இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

அச்சுதன் கவிதையும் எதிர்வினைகளும்

May 17th, 2004 · 23 Comments

சுந்தரவடிவேல் எழுதியிருந்த அச்சுத வாய் ரோகம் கவிதை சில காட்டமானஎதிர்வினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் படித்த போது”நல்ல கவிதை- வித்தியாசமா யோசிக்கிறீங்க” என்று நான் ஒரு வரிக் கருத்து மட்டுமே சொல்லி இருந்தேன். ஆனால், இந்தக் கவிதையில் அவசியமற்றநம்பிக்கைத் தகர்வும் அழகுணர்ச்சியும் (குறைவும்) இருப்பதாய் பத்ரி கருத்துத் தெரிவித்திருந்ததில் மீண்டும் சென்று கவிதையையும், கவிஞரின் மறுமொழியையும் படித்தேன். எனது விரிவானகருத்துக்கள் கீழே.

“நல்ல கவிதை. வித்தியாசமா யோசிக்கிறீங்க” என்று முதலில் கூறியதை மாற்றமின்றிஇன்னும் சொல்வேன். சற்றே கொச்சையாய் இருந்த சில வரிகள் ஒரு அதிர்வைத் தந்தது உண்மை தான். ஆனால் அது கவிஞனின் ஒரு கற்பனை. உரிமை. எழுத்து உத்தி. டயோனிசம் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், கையாண்டிருக்கும்கற்பனை அரைகுறையாய் இல்லாமல் முழுமையாய் இருந்தது என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது.


முதலில், அழகியல் (அப்படின்னா என்ன?) அல்லது அழகுணர்ச்சி. வாழ்க்கை என்பது ஒன்று தான். ஆனால் அது பார்ப்பவர்களின் கண்களைப் பொருத்து வேறு வேறு விதமாய்த் தெரிகிறது. அவரவர் அனுபவம், பின்னணி, எண்ண ஓட்டம், இவற்றைச் சாயங்களாகக் கொண்டு அமைக்கப் பட்ட அவரவர் சாளரத்தின் வழியாய்ப் பார்க்கும் போது வேறு வேறு கிளர்ச்சிகள் உண்டாகிறது. அது போலத் தான் இந்தக் கவிதையில் அழகுணர்ச்சி இருக்கிறதா இல்லையா என்பதும். இப்படி ஒரு தளத்தில், இந்த விஷயங்களைக் கலந்து, இப்படியான உவம உருவகங்களைப் பயன்படுத்தி இருக்கத் தான் வேண்டுமா என்பதற்கான பதிலும் அப்படித் தான் வேறு படுகிறது.

இரண்டாவது, நம்பிக்கைத் தகர்வு. இந்தக் கவிதை இறை நம்பிக்கையையோ, மத நம்பிக்கையையோ தாக்கும் விதமாய் அமைந்திருக்கிறது என்கிற எண்ணம் தான் பிரதானமாய் எங்கோ உறுத்தி இருக்கிறது. சுந்தரவடிவேல் தனது மறுமொழியில் நம்பிக்கைத் தகர்வை இருவகைப் படுத்தி, சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வு சார்ந்த நம்பிக்கைகள் தகர்ந்து போகும்போது யாரும் பெரிதாய்க் கண்டு கொள்ளாதிருப்பதும், ஆனால், ஒரு சாராரின் மத நம்பிக்கைகள் தகரும் போது ஆரவாரமாய் எதிர்வினைகள் தோன்றுவதும் இயல்பாய் இருக்கிறது என்று எழுதி இருக்கிறார். அது எதிர்வினைக்கு அவரின் மறுமொழி என்று கொள்கிறேன். ஆனால், வாதத்தை விட்டுவிட்டுக் கவிதைக்குள் வருவோமானால், முதலில் இங்கே எந்த வகையிலும் கடவுள் நம்பிக்கைத் தகர்வு ஏற்படுத்தப் பட்டிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.

கடவுள் புனிதமானவன். அவனை இத்தகைய உருவகங்களில் வைக்கக் கூடாது என்று சிலர் எண்ணலாம். ஆனால் சக்தி வாய்ந்த சித்தாந்தங்கள் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பரிசோதனைக்கு ஆளாவது இயற்கை தான். நம்பிக்கையும் பயபக்தியும் இருப்பவர்கள் தங்கள் புனித எண்ணங்களை இப்படிப் பரிசோதிப்பவர்களின் மீது திணிப்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அப்படியான எதிர்பார்ப்பை வேண்டுமானால் இந்தக் கவிதை தகர்த்திருக்கலாம்.

