இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கண்கள் சொல்லும் கதை – 5

May 27th, 2004 · 2 Comments

“என் கண்களுக்கு லேசர் சிகிச்சை பண்ணிக்கலாம்னு இருக்கேன்!” – பாதி யோசனையும் பாதி முடிவுமாகவும் கூறினேன். ஐந்து மாதங்களுக்கு முன் ஒருநாள் ஊருக்குச் சென்றிருந்தபோது, மனைவி, அம்மா மற்றும் பிறரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஒரு அமைதியான நேரத்தில் தான் இப்படி ஒரு பிரகடனம் செய்தேன்.மெல்ல என்னை ஏறிட்டுப் பார்த்தனர். இவன் உண்மையாகச் சொல்கிறானா,இல்லை விளையாடுகிறானா என்று தீர்மானிக்க முனைந்தவர்கள் போலிருந்தது.

கண்ணுள்ளாடியை விட்டுவிட்டு இரண்டாவது இன்னிங்ஸாக மீண்டும் கண்ணாடி அணிய ஆரம்பித்தும் ஒரு நாலரை வருடங்கள் ஓடி இருந்தது.

“அது என்ன ஏதுன்னு பாத்து, பண்றம்னா பண்ணிக்கப்பா, சும்மா பண்றேன் பண்றேன்னு பேசிக்கிட்டுக் காலத்தக் கழிக்காதே”, என்றார் அம்மா. லேசர் சிகிச்சை முறை பற்றிய அறிவு பொதுவாக ஊரில் காதுவழிச் செய்தியாகப் பரவி என் அம்மா வரையும் நீண்டிருந்தது.


“அதான் எடயங்காட்டு வலசு ரச்சுமி கூட ஆறு மாசத்துக்கு முன்னாடி பண்ணிக்கிட்டான்னு சொன்னாங்க. அப்புறம் அந்த டாக்டரு பொண்ணு பண்ணிக்கிச்சாம். எல்லாம் கோயமுத்தூருல தான் போயிப் பண்ணிக்கிட்டு வந்தாங்கன்னு சொன்னாங்க. இப்பல்லாம் நெறயப் பண்றாங்களாட்டருக்குது”

நான்கு வருடங்களுக்கு முன் அப்பாவின் கண் புரை அறுவை சிகிச்சைக்குக் கோவை அரவிந்தர் கண் மருத்துவமனை சென்றிருந்தபோது, அப்போதே அங்கு லேசிக் எனும் லேசர் சிகிச்சை செய்வதாய் எழுதி வைத்திருந்தார்கள். அப்போதும் செய்து கொள்ளலாமா என்று ஒரு சிறு யோசனைக்குப் பின், திரும்பி அமெரிக்கா செல்ல இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது என்று வேண்டாம் என்று தீர்மானித்து வந்துவிட்டேன். தவிர அப்போது அந்தச் சிகிச்சை செய்யும் அனுபவம் அங்கே எவ்வளவு இருக்கிறது, வெற்றி வாய்ப்புக்கள் என்ன என்று எதுவும் தெரியாத ஆரம்ப காலம்.

“நானும் பண்ணிக்கிங்கன்னு தாங்க அத்தை சொல்றேன். இவங்க ரொம்ப நாளா சும்மா இப்படியே சொல்லிக்கிட்டுத் தான் இருக்காங்க”. மனைவியின் ஆதரவுக் கொடியும் உயர்ந்தது. பல காலமாய் என் புலம்பல்களைக் கேட்க நேர்ந்த அவரது அனுபவம் அப்படி வெளிப்பட்டது என்று நினைக்கிறேன்.

லேசர் சிகிச்சை முறை பரவலாகாத பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்தே கண் அறுவை சிகிச்சை முறைகள் மீதும், அவற்றின் சாத்தியங்கள் மீதும் எனக்கு ஆர்வம் இருந்தது. தொண்ணூறுகளில் “RK” எனப்படும் “ரேடியல் கெரட்டாட்டமி” என்னும் சிகிச்சை முறை தான் சற்றே பிரபலமாக இருந்த ஒன்று. இந்த முறையானது கண் விழியைச் சுற்றி ஒரு வைரக் கத்தியால் ஏழெட்டு வெட்டுக்கள் வெட்டி, கண் விழியை வடிவமைத்துப் பார்வையைச் சரி செய்யும் முறை. முதலில் ரஷ்யாவில் (அறுபது எழுபதுகளில்) கண்டுபிடிக்கப் பட்ட இம்முறை அமெரிக்காவிலும் பரவலாகிக் கொண்டு வந்தாலும், அதில் சில சிக்கல்கள் இருந்தன.

