத்தக் கூடாது என்று எளிமையைப் போதிப்பதாய்க் கூட இருக்கலாம்.

அரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட முக்கால் வாசிச் சிக்குகள் எடுத்து விட்டோம். இப்படித் தான் பெரிய வேலைகளைக் கூடப் படிப்படியாக அணுகிச் செய்ய வேண்டும் என்று படம் காட்டிக் கொண்டு தொடர்ந்தேன். சிறிது நேரத்தில், இனி நானே பார்த்துக் கொள்கிறேன் என்று முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டேன். மீதமிருப்பது சிறு சிறு முடிச்சுக்களாய் இருப்பதால், அவர்களுக்கு அதை எடுப்பது சிரமம். தவிர நானே விரைந்து முடித்துவிட்டு வேறு வேலை செய்யப் போகலாம். ஆனால்…, இங்கு தான் அந்த எண்பது-இருபது விதி சிரித்தது. முதல் எண்பது சதவீத வேலையை இருபது சதவீத நேரத்தில் செய்துவிடலாம். அடுத்த இருபது சதவீத வேலையைச் செய்ய எண்பது சதவீத நேரம் தேவைப்படும் என்பதே அது. அடுத்த இரண்டு மணி நேரங்கள் அந்தச் சிறு முடிச்சுக்களுடன் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால், எடுத்த காரியத்தை முழுமையாய்ச் செய்ய வேண்டும்; தளராத மனம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன். கழுத்து, முதுகு, இடுப்பு வலிகளுடனே பலவித இடம் மாறி மாறி ஒரு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தேன். முடிச்சவிழ்க்கப் பெருவிரல் நகம் பட்டு ஆள்காட்டி விரல் காய்ந்து பழுத்து அழுகைக்கு மாற ஆரம்பித்தது. வெட்டி எறிந்து விட்டுப் போகலாமா (விரலை அல்ல, நூலை!) என்று இடையில் பலமுறை சாத்தான் வேதம் ஓதிக் கொண்டிருந்தது. இடையில் எப்போதோ மகள்கள் விளையாடப் போய் விட்டார்கள். முழங்காலிலும், பெருவிரலிலும், கைவிரல்களிலும் பல முனைகளைப் பிரித்து மாட்டிக் கொண்டு, இன்னும் வெளிப்பட்ட ஒரு முனையை வாயில் கவ்விக் கொண்டு ஒரு விதமாய்த் தான் இருந்திருப்பேன். சில ஆங்கிலப் படங்களில் பார்த்த ஆட்டிஸ்டிக் (autistic) குழந்தைகள் நினைவுக்கு வந்தன.

ஆயிற்று. இன்னும் இந்த ஒரு சிக்குக் கும்பலைப் பிரித்து விட்டால் முழு வெற்றி. அட, நெருங்க நெருங்க சிக்குப் பெரும் சிக்கலாய் இருக்கிறதே! அந்த ஒரு இறுதிச் சிக்கை நீக்கப் பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தேன். “வெட்டி எறி, வெட்டி எறி” என்று ஒரு புறம் மனக்குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் இருந்த பொறுமையை உதறி விடாதே என்று ஒரு உறுதியோடு அதைக் கேட்காமல் இருந்தேன். பல முறை, இதோ முடிந்தது என்று தோன்றும் நிலை ஏற்பட்டாலும், மீண்டும் மீண்டும் சிக்கிக் கொண்டே இருந்தது. மூன்றரை மணி நேரத்தைத் தாண்டிய ஒரு பலவீனமான நேரத்தில் படக்கென்று இழுத்துவிட்டேன்!

நிற்க. முழுவதுமாய்ப் பிரிக்க வேண்டும் என்று முதலில் எண்ணிய குறிக்கோளில் தோல்வி தான். ஆனால், அவ்வளவு நேரத்திற்குப் பிறகு, இனியும் நேரம் செலவு செய்வது பெரும் பயனைத் தராது என்று தோன்ற வெட்டி விட்டுச் சுருட்டி வைத்தேன். வேலையைச் செய்து முடித்தேன் என்பது ஒரு வெற்றியா? இதை முதலிலேயே செய்திருக்கலாமே – பொன்னான நேரம் வீண் என்னும் நிலையில் இது ஒரு இழப்பா? இல்லை, இது ஒரு அனுபவமாய், மனதோடு ஒரு உரையாடலாய், சுயசோதனை வாய்ப்பாய் ஒரு வரவா?

வெற்றியா? தோல்வியா? இழப்பா? வரவா? பாதி நிறைந்த தண்ணீர்க்குவளை என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

Tags: கண்மணிகள் · வாழ்க்கை

4 responses so far ↓

  • 1 Yosippavar // Nov 21, 2004 at 9:11 am

    Oru niRaivaana Sirukathai paditha anubavam.

  • 2 செல்வராஜ் // Nov 21, 2004 at 1:11 pm

    யோசிப்பவரே, கிண்டல் பண்ணாதீங்கன்னு சொல்லலாமென்று நினைத்தேன். மறுபார்வையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு சிறுகதை போலவே செய்திருக்கலாம் என்று தோன்றியது. நன்றி.

  • 3 தங்கமணி // Nov 21, 2004 at 2:11 pm

    ஒரு சின்ன நூல்கண்டா உங்களை 3 மணிநேரம் சிறைப்படுத்தியது? 🙂

  • 4 வாசன் // Nov 26, 2004 at 4:11 pm

    நண்பர் செல்வராஜ்:

    பொறுமைக்கு இலக்கணம் என்ற பெயரில் நீங்கள் இதைத் தொடராக தொடரலாம்.நன்றி.

    நான் முன்னர் செய்து வந்த வெள்ளி நகை தொழிலில், 1 1/2 / 2மி.மீ வெள்ளி சங்கிலியுடன் இது போன்ற இக்கட்டு பல்லாண்டுகள் தொடர்ந்தது.வருடக் கடைசியில் மீந்து போகும் சிறு தூண்டுகளை உருக்கி மோதிரக் கூடுகள் (shanks) செய்யும் போது,பின்னி பிணைந்த பல சிக்கற்சங்கிலிகளையும் அவற்றுடன் சேர்ந்து உருக்கவேண்டிவரும்…ம்ம்