இது ஒரு வித்தியாசமான சிந்தனை. திருமால் வாயைத் திறந்து காட்டியபோது உலகம் தெரிந்தது என்பது புராணம். ஆனால் அந்த உலகத்தின் உயர்ந்த கோபுரங்கள் இடித்து (அல்லது விமானம் மோதி வெடித்து) அவரின் மேலன்னம் காயமுறுவதாகவும், அங்கே உலகத் துயர்களால், சண்டைகளால், வெட்டு குத்துக்களால் வழிந்த குருதிகளால், குண்டுப் புகைகளால், அந்தப் புண் சீழ் பிடித்து வலியை உண்டாக்குவதுமான கற்பனை புத்திசாலித் தனமானது. புராணத்தோடு தனது கற்பனையையும் தற்குறிப்பேற்றத்தையும் கையாள்கிறார். இவ்வுலகின் பிரச்சினைகளை உலகோடு மொத்தமாக அழித்து விட்டு, (அப்படியே தன் வாய் வலியையும் சரி செய்து கொள்ளலாம்), புதியதாய் ஒரு உலகம் சமைக்கலாம் என்று எண்ணுகிறார். அதற்கு சக்தி தந்துகொண்டிருக்கிற எரிகின்ற விண்மீன்களையும் (சூரியனையும்) அணைக்க வேண்டும். எரியும் நெருப்பை நீர் ஊற்றி அணைப்பது போல, இங்கே தான் பள்ளி கொண்டிருக்கும் ஒரு கடலின் நீரை எடுத்து வாய்க்குள் இட்டு அணைக்கலாம் என்பது மீண்டும் ஒரு அழகான கையாடல். அதே கற்பனையின் தொடர்ச்சி.

வாய்க்குள் இருக்கிற உலகில் தான் பிரச்சினை என்றால், அதைத் தீர்க்க எண்ணி எடுத்த நீரிலும் பிரச்சினை. இங்கு தான் ஈழம் உள்ளே வருகிறது. காத்தல் தொழிலின் கடவுளால் கூட எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை. எங்கே திரும்பினாலும் தப்பிக்க முடியாத, மாற்ற முடியாத ஒரு அவல நிலைமையில் காப்பவனுக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் நாரணன் தானும் ஒரு சாதாரணனாய் (ஒரு விரக்தி நிலையில்) பிரச்சினைகளை மறந்து தன் இல்லத்தாளுடன் கூடித் தூங்கப் போகிறான்.

கடவுளாலும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் தானே இங்கே மையக் கருத்தாய் இருக்கிறது ! புராணமும் கடவுளும் பற்றிய கருத்துக்களை ஆதரிக்கவும் இல்லாமல் எதிர்க்கவும் இல்லாமல் நடுநிலையில் அமைந்திருக்கிறது கவிதை. அதனால் இங்கே கடவுள்/திருமால்/மத நம்பிக்கைகளைக் கேலியோ, கிண்டலோ, செய்திருப்பதாகவோ, அந்த நம்பிக்கைகளைத் தகர்ப்பதாகவோ இருக்கிறது என்பது ஏற்கக் கூடியதல்ல.

மூன்றாவது, ஈழ நிகழ்வுகளின் தாக்கம். பொதுவாகவே சுந்தரவடிவேலுவின் எழுத்துக்களில் ஈழப் பிரச்சினைத் தாக்கம் நிறைய இருக்கிறது என்றாலும், இந்தக் கவிதையைப் பொருத்தவரை பொதுவான உலகப் பிரச்சினைகளைத் தான் மையமாக வைத்து எழுதி இருக்கிறார். அந்தப் பொதுப் பிரச்சினைகளில் ஒன்றாய் ஈழம் இவருக்கு ஒரு முக்கிய இடத்தில் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பெரிதாய்த் தோன்றுகிறது. சிலருக்குச் சோனியா பிரதமராவது முக்கிய பிரச்சினை. சிலருக்கு ஜக்குபாய் நின்று போனது. சிலருக்கு ஈராக். இப்படி. இவருக்கோ தன் இனமும், அதற்கு ஏற்பட்ட இழப்புக்களும், குமுதினிப் படகுக் கொலைகளும்.

மேலும், தனது பின்குறிப்பிலும், மறுமொழிகளிலும், இவர் தெளிவாக ‘இது ஈழம் பற்றிய கவிதை அல்ல, பொதுவாக உலகத்தில் இருக்கும் எல்லாச் சண்டை, மனித உரிமை மீறல்கள் இவற்றையெல்லாம் சாடுவது’, என்று பலமுறை வலியுறுத்திக் கூறியும் பத்ரியும் மறுமொழியில் வெங்கட்டும் கூட இந்தக் கவிதைக்கு மூலக் கரு ஈழப் பிரச்சினைச் சாடல் தானே – ஏன் கடவுளைக் கொண்டு வந்தாய்? என்று பிறழ்ந்த பார்வையிலேயே பார்ப்பது ஏன் என்று தெரியவில்லை.

கார்த்திக்ராமாஸ் சொல்வது போல் இது ஒரு கவிதை , கவிதை மட்டுமே. ஆனால் அவரும் கூட, இந்த உலகை நாரணந்தான் படைத்தான் என்பதை இந்தக் கவிதை ஏற்றுக் கொள்வது போல் தெரிகிறது என்றாற் போல் எழுதி இருக்கிறார். நான் அப்படிப் பார்க்கவில்லை. அப்படி ஒரு கருத்து/புராணம் இருப்பதை இந்தக் கவிதை பயன்படுத்திக் கொள்கிறதே தவிர அதனை ஏற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ இல்லை ! கடவுள் நம்பிக்கையைப் பற்றிய எந்தக் கருத்தையும் வைப்பதில் ஆர்வமும் இங்கே கவிஞருக்கு இல்லை என்றே எண்ணுகிறேன்.