முதலில், சற்றே ஆழமாக வெட்டுவதால், குணமாகும் காலம் ஒவ்வொருத்தரைப் பொருத்து வேறுபடலாம். காயம் ஆழமாகும் போது பார்வைக்கே பங்கம் விளையலாம். அப்புறம், “உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” என்று போக வேண்டியது தான். பிறகு, அதன் பயன் ஒரு குறிப்பிட்ட அளவு பார்வைக் குறைவு இருப்பவர்களுக்கு மட்டும் தான் சிறப்பாக இருக்கும். மற்றவர்க்கு முன்னேற்றம் இருக்கலாம், ஆனால் முழுதும் சரியாகி விடாத சாத்தியமும் இருந்தது. தவிர, முதலில் முன்னேற்றம் இருப்பது போல் இருந்தாலும், பிறகு காலப்போக்கில் அந்த நிலையில் பின்னடைவு ஏற்படலாம் என்றும் சிலரால் சந்தேகிக்கப் பட்டது.

எல்லாவற்றிற்கும் மேல், முக்கியமாய், ஒரு கண்ணுக்குத் தலா இரண்டாயிரம் வீதம் மொத்தம் நாலாயிரம் டாலர் வரை சிகிச்சைக் கட்டணம் தேவைப்படும். இன்சூரன்சுக் காப்பீட்டுத் திட்டங்கள் இந்தச் செலவை ஏற்றுக் கொள்ளா என்று தெளிவாகக் குறிப்பிட்டு விடவே, நான் காத்திருந்தேன் – சிகிச்சை முறைகளில் இன்னும் வளர்ச்சி ஏற்படவும், செலவு குறையவும், மற்றும்/அல்லது இன்சூரன்சுக் காரர்கள் இந்தச் செலவை ஏற்றுக் கொள்ளவும்.

காலப்போக்கில் RK போய் “PRK” என்னும் “ஃபோட்டோ ரிஃப்ரேக்டிவ் கெரட்டாட்டமி” என்னும் முறை வந்தது. முதன் முதலில் “எக்ஸைமர் லேசர்” என்னும் குளிர்ந்த லேசரைக் கண் சிகிச்சைப் பணிக்கு அமர்த்திய முறை இது. இந்த முறையும் கண்ணின் கருவிழி வடிவை மாற்றி அமைப்பது தான். ஆனால், வைரக்கத்தி வெட்டுக்குப் பதிலாக, லேசர் உபயோகித்து விழியின் மேல்புறம் உள்ள தோலின் திசுக்களைக் கொஞ்சம் சுரண்டி, லேசர் பாய்ச்சி வடிவமைப்பது. RK போல் ஆழ வெட்டுக்கள் இங்கு இல்லாததால், சிகிச்சைக் குறைபாடு பற்றிய பயம் கொஞ்சம் குறைவு. அதை விடப் பார்வையைச் சீரமைப்பதிலும் PRK சிறப்பாய் இருந்தது.

இதிலும் சில சிக்கல்கள். லேசர் சிகிச்சை செய்யப்பட்ட விழியின் மேல்புறம் வெளிப்படையாய் ஒரு அரண் இன்றிக் கிடக்கும். புண் ஆறும் வரை பத்திரமாய் இருக்க வேண்டும். அதற்கு சில சமயம் ஒரு பாதுகாப்புக்கு என்று சில நாட்களுக்கு உள்ளாடி போட்டு விடுவார்கள். தவிர, சிகிச்சைக் கட்டணம் குறைந்ததே தவிர, இன்னும் கண்ணுக்கு ஆயிரம் வீதம் இரண்டாயிரமோ அதற்கும் மேலோ ஆகும் போலிருந்தது.

வருடங்களின் ஓட்டத்துடன் வளர்கின்ற எல்லாத் தொழில் நுட்பங்களும் போலே இந்தக் கண் சிகிச்சை முறையிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. தற்போது பரவலாய் இருப்பது “லேசிக்” எனப்படும் Laser in-Situ Keratomileusis முறை. இந்த முறையிலும் PRK போலவே எக்ஸைமர் லேசர் பாவித்து கருவிழியை வடிவமைப்பது தான். ஆனால், விழியின் மேற்புறம் லேசரைப் பாய்ச்சாமல், கருவிழியின் மேலே நுங்கு சீவுவதைப் போலக் கொஞ்சம் சீவி, உள்பகுதியில் லேசரைப் பாய்ச்சுவார்கள். முழுவதும் சீவி விடமாட்டார்கள். ஒரு ஓரத்தில் தொடுத்துக் கொண்டு இருக்கும். சீவிய அந்த விழியின் மேல்பகுதியை, சில நிமிடங்கள் லேசர் பாய்ச்சிய பிறகு, பழைய படியே மூடி விடுவார்கள்.

lasik-flap.png மனிதனின் கருவிழி அபாரமான ஒரு சமாச்சாரம். வெட்டி லேசர் பாய்ச்சிப் பின் மூடிய பிறகு அது தானாகவே ஒட்டிக் கொள்ள ஆரம்பித்து விடும். இரண்டொரு நாட்களில் நன்றாக ஒட்டிக் கொண்டு பழைய மாதிரியே ஆகிவிடுமாம். (இதை எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள்?). அதற்கென்று மருந்தோ, தையலோ, எதுவும் கிடையாது. அதோடு லேசர் பாய்ச்சிய பகுதி உள்புறமாய் விழியின் அரணுக்குள்ளே பத்திரமாய் இருக்கும்.