Tags: இலக்கியம் · சமூகம்

23 responses so far ↓

  • 1 Thangamani // May 18, 2004 at 1:05 am

    உங்களனின் இந்த புரிதலோடு நான் முழுதும் உடன்படுகிறேன் செல்வராஜ். இது ஈழப்பிரச்சனை குறித்து மட்டுமல்ல, கடவுள் பற்றிய பொதுக்கருத்தின் தோல்வி பற்றியது. இது பற்றிய நீண்ட கேள்வி, கேலி, விமர்சனம் போன்றவை நானறிந்த வரையில், திருவள்ளுவர் தொடங்கி, சித்தர் பாடல்கள் என்று தமிழில் நீளுகிறது. ஆனாலும் பிரச்சனைகளைத் தீர்க்கும் கடவுள் இன்னுமிருக்கிறார். அப்பாவி மக்கள் தடாவில் கைதுசெய்யப்பட்டு 8 வருடங்கள் (வீரப்பன காட்டில்) கொடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்ட பொழுதும் அரசையும், ஜனநாயகத்தையும் புனிதப் பசுவாக பார்ப்பது போல. இதில் பத்ரியும், வெங்கட்டும் இதை தவறாக புரிந்துகொள்ளக்கூடாதென நான் விரும்புகிறேன். மிக்க நன்றி செல்வராஜ்.

  • 2 sundaravadivel // May 18, 2004 at 7:05 am

    செல்வராஜ், அந்தக் கவிதையின் மனோநிலையைச் சரியாய்ப் புரிந்தமைக்கும், இந்த விளக்கத்துக்கும் நன்றி.

  • 3 Pari // May 18, 2004 at 12:05 pm

    புராணங்களை புராணங்களாகவே மட்டும் பார்த்தால் பிரச்சினையேதும் இருக்காது.

  • 4 karthikramas // May 18, 2004 at 12:05 pm

    அன்புள்ள செல்வராஜ்,
    உங்கள் நீண்ட பதிவுக்கு நன்றி. நான் கூட முதலில் உங்கள் ஒற்றை வரி மறுமொழியைப் பார்த்து , என்னடா, மனிதர் மென்மையாய் பேசிவிட்டு போய்விட்டாரே என்று நினைத்தேன்.
    பின்பு நம்ம பெயரிலி லேசாய் ஜகா வாங்கியவுடன் நானும் கொஞசம் கவனம் குவித்தேன்.

    னீங்கள் சொன்ன அத்தனையையும் நானும் கவிதையில் பார்த்தேன். மிகவும் ரசிக்கவும் செய்தேன்.
    னீங்கள் சொன்ன ஒன்று மட்டும் ஒரு 2 வரி குறிப்பு சொல்ல விழைகிறேன். நான், கவிதை நாரணந்தான் படைத்தான் என்று கவிதை ஏற்றுக் கொள்வதாய், எழுதியிருந்தால் , அதை நான் பிடித்த இன்னொரு குரங்காய் எடுத்துக் கொள்ளுங்கள்(பிள்ளையாரை இப்போதைக்கு தவிர்ப்போம் ..:-)).

    நான் சொல்ல வந்தது,
    இதே கவிதையை கடவுள் ஏற்பாளர் எழுதுவது கடினம். ஏன்? நீங்கள் சொன்னது போல் அதிர்ச்சி தரும் சில வரிகள் கடவுள் ஏற்பாளரின் நம்பிக்கை எல்லையில் நுழைய வாய்ப்புள்ளது.
    அந்த எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து விடுவோமெனில், கவிஞரை கடவுள் மறுப்பாளராய் காணவும் வாய்ப்புள்ளது.
    ஒரு கடவுள் மறுப்பாளர் இந்தக் கவிதையை எழுதுமிடத்தில் (இந்த இடத்தில் கவிஞர், சு.வ அல்ல)
    அவரது நம்பிக்கை மறுப்புக்கும், நாரணன் வாயில் உலகம் தெரிகிறது என்ற கவிதைவரிகள் முரணாய் இருக்கும் என்பதை சொல்ல வந்தேன்.அவ்வெல்லைக் கோடு எங்கு சஞ்சரிக்கிறது என்பதுதான் இங்கு அனைவரின் பார்வை எழுப்பும் கேள்வியாகிறது.
    எனவேதான் அக்கவிதை குறித்துக் குறிப்பு எழுதுவதைத் தவிர்த்தேன்.
    தங்க மணி சொல்வது போல் , அவ்வெல்லைக் கோட்டை குறித்து எழுதி நாம் மதிப்பவர்களிடம் தவறான புரிதலைத் தரும் அபாயத்தை தவிர்க்கவேண்டும் என்றே நானும் நினைக்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவின் சுட்டியையும், பின் தொடர்தலையும் எனக்குள் இருக்கும் சோம்பேறி அனுமதித்தவுடன் செய்துவிடுகிறேன்.. :-))

  • 5 -/இரமணிதரன், க. // May 18, 2004 at 2:05 pm

    /பின்பு நம்ம பெயரிலி லேசாய் ஜகா வாங்கியவுடன்/
    «Ð ºÃ¢! 🙂
    “²ü¸É§Å ¾í¸Á½¢Ôõ Íó¾ÃÅʧÅÖõ ±ýÉ ±Ø¾¢É¡Öõ, ¾¨Ä¡ðθ¢È¡ý” ±ý¸¢È Á¡¾¢Ã¢, §º¡üÚ째¡ô¨À¢§Ä ¸¡¸õ ±îºõ§À¡ð¼ÐÁ¡¾¢Ã¢, ¡áÅРá̧¸Ð «Å÷¸û À¢ýëð¼ò¾¢§Ä ¯û§Ç ÒÌóÐ “LTTE” ¦¾¡ÎôÒ ¦¸¡ÎòÐÅ¢ðÎô§À¡öÅ¢Îõ. Óýɡʧ ¦ÀÂâĢìÌ ´Õ ¦¾¡Ì¾¢ anti¯õ ´Õ ¦¾¡Ì¾¢ pro ¯õ ¦¸¡ÎòÐô §À¡„¡ì¸¢¨Éò ¾ó¾¢Õ츢ýÈ¡÷¸û. «¾¢§Ä þó¾ anti-brahminism ±ýÀÐõ «¼íÌõ. þí§¸ ¦ÀÂâĢ §Å§È ¸¼×û þøġá «øġá ±ýÚ §Â¡º¢ì¸¡Á§Ä §À¡¸¢È ¬¦ÇýÚ ¦º¡øĢŢ𼾡ø, «Ð§ÅÚ º¢ì¸ø. ƒ¸¡ Å¡í̸¢È¾¢ø¨Ä ¸¡÷ò¾¢ìÌò¾õÀ¢. Íó¾Ã§Åø ¦º¡ýÉÐìÌ, “§À‰ §À‰ ¿ýÉ¡ÕìÌ; «ºø «î;ì¸Å¢¨¾¾¡ý” ±ýÈ¢Õó¾¡ø, Íó¾Ã§ÅÖÅ¢ý ±¾¢÷Å¢Á÷º¸÷¸ÙìÌ «î;§Ã¡Î µ÷ ¯ÕìÌîÍò¾¢ÂÖõ ¦¸¡Îò¾¾¡¸¢ô§À¡Â¢ÕìÌõ. ¸¡¦Ã켨ç ÒâïÍì¸¢È£í¸ þø¨Ä§Â 🙂

    [¿¢ü¸ Íó¾Ã§ÅÖÅ¢ý ¸Å¢¨¾Â¢ý «Æ̽÷× ÀüÈ¢ÂÐ ´Õ ÒÈÁ¢Õì¸ðÎõ; ¬É¡ø, «Ð ¸¢ð¼ò¾ð¼ ¯¨Ã¿¨¼¨Âò ¦¾¡ðÎÅ¢Îõ àÃò¾¢§Ä ÅóÐŢ𼾡¸ µ÷ ¯½÷×]

  • 6 -/இரமணிதரன், க. // May 18, 2004 at 2:05 pm

    சம்பந்தப்படாமல் ஒரு விடயம்; எல்லாம் சரிதான்; பிராமணர்களுக்கு எதிரானதென்பதற்கு பிராமணத்துக்கு எதிரானது என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றதென்பதினைக் கண்டு கொள்ளாமலே நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். anti-brahmin & anti-brahminism இரண்டும் வேறானவை அல்லவா?

  • 7 karthikramas // May 18, 2004 at 3:05 pm

    அண்ணாச்சி,
    மொச புடிக்கிற நாய மூஞ்சிய பாத்தா தெரியும்பாங்க 🙂
    இந்த ப்ரோ- ஆன்டி – பட்டத்துக்கு பயப்படற ஆளா நீங்க ?? கதை அற்புதம்.. ஆஸ்காருக்கு அனுப்புங்க 🙂
    ஏன் 100 அடிச்சீங்களே ராகு கேதுவோட பத்தாதா? பாருங்க இப்பவே ஒரு சுல்தான் ரமணி -கார்த்திக் கட்சி கட்டிட்டுப் போயிட்டாரு, எனக்கு ஒன்னுதான் புரியல நானும் நீங்களும் எப்ப ஒரு விஷியத்துல ஒத்துப் போனோம். நரேசு அம்பி என்னடான்னா , நான் ரோசாவின் டியர் பிரண்டுன்னு சொல்லிட்டு போயிருக்கார். ஒரு முறை வலைப்பூவில ஐயப்பபூசை செய்யும்போது ஒரு நண்பர்
    அரை லூசுன்னு சொன்னார். சுவாரஸ்யமாய்த்தான் உள்ளது.

    //anti-brahmin & anti-brahminism இரண்டும் வேறானவை அல்லவா?//
    நல்லா கேட்டீங்க போங்க? இதுக்குத்தான் நான் வெறும் “ஆதிக்கம்”னு எழுதுறது..
    இப்பத்தான எழுத ஆரம்பிச்சுருக்கேன் , கத்துக்க இன்னும் நிறைய இருக்கு..

  • 8 Pari // May 18, 2004 at 4:05 pm

    சம்பந்தமில்லாக் கருத்துக்கு செல்வராஜ் மன்னிப்பாராக.

    anti-brahmin & anti-brahminism இரண்டும் வேறானவை அல்லவா?
    >>
    அது எதுக்கு anti-brahminism? ஏன் anti-varnakulam-ஆ இருக்கக் கூடாது?
    வர்ணகுலம்-னா என்னன்னு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். தெரியாதவங்களுக்காக: பிராமண, ஷத்ரிய, வைஷ்ய, ஷுத்ர என்ற நான்கு சமூகப் பிரிவினைகள் இறங்குமுக வரிசையில்.