சிகிச்சைக் கட்டணம் மட்டும் அமெரிக்காவில் பெரிதாய்க் குறையவில்லை. என்றாலும், எல்லா வியாபார உத்திகளும் இதிலும் தோன்ற ஆரம்பித்தன. ஒரு கண்ணுக்குப் பண்ணிக் கொண்டால் இன்னொன்று இலவசம் என்றும், இந்த மாதத்திற்குள் செய்துகொண்டால் கண்ணுக்கு முன்னூறு டாலர் தான் என்றும் விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. அவற்றைப் பற்றி யோசித்தாலும் சற்றே பயமாய் இருந்தது. ஒருமுறை வருடாந்திரப் பரிசோதனைக்கு ஒரு மருத்துவரிடம் போயிருந்த போது லேசிக் பற்றி விசாரிக்க, அவரோ தாம் சொல்லும் இடத்திற்குப் போய்ச் செய்து கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார். பாவம், அவருக்கு எதாவது கசர் (கமிஷன்) கிடைக்குமாயிருக்கும்.

“ஏங்க இந்த முன்னூறு டாலருக்குப் பண்ணி விடுறேன்னு சொல்றாங்களே ! நீங்க சொல்ற இடம் போனா இரண்டாயிரமாகுமே”

“தம்பீ உன் கண்ணு. நீதான் பத்திரமா இருக்கணும். அவனுங்க எல்லாம் நான் நிறைய கேஸ் பண்ணியிருக்கேன்னு விளம்பரப் படுத்திக்கறதுக்காக இப்படி விலை குறைவா செய்வாங்க. அனுபவம் கம்மியான ஆளுங்க”

எல்லோரும் அவரவர் தொழிலைப் பற்றி அலட்டிக் கொண்ட அளவிற்கு நம் கண்ணைப் பற்றிக் கவலைப் படமாட்டார்கள் போலிருக்கிறது என்று சரி இப்போதைக்கு வேண்டாம் என்று மனமூலை ஒன்றில் லேசிக்கைத் தள்ளி வைத்துவிட்டேன்.

ஆனால், இந்த வலைப்பதிவு உலகத்திலேயே ஒரு நாள் லேசிக் பற்றிப் படிக்க நேர்ந்தது. தேனீ எழுத்துரு புகழ் உமர் தனது பதிவில் எழுதி இருந்ததைப் படித்துவிட்டு இந்த எண்ணம் மீண்டும் மூலையில் இருந்து மையத்திற்கு வந்து துளிர் விட ஆரம்பித்தது.

ஆறு வார விடுப்பில் இம்முறை இந்தியா சென்றிருக்க, அட அங்கேயே செய்து கொள்ளலாமே என்று எண்ணம் வளரத் தொடங்கியது. (ஒரு மாத காலமாவது கண்டிப்பாக வேண்டும்). இந்த ஊர் மருத்துவர்களை விட நம்ம ஊர் மருத்துவர்களை நம்பலாமே.

ஊரில் என்னைப் பார்க்க வந்த பள்ளி நண்பன் ஒருவன் “ஏண்டா நீ இன்னும் லேசர் செய்துக்கலையா?” என்று கேட்டதும், ஆனந்த விகடனில் லேசிக் பற்றிய ஒரு கட்டுரை படித்ததும், அம்மா சொன்ன ரச்சுமி (லட்சுமி) வந்து, “ஏனுங் மச்சான் – நானெல்லாம் லேசிக் பண்ணிக்கிட்டு இப்போல்லாம் கண்ணாடியே போடறதில்ல. நீங்க ஏன் இன்னும் கண்ணாடி போட்டுக்கிட்டுருக்கீங்க ?” என்றதும் எனது எண்ணத்தை மேலும் கிளறி விட, பல ஆண்டுகளாய் என்னுள் முடங்கிக் கிடந்த உள்ளக் கிடக்கையை வெளியே எடுத்து அசை போட்டபடி,

“என் கண்களுக்கு லேசர் சிகிச்சை பண்ணிக்கலாம்னு இருக்கேன் !” – பாதி யோசனையும் பாதி முடிவுமாகவும் கூறினேன்.

-(தொடரும்)

கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, கதை-6, கதை-7, கதை-8, கதை-9

Tags: வாழ்க்கை

2 responses so far ↓

  • 1 sundaravadivel // May 28, 2004 at 6:05 pm

    கொஞ்சம் “வேலை” கூடிப் போச்சா, இந்தப் பக்கம் வர முடியலை:)
    கதை ஜோராப் போகுது. இந்தப் பாதி யோசனையும், பாதி முடிவு(யு)மா இருக்க மாதிரி ஒரு படம் போட்டிருக்கலாமே:)

  • 2 Dubukku // Jun 2, 2004 at 7:06 am

    கொஞ்சம் “வேலை” கூடிப் போச்சா, இந்தப் பக்கம் வர முடியலை:)
    கதை ஜோராப் போகுது. இந்தப் பாதி யோசனையும், பாதி முடிவு(யு)மா இருக்க மாதிரி ஒரு படம் போட்டிருக்கலாமே:)

    thanks sundaravadivel 🙂