  • 9 -/இரமணிதரன், க. // May 18, 2004 at 9:05 pm

    பரி, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், பயன்பாட்டிலே anti-brahminism என்பது உண்டென்பதாலும் சில பதிவுகளிலே இரண்டையும் மாற்றிப் பயன்படுத்தியிருப்பதாலுமே சொல்லவந்தேன்.

  • 10 செல்வராஜ் // May 18, 2004 at 10:05 pm

    புராணங்களைப் புராணங்களாகவே பார்த்தால் பிரச்சினை இருக்காது என்பது சிலரது பார்வையில் சரியாய் இருக்கலாம். ஆனால் அப்படியின்றிச் சில கற்பனைகளைச் சேர்த்தால் அது ஏன் பிரச்சினையாய்ச் சிலருக்கு இருக்க வேண்டும்? எல்லோருக்கும் பொதுவானவை தானே புராணங்கள்? அதை நம்புவோருக்கும் சரி, நம்பாதவருக்கும் சரி.

    வலையில் பிற இடங்களில் விவாதத் திசை மெல்ல மாறுவதைக் கவனிக்கிறேன். நான் அதிகம் கூறப் போவதில்லை என்றே எண்ணுகிறேன். ஆனால் தமிழார்வம், தமிழ் மந்திரம், கடவுள் மறுப்பு, சாதீய எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, இத்யாதி எல்லாம் அதனதன் அளவில் தனியாய்ப் பார்க்காமல், ஒரு முத்திரை குத்தும் வகையில் ஒன்று சேர்த்துப் பார்ப்பது சரியானதும் ஆரோக்கியமானதும் அல்ல.

    நாம் எல்லோரும் ஒத்துக் கொள்கிறோமோ இல்லையோ வர்ணாசிரமத் தத்துவங்கள் சமுதாயத்தின் மீது இன்னும் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியே இருக்கின்றன. இது பிராமணர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. பத்ரியின் பதிவில் “தண்ணி மொள்ளக் கூடாது” கவிதையைப் பாருங்கள். அவனளவில் தன்னை ஊர்க்குளத்தினுள் விடாத எல்லோரையும் தான் எதிர்ப்பவன் அவன். அதனால் இவையெல்லாம் பிராமண(ர்)த் துவேஷம் என்று பார்ப்பது பிழையானது.

  • 11 செல்வராஜ் // May 18, 2004 at 10:05 pm

    கார்த்திக், நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. கடவுள் ஏற்பாளரால் இந்தக் கவிதையை எழுத முடிவது சிரமம் தான் என்று நினைக்கிறேன். ஆனால் கடவுள் மறுப்பவராகவே இருந்தாலும் நாரண-வாயில்-உலகம் என்கிற பலருக்கும் தெரிந்த புராணத்தை வைத்துக் கவிதை சொல்லி இருப்பது முரண் இல்லை. அதைப் பயன்படுத்திய காரணத்தாலேயே அவர் அதனை ஏற்றுக் கொள்கிறார் என்று பொருளில்லை.

  • 12 karthikramas // May 19, 2004 at 12:05 am

    அண்ணே செல்வராஜ்,
    என் பொறியில் அருமையா மாட்டிகிட்டீங்க 🙂 நீங்கள் அனுமத்தித்தால் சொல்கிறேன்.. சொல்லட்டுமா? 🙂

  • 13 Dubukku // May 19, 2004 at 7:05 am

    அட ராமா இங்கேயுமா…ஜாதிப் பிரச்சனைப் பற்றிய விவாதம்

    வுடு ஜூட்

  • 14 செல்வராஜ் // May 19, 2004 at 10:05 am

    கார்த்திக்கு, எதாவது சிக்கல்ல மாட்டி வச்சுடாதீங்க. நான் எனக்குப் புரிஞ்சதத் தான் சொன்னேன். தப்பா ஏதாவது இருந்தா திறந்த மனதோடு யோசித்துக் திருத்திக் கொள்கிறேன். (அதான் நீங்க சொன்னதுல பாதி ஒத்துக்கிட்டேனே, அப்புறம் என்ன? :-)). சரி சொல்லுங்க – கிளை/திசை மாறாமல் கவிதை/முரண் இவை சம்பந்தமாய் இருந்தால்.

  • 15 செல்வராஜ் // May 19, 2004 at 11:05 am

    டுபுக்கு, ஓடிப் போயிடாதீங்க. உங்க கருத்துக்களும் நியாயமானது. இந்தப் பிரச்சினை நம்ம சமுதாயத்துல ஊறிப் போன ஒன்று. கால்ல ஏறின முள்ள எடுக்கும் போது சில சமயம் ரத்தம் வரத்தான் செய்யும். ஆனால் ஆரோக்கியமான விவாதங்கள் நமது சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்ள உதவும். எனது சம்பந்தம் அந்த அளவில் தான், வேறு வாக்குவாதங்களுக்கு நானும் தயாராய் இல்லை.

  • 16 karthikramas // May 19, 2004 at 12:05 pm

    ஐயோ அண்ணே அதெல்லாம் ஒன்னும் இல்லை.
    நாம் மிகவும் மதிக்கும் ஒரு நபரை புணர் நிலையில் இருப்பதாய் நினைப்பது, சாதாரண உளவியலில்
    அசிங்கம் அல்லது தரக்குறைவானது என்பது ஒத்துக் கொள்ளகூடிய ஒன்று. இது இப்படியிருக்க கடவுளை (ஏற்றுக் கொண்டவர்களூக்கு) புணர் உவமை பாராட்டுவது, நியாயமாய் கோபத்தை வரவழைக்கும். எனவே பத்ரியின் தார்மீக கோபத்தில் உள்ள கருத்தை நாம் பார்க்க தவறக்கூடாது என்று சொல்ல வந்தேன். இது போலவே பெரியார்(கருத்தளவில்) குறித்து ஒரு கவிதை எழுதினாலும் இதுவே நிகழும்,
    பெரியாரிகளுக்கிடையே. கவிஞர் சுதந்திரத்தில் தலையிடுவதாய் தவாறாய் நினைக்க கூடாது. அதுதான் நீங்கள் ஏற்க்கனவே ஒத்துக்கிட்டீங்களே 🙂

  • 17 -/இரமணிதரன், க. // May 19, 2004 at 3:05 pm

    கார்த்திக் அண்ணாச்சி, இந்தப்புணர்நிலையிலே கடவுளை வைத்துப்பார்த்தல் என்பது ஆளுக்காள் மாறும் விருப்புவெறுப்பு என்றே நினைக்கிறேன். புராணங்களிலும் இதிகாசத்திலும் கடவுளை இந்நிலையிலோ அல்லது பாலுறவு சம்பந்தப்பட்டுச் சொல்லப்படும் வேறுநிலையிலோ வைத்துப்பார்க்கும் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்டு. சிவனும் மோஹினி வடிவம் எடுத்த விஷ்ணுவும் புணர்ந்ததாகச் சொல்லப்படும் கதைகளிலேயிருந்து நிறையச் சொல்லலாம். (எட்டத்திலே தொட்டுக்கொண்டதாக ஒன்று: காந்தியின் சத்தியசோதனை என்று நினைக்கிறேன்; அதிலே கூட தன் தந்தை இறந்த நேரம் தான் கஸ்தூரி பாயுடன் அறையிலே “தனித்திருந்ததாக” எழுதியிருந்தார் என்பதாக ஒரு ஞாபகம். கைவசம் நூலில்லை. அதனாலே உறுதிப்படுத்திக்கொள்ளமுடியவில்லை).

    அதைவிடுங்கள்; குளிக்கும் பெண்களின் ஆடைகளைக் கிருஷ்ணன் திருடிக்கொண்டதையும் ஒரு திரௌபதி பஞ்சபாண்டவர்களுக்கு மனைவியாக எப்படி வாழ்ந்தாள் என்று கூறுவதையும்விட, சுந்தரவடிவேலின் கவிதை மோசமான கருத்தாக்கமாக இருந்ததென்று சொல்லிவிடமுடியாது. நிறைய எழுத்தாளர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளார் அல்லார் என்று எண்ணிச்சொல்லக்கூடிய எழுத்தாளர்கள் புராண இதிகாசக்கதைகளுக்குத் தமது பார்வையினைத் தந்திருக்கின்றார்கள். அகலிகையின் கதையினையும் ஊர்மிளையின் கதையினையும் தத்தம் பார்வையிலே எடுத்து எழுதிய கவிஞர்கள், எழுத்தாளர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள். பாவண்ணனின் கதைகள் நிறையவே புராண இதிகாசக்கதைகளின் கருவினை எடுத்து தனது பார்வையிலே சொல்வதாகவே இருக்கின்றன; திண்ணையிலே இவற்றிலே சிலவற்றினைக் கண்டிருப்பீர்கள். அண்மையிலே எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவமும் கிட்டத்தட்ட அப்படியானதே; சென்னையிலோ பாண்டிச்சேரியிலோ அண்மையிலே அரவான் நாடகம் அவனின் பார்வையிலே சொல்வதுபோல அரங்கேறியதாக வாசித்தேன். இவை எல்லாம் இதிகாச/புராணக்கதைகளுக்குப் படைப்பாளிகள் தமது பார்வைகளைத் தாம் வாழும் காலம், களம், நடப்புச் சார்ந்து பொருள் சொல்லி விவரிப்பதாக அமைவதே. இந்தநிலையிலே அவர்களின் பார்வைகளின் திசையும் வீச்சமும் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று சொல்வது, அவர்களின் அடிப்படைப்படைப்புச்சுதந்திரத்தினை மறுப்பதே என்பதைத் தவிர வேறெந்தப் பார்வையிலும் காணமுடியாத சங்கதி. திட்டமிட்ட அவதூறு என்பதற்கும் படைப்பாளியின் பார்வை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்று நினைக்கிறேன். புராண-இதிகாசர்களுக்கு, கிருஷ்ணன் வாயைத் திறந்தால், யசோதாவுக்கு உலகம் தெரிகின்றது, ஆளை உயர்த்தினால், மஹாபலிக்கு உலகம் ஆழ்கிறது என்றால், சுந்தரவடிவேலுக்கு அவர் கொட்டாவி விடும்போது, கவிதையின் உள்ளுறைபடிமமாக அழுக்குத் தெரிந்தால், ஆண்டவனை அவமதிப்பதாகுமென்றால் அது நியாயமாகாது. அவர் சொன்னதுக்கும் “கடவுள்மறுப்புக்காரர்களின்” சிலைகளுக்குச் செருப்புச்சாத்துவதற்கும் உள்ள வித்தியாசம் புரியவேண்டிப்புரிகின்றவனுக்குப் புரியக்கூடியதுதானே? எதப்படைப்பின்போதும், எவராவது பண்பட்டும் சிலராவது புண்பட்டுமேதான் ஆகின்றார்கள். அதுவே படைப்பாளிக்குச் சிறப்பும் படைப்புக்கு ஓர் அர்த்தத்தினையும் “”பன்முகப்பார்வை”யினையும் தருகின்றதெனலாம். அல்லாதுவிடின், ஆள்மாறாட்டத்திலே ஏமாந்த அகலிகை+ தூங்காவிலிக்காகத் தூங்காமாலே கிடந்த ஊர்மிளை+பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தும் தீயிலே இறங்கின சீதை கதைகளைத் தொடர்ந்தும் பன்முகப்பார்வையிலே எழுதவும் முடிவு கொடுக்கவும் எல்லோரும் அலைகின்றார்கள். சீதையின் நிமித்தம் பெண்ணிலைவாதிகள் இராமனைத் தாழ்த்தி எழுதும் கதைகளை வாசித்துவிட்டு, கிருஷ்ணபக்தர்கள் அந்த எழுத்தாளர் எங்களைப் புண்படுத்திவிட்டார் என்று சொல்லினால், சல்மான் ருஷ்டிக்கு சாத்தானிக் வேர்ஸஸிற்கு மரணதண்டனை விதித்த தன்மைக்கு நிகர்த்த நிலையே இதுவும். ஆனால், அந்த அச்சுதக்கவிதையிலே கிருஷ்ணனைப் பற்றிச் சொல்லிக்கொண்டது, பிராமண எதிர்ப்பு என்பதாகியதன் காரணம் ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. கிருஷ்ணன் என்பவன் பிராமணர்களுக்கும் மட்டுமெ உரித்தானவனா என்று வேறு யாராவது கிளைப்பூதம் கிளப்பாதவரைக்கும் சரி.

    எல்லாவற்றையும் விடுங்கள்; அச்சுதக்கவிதையிலே தொடங்கிய விவகாரம் “எங்கே பிராமணன்?” என்பதிலே வந்து நின்றதுதான் தமிழ் இணையத்தின் மகிமை. கொஞ்சம் விவகாரமான தலைப்பேதிலும் தமிழ்த்தெரிந்தவர்கள் பேசும் எந்த விவகாரமும் குறிப்பிட்ட மையங்களைச் சுற்றி வந்து நின்றாடும்

    1. பிராமணன் – பிராமணன் அல்லான்
    2. ஆரியன் – திராவிடன்
    3. தமிழ்- சமஸ்கிருதம்
    4. எல்டிடிரி – இந்திய இராணுவம்

    🙂
    இதுக்குமேலே செல்வராஜின் பதிவுகளைக் களத்திலிருந்து களரியாக்காமல் விட்டுவிடுகிறேன் 🙂

  • 18 karthikramas // May 19, 2004 at 4:05 pm

    அண்ணாச்சி பதிலுக்கு நன்றி 🙂
    //அச்சுதக்கவிதையிலே கிருஷ்ணனைப் பற்றிச் சொல்லிக்கொண்டது, பிராமண எதிர்ப்பு என்பதாகியதன் காரணம் ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை.//

    எனக்கும் புரியவில்லை 🙂 இன்னொரு கேள்வி அச்சுதன் பிராமணனா? இடையனா? நானாயிருந்தால் இப்படித்தான் கேள்வி கேட்டிருப்பேன். நேற்று உங்கள் கேள்வி எந்த பதிவை ஒட்டி எழுதியிருந்தீர்கள் என்று தெரியாமலே, வெளக்கெண்ணையில் வெண்டைக்காய் பொறித்தல்(நன்றி: மதி) மாதிரி ஒரு பதில் சொல்லியிருந்தேன், மன்னியுங்கள். சம்பந்தப் பட்ட பதிவினை படித்தபின் மண்டையை நகங்களால் ஆழ சொறிந்து கொண்டேன், இக்கவிதை போகும் திசையை குறித்து.
    அடப்பாவிங்களா இதை இப்படி கூட பார்க்க முடியுமா என்பதுதான் அந்த சொறிதல்..

    னீங்கள் சொல்வது எனக்கு வேடிக்கையையாய் உள்ளது! எல்லோரும் செய்தால் நாமும் செய்யலாம் என்கிறீர்களா?

    //சுந்தரவடிவேலுக்கு அவர் கொட்டாவி விடும்போது, கவிதையின் உள்ளுறைபடிமமாக அழுக்குத் தெரிந்தால், ஆண்டவனை அவமதிப்பதாகுமென்றால் அது நியாயமாகாது.//

    மெத்தச் சரி ? ஏற்றுக் கொள்கிறேன். என்கேள்வி, இல்லாத ஆண்டவனை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?
    ஒரு கருதுகோளை ஏற்காதவன், அதை மிக எளிதில் ஊதாசீனப்படுத்தி எழுதிவிடமுடியும். ஒத்துக் கொள்கிறீர்களா? டபுள் நெகட்டிவ் என்றாகிறது லாஜிக் :-), அதில் மாற்று க் கருத்துடைவனுக்கு இரண்டுமுறை “சதக்” ஆகிறது.
    சல்மான் ருஷ்டியின் விவகாரத்தில் எனக்கு விஷய ஞானம் பத்தாது! ஆனாலும் இதைச் சொல்வேன்!
    ருஸ்டிக்கு நேர்மையாய் மதத்தை கேள்வி கேட்க எல்ல அதிகாரமும் உள்ளம்…
    கொலை தண்டனை கொடுத்தால் அப்படிக் கொடுக்கச் சொல்லும் அமைப்பை மதம் என் நான் ஏற்கமாட்டேன். மனிதனின் உயிரைவிட எந்த மசிரு மதமும் பெரியதல்ல எனக்கு!!
    இங்கு கூட பெரியாரை, ஒரு குறிப்பிட்டது ,எதிர் கருத்துத் தளத்திலும் இதே விளைவு வரும் என்பதைச் சுட்ட மட்டுமே! எனக்கு பெரியாரின் மீது எந்த வருத்தமோ கோபமோ கிடையாது!
    னான் கோயிலை முழுவதுமாக புறக்கணிப்பவன். இந்த விஷயத்தில் நான் ஒரு சராசரி பெரியாரிக்கு மேல்.

    இந்த பதில் “களி” சுட்டது மாதிரி உள்ளதா?? மற்ற விவகாரங்களை உங்களிடமிருந்து மெதுவாய் தெரிந்து கொள்கிறேன். 🙂

  • 19 karthikramas // May 19, 2004 at 4:05 pm

    முக்கியமான ஒன்று,
    இக்கவிதைப் பொறுத்தமட்டில் நான், படைப்பாளியின் கட்சிதான். இருந்தாலும் எதிர்வினைக்காக கொஞசம் யோசித்துப்பார்த்தேன் 🙂

  • 20 -/இரமணிதரன், க. // May 19, 2004 at 5:05 pm

    அண்ணாச்சி, மீதி யுத்தத்தை உங்க தல/ளத்திலேயே வைச்சுக்கொள்ளாமா? 🙂 செல்வராஜ் அவர்கள் ஏற்கனவே முட்டைக்கண் பற்றி எழுதியிருக்கிறார். இப்போது, நம்ம ரெண்டு பேராலும் அதுவும் பிதுங்கப்போகுது. என்ன சொல்றீங்க?

  • 21 செல்வராஜ் // May 19, 2004 at 6:05 pm

    இரமணி, விரிவான கருத்துக்களுக்கு நன்றி. களம் களரியாவது பிரச்சினை இல்லை. உங்கள் கூற்றிலே பல விஷயங்கள் தெளிகிறது. கொஞ்சம் ஐயப்பாடு இருந்தாலும், புராண இதிகாச உதாரணங்கள் காட்டித் தெளிவித்து இருக்கிறீர்கள். கவிஞருக்கு, எதிர்ப்பலைகள் உண்டு பண்ணிய தாக்கத்துக்கு இவை ஆறுதலாய் இருக்கும்; இருக்கட்டும். அங்கு எழுதாமல் தவிர்த்தாலும் உங்களை இங்கு எழுத வைத்துவிட்டோம். 🙂

    கார்த்திக், உங்கள் நிலையையும், எண்ண ஓட்டத்தையும் அறிவேன். நானும் அப்படித்தான் சிலசமயம் பிடித்த ஒன்றில் மாற்று நிலையெடுத்து யோசிப்பதுண்டு. ஆனால், இன்னும் ஒன்றில் மட்டும் நான் உடன்படவில்லை. 🙂 இருப்பதாக எண்ணுவது ஒன்று இருப்பது உண்மையானால் ‘இன்னும் ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது’ என்று அதன் இருப்பையே சந்தேகிக்கும் ஒருவன், அந்த இருப்பைப் பற்றி எழுதாமல், இருக்கிறதா-இல்லையா என்கிற ஐயத்தை எப்படி எழுத முடியும்? சரி. நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள். இனி விட்டுவிடுவோம்.

  • 22 karthikramas // May 19, 2004 at 6:05 pm

    அண்ணாச்சி,
    நம்ம ரெண்டு பேரைவிட்டா இதற்கு சரியான ஆட்கள் கிடைக்காதுதான். உங்கள் கூற்றில் உண்மையாய் இருந்தால் முழுதும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒன்று கேள்வியை நீங்கள்தான் வரையறுக்க வேண்டும். :-):-)

  • 23 Thangamani // May 20, 2004 at 3:05 pm

    மிக்க நன்றி செல்வராஜ் புரிதலோடும் அன்போடும் இந்த விவாதத்தில் உடன் வந்ததற்கு…கார்த்திக்ராமஸுக்கும். ஏனெனில் எல்லாவற்றையும் விட எளிதானது இயல்பாய் இருப்பது. ஆனால் அப்படி இருப்பதற்கான முயற்சியால் அது கைகூடாமல் போகிறது. அதனால்தான் எல்லோரும் இயல்பாய் இருப்பது, நேர்மையாய் இருப்பது என்று எழுதிகொண்டும் பேசிக்கொண்டுமே இருக்கிறார்கள். என்னடா இது இப்போதும் புரியாத மொழியிலேயே எழுதிக்கொண்டிருக்கிறானே என்று பார்க்கிறீர்களா?

    🙂